(13) நானும் ஏன் முதல்வராகக் கூடாது?
நம்முடைய இன்பத் தமிழ்நாட்டில் கட்சிகளின் எண்ணிக்கைக்குக் கணக்கே இல்லை. கட்சி தொடங்கி பத்துபேருக்குத் தெரியவந்தவுடன் அந்தத் தலைவனின் குறைந்தபட்ச கனவே முதலமைச்சர் நாற்காலிதான். ஆகவே தமிழ்நாட்டில் முதல்வராவதற்குக் குறைந்தது முப்பது பேர் "காத்திருப்போர் பட்டியலில்' இருக்கிறார்கள்.
தன்னைப் பின்பற்றும் கூட்டம் தன்னைப் பற்றிச் சொல்லும் புகழுரைகளிலேயே, "நாளைய முதல்வரே' என்று முழக்கமிடுவதைத்தான் விரும்பத்தக்க முழக்கமாக ஒவ்வொரு தலைமையும் கருதுகிறது.
இதிலே பெரும் வியப்பு என்பது கூட்டணி கட்சித் தலைமைகளும்கூட "இன்னாரை முதல்வராக்காமல் நான் ஓயமாட்டேன்' என்று முழங்குவதுதான்.
இத்தகைய ஆவேச உரைகள் இரண்டு குறைகளை உடையவை. ஒன்று: தான் நினைத்தால் ஒருவரை முதல்வராக்க முடியும் என்னும் அதீத சக்தி தனக்கிருப்பதாக தானே நம்புவது.
இன்னொன்று: தான் அந்தப் பெரியஇடத்திற்கு உரியவரில்லை என்று தானே வெளிப்படையாக உடன்படுவது.
அது இரங்கத்தக்க நிலை அல்லவா?
தீபாகூட முதல்வர் கனவில் மிதந்தவர்தான். செயலலிதாவின் சாயலும், அவருடைய உறவுநிலையும் அத்தகைய கனவுக்குத் தன்னைத் தகுதியுடையவராக ஆக்கியிருக்கிறது என்று தீபா நினைத்ததில் வியப்பில்லை.
இந்தத் தகுதியே ஒரு புதிய முதல்வரை உருவாக்குவதற்குப் போதுமானது என்று முதிர்ந்த அரசியல்வாதிகளே சிலகாலம் தீபாவைப் பின்பற்றவும் தலைப்பட்டார்களே அதுதான் வியப்பு.
இராசாசி தொடங்கிக் கடைசியாக செயலலிதா வரையிலான நீண்ட முதல்வர்கள் பட்டியலில் ஒவ்வொரு முதல்வரும் ஒவ்வொரு வகையில் தகுதியானவர்களாகவும், தன்னுடைய திறன் காரணமாக அந்த நாற்காலியில் ஏறி அமர்ந்தவர்களாகவும் இருந்தார்கள்.
தன் தகுதியின் காரணமாக அன்றி, சசிகலாவை "வளைந்து வணங்கி' அவருடைய தயவால், முதல்வர் நாற்காலியில் ஏறி அமர்ந்து, அப்படி ஏற்றிவிட்டவர் சிறை சென்று முடங்கிச் செயலற்றவர் ஆகிவிட்ட நிலையில், தன்னுடைய நாற்காலி ஆட்டங்காணாமல் நிலைத்து நிற்க இன்னொரு முட்டுத் தேவைப்படுவதை உணர்ந்து, தில்லி சென்று மோடியைக் கண்டு, அவரையும் "வழக்கம் போல் "வளைந்து வணங்கி' ஒரு நிலையான முட்டுக்காலைப் பெற்று, நாற்காலியின் ஆட்டத்தை நிறுத்தி தொடர்ந்து ஆட்சியில் நிலைபெற்றுவிட்டார் எடப்பாடி பழனிச்சாமி.
ரோமாபுரி பேரரசின் காலத்தில் செருசலம் பகுதியில் சுடேயாவை (Judea) ஆண்டு கொண்டு ஏரோது என்னும் மன்னன் இருந்தான். அவனுக்குப் பகைகள் பலப் பல. ஆகவே ஆட்சி நிலைக்கப் பேரளவுக்கு முட்டு தேவைப்பட்டது.
