(19) சாதி என்னும் அரசியல் தீமை
இந்தப் பாராளுமன்றத் தேர்தல், பாசிச ஆட்சி நடத்துகிற மோடி ஆட்சி பீடத்திலிருந்து நீக்கப்பட வேண்டுமா அல்லவா என்று தீர்மானிக்க இருக்கிற தேர்தல்.
ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஒருநாள் மட்டுமே மக்களுக்கு அதிகாரம் வருகிறது. அந்த ஒரு நாளில் மக்கள் விழிப்போடிருந்தால், மீதமுள்ள காலம் காலாட்டிக் கொண்டு வாழலாம்.
சாதிவாரியாக, மதவாரியாக வாக்களிப்போர் இந்த நாட்டில் கொஞ்ச நஞ்சமானோர் அல்லர்.
எங்கள் சாதிக்காரர் மந்திரியாக இருக்கிறார் என்கின்ற பெருமிதம் எல்லாச் சாதியினருக்கும் உண்டு. ஆகவே எந்தச் சாதிக்காவது அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் இல்லாமல் போய்விடுமானால், அதனால் எழுகின்ற கூச்சல்களும் கொஞ்சநஞ்சமல்ல.
அந்தக் குறிப்பிட்ட ஒருவர் மந்திரியாக ஆக்கப்படுவதால் அந்தச் சாதியினர் அடையும் குறிப்பான நன்மை என்று எதுவுமே இருக்காது.
எந்த ஒரு சாதியினர்க்காகவும் சாலைகள் போடப்படுவதில்லை. எந்த ஒரு சாதியினர்க்காகவும் வாய்க்கால்கள் வெட்டப்படுவதில்லை. எந்த ஒரு சாதியினர்க்காகவும் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதில்லை. எந்த ஒரு சாதியினர்க்காகவும் கல்விக் கூடங்கள் கட்டப்படுவதில்லை. எந்த ஒரு சாதியினர்க்காகவும் தனித்த மருத்துவமனைகள் இல்லை. எல்லாமே எல்லார்க்குமே பொதுவில்தான் நடக்கின்றன. ஒரு குறிப்பிட்ட சாதியானது, ஆட்சியமைப்பில் தனியாள் பிரதிநிதித்துவம் கூடப் பெறாமல் போய்விட்
(19) சாதி என்னும் அரசியல் தீமை
இந்தப் பாராளுமன்றத் தேர்தல், பாசிச ஆட்சி நடத்துகிற மோடி ஆட்சி பீடத்திலிருந்து நீக்கப்பட வேண்டுமா அல்லவா என்று தீர்மானிக்க இருக்கிற தேர்தல்.
ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஒருநாள் மட்டுமே மக்களுக்கு அதிகாரம் வருகிறது. அந்த ஒரு நாளில் மக்கள் விழிப்போடிருந்தால், மீதமுள்ள காலம் காலாட்டிக் கொண்டு வாழலாம்.
சாதிவாரியாக, மதவாரியாக வாக்களிப்போர் இந்த நாட்டில் கொஞ்ச நஞ்சமானோர் அல்லர்.
எங்கள் சாதிக்காரர் மந்திரியாக இருக்கிறார் என்கின்ற பெருமிதம் எல்லாச் சாதியினருக்கும் உண்டு. ஆகவே எந்தச் சாதிக்காவது அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் இல்லாமல் போய்விடுமானால், அதனால் எழுகின்ற கூச்சல்களும் கொஞ்சநஞ்சமல்ல.
அந்தக் குறிப்பிட்ட ஒருவர் மந்திரியாக ஆக்கப்படுவதால் அந்தச் சாதியினர் அடையும் குறிப்பான நன்மை என்று எதுவுமே இருக்காது.
எந்த ஒரு சாதியினர்க்காகவும் சாலைகள் போடப்படுவதில்லை. எந்த ஒரு சாதியினர்க்காகவும் வாய்க்கால்கள் வெட்டப்படுவதில்லை. எந்த ஒரு சாதியினர்க்காகவும் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதில்லை. எந்த ஒரு சாதியினர்க்காகவும் கல்விக் கூடங்கள் கட்டப்படுவதில்லை. எந்த ஒரு சாதியினர்க்காகவும் தனித்த மருத்துவமனைகள் இல்லை. எல்லாமே எல்லார்க்குமே பொதுவில்தான் நடக்கின்றன. ஒரு குறிப்பிட்ட சாதியானது, ஆட்சியமைப்பில் தனியாள் பிரதிநிதித்துவம் கூடப் பெறாமல் போய்விட்டாலும், எந்த நன்மையும் எந்தச் சாதிக்கும் கிட்டாமல் போவதில்லை.
