(63) காஷ்மீர்: இது நியாயமா? (2)

லைமை அமைச்சர் மோடி நாட்டுக்கு உரையாற்றியிருக்கிறார். காசுமீரில் தொழில் வளம் பெருகவும், ஊழல் ஒழியவும், வம்சாவளி ஆட்சி தொலையவும்தான் காசுமீரை கூறு போட்டதாகவும், காசுமீருக்குத் தனி மதிப்பு வழங்கிய 370-ஆவது மற்றும் 35ஏ சட்டப்பிரிவை அரசியல் சாசனத்திலிருந்து நீக்கியதாகவும் சொல்லியிருக்கிறார்.

காசுமீர் முன்னேற்றம் அடையாததற்குக் காரணம் அதனுடைய 370-வது சிறப்புப் பிரிவுதான் என்று குறிப்பிட்டிருக்கிறார். பயங்கரவாதம் (பங்ழ்ழ்ர்ழ்ண்ள்ம்) உருவானதற்கே இந்தச் சிறப்புப் பிரிவுதான் காரணம் என்றிருக்கிறார்.

காசுமீரை விட கீழாக இருக்கும் மாநிலங்கள் பல உள்ளன இந்தியாவில். அவற்றின் கீழ்நிலைக்கு எந்த சட்டப்பிரிவு காரணம்?

Advertisment

நீங்கள் அவற்றையெல்லாம் முன்னேற்று வதற்கு எந்தத் தடையும் இல்லாதபோது, அவற் றையெல்லாம் விட்டுவிட்டு, அரசியல் சாசனத்தைத் திருத்தி, முப்பதாயிரம் இராணுவ வீரர்களைக் குவித்து வைத்துக்கொண்டு, உள்நாட்டுத் தலைவர்களையெல்லாம் சிறையிலடைத்து, காசுமீரையே அச்சத்தின் கடிவாயிலில் நிறுத்தி வைத்து... அதை முன்னேற்றாமல் விடுவதில்லை என்று கங்கணம் கட்டிக்கொண்டிருப்பதற்கு, அந்த மக்களின் மீது கொண்டிருக்கும் அளப்பரிய அன்புதான் காரணமா? அப்படித்தான் காசுமீர் மக்கள் நம்புகிறார்களா?

370-ஆவது சட்டப் பிரிவும் 35ஆ சட்டப் பிரிவும் நியாயமானவைதான் என்று சொல்ல எந்த ஒருவராலும் முடியவில்லை என்றும் தலைமை யமைச்சர் பேசியுள்ளார். ஏன் முடியவில்லை? அதிகாரம் உங்களைக் கேட்கவிடவில்லை.

இராணுவ கேந்திர முதன்மை வாய்ந்த அந்த எல்லை மாநிலம், ஒரு முசுலிம் நாட்டோடு சேராமல் நம்மோடு சேர முன்வந்து சில பாது காப்புகளை அரசியல் சாசன வாயிலாகக் கேட்ட போது அந்தப் பாதுகாப்புகளைக் கொடுத்து, இராணுவ கேந்திர முதன்மை வாய்ந்த அந்த மாநிலத்தை நேரு, இந்தியாவோடு இணைத்துக் கொண்டது பாராட்டத்தக்க செயலா? பழிக்கத்தக்க செயலா?

Advertisment

இன்றைக்கும், எழுபது ஆண்டுகளுக்குப் பிறகும் அது பாராட்டத்தக்க செயல்தான். ஏனெ னில் காசுமீர், ஐதராபாத்தைப் போல் படைகள் அனுப்பப்பட்டு நம்மோடு இணைத்துக்கொள்ளப் பட்ட மாநிலம் அல்ல. அது தானாக சில தனி பாது காப்புகளின் பேரில், எந்தவித இரத்தச் சிந்தலும் இல்லாமல் இணைந்த மாநிலம்.

காசுமீரத்தின் லடாக், சீனா நம்மோடு போர் புரிந்த இடம். கார்கில், பாகித்தான் நம்மோடு போர் புரிந்த இடம்.

இந்தக் காசுமீருக்காக மூன்று முறை பாக்கித்தான் நம்மோடு போர் புரிந்திருக்கிறது. அதிலே அவர்கள் வெல்ல முடியாததற்குக் காரணம் காசுமீர் மக்கள் நம்மோடு இருந்ததுதான்.

இந்தியா நம்முடைய நாடு என்று கருதித் தான் மைய அமைச்சரவையில் அவர்கள் பலமுறை அங்கம் வகித்தனர்.

ஆனால் மோடி சொல்கிறார் ஊழல் பெருத்ததற்கும் வம்சாவளி ஆட்சிக்கும் 370-ஆவது பிரிவுதான் காரணம் என்று.

