(21) முதலீடு தேவைப்படும் ஒரு தொழில் அரசியல்!
எவ்வளவு வலிய கட்சியாக இருப்பினும் தேர்தல் ஒரு பெரும் பதற்றத்தை உருவாக்கிவிடும். ஆண்டு முடிவில் ஒரு வணிகனின் ஐந்தொகை (Balance sheet) அவன் தொழில் செய்த லட்சணத்தைக் காட்டுவதுபோல, ஐந்தாண்டு களுக்கு ஒரு தலைவன் கட்சி நடத்திய விதத்தைத் தேர்தல் காட்டிவிடும்.
ஒரே துணியில் சட்டை தைத்துக் கொள்ளும் நிலை எந்தக் கட்சிக்கும் இல்லை. ஆகவே ஒட்டுத் துணிகளெல்லாம் உச்சாணிக் கொம்பில் ஏறிக்கொள்வது வாடிக்கைதான்.
பா.ம.க.வின் இராமதாசு, தே.மு.தி.க.வின் விசயகாந்த் போன்றவர் களெல்லாம் கடந்த சில நாட்களாக முதன்மைச் செய்தியானதற்குக் காரணம் அதுதான்.
ஒரு தரப்பில்தான் என்றில்லை. எல்லாத் தரப்பிலும் இதே நிலைதான். உதிரிக் கட்சிகளெல்லாம் உயிர் பெறும் நேரம் இது.
பணம்தான் தேர்தல்களைத் தீர்மானிக்கிறது என்று நம்புவது நிகழ்காலத் தலைவர்களின் மிகப் பெரிய அறியாமையால்தான்.
பணம்தான் எல்லாம் என்றால் அம்பானிகள்தாம் நாடாள்வார்கள். இப்போதும் அவர்களின் பதிலிகள்தாம் (Proxies) ஆள்கிறார்கள் என்பது வேறு.
வாசனிடம் பத்தாயிரம் கோடி பணம் இருந்தால், அவர் நாற்பது இடங்களிலும் வென்று விடுவாரா?
1967-க்கு முன்பு காங்கிரசு மிக வலிமையாக இருந்தது. காமராசர் உயிரோடு இருந்தார். அண்ணா காங்கிரசை மிட்டா மிராசுகள், பேருந்து முதலாளிகள், சமீந்தார்களின் கட்சி என்று நகையாடுவார்.
தொடர்ந்து முப்பதாண்டுகள் ஆட்சியிலிருந்த காங்கிரசை, பணம் வழிந்தோடிய காங்கிரசை எதிர்கொள்ளப் பணமில்லை அண்ணாவிடம். கலைஞர் திரட்டிக் கொடுத்த வெறும் பதினொரு லட்சத்தை வைத்து, பணத்திற்கு எந்தத் தட்டுப்பாடும் இல்லாத பெரிய ஆலமரத்தை வெட்டி வீழ்த்தினார் அண்ணா.
பணம் வழிந்தோடியது இந்திராவிடம். அச்சுறுத்தும் அதிகாரம் முழுவீச்சில் அவர் கையில் இருந்தது. அம்பானிகளை நாடவில்லை செயப்பிரகாசு நாராயணன். "ஒரு வாக்கும், தேர்தல் செலவுக்கு ஒரு ரூபாயும் கொடுங்கள்' என்று மக்களிடம் கேட்டார் அந்தத் தன்னலமற்ற தலைவர். இந்திரா வீழ்த்தப்பட்டார்.
பழைய காலத்தில் மிட்டா மிராசுகளைப் போல, இப்போது பணம் மலைபோல் குவிந்திருப்பது கல்வி நிறுவனம் நடத்துவோரிடம்.
MGR உயர்கல்வியைக் கைகழுவிய பிறகு உருவான "பெரும் முதலைகள்' இவர்கள்.
இவர்கள் தனிக்கட்சி வேறு வைத்துக் கொள்கிறார்கள், பெயர்ப் பலகைக் கட்சிகள்தாம் இவை யெல்லாம்.
இடம் வழங்கும் தலைவனுக்கு இருநூறு கோடி. தான் தேர்தலில் செலவு செய்வதற்கு நூறு. ஒவ்வொரு முறையும் தவறாமல் தேர்தலில் நிற்கிறார்கள் இந்த "மக்கட் பணியாளர்கள்'.
இவர்களுக்கெல்லாம் அரசியலில் என்ன வேலை? இவர்கள் எப்படி நம்முடைய நலன்களில் அக்கறையுடையவர்களாக இருக்க முடியும் என்று மக்கள் கேட்ப தில்லை.
இதுபோல் மக்கள் எப் போதுமே கேட்டதில்லை. மக்க ளைச் செயல்படுத்தும் எதிர்நிலை அரசியல் தலைவர்கள்தாம் கேட்பார்கள். அது மக்கள் மனத்தினில் உறைக்கும். ஆட்சிப் போக்கு மாறும்.
"டாட்டா பிர்லா கூட்டாளி
பாட்டாளிக்குப் பகையாளி'
என்று பொதுவுடைமைக் கட்சிகள் முழக்கமிடும். அடுத்தடுத்த கட்சிகளையும் அது தொற்றிக் கொள்ளும். பெரும் முதலைகளை ஆதரிப் பது அவமானகரமான கொள்கை என்னும் பொதுக் கருத்து உருவாகும்.
