(88) இன்னொரு அறிவியக்கம் வேண்டும்!
நம்முடைய குடியாட்சி முறை சீரழிவதற்கு மிக முதன்மையான காரணமே, கட்சிக் கட்டுப்பாடு என்னும் பெயரால் தலைவர்களின் மிக மோசமான அசிங்கங்களை மூடி மறைத்தல்தான் என்று நம் தொண்டர்களுக்குக் கற்பித் திருப்பதுதான்.
அ.இ.அ.தி.மு.க.வில் செயலலிதா ஊழல் காரணமாக சிறை சென்றவர், அதற்காக நான்கு ஆண்டுகள் தண்டிக்கப் பட்டவர். தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. இரண்டுமே ஊழல் காரணமாக நாறிப் போன கட்சிகள்தாம். ஆனாலும் செய்தித்தாள் விளம்பரங்களில் தலைவர் களின் படங்களைப் போட்டு முகமன் கூறுவதோடு, அதனடியில் விசுவாசி என்றும், முழு விசுவாசி என்றும் தங்களைக் குறிப்பிட்டுக் கொள்ளும் பழக்கம் இரண்டு இயக்கங்களிலும் உண்டு.
கர்த்தருக்கு விசுவாசம் என்னும் சொற்றொடரை நாம் பல காலம் கேட்டிருக்கிறோம்.
இறைவனுக்கு விசுவாசம் என்பது பொருந்திய சிந்தனை. பிறப்பு, இறப்பு, வாழ்வின் அனைத்துப் போக்குகள் என அனைத்தையும் தீர்மானிப்பவன் என்னும் நம்பிக்கையே அவனுக்கு நம்மை முழு விசுவாசியாக்குகிறது. ஆனால் கட்சி என்பது ஒரு கொள்கையின் அடிப்படையில் பின்னப்பட்ட ஒரு கூட்டம். அதில் கூடுதல் அறிவுடையவன், வழிநடத்தத் தெரிந்தவன். அந்தக் கட்சியின் தலைவனாக ஏற்கப்படுகிறான்.
அந்தக் கொள்கை மொத்த சமுதாயத்திற்கும் நன்மை செய்யும் கொள்கை என்னும் அடிப்படையில், அதைத் தனி ஒருவனாக நிறைவேற்ற முடியாது என்பதால், அதே கொள்கையை ஏற்போரெல்லாம் ஒரு கூட்டமாகத் திரள்கிறோம், அதுதான் கட்சி.
அந்தக் கட்சி தன்னுடைய கொள்கைகளை நிறைவேற்றத் தேர்தலில் போட்டியிடுகிறது, ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்கிறது.
அதுபோல் ஆட்சி அதிகாரத்தைப் பிடித்த அண்ணா, இந்தியை எடுத்தெறிந்துவிட்டு, இரு மொழிக் கொள்கையை கொண்டு வந்தார். சென்னை இராசதானி என்று கேவலமாக அழைக்கப்பட்ட நம்முடைய நாட்டைத் தமிழ்நாடு என அழைத்துச் சட்டம் செய்தார்.
காமராசரைப் போல் வெறும் எட்டுப் பேரை மட்டும் அமைச்சரவையில் வைத்துக் கொண்டு நாடாளத் தொடங்கினார். கலைஞர், நெடுஞ்செழியன், மாதவன் போன்றோரெல்லாம் வலிய சாதியினராக இல்லாமல் இருந்தும் அமைச்சர்களானது, இந்தக் கட்சியை வளர்ப்பதற்கு இவர்கள் முன்னின்றவர் கள் என்பதால்.
ஒரு குறிப்பிட்ட சாதியைச் சார்ந்தவனை அமைச்சராக்க முடியாவிட்டால், அந்தச் சாதி கலகம் செய்யும் என்னும் நிலை அன்று இல்லை.