"தாலமி' என்னும் புகழ்பெற்ற அரச வம்சத்தில் பிறந்தவள் கிளியோபாட்ரா. ஆனாலும் அவளிடம் எந்த அதிகாரமுமில்லை.
ரோமப் பேரரசைத் தனியொருவனாக ஆளத் தணியாத ஆசைகொண்ட நிகரற்ற தளபதி சீசரை வளைத்துப் போட்டாள். அவனுக்கு ஓர் ஆண் மகவை ஈன்றளித்தாள். கிளியோபாட்ராவின் வெறுந்தலையில் மகுடம் ஏறியது.
சீசர் கொல்லப்பட்டான். அதன்பின் ரோமப்பேரரசின் வலிய மூவரில் ஒருவரான ஆன்டனியை வளைத்துப் போட்டாள். அவனுக்கு மூன்று ஆண் மகவுகளை ஈன்றளித்தாள். அவளுடைய தலையிலிருந்த மகுடம் சரியாமல் நிலைநின்றது.
உலகின் மிகவலிய தளபதிகளான சீசரும், ஆன்டனியும் வைத்திருந்த போர்த் தளவாடங்களெல்லாம், கிளியோபாட்ரா இயற்கையிலேயே பெற்றிருந்த "ஆயுதங்களுக்கு' முன்னால் ஒன்றுமில்லாமல் போய்விட்டன.
சுடேயாவை ஆண்ட ஏரோது அதிகாரம் ஒன்றே குறியாகக் கொண்டவன். ஆட்டம் கண்டு கொண்டிருந்த ஆட்சியை நிலைநிறுத்த பெரிய தளபதிகளையே வீழ்த்திய வலிய கிளியோபாட்ராவை அடிபணிகிறான். கிளியோபாட்ரா தயவால் ஆன்டனியையும் தனக்கு அரணாகப் பெறுகிறான். ஏரோதுவின் அதிகார வண்டி தடுமாறாமல் தடத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது.
சிறிதுகாலத்தில் ரோமப்பேரரசின் மூவரில் பிறிதொருவனான அகசுடசு சீசர், ஆன்டனி-கிளியோபாட்ராவின் மீது போர் தொடுக்கிறான். ஏரோது, நடைபெறுகின்ற இந்தப் பெரும் போரைக் கூர்ந்து கவனித்துக்கொண்டிருக்கிறான்.
ஆன்டனி-கிளியோபாட்ரா வெற்றிபெற்றால் ஏரோது தன்னுடைய மாறாத விசுவாசத்தை அவர்களின் தாள் பணிந்து மீண்டும் ஒருமுறை பிரகடனப்படுத்திக்கொள்வான். ஒருவேளை வெற்றி என்பது மாறி அமைந்துவிட்டால், வெறும் விசுவாசம் ஏரோதுவின் மணிமுடியைக் காக்கப் போதுமானதில்லையே.
அப்படித்தான் நடந்தது. போரின் முடிவு தலைகீழாய் மாறிவிட்டது. போரில் தோற்றோடிய ஆன்டனி, தன்னுடைய வாளை, தன்னுடைய வயிற்றில் தானே பாய்ச்சிக்கொண்டு மாய்கிறான்.
கிளியோபாட்ரா விரியன் பாம்பைக் கடிக்கச்செய்து மாய்கிறாள்.
"முழு விசுவாசியான' ஏரோதுவுக்கு ஆன்டனி-கிளியோபாட்ராவுக்காக வெறும் ஒரு சொட்டுக் கண்ணீர் விடக்கூட நேரமில்லை. விட்டு ஆகப்போவதும் எதுவுமில்லை.
ஓடுகிறான், ஓடுகிறான் ஏரோது; அகசுடசு சீசர் இருக்கும் திசைநோக்கி ஓடுகின்றான். காண்கின்றான் அகசுடசை. வளைகின்றான். வணங்குகின்றான். இது போதுமா?
