(86) தெரிந்ததை சொல்லி ஆகப் போவது என்ன?
இரசினிகாந்த் திடீரென்று ஒருநாள் ஊடகங்களுக்கு காட்சி தருகிறார். மொத்த ஊடகமும் அங்கே குவிகிறது. ஆங்கில செய்தித் தாள்கள் கூட அதைப் பெரிதாக்குகின்றன. அவர் மொத்தப் பேட்டியிலும் சில வாக்கியங்களே பேசுகிறார்.
அவை அப்போதே தமிழ்நாட்டின் விவாத மாகி விடுகின்றன. ஒரு நடிகர் ஏதோ சொல்கிறார் என்று எந்தப் பெரிய கட்சியும் அவருடைய பேட்டியைப் புறக்கணிக்க முடிவதில்லை. உடனடியாக விடையளிக்கின்றன. அவர் நடிகர் என்பது கவனத்தை ஈர்க்கக் கூடுதல் வசதி. ஆனால் அது மட்டுமே போதாதே.
விசயகாந்த் இது போலக் கொஞ்சமும் அஞ்சாமல் இரண்டு திராவிட இயக்கங்களையும் கடுமையாக விமர்சித்தபோது, மக்களிடம் உணர்ச்சி அலை எழுந்தது.
தேர்தலில் நின்றபோது, தன்னுடைய சாதியினர் மிகுந்திருக்கும் தொகுதியை நாடாமல், வன்னியர் அடர்ந்திருக்கும் தொகுதியைத் தேர்வு செய்து, ஒரு பா.ம.க.வின் வேட்பாளரைத் தோற் கடித்துக் காலூன்றினார். அது இராமதாசின் பல இரவுத் தூக்கத்திற்கு உலை வைத்துவிட்டது. அவருடைய கட்சியின் அடிப்படையையே அசைக்கும் வெற்றி அது.
விசயகாந்த் எதிர்க்கட்சித் தலைவரானார். அடுத்த தேர்தலில் கலைஞர் கெஞ்சி அழைத்தார் விசயகாந்த்தை. அந்த அளவு தவிர்க்க இயலாத வராக விசயகாந்த் இருந்தார். கூடவே போய், கூடுதல் இடங்களைப் பெற்று, கலைஞரின் அரசில் மந்திரிப் பதவிகளைப் பெற்று, ஆட்சி அனுபவத் தையும் அடைந்து, பின்பு வெளியே வந்து, முதல்வர் இருக்கைக்கு முயன்றிருக்க வேண்டும்.
தங்களுக்கு வேறு போக்கு இல்லாத நிலை யில் விசயகாந்த்தோடு கூட இருந்த ஏழெட்டுக் கட்சிகள், உலை வைத்த வேகத்தில், கொதி வருமுன் கவிழ்த்து, அரிசியும் சோறுமாக இலையில் பரிமாறின. விசயகாந்த்தும் அழிந்தார்; கூட இருந்த சிறு சிறு கட்சிகளும் அழிந்தன. அதைத் தான் செயலலிதா விரும்பினார் என்று சொல்வார்கள்.
செயலலிதா ஆட்சிக்கு வர முடிந்ததற்கு அதுவே காரணம்.
விளைவு கலைஞர் மிகக் குறைந்த வாக்கு விழுக்காட்டில் தோற்றார்; விசயகாந்த் அணி சின்னாபின்னமானது.
இப்போது விசயகாந்த் அ.தி.மு.க.வின் வாலைப் பிடித்துத் தொங்குகிறார். மற்ற கட்சிகள் தி.மு.க.வின் வாலைப் பிடித்துத் தொங்குகின்றன.
தேர்தலில் நிற்க இடமும் கொடுத்துப் பணமும் கொடுக்கிற தி.மு.க. தலைமையை "முதிர்ச்சியான தலைமை' (Matured Leadership) என்று பாராட்டுப் பத்திரம் படித்துக் கொண்டு காலத்தைத் தள்ளுகின்றன அந்தச் சிறு கட்சிகள்.
ஒரு கூட்டணியில் சமநிலைப் பங்காளி களாக இருக்கும் நிலையை, இவர்களாகவே வளைந்து இழந்து விடுகிறார்கள். நாங்கள் பெற்றிருக்கும் பதவிக்குக் கூட்டணித் தலைவரே காரணம் என்று துதிப்பதன் மூலம், இவர்களின் அரசியல் இருப்புக்கான காரணம் தேய்ந்து மறைகிறது. இருபது, முப்பதாண்டுகள் அரசியலில் இருந்து பழக்கப்பட்டவர்களுக்கு இது தெரியாமல் போய்விடுவது காலக் கொடுமைதான்.
