(23) அப்படித்தானே மோடி!
மேகதாது அணை தடுத்து நிறுத்தப்பட வேண்டுமாம்; "நீட்' தேர்வு ரத்து செய்யப்பட வேண்டுமாம்; அல்லது தமிழ்நாட்டுக்கு மட்டுமாவது அந்தத் தேர்விலிருந்து விலக்களிக்கப்பட வேண்டுமாம்!
இவையும், இவை போன்றவையும் செய்யப்படாவிட்டால், தமிழ்நாட்டுக்கு வாழ்வில்லை என்று எல்லா மாநிலக் கட்சிகளுமே தங்கள் தேர்தல் அறிக்கைகளில் வலியுறுத்தி உள்ளன.
ஆனால் தி.மு.க. போன்றவை, இவை செய்யப்படுவதற்கு உடனடித் தேவை மோடி அரசு அகற்றப்பட வேண்டும் என்று சொல்கின்றன.
ஆனால் அ.இ.அ.தி.மு.க.வோ, பா.ம.க.வோ இவற்றை எல்லாம் நிறைவேற்றவும் வேண்டும்; ஆனால் மோடி அரசுதான் மையத்தில் அமையவும் வேண்டும் என்று சொல் கின்றன.
"இது நண்டைச் சுட்டு நரியைக் காவல் வைத்த கதையாகிவிடும்' என்று எடப் பாடிக்கோ, இராமதாசுக்கோ தெரியாதா?
மோடி அரசு என்ன செய்யும் என்று ஏற்கனவே நாம் அறிந்திருக்கவில்லையா?
இந்த இரண்டு தீமைக்கும் மூலமே மோடி அரசுதானே! தமிழ்நாட்டு இளைஞர் களுக்கு ஏற்பட்டுள்ள தலையாய தீங்கு "நீட்' தேர்வினால் என்றால், அதை நுழைத்தது மோடி அரசுதானே!
அதை அகற்ற வேண்டும் என்று தனியொரு கட்சியாக அ.இ.அ.தி.மு.க., இரு அவைகளிலும் ஏறத்தாழ ஐம்பது நாடாளு மன்ற உறுப்பினர்களை வைத்துக்கொண்டு வலியுறுத்தியபோது, மோடி அரசு உடன்பட்டதா?
அதுவும் எந்த ஒரு தீர் மானமும் சட்ட மாவதற்கு மாநிலங்களவை யில் அ.இ. அ.தி.மு.க. வின் தயவு இல்லாமல் நடக்காது என்னும் அளவுக்கு வலிமை பெற்றிருந்தும்கூட, மேகதாது வையும் "நீட்'டையும் தடுத்து நிறுத்த முடியவில்லையே ஏன்?
இனி அவற்றைத் தடுத்து நிறுத்த தங்களையும், மேலே மோடி அரசையும் தேர்வு செய்ய வேண்டும் என்று எடப்பாடி சொல்வது பைத்தியக்காரத்தனம் இல் லையா?
நோயை ஒழிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், அந்த நோய்க்கு காரண மான கிருமிகளை அழிக்க நினைப்பார்களா அல்லது அவை உண்டு கொழுத்து நோயைப் பெருக்குவதற்கு உதவியாக இருப்பார் களா?
ஏற்கனவே தெளிவாகச் சொல்லிவிட்டார் மோடி. "நீட்' தேர்வை திரும்பப் பெறுதல் என்பதும் இல்லை; அதிலிருந்து தமிழ்நாட்டுக்கு மட்டும் விலக்கு அளிப்பது என்பதும் இல்லை; நாடு முழுவதுக்குமான ஒரு ஏற்பாட்டிலிருந்து ஒரு மாநிலத்தை மட்டும் எப்படி தனித்து விடுவிக்க முடியும்?
இவ்வளவு தெளிவாக மோடி சொல்லிவிட்ட பிறகும் அதே "நீட்' கோரிக்கையை முன்வைப்பதும், அதற்கு மோடி தலைமையி லான மைய அரசு அமையவேண்டும் என்று முதல்வர் எடப்பாடியும், இராமதாசும் சொல்வதும்... கேட்டுக்கொண்டிருக்கிற நம்மையெல்லாம் கிறுக்கர்களாக்க வில்லையா?
நாளைய வரலாறு எடப்பாடியையும் இராமதாசையும் என்ன பேசும் என்பது ஒருபுறமிருக்கட்டும்...
"கேப்பையிலே நெய் வடிகிறது என்று அவர்கள் இருவரும் சொன்னார்கள்; கேட்டுக்கொண்டிருந்த மக்களுக்குப் புத்தி எங்கே போனது' என்று வரலாறு வினவாதா?
