72 இந்தியாவைச் சுருக்கப் போகிறீர்களா?
ஒரே நாடு; ஒரே குடும்ப அட்டை' என்றார்கள். "ஒரே நாடு; ஒரே அரசியல் சாசனம்' (சிறப்பு மதிப்புச் சட்டங்கள் செல்லா) என்றார்கள். "ஒரே நாடு; ஒரே மதம்' (இந்துக்களின் நாடு இந்தியா) என்றார்கள். இப்போது "ஒரே நாடு; ஒரே தேசிய மொழி' (இந்தி) என்கிறார்கள்.
"இல்லாத பாரதமாதாவை' உருவாக்கிய பாரதிகூட பாரதமாதா பதினெட்டு மொழி பேசுபவள் என்று அறிவிக்கிறான்.
"விதமுறு நின்மொழி பதினெட்டும் கூறி, வேண்டியவாறு உனைப் பாடுதுங் காணாய்' என்று பாடும் போது, ஏதாவது ஒரு மொழியில் பாடினால் பாரதமாதா எழ மாட்டாள் என்று அஞ்சி, அவளுக்குரிய பதினெட்டு மொழிகளிலும் பாடுவதாய்க் கூறுகிறான் பாரதி.
ஆகவே பாரதி பாரத நாட்டுக்குப் பதினெட்டுத் தேசிய மொழிக் கொள்கை பேசுபவன் என்பது தெரிகிறது. பாரதமாதா என்னும் உருவாக்கத்திலுள்ள குளறுபடியைப் பின்னர் விவாதிக்கலாம்.
ஆனால் இந்துத்துவாவின் ஆட்சி ஒரு நாள் இந்தியாவுக்கு வரும்; அவர்கள் இந்தியாவின் பன்மைத்தன்மைக்கு வேட்டு வைப்பவர்கள்; எனவே இந்தியை மட்டுமே முன்னிறுத்த முனைவார்கள் என்பதைப் பாரதி அறிந்திருக்க வாய்ப்பில்லை.
இந்தியாவின் உள்துறை அமைச்சர் அமித்சா, அண்மையில் இந்திதான் இந்தியா வின் தேசிய மொழியாக இருக்க முடியும் என்று ஆணித்தரமாகப் பேசியிருக்கிறார்.
இந்தியாவை ஒருமைப்படுத்த இந்தியால்தான் முடியும்; ஆகவே இந்தியா ஒன்றாக இருக்க இந்தி வேண்டும் என்பது அமித்சாவின் வாதம்.
இந்த வாதம், அவ்வளவு சிரமப்பட்டுக் கொண்டு, எல்லாரையும் அவ்வளவு சிரமப் படுத்திக் கொண்டு, ஏன் இந்தியா ஒன்றாக வேண்டும் என்னும் எதிர்வாதத்தைத் தோற்றுவிக்கும் என்பதை அமித்சா அறிந்திருக்கவில்லை.
முன்னாள் அமைச்சர் பொன். இராதாகிருட்டிணன் நல்ல மனிதர்; ஆனால் இந்துத்துவாவின் முழு விசுவாசி. மனிதனுக்கு ஆறு அறிவு இருப்பதால், அவன் ஆறு மொழிகள்வரை படிக்கமுடியும் என்று அவர் சொல்லியிருப்பது கேட்டு மூச்சு முட்டுகிறது. அப்படியானால் ஐந்தறிவு உடைய விலங்குகள் ஐந்து மொழியைக் கற்கத் தகுதியுடையவைதானா?
ஆறறிவு என்பது நம் தாய்மார்கள் தாளிக்கும் பொருட்கள் வைக்கும் அஞ்சறைப் பெட்டியில், தனித் தனிப் பகுப்புகளில் கடுகு, சீரகம் போன்றவற்றைத் தனித்தனியாக வைத்துக் கொள்வதைப்போல, ஆறறிவைத் தனித்தனிப் பகுப்புகள் என முன்னாள் அமைச்சர் நினைக்கிறார் போலும். ஒவ்வொரு பகுப்புக்கும் ஒரு மொழி கற்க முடியும் என்று கண்டறிந்திருக்கிறாரே.
