(34) போணியாகாத கல்விக்கு மந்திரிகள் எதற்கு?
பத்தாம் வகுப்புத் (SSLC) தேர்வு முடிவுகள் வெளிவந்துவிட்டன. வளரிளமைப் பருவத்துப் (Adolescent) பிள்ளைகள் முகத்தில் அளப்பரிய மகிழ்ச்சி. அவர்களின் பெற்றோர்களெல்லாம் குதித்துக் கூத்தாடாத குறைதான்.
கல்வி அவ்வளவு முதன்மை பெற்றுவிட்டது. "படிப்பு ஏறவில்லை; பாதியிலேயே விட்டுவிட்டேன்' என்னும் நிலை ஏறத்தாழ ஒழிந்துவிட்டது.
முந்திய காலங்களில் பிள்ளை வளர்ப்பு ஒரு சுமையாகத் தெரிவதில்லை. "ஆடு மேயப்போகும்; குட்டியும் சேர்ந்து மேயும்' என்று குடும்பத்தில் இயல்பாக குழந்தைகள் சேர்ந்து வளர்ந்தன.
இப்போது அப்படியில்லை. பிள்ளைக்கு கல்வி அளிப்பது மிக இன்றியமையாதது என ஆகிவிட்டதால், தகப்பனின் வருவாயில் சரிபாதியைக் கல்வி உறிஞ்சிவிடுகிறது. இதற்காக அவர்கள் தவிர்க்க இயலாத தேவைகள் சிலவற்றைக்கூட பிள்ளைகளின் படிப்புக்காகத் தியாகம் செய்யவேண்டியிருக்கிறது.
மணவாழ்வின் மகிழ்ச்சி என்பது இரண்டு, மூன்று ஆண்டுகளுக்குத்தான். அதன்பின் பிள்ளைகளைப் படிக்க வைத்து நன்னிலைப்படுத்த வேண்டுமே என்னும் தவிப்பு ஒருபுறமும், போதாமை இன்னொருபுறமும் வாழ்வைச் சத்தற்றதாக ஆக்கிவிடுகின்றன.
வீட்டுவேலை செய்து வாழ்க்கை நடத்துகின்ற ஒரு பெண். என் வீட்டிலும் இன்னும் மூன்று, நான்கு வீடுகளிலும் வேலை செய்வார். மத்தியானத்திற்குப் பிறகு புதிதாக வருகின்ற படங்களுக்குப் போய்விடுவார்.
இப்போது அவருக்கு இரண்டு மகன்கள்; அவர்களை ஒரு ஆங்கிலப் பள்ளியில் படிக்கப் போட்டிருக்கிறார். அவர் வசிக்கின்ற வீட்டை விட, அவர் மகன்கள் படிக்கின்ற பள்ளித்தரம் கூடுதலானது.
இப்போது இன்னும் கூடுதலாக மூன்று, நான்கு வீடுகளுக்கு வேலைக்குப் போகிறார். மதிய நேர சினிமாவை மறந்துவிட்டார்.
பிள்ளைகள் படிப்பு ஒன்றே அவருடைய வாழ்க்கையாகிவிட்டது. சுமையின் அளவு கூடிவிட்டது. சுகங்கள் அற்றுப்போய்விட்டன.
நான் அவரிடம் கேட்டேன்: ""மத்தியான ஆட்டங்களை இழக்காமல், கூடுதலாக மூன்று, நான்கு வீடுகளில் வேலை செய்யாமல், இயல்பான பழைய வாழ்க்கையையே வாழ்ந்துகொண்டு உன்னுடைய பிள்ளைகளைப் படிக்க வைக்க முடியாதா?''
அந்தப் பெண் சொன்னார்: ""ஐயா... கார்ப்பரேசன் பள்ளிக்கூடத்திலே பசங்களைப் போடச் சொல்றீங்களா... நீங்க எம்.எல்.ஏ.யாகவெல்லாம் இருந்தவுக. உங்க புள்ளைக எல்லாம் பெரிய பெரிய இங்கிலீசு பள்ளிக்கூடத்திலே படிக்கணும்... எங்க புள்ளைக கார்ப்பரேசன் பள்ளிக்கூடத்திலே படிக்கணுமா ஐயா?''