இன்னொரு உயிர்ச் சிக்கல் மேகதாது அணை. நீட் தேர்வு பிற்பட்ட மாணவர் களைப் பாதிக்கின்ற ஒன்று என்றால், மேகதாது தமிழ்நாட்டை ஒட்டுமொத்தமாக ஒன்றுமே இல்லாமல் ஆக்கிவிடக்கூடிய ஒன்று.
எந்த நியாயத்திற்கும் கட்டுப்படாத அரசு கருநாடக அரசு. எந்தக் கட்சி அங்கு ஆண்டாலும் இதே நிலைதான்.
அவர்களைப் பொறுத்தவரை தமிழ்நாடு ஒரு வடிகால் மாநிலம். தேவைக்கு மேல் தண்ணீர் வந்தால், அதை நிறுத்தி வைத்துக்கொள்கிற ஆற்றல் எதற்கும் யாருக்கும் கிடையாது. அப்போது தன்னு டைய மாநிலத்திற்குச் சேதம் ஏற்பட்டு விடாமலிருக்க, ஆர்ப்பரித்து மோதுகின்ற தண்ணீரை அவிழ்த்து விடுவதற்கு, வடிப் பதற்கு தமிழ்நாடு வேண்டும், அவ்வளவு தான்.
பிரம்மபுத்திரா சீனாவுக்கும் இந்தியா வுக்குமிடையே பாய்கிறது. சிந்து இந்தியாவுக்கும் பாக்கித்தானுக்குமிடையே பாய்கிறது. உலகம் முழுவதிலும் இதே நிலைதான்.
போர் மேகங்கள் அப் போதுக்கப் போது சூழும் நிலைகளில் கூட, சிந்து அமைதியாகப் பாக்கித்தானுக் குள் பாய்ந்து கொண்டுதான் இருக்கிறது.
கருநாடக மேகதாது அணை விவகா ரத்தில் மோடி எவ்வாறு நடந்து கொண்டி ருக்கிறாரோ, அதேபோல் சிந்துநதி விவகாரத் தில் நடந்துகொண்டால், விளைவுகள் என்னாகும்? பாக்கித்தான் மட்டுமா குதிக்கும்; சீனாவும் சேர்ந்து குதிக்காதா?
மேகதாது அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்பது எடப்பாடி மற்றும் இராமதாசின் கோரிக்கையாம்! அதற்கு மோடிக்கு வாக்களிக்க வேண்டுமாம்.
மேகதாது என்னும் அணை கட்டப் படுவதற்கு இசைவளித்ததே மோடி அரசு தானே!
அதற்கு எதிராக நாம் நீதிமன்றம் செல்வது என்பது வேறு.
சும்மா போன பூச்சியைத் தொப்புளுக் குள் பிடித்து வைத்துக்கொண்டு, "குடைகிறதே குடைகிறதே' என்று கூச்சலிட்டால் அது பூச்சியின் குற்றமில்லை; பிடித்து வைத்துக் கொண்ட கிறுக்கனின் குற்றம்.
மேகதாது அணையும் கட்டப்பட்டு விட்டால், தமிழ்நாடு பாலைவனமாகும்.
அதற்கு அடி எடுத்துக் கொடுத்த மோடியை இந்தத் தேர்தலில் அடித்து விரட்டி அறிவூட்டுவதை விட்டுவிட்டு, அவரை அடுத்தும் தலைமை அமைச்சராக்குவதற்கு தமிழ்நாட்டில் இரண்டு, மூன்று பல்லக்குத் தூக்கிகள்!
கருநாடகத்தில் மோடியின் கட்சி ஓரளவு வலுவாக இருக்கிறது. தமிழ்நாட்டில் அதற்கு வேரும் இல்லை; தூரும் இல்லை.
கருநாடகத்தான் வாக்களிப்பதற்காக, மேகதாது அணைகட்ட மோடி அரசு இசைவளிக்கிறது. அதோடு நிறுத்திக்கொள்ள வேண்டியதுதானே! தமிழ்நாட்டில் ஏன் வாக்கு கேட்கிறாய்?
ஏற்கனவே இருந்த அதிகாரத்தை வைத்துக்கொண்டு தமிழ்நாட்டைப் பாலை வனமாக்க மேகதாதுவில் கால்கோள் மட்டும்தான் நாட்ட முடிந்தது. அந்தப் "புனித' முயற்சி முற்றுப்பெற இன்னொரு முறை அதிகாரம் வேண்டும்!
தமிழ்நாட்டில் சொரணை இல்லை!
அப்படித்தானே மோடி!
(தொடரும்)