பிறகு ஏன் இவ்வளவு சாதிக் கூச்சல்கள்?
மாரடைப்பு வருகின்ற போது, "நம்முடைய சாதி மருத்துவனிடம் தூக்கிக் கொண்டு போ' என்று எந்த நோயாளியும் கூறுவதில்லை.
அணை கட்டுகிறபோது "எங்கள் சாதிப் பொறியாளரிடம் அந்தப் பொறுப்பை ஏன் ஒப்படைக்கவில்லை' என்று அரசிடம் யாருமே கேட்பதில்லை.
அவ்வளவுக்கு ஏன்? சொந்த வீடு கட்டும்போது கூட, அக்காள் மகனைப் புறந்தள்ளி விட்டுத் தேர்ந்த பொறியாளரைத்தானே யாரும் தேடுகிறார்கள்.
முன்பெல்லாம் தீபாவளி சமயத்தில் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் "இந்துக்களின் கடைகளிலேயே சாமான் வாங்குவீர்' எனச் சுவர் விளம்பரம் செய்வார்கள்.
இதனால் எந்த முசுலிமோ, கிறித்தவரோ கடையை மூட நேரிட்டதில்லை. எந்தக் கடையில் மலிவாகவும், தரமாகவும் இருக்கிறதோ, அந்தக் கடையை நாடிப் பொருள் வாங்குவதை மக்கள் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். கடை வைத்திருப்பவனின் மதம் பொருள்களின் தரத்திலும் விலையிலும் குறுக்கிடுவதை யாரும் அனுமதிப்பதில்லை.
எல்லாவற்றிலும் தரத்தைப் பார்க்கிறார்கள். தகுதியைப் பார்க்கிறார்கள். அரசியலில் மட்டும் சாதியைப் பார்க்கிறார்களே ஏன்?
தாமசு மன்றோ அண்ணாசாலையில் ஆரோகணித்து அரபுக் குதிரையின் மீது அமர்ந்திருக்கிறானே, அவனென்ன நம்முடைய உடன் பங்காளியா?
சமீன்தார்களின் கோரப் பிடியிலிருந்து உழவர் குடியினரை விடுவித்து, ரயத்துவாரி முறைக்கு வரி விதிப்பை மாற்றி, வேளாண்மையும், உழவர் குடிகளும் உயர வழி கண்டவன் அவன் என்பதுதானே நம்முடைய போற்றுதலுக்குக் காரணம்.
ஆந்திரப் புழுதிக் காட்டில் மொட்டை வெய்யிலில், வெய்யிலுக்குப் பழக்கப்படாத தன்னுடைய வெள்ளைமேனியைக் கருக்கிக் கொண்டு, சமீன்தார்களின் விருந்துகளை புறந்தள்ளி இறுதியில் அவர்களை ஒடுக்கி ஒன்றுமில்லாமல் ஆக்கி, வேளாண் குடிகளுக்கு அளப்பரிய நன்மைகள் செய்தவனல்லனே அவன்.
"ரிப்பன் எங்கள் அப்பன்' என்று ஒரு வெள்ளைக்காரனை மக்கள் போற்றியதாலன்றோ, நம்முடைய சென்னை மாநகராட்சிக் கட்டிடத்திற்கு அவன் பெயர் சூட்டப்பட்டது. அவன் என்ன நம்முடைய இனத்தானா?
நம்முடைய சாதி மந்திரிகள் கொடி கட்டிய மகிழ்வுந்துகளில் பறக்கிறார்களே! அயலானான வெள்ளையனிடம் அடைந்த நன்மைகளில் ஒரு சிறு கூறு என்னும் அளவுக்காவது நம் சாதியானிடம் அடைந்திருக்கிறோமா?
அரசுத் தரப்பு ஆசிரியர் வேலை, மருத்துவமனைகளில் செவிலியர் வேலை, பேருந்துகளில் நடத்துனர் வேலை, கேவலம் சத்துணவுக் கூடங்களில் தொண்டைக்கும் நெஞ்சுக்குமான சம்பளத் தகுதியுடைய ஆயாள் வேலை என எல்லா வேலைகளுக்கெல்லாம் சொந்த சாதிக்காரனே விண்ணப்பித்திருந்தும், அவனிடமும் காசு வாங்கிக் கொண்டுதானே வேலை போட்டுக் கொடுக்கிறார், நாம் கூவிக் கூவிப் போற்றிய நம் சொந்த சாதி மந்திரி.
சுரண்டுவதற்கு அந்த மந்திரி வைத்திருக்கின்ற பெயர் "கட்சி நிதி' (Party fund).
பிறகு ஏன் சாதி சாதி என உயிரை விடவேண்டும்.