ஆறாவது அறிவு என்பது ஐம்புலன்களின் வழியாக வரும் தகவல்களைப் பகுத்தறியும் ஆற்றலுடையது! காண்டலினால் வரும் அறிவு மட்டுமல்ல உய்த்தறியும் அறிவும் (Inference) ஆறாவது அறிவின் கூறுதான்!
ஆறறிவைக் கொண்டு ஆறுமொழி படிக்கலாம் என்று ஆராய்ந்து அறிந்தவர், அதை உத்திரப் பிரதேசத்திற்கும், பீகாருக்கும் சொல்ல வேண்டியதுதானே. வடநாட்டுக்காரர்கள் அதிக மொழி படித்தவர்கள் என்னும் பெருமையை அடையக்கூடாதா?
பல மொழிகளைத் தேசிய மொழிகளாகக் கொண்ட பல நாடுகள் உலகில் உள்ளனவே! பல தேசிய மொழிக் கொள்கையால் அந்த நாடுகளின் ஒருமைப்பாட்டுக்கு ஊறு வந்ததாக நாம் கேள்விப்படவில்லையே. அந்த நாடுகளில் எல்லா மொழிகளும் ஒரு நிகராக மதிக்கப்படுகின்ற காரணத்தால், அந்த நாடுகளில் ஒருமைப்பாடு மேலும் வலுப்பட்டிருக்கிறதே ஒழிய, ஊனப்படவில்லையே.
சீனாவும் சப்பானும் ஒரே மொழி பேசும் நாடுகள்! சீனாக்காரனுக்கும் சப்பான்காரனுக்கும், தங்கள் தாய்மொழிகளைத் தவிர, வேறு எந்த மொழியும் தெரியாது.
உலகளாவி வளரும் விஞ்ஞானத்தைக் கூட அவர்கள் தங்கள் தாய் மொழியிலேயே கற்கிறார்கள். அவர்களுக்கும் ஆறறிவு இருக்கிறது; அவர்கள் இரண்டாவது மொழியாகக் கூட ஒரு மொழியைக் கற்பதில்லை. வெட்டி வேலை பார்ப்பது அறிவுப் பெருக்கத்திற்குத் தடை!
புத்தகம்; ‘புக்’(இர்ர்ந்); ‘கிதாப்’ என மும்மொழிச் சொற்களை அறிவதால், கூடுதல் பயன் என்ன? அறியப்படுவது ஒன்றுதானே!
சீனா, சப்பான் போன்ற நாடுகளில் ஒருமைப்பாடு குறித்து யாருமே பேசுவதில்லை. ஏனெனில் அந்த ஒருமைப்பாட்டைச் சிதைக்க இன்னொரு மொழியும் கிடையாது; இன்னொரு இனமும் கிடையாது.
ஆனால் இந்தியா உருவாக்கப்பட்ட நாடல்லவா. அது இயற்கை நாடு அல்லவே! நம் கண்ணுக்குத் தெரிந்த மூவாயிரம் ஆண்டு கால வரலாற்றில், இந்தியா என்னும் நாடே இருந்தது கிடையாதே.
அந்தப் பரந்த நிலத்தில் பல மொழி பேசும் பல நாடுகளும், பல நாகரிகங்களும், பல பழக்க வழக்கங்களும் இருந்தன. ஒருவருக்கொருவர் அயலாராகத்தான் இருந்தனர்.
இந்தியாவைக் குமரியிலிருந்து ஆப்கானித்தானம் வரை ஒன்றாக்கி ஆண்டவன் வெள்ளைக்காரன்தான்.