மண்டியிட்டுத் தன்னுடைய மணிமகுடத்தை எடுத்து அகசுடசின் காலடியில் வைக்கிறான் ஏரோது.
மண்டியிட்டுக் கிடக்கும் ஏரோது, தன் காலடியில் உள்ள ஏரோதின் மணிமகுடம், இரண்டையும் மாறிமாறிப் பார்க்கிறான் அகசுடசு.
ஒரு புன்முறுவலுடன் மணிமகுடத்தை எடுத்து ஏரோதின் தலையில் சூட்டுகிறான் அகசுடசு. ஏரோதின் பணிவும் விசுவாசமும் அகசுடசைப் புல்லரிக்கச் செய்கின்றன.
இதேபோல் ஆன்டனியை ஒருநாள் மண்டியிட்டு ஏரோது வணங்கியபோது, ஆன்டனியும் இத்தகைய புல்லரிப்புக்கு உள்ளானவன்தான் என்பது அகசுடசுக்குத் தெரியாது.
History repeats itself. . வரலாறு திரும்பிக் கொண்டேதான் இருக்கிறது.
முன்பு ஏரோது, இன்று எடப்பாடி
முன்பு முடியாட்சி, இன்று மக்களாட்சி
விளையாட்டும் அதேதான்; விளையாட்டின் முறைகளும் அதேதான்; ஆடுவோர்கள் மட்டும் மாறிக்கொண்டே இருப்பார்கள்.
ஆனால் காந்தியுகத்தில் மட்டும் ஆட்டத்தில் பெரும் மாற்றம் நிகழ்ந்தது. ஆட்சி என்பது சுகபோகமல்ல; ஆட்சி என்பது அதிகாரத் திமிரல்ல; ஆட்சி என்பது கொள்ளைக்கான களம் அல்ல; ஆட்சி என்பது கூத்தாட்டு அவைக்களம் அல்ல; ஆட்சி என்பது தன்னல வேட்டைக்காடல்ல; அது ஒரு தவம்.
இப்படி ஓர் சிந்தனை மாற்றம் "பாழ்பட்டு நின்றதாமோர் பாரத தேசம் தன்னில்' எம்மான் காந்தியால் விதைக்கப்பட்டு பயிராக்கப்பட்டது.
அங்கே அந்தக் காலகட்டத்தில் உருவானவர்கள்தாம் இராசாசியும், காமராசரும். அண்ணா, காந்தியால் உருவாக்கம் பெற்றவர் இல்லை என்றாலும், காந்தியால் மாற்றியமைக்கப்பட்ட காலத்தின் போக்கு அவர்மீதும் படிந்திருந்தது. காந்தியின் வீச்சுக்காலம் செல்லச் செல்ல நீர்த்துப் போய்விட்ட நிலையில், அந்த இடத்திற்கு எடப்பாடி போன்றோர் வந்ததின் விளைவு, முதல்வராக விரும்புவோரின் எண்ணிக்கை வரம்பின்றிப் பெருகக் காரணமாகிவிட்டது.
தீபா அனைய இன்ன பிறரையும் களத்திற்கு ஈர்த்த காலப்போக்கு இதுதான்.
எடப்பாடி செய்யும் எதை நம்மால் செய்ய முடியாது? காண்ட்ராக்டுகளில் வாரிக் குவிக்கத் தெரியாதா? குனியத் தெரியாதா? வளையத் தெரியாதா? வணங்கத் தெரியாதா? பணத்தால் யாரையும் விலைக்கு வாங்கத் தெரியாதா? பணத்திற்குக் கூர்மை போதவில்லை என்றால், சபாநாயகரைக் கைக்குள் வைத்துக் கொண்டு, எதிர்நிற்பவர்களைப் பதவியிலிருந்து நீக்கத் தெரியாதா? பெரும்பான்மையை இழந்த பிறகும் ஆட்சியில் நீடிக்கும் மோடி வித்தை தெரியாதா?
எதுதான் தெரியாது?
யாருக்குத்தான் தெரியாது?
நானும் ஏன் முதல்வராகக் கூடாது?
(தொடரும்)