தங்கள் சாதி மந்திரி என்னும் பெருமிதம் இன்று வெளிப்படையாகக் காணப்படுகிறது. ஆனால் அந்தச் சாதி மந்திரி இரண்டாயிரம் கோடி பணம் அடிக்கும்போது, அவன் அதைத் தன் சாதியிலுள்ள எளியவர்களுக்காவது பங்கிட்டுக் கொடுக்கிறானா? வெற்று உணர்ச்சியிலே மக்கள் வளர்க்கப்படுகிறார்கள். நல்ல தலைமைகள் அற்ற நிலை இது.
1969 வரையிலும் ஊழல் என்னும் இழிவு தமிழ்நாட்டில் இல்லை. காங்கிரசு தூக்கி எறியப்பட்டதற்கு இந்தித் திணிப்பு என்னும் அதன் பேதைமைப் போக்கும், அரிசித் தட்டுப்பாடும் காரணமே அல்லாமல் வேறல்ல.
எம்.ஜி.ஆர். வெளியேறி ஊழலைச் சொல்லி கலைஞரை ஆட்சி இறக்கம் செய்தார். எம்.ஜி.ஆரின் முதல் ஆட்சி நீங்கலாக, அவருடைய கட்சியும் ஊழலின் ஊற்றுக் கண்ணாகியது.
அதன்பிறகு தி.மு.க.-அ.தி.மு.க. இரண்டுமே ஊழலுக்காகத்தான் மாற்றி மாற்றிப் பதவி இறங்கின.
இரண்டு கட்சிகளிலும் மந்திரிகளாக இருக்க வாய்ப்புப் பெற்றோரும், சட்டமன்ற உறுப்பினர்களும் பல ஆயிரம் கோடிக்கு அதிபதிகளாயினர்.
தமிழ்நாட்டின் அரசியல் போக்கு மாறியது. இரண்டு கட்சிகளின் தலைவர்களும் மக்களிடையே ஊழல் காரணமாக மதிப்பிழந்து விட்ட காரணத்தால், "இலவசங்கள் இவர்களின் ஆட்சிப் போக்குகளாயின. வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்து அவர்களின் வாக்குகளை விலைக்கு வாங்குவது இவர்களின் புதிய அரசியல் ஆனது.'
ஒவ்வொரு கட்சியும் பெரும் பெரும் அறக்கட்டளைகளை உருவாக்கிக் கொண்டன. அவை அறப் பணிகளுக்காக அல்ல.
அரசியலில் தலைமை தன் கையிலிருக்கும் பணத்தைக் கரைத்துவிட விரும்பாது என்பதால், பணம் வைத்திருக்கிறவர்களை வேட்பாளராக்கும் பழக்கத்தை இரண்டு கட்சிகளும் மேற்கொண்டன. வேட்பாளர்கள், தலைவர்களுக்குப் பணம் கொடுத்து, இடமும் சின்னமும் பெற்றனர்.
அவர்கள் ஏற்கனவே பணம் அடித்து வைத்திருந்ததால், தேர்தலுக்குப் போடும் முதலீடு, "புதிய வருவாய்க்கான முதலீடாகவே' கருதப்பட்டது.
பிறகு ஏறத்தாழ அதே வேட் பாளர்கள். அவர்கள் பெரும் பணம் அடித்து வைத்திருப்பதால், மாவட்டச் செயலாளர்களும் அவர்கள்தாம். இதனால் கட்சி அவர்களின் முழுப் பிடிக்குள் வந்துவிடும்.
அவர்கள் மந்திரிகளாக இருக்கும் போது, தலைமைக்குப் பங்கு கொடுப் பார்கள். "தலைமைக்குத் தொடைக் கறி' என்னும் தத்துவம் இடம் பெற்ற பிறகு, தலைவர்களால் அவர்களின் தலைமுடி யைக் கூட அசைக்க முடியாது.
மாவட்டங்கள் பாளையங்களாகி விட்ட பின்னர், மன்னருக்குக் கப்பம் கட்டுவது, மன்னர் கேட்கும்போது படை வரிசைகளை அனுப்புவது என்று எல்லாமே பழைய நாயக்கர்கள் ஆட்சி தான். மணி மகுடம் மட்டும் தான் தலைவர் களுக்கு இல்லை.