தமிழன் கன்னடியனோடு உறவு கொள்ளக் கன்னடமும், வங்காளியோடு உறவு கொள்ள வங்காளமும், கங்கை ஆற்றங்கரைக்காரனோடு உறவு கொள்ள இந்தியும் கற்க வேண்டுமென்றால் அது கடைபோகின்ற செயலா?
இந்தியாவில் இருந்த எல்லா நாடுகளும் ஒன்றுக்கொன்று வேறானவை; அயலானவையே.
இவற்றை ஒருமைப் படுத்தத் தகவல் பரிமாற்றம் வேண்டும்! அதற்கு அவன் தன்னுடைய தாய்மொழி யான ஆங்கிலத்தை நம்மை எல்லாம் கற்கும்படி செய்து, வங்காளியையும், ஒரியனையும், தமிழனை யும் ஒருவனுக்கொருவன் நெருக்கமாக்கி விட்டான். ஆகவே வெள்ளைக்காரன் கருதாமலேயே இந்தியா வின் முதல் தேசிய மொழி ஆங்கிலம்தான்.
இதற்கு முந்திய, பாதி அளவுக்கு இந்தியா வை ஆண்ட எந்தப் பேரரசும் இது போல் ஒன்றைச் செய்யவில் லையே.
நவீன அறிவு ஆங்கில வழியாகத்தானே நமக்கு வந்தது. வெள்ளைக் காரனுக்கு அவன் தேவை நிறைவேறியது ஒரு புற மிருக்கட்டும்; நம்மைப் புதிய உலகுக்குள் கொண்டு செல்லவும் ஆங்கிலம் தானே வாயிலாக இருந்தது.
டால்சுடாயையும், தோராவையும், ரசுகினையும் படித்து அதிர்ந்து போன காந்தி, அவர்களின் வாயிலாகப் பெற்ற அறிவைக் கொண்டு, இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தை இன்னும் மேலாக நடத்த வில்லையா?
காந்தியையும் தமிழ்நாட்டு இராசாசியையும், காந்தியையும், வங்காளத்துப் போசையும், காந்தி யையும் ஆந்திரகேசரி பிரகாசத்தையும் இணைத் தது அயலானின் ஆங்கிலம்தானே. அப்போதே இந்திய ஒருமைப்பாடு நிகழ்ந்து விட்டதே.
இந்தியைக் கற்று, மற்ற எல்லாரையும் கற்கச் செய்து, தேசபக்தியோடு இந்திய மொழி வழியாகத்தான் விடுதலைப் போராட்டத்தை நடத்துவது என்றிருந்தால், இன்றுவரை வெள்ளைக்காரன்தானே ஆண்டு கொண்டிருப்பான்.
வெள்ளைக்காரன் ஆங்கில வழியாக, நம்மை ஒருவரோடு ஒருவர் பழகச் செய்து, நம்மை ஒன்றாக்கி விட்டானே.
இந்திய ஒருமைப்பாடு ஏற்கனவே ஏற்பட்டு இறுகி விட்ட ஒன்று! அது ஆங்கில மொழி வழியாக நடந்தேறி முடிந்து விட்டது! இப்போதென்ன புது ஒருமைப் பாட்டுப் பூச்சாண்டி?
வெள்ளைக்காரன் செய்யாத ஒன்றை, அவனளவுக்குச் செய்யத் தேவையில்லாத ஒன்றை, இந்தியாவின் நிலைபேறு(Survival)கருதிப் பேரறிவு படைத்த பெம்மான் காந்தி செய்தார்!
மொழிவழித் தேசியம்(Linguistic nationalism) வழியாக மொழி வழி இனங்களாக நம்மை பகுத்துக் கொள்ள வழி வகுத்தவர் காந்தி அல்லனோ.