என் துணைவியார் கேட்டார்கள்: ""நல்லா கேட்டே... எதுக்கு அவள்கிட்ட வாயைக் கொடுக்கிறீய...''
நான் பேச்சைத் தொடர்ந்தேன்; ""என் மகனை நான் கார்ப்பரேசன் பள்ளியில்தான் படிக்கவைத்தேன்; அதன்பிறகு அரசு உதவிபெறும் இயல்பான உயர்நிலைப் பள்ளியிலேதான் படிக்கவைத்தேன்; பிறகு அரசு உதவிபெறும் கல்லூரியிலேதான் படித்தான், அடிமட்டத்தில் படிப்பதற்குச் சம்பளமே இல்லை; சத்துணவும் போட்டார்கள்; ஆனால் பக்கத்தில்தான் வீடு என்பதால் அவனுடைய தாயார் அவனைச் சாப்பிடக் கூட்டி வந்துவிடுவார்கள்.''
""ஏன்யா... ஒத்தப்புள்ளைய இப்படிச் செஞ்சீங்க?''
""நல்லா கேளு... ஒத்தப்புள்ளையின்னு தலையாலே அடிச்சுக்கிட்டேன்; "தமிழ் தமிழ்'ன்னு பேசுவாக... தமிழ்லே சொல்லிக் கொடுக்கிற நல்ல பள்ளிக்கூடமெல்லாம் எம்புட்டோ இருந்துச்சு... திருப்பராய்த்துறைக்கு அனுப்பலாம்னு சொன்னேன்... கேட்டாகளா?''
என் மனைவி இதுதான் நேரமென்று கருதி, அவரோடு சேர்ந்துகொண்டார்.
""நீங்க இப்படிச் செஞ்சிருக்கக் கூடாதய்யா... என்னாலேயே முடியிறபோது, உங்களாலே முடிஞ்சிருக்காதா?''
""நான் சொல்லுவதை உன்னால் புரிந்துகொள்ள முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை; தமிழ் மட்டும் காரணமில்லை... தமிழ் வழியாகப் படிக்கவேண்டும் என்பதுகூட இரண்டாவதுதான். முதலாவது அவன் மேல், கீழ் என்ற வேறுபாடில்லாமல் எல்லா சாதி பிள்ளைகளோடும் கலந்து படிக்க வேண்டும்; டவுசரில் ஏற்பட்ட கிழிசலை ஒட்டுத்துணி போட்டுத் தாயே தன்னுடைய கையால் தைத்துக் கொடுத்து, அதை அணிந்து வருகின்ற நிலையில் உள்ள வறிய பிள்ளையோடும் அவன் வேற்றுமையின்றித் தோழமை பாராட்டிப் படிக்க வேண்டும். சாதியோ, வறுமையோ தோழமைக்குத் தடையாகக் கூடாது. அறிவுதெளியாப் பருவத்திலே அவனுக்கு அது பழக்கமாகிப் படிந்துவிட வேண்டும். நாளை அவன் வாழப்போகிற சமூகத்தின் முன்மாதிரிதான் பள்ளிக்கூடம்; இந்தப் பள்ளிக்கூடத்தின் விரிவுதான் சமூகம். ஆகவே அவனை அங்கேதான் படிக்க அனுப்ப வேண்டும் என்பதில் குறியாக இருந்தேன்.''
""ஐயா நீங்க டி.வி.யில பேசறதையும் நான் கேட்பேன்; அவ்வளவா புரியாது'' என்றார் வேலைக்காரப் பெண்மணி.
""புரியும்படி சொல்லவா?''
""ம்...'' என்று மண்டையை ஆட்டிக்கொண்டே கலைந்திருந்த தென்னைமாறுகளை இடது உள்ளங்கையில் தட்டி ஒழுங்கு செய்துகொண்டே என்னைப் பார்த்தார்.