இந்தியா உணவுப் பற்றாக்குறையுடைய நாடாக இருந்தது. வெளிநாடுகளிலிருந்து அரிசி இறக்குமதி செய்யப்பட்டது. சலுகைக் கோதுமையை அமெரிக்காவிலிருந்து கேட்டுப் பெற வேண்டிய நிலை ஒரு கட்டத்தில் இந்தியாவின் தன்மானத்தைப் பாதித்தது.
அப்போது மைய வேளாண் அமைச்சராக சி.சுப்பிரமணியம் இருந்தார். முனைப்பு மிக்க வேளாண் விஞ்ஞானியாக எம்.எஸ்.சாமிநாதன் அவருடைய துறைச் செயலாளராக இருந்தார்.
அவர்கள் இருவரும் சேர்ந்து உருவாக்கியதுதான் பசுமைப் புரட்சி. உணவில் இந்தியா தன்னிறைவு எய்தியதோடு, ஏற்றுமதி செய்கின்ற அளவுக்கு வளர்ச்சியும் பெற்றது.
பால் அரிய பொருளாகவும் மேட்டுக் குடியினர்க்கு உரிய பொருளாகவும் இருந்தது. குசராத்தில் தொடங்கி இந்தியா முழுதும் விரவிப் பரவியது வெண்மைப் புரட்சி. கலப்பினப் பசுக்கள் பெருக்கப்பட்டன. பத்து லிட்டருக்கு மேலாகக் கறக்கின்ற மாடுகளின் உருவாக்கம் பாலை எளிய பொருளாக ஆக்கிவிட்டது.
ஆட்சி என்பது எளிதான ஒன்றில்லை. மக்களை அடுத்த கட்டத்திற்குத் தூக்கிச் செல்வதற்கு ஆர்வமும், முனைப்பும், கூரிய அறிவும், எதிர்கால நோக்கும் வேண்டும்.
அத்தகையவர்களைப் பெறுகின்ற காலத்தில் மட்டுமே பசுமைப் புரட்சி, வெண்மைப் புரட்சி, கல்விப் புரட்சி போன்றவை நிகழ முடிகிறது.
தாமசு மன்றோ, இராசாசி, காமராசர், நேரு, வல்லபாய் படேலின் காலங்கள்தாம் அடித்தளக் கட்டமைப்புகளை உருவாக்கிய காலங்கள். அவர்களின் அர்ப்பணிப்பு மனப்பான்மைதான் நாடு மேம்பாடடையக் காரணமாயிருந்தது.
அவர்கள் தியாக வேள்வியில் சுடப்பட்டு அழுக்கு நீங்கப் பெற்று பொன் போல் ஒளிர்ந்தவர்கள்.
இவ்வளவு வளர்ச்சி அடைந்த காலத்தில் விவசாயத்திற்குப் பயன்படுத்தும் உயர்திறன் மோட்டாருக்கு நம்முடைய அரசால் மின் இணைப்பு வழங்க முடியவில்லை.
அவர்கள் காலங்காலமாக வரிசையில் காத்து நிற்கிறார்கள். வரிசை நத்தை போல் நகர்கிறது. மின் உற்பத்தி போதவில்லையாம்.
நீர்வீழ்ச்சிகளிலிருந்து மின்சாரம் என்பது போய், அனல் மின்நிலையங்கள் என்று வளர்ந்து, இப்போது காற்றிலிருந்தும், கதிரவனின் ஒளியிலிருந்தும் மின்சாரம் தயாரிக்கின்ற காலம் வந்த பின்னும் அதற்கான திட்டங்களில்லை. இன்னும் விவசாயிகள் காத்திருப்போர் பட்டியலில்.
நம்முடைய சாதி மந்திரி பொங்கலுக்கு ஆயிரம் ரூபாய் தருவார். ஆனால் உயர்திறன் மோட்டாருக்கு மின்சாரம் தரமாட்டார் என்பது சாதி வேட்கைமிக்க நம்முடைய மக்கள் திரளுக்குப் புரிவதில்லையே.
வைகை அணைக்கட்டிலுள்ள குறைந்த அளவு நீர் ஆவியாகாமல் தடுக்க தெர்மாகூல் கொண்டு போர்த்த வேண்டும் என்று சிந்திக்கின்ற மந்திரிகளெல்லாம் நம்முடைய தேர்வுதானே.
செல்லூர் ராசு, கடம்பூர் ராசு, வெல்லமண்டி நடராசன் இவர்கள்தாம் நம்முடைய சமூகத்தின் பிழிவு (Essence).
சாதி என்பது சமூகத் தீமை என்று சொல்லப்பட்டது.
இன்று அது கொடிய அரசியல் தீமையாகி விட்டது.
(தொடரும்)