கடந்த ஐம்பது ஆண்டுகளாகத் தமிழ்நாட் டில், உ.பி.யில், பீகாரில் இல்லாத ஊழலா? இங்கே இல்லாத வம்சாவளி ஆட்சியா? இவற்றை இந்த மாநிலங்களில் ஒழிக்க முடியாததற்கு எந்தச் சிறப்புச் சட்டப் பிரிவு தடை? இந்தியா முழுவதும் இவற்றை ஒழித்துவிட்டுக் கடைசியாகக் காசுமீருக் குள் நுழைந்திருக்கிறாரா மோடி?

பா.ச.க.வின் மூத்த நிறுவனர் சியாம்பிரசாத் முகர்சி, சவர்க்கார் வழிவந்தவர், நேரு காலத்து இந்துத்துவவாதி. காசுமீர் நம்மோடு இணைந்த போது வாழ்ந்தவர். காசுமீருக்கு சிறப்புச் சலுகைகள் வழங்கப்பட்டதைக் கண்டித்தவர். அதனால்தான் அந்தச் சலுகைகளைப் பிடுங்கிவிட்ட மோடி, சியாம்பிரசாத்தின் கனவு நிறைவேறிவிட்டது என்று குறிப்பிட்டுள்ளார். சியாம் பிரசாத்தின் யோசனைப் படி அந்தச் சலுகைகளை அளிக்க நேரு மறுத்திருந் தால், பாக்கித்தானோடு தானாகவோ, கட்டாயத்தின் பேரிலோ காசுமீர் இணைந் திருக்கும்.

சியாம்பிரசாத் முகர்சி காசுமீர முசுலிம்களுக்கு என்ன தனிச்சலுகை என்று கேட்டார்.

அந்தக் கேள்வி பிழை யானது. அவர்களுக்கென்ன தனியான அரசியல் பாது காப்புச் சட்டங்கள் என்பதே சரியான கேள்வி.

"நீ சிறுபான்மை; ஆகவே சேர்ந்திருந்தால் ஒருநாள் சன நாயகத்தின் முரட்டுப் பெரும் பான்மை உன்னைக் கிழித் தெறிந்துவிடும்' என்று சின்னா சொன்னதை சேக் அப்துல்லா நினைவில் கொண்டுதான் நேருவிடம் "ஒரு பாதுகாப்புக் கவசம்' கேட்டார்.

sst

சியாம்பிரசாத் முகர்சி யின் வழித்தோன்றல்கள் ஒரு நாள் ஆட்சிக்கு வருவது குடி யாட்சியில் இயலக்கூடியதே என்பதால், சின்னாவின் வாக்கைப் பொய்ப்பிக்க நேரு காசுமீருக்கு சிறப்பு நிலை வழங்கிப் பாதுகாத்தார். நேரு வழிவழியாகப் பெரிய மனிதன்.

மோடி அந்த சிறப்பு நிலைப் பாதுகாப்பை நீக்கி, சின்னாவின் கூற்றை மெய்ப்பித்து விட்டார். சிறுபான்மையர் எண்ணிக்கை அடிப்படையில் மோத முடியாது என்பதால், சமய அடிப்படையில் அரசை உருவாக்காமல், சமயச் சார்பற்ற அரசாக உருவாக்கினார் காந்தி.

இனி சிறுபான்மையர் இந்தியாவில் இரண்டாந்தர குடிமக்களாக வாழும் நிலை ஏற்படுவது வியப்பானதில்லை.

மொழிவழித் தேசியம் என்பதற்கு மாறாக ஆந்திராவை உடைத்து தெலுங்கு பேசும் மக்களை இரு பிரிவாக்க காங்கிரசு உடன்பட்டது பெரும்பிழை. மொழிவழி இன அடிப்படையிலான மாநிலத்தை இரண்டாகப் பிளக்கலாம் என்றால், அதை இருபதாகவும் பிளக்கலாம்தானே!

மோடி இன்னும் ஒருபடி மேலே சென்றார். ஒரு மாநிலத்தை மூன்று யூனியன் பிரதேசங்களாக்கி அவற்றை அழித்து உருத்தெரியாமல் செய்துவிட்டார்.

இதுபோல் தமிழ்நாட்டுக்கும் நேராதா என்ன? தமிழ்நாட்டை நான்கைந்து யூனியன் பிரதேசங்களாக்குவதற்கு எது தடை? மோடிக்குப் பெரும்பான்மை இல்லாத மாநிலங்களவையில் இரண்டுங்கீழ் மூன்று பங்கு வாக்குகள் கிடைக்கும்போது, நம்முடைய கட்சிகளின் நிலை "கோல் வைத்திருக்கிற வனுக்கு ஆடுகின்ற குரங்குகளின் நிலை தானே?'