""நீ உன்னுடைய பிள்ளைகளை மேல்மட்டப் பிள்ளைகளோடு சேர்த்துவிட நினைக்கிறாய். அதற்குத்தான் உனக்கு இவ்வளவு பாடுகளும். நான் என்னுடைய பிள்ளையைக் கீழ்மட்டத்துப் பிள்ளைகளோடு சேர்த்துவிட நினைத்தேன் அவ்வளவுதான்.''
""ஐயாவோடு எதற்கு விவகாரம்?'' என்று தரையைப் பெருக்குவதில் கவனத்தைத் திருப்பிக்கொண்டார்.
எந்த விவாதத்திற்கும் இதே நிலைதான். இருவர் பேசி ஒருவர் மாறினார் என்பது எப்போதும் கிடையாது.
ஒன்று; விவாதிக்கும் இருவரில் ஒருவர் முட்டாளாக இருக்க வேண்டும்; அல்லது இருவருமே முட்டாள்களாக இருக்க வேண்டும்.
தொலைக்காட்சிகளில் நான்கு பேர் விவாதத்தை எவன்தான் கண்டுபிடித்தானோ? கத்துவதைத் தவிர அதில் கண்ட பலன் என்ன?
நான் என் மகனைப் படிக்கவைத்த காலத்திலும் "டான் பாசுகோ' போன்ற மேட்டுக்குடிப் பள்ளிகள் இருந்தன. ஆனால் இப்போதுபோல் எண்ணற்றதாக இல்லை; இப்போது வீதிக்கு இரண்டு தனியார் பள்ளிகள்.
ஒரு பள்ளிக்கூடத்தில் மொத்தப் பிள்ளைகளின் எண்ணிக்கை பத்துக்கும் குறைவாக இருந்தால், அவற்றை மூடிவிடுவது என்னும் அரசு முடிவுப்படி, நிகழ்ஆண்டில் மூவாயிரம் அரசுப் பள்ளிகள் மூடப்படவிருக்கின்றன.
அந்த வேலைக்காரப் பெண் கூறினாரே... ""அவங்க எங்கய்யா பாடஞ்சொல்லிக் குடுக்கிறாங்க... புள்ளைக வீதியிலே விளையாண்டுக்கிட்டுத் திரியுங்க... ஒரு வாத்தியாரோ இரண்டு வாத்தியாரோதான் எல்லா கிளாசுக்கும். ரெண்டு முட்டை தருவாங்க... தின்னுட்டு வரவேண்டியதுதான்.''
சம்பளம் இல்லை; சத்துணவு வேறு தருவார்கள்; உடை தருவார்கள்; புத்தகங்கள் தருவார்கள். வீட்டுக்குப் பக்கத்திலேயே பள்ளிக்கூடம். எவன் தன் பிள்ளைகளை அரசுப் பள்ளிக்கோ, நகராட்சிப் பள்ளிக்கோ அனுப்புகிறான்.
"எல்லாம் தருவார்கள்... கல்வி தருவார்களா?' என்றல்லவா கேட்கிறார்கள்.
தமிழைக் கட்டாயமாக்கினார் கலைஞர்; இல்லாவிட்டால் தமிழ்நாட்டில் தமிழ் எழுதப் படிக்கத் தெரியாமலேயே ஒரு தறுதலைச் சமூகம் உருவாகியிருக்கும்.
இன்னொன்றும் செய்தார் கலைஞர். அது எவ்வளவுக்கு வெற்றி என்று அறுதியிட முடியவில்லை.
கல்வித் தரத்தில் வேறுபாடு காரணமாக தனியார் பள்ளிகளை நாடுகிறார்களோ என்று எண்ணி "சமச்சீர் கல்வித் திட்டம்' கொண்டுவந்தார். தகுதியானவர்களால் அக்கல்வித் திட்டம் தயாரிக்கப்பட்டது. அரசுப் பள்ளிகள்போல், எல்லா மெட்ரிக் பள்ளிகளிலும் இந்தப் பாடத்திட்டமே பின்பற்ற வேண்டும் என்று சட்டம் செய்யப்பட்டது.