தி.மு.க. கூட்டணியில் காங்கிரசு மட்டும் தான் ஓரளவுக்கு பயனுடைய கட்சி.
அதுபோல் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க., தே.மு.தி.க.வை வீண் சுமை என்று எடப்பாடி உதறும்போது, அதனுடைய சுவாசத்திற்கு இன்னொரு "வெண்டிலேட்டர்' தேவைப்படும்.
ஒரு தேர்தலுக்கும் இன்னொரு தேர்தலுக்கு மிடையே பல கட்சிகள் மீளா உறக்கம் கொள்கின் றன. புதிய கட்சிகளும் பிறப்பெடுக்கின்றன.
கடந்த தேர்தலுக்குப் பிறகு தினகரன் பிறந்தார்.
அவருடைய முழு அரசியலும் அ.தி.மு.க. ஆட்சி போய்விடக் கூடாது, ஆனால் அதனு டைய தலைமை தனக்கு வர வேண்டும். அல்லது தான் விரும்பாத சிலர் அந்த அமைச்சரவையில் இருக்கக்கூடாது என்பதுதான்.
அதற்கு அவர் முழுதும் நம்பிச் செயல் பட்டது சின்னம்மாவின் பணத்தைத்தான்.
22 எம்.எல்.ஏ.க்களை கொண்டு வந்து ஆட்டம் காட்டியது வரை தினகரனின் அரசியல் கூர்மை யாகவே இருந்தது. அவர்கள் பதவிகளை இழந்து, அடுத்த இடைத்தேர்தலில் மண்ணைக் கவ்விய வுடன், ஆற்றைக் கடக்க மண் குதிரை உதவாது என்று ஒவ்வொருவராக ஓடத் தலைப்பட்டனர்.
தினகரன் அரசியலில் செந்தில் பாலாசி அவருக்கு வலது கையாக இருந்தார். அவர் அரசியல் விற்பன்னர் என்பதால் அல்ல; அவர் மந்திரியாக இருந்து அடித்து வைத்திருந்த பணம்.
தினகரன் தேற மாட்டார் என்று முடிவு செய்து தி.மு.க.வுக்கு வந்தவுடன், அவர் ஸ்டாலினின் வலது கையாக ஆகிவிட்டார்.
பணம்தான் அரசியலின் மையம், அது எப்படி ஈட்டப்பட்டிருந்தாலும் சரி, அவர்கள் மீண்டும் பதவியில் அமர்ந்து, போட்டதையும் எடுப்பார்கள். போடாததையும் எடுப்பார்கள் என்று தெளிவாகத் தெரிந்தபோதும் இத்தகைய அரசியலே வளர்க்கப்படுகிறது.
"பழையன கழிதலும், புதியன பிறத்தலும்' தொல்காப்பியம் சொல்லும் இயற்கை விதி.
கமல் அரசியலுக்கு ஒரு புதிய வரவு. ஓர் அரசியல் தலைவனுக்கு "எது உடன்பாட்டுக் கொள்கை, எது மறுப்புக் கொள்கை என்பது தெளிவாகப் புரிய வேண்டும். யாரை ஒழிக்க வேண்டும், எதற்காக ஒழிக்க வேண்டும். அவரால் நாட்டுக்கு இதுவரை நேரிட்ட தீங்கு என்ன? தன்னுடைய கட்சியின் பிறப்பு நோக்கம் என்ன? ஏன் தன் கட்சி பிறந்தே ஆக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது?' என்பனவற்றையெல்லாம் தெளிவாக மக்களிடம் கொண்டு செல்ல முடிந்தால், மக்களிடம் கட்டாயம் ஓர் அசைவு ஏற்படும். இப்படிக் காலங்காலமாக ஏற்பட்டிருக் கிறது. அதைத் தெளிவாக வரையறுத்த காரணத் தால்தான் எம்.ஜி.ஆர்., கலைஞரை வீழ்த்த முடிந்தது.
கமல் அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பூடகமாகப் பிற கட்சிகளை விமர்சிப்பார். அதைக் கொஞ்சம் பாடுபட்டுப் புரிந்து கொண்டுதான் சுவைக்க முடியும்.
கமல் தன்னுடைய கட்சி நிருவாகத்தில் ஆட்டுக்கார அலமேலு ஸ்ரீப்ரியாவையும், கோவை சரளாவையும் வைத்திருக்கிறார் என்பதிலிருந்தே இவர் எத்தகைய ஆலோசனைகளைப் பெறுவார் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. கட்சியை நடிகர் சங்க நிலையிலிருந்து மேலே தூக்க இன்னும் அவர் பழக்கப்படவில்லை.
