Skip to main content

அடுத்த கட்டம் -பழ. கருப்பையா (38)

(38) இது காந்தி நடந்த மண்!

டிகரும் அரசியல் கட்சியின் தலைவருமான கமல், அரவக்குறிச்சியில் தன்னுடைய வேட்பாளருக்காகப் பேசும்போது, "இசுலாமியர்கள் நிறைந்த பகுதி என்பதனால் இதைச் சொல்லவில்லை'’என்று அடித்தளமெல்லாம் அமைத்துக்கொண்டு, விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் வன்முறையாளர் (Terrorist) ஓர் இந்து என்றும், அந்த மனிதரின் பெயர் நாதுராம் கோட்சே'’ என்றும் பேசியுள்ளார். ‘அங்கிருந்துதான் அதிதீவிரச் செயல்கள் (Extremism) தொடங்கின’ எனவும் பேசியுள்ளார்.

‘இதை நீ ஏன் பேசுகிறாய்?’ என்று யாரும் கேட்டுவிடக்கூடும் என்று மருகி, ‘"நான் மகாத்மா காந்தியின் பேரன் என்று நானாகவே வரித்துக் கொண்டுள்ளமையால், அவருடைய படுகொலைக்கான விடையைத் தேட வேண்டியவனாகிறேன்'’என்றெல்லாம் வளைத்து வளைத்துப் பேசியுள்ளார்.

காந்தியைக் கொன்ற கொடூரத்தை மக்கள்முன் வைப்பதற்குக் கமல் காந்தியின் பேரனாகத் தன்னைத் தானாகவே வரித்துக் கொள்ளத் தேவையில்லை. காந்தி நாட்டின் தந்தை. எல்லா மக்களும் அவரின் மக்கள்தாம்.

"காந்தியைக் கொன்றவன் இந்து; விடுதலை பெற்ற இந்தியாவில் முதல் வன்முறை அங்கிருந்துதான் தொடங்குகிறது'’என்று சொல்லிவிட்ட மகிழ்ச்சியோடு கமல் பேச்சை முடித்துக் கொண்டு விட்டார்.

ஆனால் "காந்தியினுடைய படுகொலைக்கான விடையைக் கமல் அரவக்குறிச்சியில்தான் தேட வேண்டுமா? சென்னையில் தேடி இருந்தால் கிடைக்காதா' என்று கொதிக்கிறார்கள் மேலேயும் கீழேயும் உள்ள ஆட்சியாளர்கள்.

அவர் எங்கே போய் எதைக் கண்டறிந்திருந்தாலும், அவர் வெளிப்படுத்தியது முற்ற முழுக்க உண்மையைத்தான். அவர் ஒரு பத்து ஓட்டு இதனால் வாங்க நினைத்தால், இதிலே என்ன பெரிய குற்றம்?

1

தீவிரவாதத்திற்கு மதம் எங்கே இருக்கிறது என்று ஒரு தமிழ்நாட்டு மந்திரி கமலைப் பார்த்து கேட்கிறார். உலகெங்கும் தீவிரப் போக்குகளே மதங்களைத்தான் மையங்கொண்டிருக்கின்றன என்பதெல்லாம் அவருக்குத் தெரியாது.

நாக்கை வெட்டு; மூக்கை வெட்டு’ என்று பேசியே மந்திரிகளாகிவிட்டவர்கள் அவர்கள். ஆகவே இந்த வெற்றிச் சூத்திரத்தை அவர்கள் என்றும் கைவிட மாட்டார்கள். இதுதான் தமிழ்நாட்டின் அரசியல்தரம்.

இவர்கள் கிடக்கட்டும்... இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர், பாக்கித்தானும் சீனாவும் கிடக்கட்டும் என்று போட்டுவிட்டு, கமலின் பேச்சால் பதறி எழுந்து, அவருக்குப் பாடம் நடத்த முயன்றிருக்கிறார்.

"கமலுக்கு Assassin என்பதற்கும் Terrorist என்பதற்கும் வேறுபாடு புரியவில்லை. அது புரிந்தால் இவ்வாறு பேசியிருக்கமாட்டார்'’என்று கூறியுள்ளார்.