ஆந்திரா, கருநாடகம், கேரளம், தமிழ்நாடு ஆகியவற்றின் நிலப்பகுதிகள் ஒன்றிணைந்து சென்னை இராசதானியாக இருந்த 1920 கால அளவிலேயே, தமிழ்நாடு காங்கிரசுக் கமிட்டி, கேரள காங்கிரசுக் கமிட்டி என அவரவர்கள் தனி இனம் என்னும் உணர்வு பொங்கும் வகையில், அந்தந்த மாநிலங்கள் உரிமையோடு வாழ அனு மதித்தால்தான், இந்தியாவோடு இணைந்திருக்க வும், இந்தியாவைத் தங்கள் நாடு என்று கருதவும், எல்லாரும் இசைவார்கள் என்பதைச் சிந்தித்துச் செயல்படுத்தக் காந்தியைத் தவிர வேறு எவனுக்கு அறிவு இருந்தது?
வெள்ளைக்காரன் அதிகாரச் சவுக்குக் கொண்டு அரைகுறையாக உருவாக்கி இருந்த ஒருமைப்பாட்டை நிலைக்கச் செய்ய, எம்மான் காந்தி வகுத்த இணையற்ற திட்டமே மொழிவழித் தேசியம்.
இந்தியாவுக்குக் காந்தியின் இன்னொரு பங்களிப்பு சமயச்சார்பின்மை (Secularism)!
விடுதலை பெற்ற இந்தியாவை இன்றுவரை நிலைநிறுத்திக் கொண்டிருப்பவை காந்தியின் இந்த இரண்டு கொள்கைகளே! அவ்வளவு பெரிய காந்திக்கு ஆங்கிலம் நம்மை அடிமைப் படுத்த வந்தவனின் மொழி என்று தோன்றியது!
இந்திய மண்ணில் உள்ள ஒரு மொழி தேசிய மொழி இருக்க வேண்டும்; இல்லாவிடில் வெள் ளைக்காரன், ‘"சொந்த மொழி இல்லாதவர்கள்' என்று நகையாடுவான் என்று காந்தி கூச்சப் பட்டிருக்க வேண்டும். ஆகவே இந்திய மண்ணுக்குரிய ஒரு மொழி, பெருவாரியான பேர் பேசுகின்ற மொழியான இந்தியைத் தேசிய மொழி என அறிவித்தார் எம்மான் காந்தி.
இந்தியாவில் மூன்றில் ஒரு பங்குக்கு இந்தி பேசுகின்றனர். மூன்றில் இரண்டு பங்கினருக்கு இந்தியோடு எந்தத் தொடர்பும் இல்லை! பெருவாரி என்பது மூன்றில் இரண்டு பங்கா? மூன்றில் ஒரு பங்கா? அறிவுடைய எவனாவது சொல்லட்டுமே.
இந்தி தேசிய மொழியானால், இந்தி பேசாத இந்தியாவின் மூன்றில் இரண்டு பங்கினர் மீது இந்தி ஆதிக்கமும் இந்திக்காரர்களின் ஆதிக்கமும் ஏற்பட்டுவிடாதா?
ஆங்கிலேயனின் ஆதிக்கத்தை அகற்றி இந்திக்காரனின் ஆதிக்கத்தை ஏற்பதானால், இது என்ன விடுதலை?
அது இந்திக்காரனின் விடுதலை ஆகுமேயன்றி, இந்தியாவின் விடுதலை ஆகுமா?
எல்லாவற்றிற்கும் விடை கண்டறிந்த, புதிய இந்தியா படைத்த, அது நிலைப்பதற்கு வழி வகுத்த, அறிஞர்க்கெல்லாம் அறிஞனான காந்திக்கு ஏன் இது தோன்றவில்லை?
அமித்சா சொல்கிறார்: ஆங்கிலம் அயல் மொழி;
எங்களுக்கு இந்தி என்ன சொந்த மொழியா? அயல்மொழிதானே!
இந்திதான் தேசிய மொழி என்றால், உத்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், பீகார், சார்கண்ட், அரியானாதான் தேசமா?
இந்தியாவைச் சுருக்கப் போகிறீர்களா?
(தொடரும்)