(25) நிலையான அரசு என்பது நிலையான தீமை!
எல்லா மேடைகளிலும் தவறாமல் பேசப்படுகின்ற ஒரு பெருமையான பேச்சு... "டில்லியில் யார் தலைமை அமைச்சர் என்பதை தேர்தலுக்குப் பின்னர் எங்கள் தலைவர் தீர்மானிப்பார்'. தினகரன் கட்சி மேடைகளிலே கூட இத்தகைய முழக்கம் கேட்கிறது.
இதற்கு முந்திய தேர்தல்களிலே கூட இத்தகைய குரல்கள் கொஞ்சம் வெட்கத்துடன் "நம்புவார்களோ, மாட்டார்களோ' என்னும் அவநம்பிக்கையோடுதான் வெளிப்படும்.
இப்போது கட்சிக்குக் கட்சி, ஆளுக்கு ஆள் இப்படிப் பேசுவது சாதாரணமாகிவிட்டது.
இது ஒரு நல்ல அறிகுறி. நாட்டில் நிகழ்ந்திருக்கும் மாற்றத்தின் வெளிப்பாடு.
யாரும் இப்படிப் பேசலாம் என்னும் நிலைக்குத் தேசியக் கட்சிகள் என்று சொல்லிக் கொள்கிற கட்சிகள் சரிந்துவிட்டன என்பதே அதன் பொருள்.
சென்ற பாராளுமன்றத் தேர்தல் என்பது வேறு. பத்தாண்டு கால காங்கிரசுக் கூட்டணி ஆட்சிக்கு எதிராக வீசிய பேரலையில் மிதந்து மோடி கரை சேர்ந்துவிட்டார். அவரே நம்பாத வெற்றி அது.
மேலும் வெகு காலத்திற்குப் பின்னர் தனியொரு கட்சி பெற்ற அசுரத்தனமான எண்ணிக்கை தில்லியில் கூட்டணி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து தனிக்கட்சி ஆட்சிக்கு வழி வகுத்துவிட்டது.
படிப்படியாக "மாநிலங்களின் தயவிலேதான்' தில்லி ஆட்சி என்று ஏற்பட்டிருந்த பரிணாம வளர்ச்சி நிலைகுலைந்து தனிக்கட்சி ஆட்சி என்னும் பழைய நிலை ஏற்பட்டது என்பது கைக்கடிகாரம் பின்னோக்கிச் சுழலும் நிலையினை ஏற்படுத்திவிட்டது.
இந்தியா, சீனா போல ஒற்றைத் தேசிய இனம், ஒற்றைத் தேசிய மொழி, ஒற்றைப் பண்பாடு என்னும் நிலையில் உள்ள ஒற்றை நாடு அல்ல.
பல மொழிகள்; பல இனங்கள்; பல பண்பாடுகள் கொண்ட பன்மை நாடு இந்தியா.
சொல்லப்போனால் வெள்ளைக்காரனால் உருவாக்கப்பட்ட நாடு இந்தியா. அவன்தான் இவ்வளவு பெரிய பரப்பை, இவ்வளவு இன மக்களை ஒருங்கிணைத்து ஒரு குடைக்கீழ் ஆண்டு, நம்மை சிந்தனைக்குப் பழக்கப்படுத்தியவன். நாம் இந்தியர்கள் என்பது அவன் சொல்லித்தான் நமக்குத் தெரியும்.
இந்திய நாடு விடுதலை அடைந்தபோது நமக்காக உருவாக்கப்பட்ட அரசியல் சாசனம் மாநிலங்களை முதன்மைப்படுத்தி உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்.
அமெரிக்காவில் அப்படித்தான் உருவானது. மாநிலங்கள் ஒன்றுகூடி தங்களுடைய உரிமைகளையும் தேவைகளையும் நிறைவு செய்துகொள்ளும் வகையில் சட்டங்களை இயற்றிக்கொண்ட பின், எஞ்சிய அதிகாரங்களை மைய அரசுக்கு அளித்தன.
இங்கே எல்லாம் தலைகீழ். மைய அரசு எல்லா அதிகாரங்களையும் சுவீகரித்துக்கொண்டு, எஞ்சிய அதிகாரங்களை மாநிலங்களுக்குத் தள்ளிவிட்டன.
ஆகவே நம்முடைய மாநிலங்களெல்லாம் கண்ணியமிக்க நகராட்சிகளாக (dignified municipalities) ஆக்கப்பட்டுவிட்டன.
கல்வி, மருத்துவம் இவற்றிலெல்லாம் மைய அரசுக்கு என்ன வேலை?
நம்முடைய பிள்ளைகளுக்கு எத்தகைய கல்வியை வழங்க வேண்டும்; அவர்கள் உடல் நலத்தை எவ்வாறு பேண வேண்டும் என்பது நம்முடைய வேலை.
மைய அரசுக்குச் சொந்தமாக எந்த மக்கள் இருக்கிறார்கள்? யாருக்கு இவர்கள் கல்வியோ, மருத்துவமோ வழங்கப்போகிறார்கள்?
மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்கு காலே அரைக்கால் பங்கு மாநிலங்கள் தந்தால், அரையே அரைக்கால் பங்கு நாங்கள் போடுகிறோம் என்று மோடி சொன்னபோது, "நீ யார் இதிலே நுழைவதற்கு? எங்களுடைய வேலையில் நீ ஏன் மூக்கை நீட்ட வேண்டும்?' என்று சொல்லி, மேற்குவங்க முதல்வர் மம்தா அந்தத் திட்டத்தை நிராகரித்துவிட்டார்.
திராவிட நாட்டு விடுதலைக் கொள்கைக்குப்பின், அண்ணா -மாநில தன்னாட்சிக் கொள்கையை இறுகத்தழுவி நின்றார். தன்னாட்சியை வலியுறுத்தி, கலைஞர் மாநாடுகள் நடத்தி இராசமன்னார் கமிட்டிகள் எல்லாம் போட்டு, அந்தக் கொள்கையை முன்னெடுத்துச் செல்வதில் முனைப்பாக நின்றார்.
ஆனால் வலிமையோடு நாடாண்ட காங்கிரசு அதை காதில் போட்டுக்கொள்ளவே இல்லை.
பலமுறை மாநில அரசுகள் கவிழ்க்கப்பட்டன. மாநில ஆளுநர்கள் கங்காணிகளாக செயல்பட்டனர்.
இவை அனைத்தும் வி.பி.சிங் தலைமையமைச்சரான காலத்தில் மாறத் தொடங்கின. வி.பி.சிங் மாநில நியாயங்களை உணர்ந்தவர் என்பதால் அன்று! பலவீனமான மைய அரசாக, தன் காலில் நிற்க முடியாத அரசாக அந்த அரசு அமைந்திருந்ததுதான் காரணம். தி.மு.க. அந்த அமைச்சரவையில் பங்கேற்றது.
தேவகௌடாவின் காலம், ஐ.கே.குஜ்ராலின் காலம் போன்றவை பலவீனமான மைய அரசுகளின் காலம் என்று அரசியல் அறியாதவர்கள் சொல்லிக்கொண்டிருந்தாலும், காலம் தன் தேவையை நோக்கி நகரத் தொடங்கிவிட்டதன் தொடக்கமாகவே அறிவுடையோர்' அவற்றைக் கணித்தனர்.
வலிமை, வலிமைக் குறைவு என்பவை எண்ணிக்கை சார்ந்தவை. தேவைக்கு மேலான எண்ணிக்கை, எலியைப் புலியாக்குகிறது. தேவைக்குப் போதாத எண்ணிக்கை புலியையே எலியாக்கிவிடுகிறது.
தேவகௌடா கன்னடியர்; காவிரி கழிவுநீரை மட்டுமே தமிழ்நாட்டுக்குத் தரவேண்டும் என்னும் கொள்கை உடையவர்.
அவர் தலைமையமைச்சராக இருந்த காலத்தில், மேகதாது அணை கட்ட மோடியைப் போல் அவர் அனுமதி வழங்கியிருப்பாரா என்றால் "மாட்டார்' என்றுதான் சொல்ல வேண்டும்.
மோடியும் தேவகௌடாவும் எது நியாயம் என்று சிந்திப்பவர்கள் இல்லை. எது அதிகாரத்தில் நீடிப்பதற்கு உகந்தது என்று சிந்திப்பவர்கள் மட்டுமே!
மேகதாதுவைக் கட்டுவேன் என்று தேவகௌடா சொன்னால், தமிழ்நாட்டின் ஆதரவு உருவிக்கொள்ளப்பட்டு, ஆட்சியை இழந்துவிடுவார்.
மோடியால் அதற்கு அனுமதி கொடுக்க முடிந்ததற்குக் காரணம், அவர் நிலையான, தன் பலத்திலான மைய அரசைப் பெற்றிருந்ததுதான்.
ஆகவே வலிமையான, நிலையான மைய அரசு என்பது மாநில நலன்களுக்கு ஊறு விளைவிப்பது. வலிமையான தலைமையமைச்சர்கள் பேரரசு மனப்பான்மையைப் பெற்றுவிடுகின்றனர். நியாயங்கள் இவர்களுக்கு என்றும் முக்கியமில்லை என்னும் நிலையில் கேடின் அளவு பெரிதாகிவிடுகிறது.
தேசியம் என்னும் கொள்கை காலாவதியாகிப்போன கொள்கை. இரண்டு நூற்றாண்டுகளுக்குள் உலகெங்கிலும் உருவான கொள்கை. வெள்ளையனை எதிர்த்துப் போராட, மக்களை ஒருமைப்படுத்த அது அன்று தேவையாக இருந்தது.
மாநிலங்களிடையே முரண், மாநில-மைய உறவுகளில் முரண் என்று ஆகும்போது, தேசியம் ஊமையாகிப்போகிறது.
தேசியம் பேசுகிறவர்களும் மாநிலங்களிலேதான் அரசியல் நடத்த வேண்டும்!