இப்போது பொது வுடைமைக் கட்சிகளே முனை இழந்துவிட்டன. பொதுக் கருத்தை -நாட்டின் பொது வான சிந்தனையோட்டத்தை வரையறை செய்தவர்கள் அவர்கள் என்னும் நிலை போய், வாசன் கட்சியோடு சேர்த்துப் பேசப்படும் நிலையை அடைந்துவிட்டார்கள்.
தாங்கள் பிறரைப் பாதித்தது (Influence) போய், பிறரால் பாதிக்கப்படும் நிலையை எய்தி விட்டது வீழ்ச்சிதானே. கொள்கைக் கட்சிகளுக்கு ஏற்பட்ட இந்த சரிவு நாட்டுக்கே பெரிய அவலம் அல்லவா.
இந்த இரண்டு பேரோ நான்கு பேரோ போய்ப் பாராளுமன்றத்தில் ஆகப் போவதென்ன? அம்பானி களுக்காகவும், அதானிகளுக் காகவும்தானே நாடு ஆளப் படுகிறது.
முதலாளிகள் பணம் வைத்துக்கொள்ள மாட்டார் கள். கணக்கப்பிள்ளைகள்தாம் எல்லா வரவு செலவுகளையும் செய்வார்கள். அதுபோன்ற பணியைத்தான் அர சியல் கட்சிகள் செய் கின்றன.
ஆட்சிகள் மாறும். தலைமை யமைச்சர் மாறு வார்கள். பாராளு மன்ற உறுப்பினர்கள் மாறுவார்கள். ஆனால் நிலையான அக்கறைகள் (Permanent Interests) மாறுவதில்லை. மாற விட மாட்டார்கள்.
இவற்றை எல் லாம் மாற்றத் தேர்தல் போதாது. புரட்சி வரவேண்டும்.
மக்கள் தனித் தனியாக இருக்கும் போது வேறாக இருப்பார்கள். திர ளாக இருக்கும்போது "திரள் உணர்வுக்கு' (Mob Feeling) ஆளாகிவிடுவார்கள்.
மக்களின் "திரள் உணர்வை' நம்பித் தான் இத்தனை கட்சிகள். இத்தனை தலைவர்கள். ஒரு கொடி, ஒரு பெயர், ஒரு தலைவன். அத்தலைவனுக்கு ஒரு வாக்கு வங்கி.
ஐந்து விழுக்காடு வாக்கு இராமதாசுக்கு, இரண்டேகால் விழுக்காடு வாக்கு விசயகாந்த்துக்கு. அரை விழுக்காடு வாக்கு வாசனுக்கு.
எல்லாரும் கிராக்கியோடு பேசுகிறார்கள்.
மாட்டுச்சந்தையில் விற்பவன், வாங்குபவன் என இரண்டுபேரும் கைகளுக்கு மேலே துண்டைப் போட்டுக்கொண்டு, விரல்களைப் பிடித்து விலை பேசுவதுபோல, விலை படிந்து விட்டால், பேசிய விலையைக் கொடுத்துவிட்டு மாட்டை ஓட்டிக்கொண்டு போவது போல, பெரிய கட்சியிடம் சிறிய கட்சிகள் தேர்தல் நிதியின் பேரால் பணம் கேட்பதும் அதுவும் முந்நூறு கோடி, ஐநூறு கோடி எனக் கேட்பதும், நிதி கைமாறிய பின்பு அந்த வாக்கு வங்கி அப்படியே கைக்கு மாறிவிடும் என்பதும் எவ்வளவு பெரிய மடமை?
மக்களென்ன மாடுகளா?
ஓட்டி அடைப்பதற்கு?
மேலும் ஒருவன் இத்தனை நூறு கோடிகளைக் கொடுக்கிறானே அவன் துண்டேந்தி வசூல் செய்த பணமா?
ஆற்று மணலில், தாது மணலில், மலையைத் தரை மட்டமாக்கியதில் அடித்த பணம்தானே அத்தனையும்.
எந்தச் சாலை, கமிஷன் இல்லாமல் போடப் பட்டது?
""எல்லாம் எங்களுக்காகவா செய்து கொண் டோம்? கூட்டணிக் கட்சிகளின் முதல் கோரிக்கையே, எத்தனை "ஈ' என்பதுதானே. இல்லாவிட்டால் மாற்று அணிக்குப் போவதாக மிரட்டுகிறார்களே! தேர்தல் நேரத்தில் குட்டிக் குட்டிக் கட்சிகளெல்லாம் தங்களைக் கூடுதல் தொகைக்கு ஏலம் விட்டுக்கொள்வதால், அவர்களுக்கும் சேர்த்து தானே இந்தப் "பணம் அடிக்கும் புனிதப் பணியை' நாங்கள் செய்யவேண்டியதாய் இருக்கிறது'' என்று ஒரு முதலமைச்சர் சொன்னால், அவரை நீங்கள் எவ்வாறு எதிர்கொள்வீர்கள்?
ஒருவன் பத்துத் தடவை சிறைக்குப் போவான். கட்சி அறிவித்த வரலாற்றுப் போராட்டங்களிலெல்லாம் கலந்து கொள்வான். "தேர்தலில் எவ்வளவு செலவழிப் பாய்?' என்று தலைவர் கேட்டதற்கு உதட்டைப் பிதுக்கிய காரணத்தால் அவன் திருப்பி அனுப்பப்பட்டு விடுகிறான்.
இவனுக்கு எதற்கு அரசியல்?
அது முதலீடு தேவைப்படுகின்ற ஒரு தொழில் அல்லவா!
(தொடரும்)