சென்ற பாராளுமன்றத் தேர்தலில் இரண்டு திராவிட இயக்கங்களையும், அவற்றின் ஊழலுக் காக வெறுத்து, இவற்றிற்கு மாற்றே கிடையாதா என்று மனஞ் சலித்தோரெல்லாம் கமலுக்கு வாக்களித்தனர். இது அரசியலில் நிலைபெறு வதற்கு நம்பிக்கை ஊட்டுவதாக இல்லை. மீண்டும் அது பிக்பாஸ், இந்தியன்-2 என்று பழைய பாதையை நாடுகிறது.
எல்லாரும் பம்பாயிலிருந்து ஒரு முக வாண்மையை (ஆஞ்ங்ய்ஸ்ரீஹ்) அழைத்து வந்து, தாங்கள் ஆட்சிக்கு வர யோசனை கூறுமாறு கேட்டு, அதற்குக் கோடிக்கணக்கில் பணமும் கொடுக் கின்றனர்.
தி.மு.க.வே ஒரு முகவாண்மையின் உதவியை நாடுகிறது என்றால், இந்தப் பேதைமை முழுமை யாக அரசியலில் பரவி விட்டது என்பது பொருள்.
இவ்வளவு தோற்றங்கள்-மறைவுகள், பிறப்புகள்-இறப்புகளுக்குப் பின் தமிழ்நாட்டு அரசியலில் மீதமிருக்கின்றவை பழைய இரண்டு கட்சிகள்தாம்.
வலுத்த குறைபாடுகளுக்கிடையே இவற்றின் நிலைபேற்றுக்குக் (நன்ழ்ஸ்ண்ஸ்ஹப்) காரணம் மக்களுக்கு வேறு மாற்று இல்லை என்பதுதான்.
வலுவான வலைப்பின்னல் போன்ற கட்ட மைப்போடு ஒரு கட்சி, எம்.ஜி.ஆர். எழுந்தது போல் எழ முடிகின்றபோதுதான் இவை ஆட்டங் காணும்.
அந்த வலைப்பின்னலை- அந்தக் கட்ட மைப்பை உருவாக்க அண்ணா பதினெட்டு ஆண்டுகள் எடுத்துக் கொண்டார். எம்.ஜி.ஆர். நான்கைந்து ஆண்டுகள் எடுத்துக் கொண்டார்.
1971-ல் தி.மு.க.வுக்கு மாற்றாகக் காங்கிரசு இருந்த நிலையில், காமராசரும் அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னர் இறந்து விட்ட காரணத் தால் காங்கிரசை அகற்றி அந்த இடத்தில் மாற்றாக அமைந்து எம்.ஜி.ஆர். தி.மு.க.வைத் தோற்கடிக்க முடிந்தது.
"நான் காவிக் கட்சியிடம் மாட்ட மாட்டேன்' என்று இரசினிகாந்த் சொல்வதிலிருந்து, அவர்கள் வலையை வைத்துக் கொண்டு அலைவது தெளிவாகப் புலப்படுகிறது. அப்படி மாட்டினால் தனக்கு அரசியல் இல்லாமல் போய்விடும் என்பதும் இரசினிக்குத் தெளிவாகத் தெரிந்திருக்கிறது.
இன்னொன்று சொல்லியிருக்கிறார்: "தமிழ்நாட்டில் ஆளுமை மிக்க தலைவர் இல்லை; அதற்கு ஒரு வெற்றிடம் ஏற்பட்டிருக்கிறது.'
அந்த வெற்றிடத்தைத் தன்னால்தான் நிரப்ப முடியும் என்று இரசினிகாந்த் நினைக்கி றாரா என்பது வெளிப்படையாக இல்லை.
இரண்டு திராவிடக் கட்சிகளுக்கும் தலைவர்கள் இருக்கிறார்கள்; அவர்கள் கட்சியை வழக்கம் போல் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அவை இரண்டும் வெகு காலத்துக் கட்சிகள். பழகிய மாடுகள் இயல்பாகவே தடத்தில் செல்வது போல, அவை வழக்கம் போல் இயங்கிக் கொண்டிருக்கின்றன.
ஆளுமை மிக்க தலைமை என்பது கட்சிகளைத் தாண்டி மக்களிடம் ஊடுருவி நிற்கும் நிலை. தலைவனிடம் அசைவு ஏற்படும் போது, மக்களிடம் அசைவு ஏற்பட வேண்டும். தலைவ னின் நா அசைந்தால், நாடு அசைய வேண்டும்.
"அவன் இரண்டாயிரம் கொடுத்தான், நான் ஆயிரம்தான் கொடுத்தேன்' என்பது தன்னுடைய போதாமையை ஈடுகட்டத்தானே பணப்பட்டு வாடா.
இரசினிகாந்த் சொல்லியது சரிதான்.
ஆனால் தெரிந்ததைச் சொல்லி ஆகப் போவது என்ன?