மேகதாதுவைக் கட்ட அனுமதிக்கக்கூடாது என்றுதான் மாநில பா.ச.க.வும் காங்கிரசும் கூச்சலிடுகின்றன.
கருநாடகாவை காங்கிரசு ஆளுகிறது. அது மேகதாதுவைக் கட்ட விழைகிறது. மோடியின் பா.ச.க. அனுமதிக்கிறது.
இதுபோன்ற சிக்கலைத் தீர்க்க தேசியங்களிடம் விடை இல்லை.
இதே நிலைதான் முல்லைப்பெரியாறு நிலையும்! அங்கே உள்ள பொதுவுடைமை அரசு நீர்மட்டத்தை உயர்த்த நமக்குப் பெரிய இடையூறு. ஆனால் இங்கே உள்ள பொதுவுடைமைகள் நம்மோடு சேர்ந்துதான் கூச்சலிடுகின்றன.
தேசியக் கட்சி என்று பீற்றிக்கொள்ளும் கட்சிகளில் ஒன்றான பா.ச.க. தென்னாட்டில் எங்குமே இல்லை. காங்கிரசு இந்தியாவில் சில மாநிலங்களில் மட்டுமே இருக்கிறது. பொதுவுடைமைக் கொடி மேற்குத் தொடர்ச்சி மலையில் மட்டுமே பறக்கிறது.
எதனால் இந்தத் தேய்மானம்? காலத்தை எதிர்கொள்ளும் ஆற்றலைத் தேசியம் மெல்ல மெல்ல இழந்துவிட்டதுதான் காரணம்.
ராகுல்காந்தி முன்னிறுத்தப்படுகிறார். அவருடைய அரசு பல மாநிலக் கட்சிகளின் கூட்டணி அரசாகத்தான் இருக்க முடியும் என்பது அறியப்பட்ட ஒன்று.
தமிழ்நாட்டில் தி.மு.க., ஒரிசாவில் பட்நாயக், மேற்குவங்கத்தில் மம்தா, உ.பி.யில் யாதவும், மாயாவதியும், பீகாரில் லல்லு இவைபோன்ற மாநிலக் கட்சிகள் அங்கம் வகிக்கும் ஒரு கூட்டணி அரசாக மட்டுமே ராகுலின் அரசு இருக்க முடியும்.
எந்த மாநிலத்தின் நலனுக்கும் எதிராக அந்த அரசு செயல்பட முடியாது. செயல்பட்டால் அந்த அளவுக்கு அந்தக் கூட்டணி அரசு ஊனப்பட்டுவிடும். பதவியே பறிபோய்விடவும் கூடும்.
ஆகவேதான் அது நிலையான ஆட்சியாக இருக்க முடியாது என்பதை ஒரு புதுமை போல் பேசுகிறார்கள் எடப்பாடியும் இராமதாசும். நேற்றைய மோடி ஆட்சிபோல பலமான, முரட்டுத்தனமான ஆட்சியாக இருக்கக்கூடாது என்பதுதான் நம் பார்வை.
நீடித்த ஆட்சியான மோடி ஆட்சி மேகதாது, நீட், சல்லிக்கட்டு என நம் முதுகில் சவாரி செய்ததுபோல, கூட்டணி ஆட்சி நம்மீது சவாரி செய்ய முடியாது.
எடப்பாடியும் இராமதாசும் சொல்கிற நிலையான ஆட்சி தனித்த ஆட்சியாகப் பேரரசு ஆட்சியாக இருக்கும். மாநிலங்கள் கப்பம் கட்டி, கைகட்டி வாழும் சிற்றரசுகளாக இருக்கும்.
அப்படித்தானே கடந்த ஐந்தாண்டுகளாக எடப்பாடி மோடிக்கு கைகட்டி சேவகம் செய்தார். மம்தாவைப் போல் சீறுகிறவர்களும் உண்டு, எனினும் பலமான மைய அரசு ஒரு பெரிய அண்ணன்தானே!
பெருவாரியான மாநிலக் கட்சிகளின் தயவில் வாழும் கூட்டணி ஆட்சி இந்தியாவில் பத்து ஆண்டுகள் தொடர்ந்து நடந்தால் போதும்... மாநிலங்களை மீறிச் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டு, தானாகவே சுயாட்சிகளுக்கு வழி பிறந்துவிடும்.
விடுதலை அடைந்து எழுபது ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. இன்னமும் எடப்பாடி போன்றவர்கள் கைகட்டி சேவகம் செய்யும் கடைகெட்ட ஆட்சிக்கு, "நிலையான ஆட்சி' என்று நாமகரணம் சூட்டி ஓமம் வளர்த்துக்கொண்டிருக்கிறார்களே!
எடப்பாடிக்கு இவை எல்லாம் புரியாது என்பது புரிகிறது.
இராமதாசுக்குமா புரியவில்லை?
தில்லியில் நிலையான அரசு என்பது (stable, strong, single party government) மாநிலங்களுக்கு நிலையான தீமை!
(தொடரும்)