அந்தக் கல்வித் திட்டத்தையும் தனியார் பள்ளிகளில்தான் ஒழுங்காகச் சொல்லிக் கொடுப்பதாக மக்கள் நினைக்கும்போது, அரசுப் பள்ளிகளில் பூட்டுப் போடுவார்கள், தனியார் பள்ளிகளில் கொடி கட்டுவார்கள்.
இன்னும் கொஞ்சம்பேர் சமச்சீர் கல்வியை விடுத்து CBSE பள்ளிகளுக்குத் தாவுகிறார்கள். அவர்களுக்கு இன்னும் கூடுதல் தரம் வேண்டுமாம். ஆக்சுபோர்டுக்கே போய்விட வேண்டியதுதானே. அங்கேயும் G-o-a-t என்பதை "கோட்' என்றுதானே சொல்லிக் கொடுப்பான்.
இப்போது இன்னொருமுறை கொண்டு வந்திருக்கிறார்கள். இது செயலலிதா கொண்டு வந்தது.
2 கிலோமீட்டர் தூரத்திற்குள் அரசுப் பள்ளிகள் இருக்கும்போதே, தனியார் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்க விரும்பினால் சேர்க்கலாம். அந்தப் பள்ளியின் மொத்த எண்ணிக்கையில் இருபத்தைந்து விழுக்காடு சேரலாம். மக்கள் கோரினால் அந்தப் பள்ளியில் இடம் கொடுத்தே ஆகவேண்டும். அதற்கான கட்டணத்தை அரசு கட்டும்.
அந்தப் பகுதியில் அரசுப் பள்ளியை வைத்துக்கொண்டு, தனியார் பள்ளிக்குக் கட்டணம் கட்ட அரசு முன்வருமானால், இருக்கின்ற அரசுப் பள்ளிகளையும் மூடவேண்டிய நிலை ஏற்படாதா?
ஒரு பிள்ளைக்கு இலவசக் கல்வி, இன்னொரு பிள்ளைக்கு மேட்டுக்குடி மக்கள் பயிலும் பள்ளியில் அரசே கட்டணம் செலுத்திப் பெற்றுத்தரும் "ஆடம்பரத்தோடு' இணைந்த கல்வி.
எல்லா பிள்ளைகளும் "ஆடம்பரம்சார் கல்விக்கே' அலைமோதுகின்றன. அதற்கு குலுக்கல் முறை வேறு.
2009-ல் கல்வி உரிமைச் சட்டம் இயற்றி சாசனத்தில் சேர்த்தீர்கள். இது அரசின் பொறுப்பு என்பதால் எல்லா வரிகளோடும் கல்விக்கு ஒரு ஈங்ள்ள் வரி விதித்தீர்களே?
உயர்கல்வியை மொத்தமாக தனியாரிடம் அரசு நிலங்களையும் கொள்ளை மலிவு விலையில் கொடுத்து, எம்.ஜி.ஆர். காலத்திலேயே விற்றுவிட்டீர்களே!
ஒவ்வொரு கல்வி நிறுவன அதிபரும் பத்தாயிரம் கோடி, முப்பதாண்டுகளில் சுரண்டியிருக்கிறார்கள்.
இப்போது பள்ளிக் கல்வியையும் இருபத்தைந்து விழுக்காடு விற்றுவிட்டீர்கள்.
அந்தப் பணத்தில் அரசுப் பள்ளிகளின் தரத்தைக் கூட்ட முடியாதா?
கேந்திரிய வித்யாலயமும் மைய அரசுப் பள்ளிதானே! அங்கு அலைமோதுகிறார்களே ஏன்?
தரமும் அதற்கு வேண்டிய கட்டமைப்பும்தானே காரணம்.
Cessதான் வாங்குகிறீர்களே... ஏன் தரத்தைக் கூட்ட முடியவில்லை.
வாத்தியார்களிடம் நியமனத்திற்கு (Appointment) பணம், இட மாறுதலுக்கு(Transfer) பணம், இதற்காகவே ஒரு துறை.
பள்ளிக் கல்விக்கு ஒரு மந்திரி
உயர் கல்விக்கு ஒரு மந்திரி
போணியாகாத கல்விக்கு மந்திரிகள் எதற்கு?
(தொடரும்)