Assassin என்பவன் பணத்திற்காகவோ அரசியலுக்காகவோ ஒரு முதன்மை வாய்ந்த மனிதனைக் கொல்பவன். (To kill an important person for money or political reasons. இவ்வாறு ஆக்சுபோர்டு அகரமுதலி கூறுகிறது)

Assassin என்பவன் ஓர் அரசையோ சமூகத்தையோ, தான் முன்வைக்கும் கோரிக்கைகளை ஏற்கும்படி செய்வதற்காக, வன்முறையைப் பயன்படுத்துபவன்(One who uses violence to force a Government or community etc to act in a certain way or accept certain demands -சேம்பர்சு அகரமுதலி)

கென்னடியைச் சுட்டவன் assassin. அவன் ஒரு தனி மனிதன். இவன் பணத்திற்காகவோ ஆத்திரத்திலோ சுட்டிருக்கலாம்.

இதுபோல காந்தியைச் சுட்ட கோட்சேயும் assassinதான்; ; terrorist இல்லை என்பது அம்மையாரின் வாதம்.

Assassin தனித்து இயங்குபவன். Terrorist கூட்டத்தில்தான் இயங்குவான்! தனிமனிதன் பழிவாங்க முடியும்; ஆனால் அரசை அடிபணிய வைக்கத் தனிமனிதனால் முடியாது! ஆனால் இந்தப் பயங்கரவாதிகளுக்கோ ஒரு நோக்கமும் இருக்கும்; அவர்களுக்குப் பின்னணியில் ஓர் அமைப்பும் (Organisation) இருக்கும்.

2
pp
காந்தியைச் சுட்டவன் தனி மனிதனில்லை. கமலுடைய பேச்சில் இதற்கான போதிய விளக்கம் இல்லை. கோட்சே தனிமனிதனாக இருந்திருந்தால், அவனைத் தூக்கிலிட்டதோடு அந்தத் தீமை ஒழிந்திருக்கும்; கோட்சே தனி மனிதனில்லை. அவன் ஒரு இயக்கத்தால் உருவாக்கப் பட்டவன். சவர்க்காரின் கொள்கையால் வடிவமைக்கப் பட்டவன்.

‘இது இந்து தேசம்; இங்கே மற்றவர்களுக்கு இடம் இல்லை; அப்படி இருப்பதானால் அந்தோணியும், அப்துல்லாவும் இரண்டாம் தரக் குடிமக்களாகவே இருக்க வேண்டும். இது தநந கொள்கை.

காந்தி ஓர் ஆழமான இந்து; ஆனால் "மக்களுக்குதான் மதம் உண்டே ஒழிய, அரசுக்கு மதம் கிடையாது' என்று சொன்ன இணையற்ற சிந்தனையாளன் அந்தக் கிழவன்.

காந்தியை ஒழித்தால் ஒழிய நாம் விரும்பும் இந்து நாட்டை உருவாக்க முடியாது என்று சவர்க்கார் நினைத்தார்.

தநந என்பது இந்தக் கொள்கைக்காக உருவான ஓர் அமைப்புதான்.

கருத்து மாற்றத்தில் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை; ஆட்களைக் காலி செய்வதில்தான் நம்பிக்கை! அதனால்தான் காந்தியைக் கொன்றார்கள்.

அந்தக் கூட்டத்தின் செயல்வடிவமே கோட்சே.

கோவையிலே குண்டு வைக்கிற இசுலாமியப் பயங்கரவாதி கூட ஒரு தனி மனிதனாகத்தான் வெடிகுண்டுப் பெட்டியோடு பேருந்து நிலையங்களை நோக்கிப் போகிறான். அவன் தனி மனிதனல்லன்; ஓர் அமைப்பின் அங்கம்தான்.

கென்னடியைக் கொன்றவனைப் போல் தனி நோக்கம் கொண்டவனல்லன் கோட்சே.

வன்முறையை வாழ்க்கை முறையாகக் கொண்ட ஒரு கூட்டத்தின் ஓர் அங்கம்.

அதனால்தான் கோட்சே கைது செய்யப் பட்டதோடு அந்தக் காரியம் முடியவில்லை. அவன் சார்ந்த RSS இயக்கம் நாடு முழுவதிலும் தடை செய்யப்பட்டது.3

அந்தத் தடையை விதித்து, அதை ஒடுக்கியவர் வல்லபாய் பட்டேல் என்னும் இரும்பு மனிதன்! காந்தியைக் கோட்சே கொன்றதற்கு அடிப்படை, ஏதாவது பங்கு பாகச் சண்டையா? வயல் வரப்புத் தகராறா? இது ஏதோ ஓர் ஆத்திரத்தில் நடந்த செயலா? காந்தியைக் கொன்ற கோட்சே தனியொரு அரசியல் கொலையாளி (Assassin) என்று பாதுகாப்பு அமைச்சர் எளிதில் கடந்து போய் விட முடியுமா?