அவர்கள், அவர்களின் வாரிசுகள் என எல்லாமே மன்ன ராட்சி முறை தான்; பெயர் தான் மக்க ளாட்சி.
இவ்வளவு மோசமான ஆட்சிமுறை கள் ஏற்பட்டு ஐம்பதாண்டு கள் ஆகி விட்ட பின்னரும், அவற்றை அகற்று வது இன்றுவரை இயலவில்லை. கொள்கையைச் சுற்றி பின்னப்பட்டால், அதன் வழி கட்சி நடத்துவதற்கு அறிவாளர்கள் தேவைப்படுவர். அதற்குத் தலைவன் கூடுதல் அறிவுடையவனாக இருக்க வேண்டும். அண்ணாவால் மட்டுமே அது முடிந்தது. அண்ணா நடத்திய தி.மு.க. முற்றாக ஓர் அறிவியக்கம். நூறு தாளிகைகள், நூறு எழுத்தாளர்கள், நூற்றுக்கு மேற்பட்ட அழகு தமிழ்ப் பேச்சாளிகள். நாடு தடம் புரண்டது.
கலைஞர் காலத்தில் பழைய தலைமுறையின் எச்சமாக கலைஞர் மட்டுமே மீதி. மற்ற கட்சிகளில் எல்லாமே அற்றுப் போய் விட்ட காரணத்தால், கலைஞரை எழுத்தால், பேச்சால், எதாலும் அவரை எதிர்கொள்ள முடியவில்லை.
இருப்பினும் எழுத்தால், பேச்சால், அறிவியக்க உணர்வால் எதாலும் கலைஞருக்கு நிகரில்லை என்னும் நிலையிலும், ஊழல் அனுமதிக்கப்பட்டு விட்ட காரணத்தால், அறிவின் இடத்தைப் பணம் பெற்று விட்ட காரணத்தால், செயலலிதா அந்த அரசியலில் கலைஞரை விஞ்சி நிற்க முடிந்தது.
செயலலிதாவின் வழிதான் புதிய அரசியல் என்று ஆகி விட்ட பிறகு, தி.மு.க.வும் கலைஞர் காலத்திலேயே அந்தப் புதிய அரசியலுக்கு முற்றாக மாற்றம் பெற்றது.
கடந்த முப்பதாண்டு கால அரசியலைத் தடப்படுத்தியவர் (trend-setter) செயலலிதாதான்.
"நாளைய வரலாறே, எங்களின் எதிர்காலமே' என்றெல்லாம் தலைமையைத் துதிபாடி, அவருக்கு ஒரு புதிய தோற்றம் (image-building) கட்டும் முறையை செயலலிதாவிடம் இருந்து கலைஞரின் தி.மு.க.வும் வரித்துக் கொண்டது.
அரசியல் ஒரு தொழில் போலானது.
இரண்டு கட்சிகளுமே ஒரே அச்சில் சுழலத் தொடங்கின. கூட்டத்தை (gangs) வழிநடத்தும் தலைமைகள்தாம் வேறுபாடு.
பொதுவுடைமைக் கட்சிகளும்கூட முனை மழுங்கிவிட்டன. தோன்றிய கட்சிகளெல்லாம் மண்தொட்டிச் செடிகளாகவே இருக்கின்றன. மண்ணைப் பிளந்துகொண்டு, வானத்தைத் தொடும் மரங்களாகும் ஆற்றல் அவற்றின் வளர்ச்சிகளில் வெளிப்படவில்லை. அவை சூம்பல் நோயால் இருப்பை மட்டுமே காட்டிக் கொண்டிருக்கின்றன.
கல்லாத தலைமுறையை மாற்றியமைத்தார் அண்ணா.
கற்ற தலைமுறையை மாற்றுவதில் என்ன பாடு இருக்க முடியும்?
இன்னொரு அறிவியக்கம் வேண்டும்!
(தொடரும்)