மோடி நினைத் தால் இப்போது கையாண்ட இதே முறைகளைக் கையாண்டு, சேலத்திற்கு ஒரு நாராயணசாமியாக எடப்பாடி யையும், சென்னைக்கு ஒரு நாராயணசாமியாக ஸ்டாலினையும் ஆக்கிவிட முடியாதா? மேய்ப்பதற் குத்தான் எத்தனையோ கிரண்பேடிகள் பா.ச.க. வசம் இருக்கிறார்களே. ஆனால் தமிழ்நாட்டை யூனியன் பிரதேசங்களாக்குவது எளிது. காசுமீரை அவ்வாறு ஆக்குவது என்பது எளிதில்லை.

உச்சநீதிமன்றம் காசுமீர் வழக்கை காலத்தாழ் வில்லாமல் விசாரித்தால், மோடியின் சட்டத் திருத்தம் செல்லாததாவதற்கு உரிய வாய்ப்பே மிகுதி. காசுமீர் குறித்த 370-ஆவது பிரிவு மாற்ற முடியாத ஒன்றல்ல; அதுவும் மாற்றத்திற்குரியதே; தற்காலிகமானதே. அப்படி அரசியல் சாசனம் ஒப்புக்கொண்டிருக்கிறது.

ஆனால் 370-ஆவது பிரிவு நீக்கப்பட வேண்டுமென்றால் அப்படிச் செய்வதற்கு காசுமீர் சட்டமன்றம் பெரும்பான்மை மூலம் இசைவளிக்க வேண்டும். அப்படிச் செய்தால் அந்தச் சிறப்புச் சட்டப் பிரிவை நீக்கிவிட முடியும்.

இப்போது காசுமீரில் சட்டமன்றம் செயல்படவில்லை. அதன் கதையை ஏற்கனவே முடித்துவிட்டார் மோடி. அரசு விவகாரங்களை மைய அரசு ஆளுநரின் மூலம் செய்துவருகிறது.

நம்முடைய மோடி சட்டமன்றம் இல்லாத காரணத்தால், சிறப்புச் சட்டம் 370-ஐ நீக்குவதற்கு மாநில ஆளுநரிடம் கையெழுத்து வாங்கி, குடி யரசுத் தலைவருக்கு அளித்து, பாராளுமன்றத்தில் 370-ஐ சட்டநீக்கம் செய்துவிட்டார்கள்.

ஆனால் ஆளுநர் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவரில்லை; குறைந்த அளவு ஒரு காசுமீர்க் காரர்கூட இல்லை.

காசுமீர் மக்களே நேரடியாகத் தேர்வு செய்த சட்டமன்றம்தான் 370-ஐ நீக்குவதற்கு ஒப்புதல் கொடுக்க முடியுமே தவிர, "ஆளுநரோ' அவருடைய "டபேதாரோ' ஒப்புதல் கொடுப்பதெல்லாம் சட்டப்படி செல்லாது. அவ்வளவு பெரிய பாதுகாப்புப் பெட்டகத்தில் 370-ஐ வைத்து, அதன் சாவியைக் காசுமீர்க்காரனிடமே கொடுத்து வைத்துள்ளார் சேக் அப்துல்லா.

அப்போதென்ன சேக் அப்துல்லா விரல் சூப்புகிற பாப்பாவாகவா இருந்தார்? நீங்களெல் லாம் போகிற போக்கில் ஏமாற்றுவதற்கு.

தானாக வந்து சேர்ந்த ஒரு முசுலிம் மாநிலம் காசுமீர்; ஒரு முசுலிம் நாட்டோடு இணைய மறுத்து, இந்து நாட்டோடு இணைந்த மாநிலம் அது.

அந்தப் பெருந்தன்மையை உங்களுக்கு மதிக்கத் தெரியவில்லையே. அந்த விசுவாசத்தை உங்களுக்குப் போற்றத் தெரியவில்லையே. அதற்குக் காரணம் உங்களுடைய வளர்ப்பு அப்படி.

ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் சொல்கிறார். ""ஆகா... மோடி தந்த பரிசு. உலகிலேயே அழகான காசுமீர் பெண்ணை இனி கட்டிக்கொள்ளலாம்.''

இன்னொரு நாடாளுமன்ற உறுப்பினர் சொல்கிறார்: ""ஆகா... கொள்ளையடித்த பணத்தில் இனி சொந்த நாட்டில் சொத்து வாங்க இடமில்லை; மோடி நம்முடைய கவலை தெரிந்து, காசுமீரைத் திறந்து விட்டுவிட்டார்''

தானாக வந்து காலை கட்டிப் பிடித்துக் கொண்ட பிள்ளையை, எட்டி உதைத்துவிட்டீர் களே இது நியாயமா?

எப்படியோ போகட்டும்.

370-ஆவது சட்டப்பிரிவு நீக்கம் உச்சநீதி மன்றத்தில் நாறப்போகிறது; காசுமீர் ஆளுநரும் நாறப்போகிறார். (அந்தச் சட்டம் உச்சநீதி மன்றத்தில் செல்லாததாகும்.)

நியாயமா என்னும் கேள்விக்கு

நியாயம் வலியது என்று விடையிறுக்கும்.

(தொடரும்)