நியூசிலாந்தில் ஒரு பள்ளி வாசலில் தொழுது கொண்டிருந்த எண்ணற்ற அப்பாவி முசுலிம் களை ஒரு வெள்ளைக்காரன் ‘தானாக இயங்கும் துப்பாக்கி’ கொண்டு சுட்டு வீழ்த்தினான். நினைத்துப் பார்க்க முடியாத கொடுமை இது. அவன் ஒரு தனிமனிதன்; அவனை Assassin என்று பாதுகாப்பு அமைச்சர் எளிதாகக் கடந்து போய்விடுவாரா? இசுலாமியப் பயங்கரவாதிகளுக்குப் பாடம் கற்பிப்பதற்காகத்தான் இதைச் செய்ததாக அந்த வெட்கங்கெட்ட வெள்ளைக்காரன் சொல்லிக்கொண்டான். அதற்கு அவன் இசுலாமியப் பயங்கரவாதிகள் முகாமில் போய்ச் சுட்டுத் தள்ளியிருக்க வேண்டும். எதற்காகத் தொழுதுகொண்டிருந்த அப்பாவி முசுலிம்களைச் சுட்டுக் கொல்கிறான்? இதை White terrorism என்று சொல்கிறார்கள்.

இதற்கு எதிராக இலங்கையில் அதேபோல் மாதா கோயிலில் வழிபட்டுக்கொண்டிருந்த அப்பாவிக் கிறித்துவர்களை இசுலாமியத் தீவிரவாத அமைப்பினர் கொன்று குவித்திருக்கிறார்கள்.

உலகப் பயங்கரவாதிகள் அனைவருமே கோழைகள். அரசமைப்பு, காவல் அமைப்பு, இராணுவ அமைப்பு இவற்றின்மீது குண்டு வீசினால், அவர்கள் எதிர்வினை ஆற்றுவார்கள் என்று அஞ்சி, இவர்கள் அப்பாவிப் பொதுமக்களைக் கொல்கிறார்கள். இஃது அசிங்கமாக இல்லையா? இஃது ஆண்மையான செயல்தானா?

யாரோ ஒருவன் கொலை செய்துவிட்டான் என்று வைத்துக்கொள்ளுங்கள்; அவனைப் பிடிக்க முடியவில்லை; அவனுக்குப் பதிலாக அந்த ஊர்க்காரன் எவனோ ஒருவனைப் பிடித்துத் தூக்கிலிடுவது போன்ற மடைமையான செயல்தான், இந்தப் பயங்கரவாதிகளின் செயலும்.

கமல் ஓட்டு வேட்டை ஆடுவதற்காகத்தான் அரவக்குறிச்சிக்குப் போய் இதைச் சொன்னார் என்று பாதுகாப்பு அமைச்சர் சொல்லட்டும்; அது வேறு. அப்போதும் ஓர் உண்மையைத்தான் அவர் சொன்னார் என்பதை எப்படி மறுக்க முடியும்?

4

ஆனால் கோட்சே என்னும் பெயர் அருவருப்பான பெயர். அவன் கொன்றது ஓர் எளிய மனிதனை அன்று. இந்தியாவின் முகத்தையே மாற்றி அமைத்த ஓர் இணையற்ற மனிதனை.

இந்தக் கொடியசெயலை நியாயப்படுத்துவதோ, அதை ஒரு தனிமனிதனின் மீது போட்டு விட்டு, அவனை உருவாக்கிய அமைப்பை இன்றுவரை மாற்றி அமைக்க நினைக்காததோ, ஒரு பெரிய பொறுப்பில் இருக்கும் மைய அமைச்சருக்கு அழகன்று.

இறைமகன் ஏசுவைப் பார்த்து எளிய யூதப்பெண் ஒருத்தி சொன்னாளாம்; ‘"இவனுக்குப் பாலூட்டிய முலைகள் பேறு பெற்றவை'.’

இந்திய மண் பேறு பெற்ற மண்!

இது காந்தி நடந்த மண்!

(தொடரும்)


 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

இவ்விதழின் கட்டுரைகள்