(91) கிழவியைத் தூக்கி மனையில் வைத்துக் கொண்டிருக்கிறார்கள்!
இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சி, அளவுக்கு அதிகமாகச் சரிந்து விட்டது. அது வெறும் 4.5 விழுக்காடு என்னும் அளவுக்கு இறங்கி இருப்பது, நம்முடைய நாட்டின் நிதி அமைச்சரைத் தவிர, மற்ற எல்லாரையும் அலற வைத்திருக்கிறது. சிக்கலின் ஆழம் பா.ச.க. அரசுக்குப் புரிந்திருக்கிறதா என்று நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை!
7 விழுக்காடு வளர்ச்சி போதவில்லை என்று நாம் கருதியது போக, அது 4.5 விழுக்காடாக விழுந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
நாட்டின் நாடியை அறிவதற்குப் பட்டியல் தேவை இல்லை. மக்கள் நாடியே அதைச் சொல்லும். "ஒன்றுமே நடக்கவில்லையே' என்னும் மக்களின் புலம்பலைத்தான் சிறிது கழித்துப் பட்டியலின் புள்ளி விவரம் காட்டுகிறது.
ஆறு ஆண்டுகளில் இவ்வளவு கேவலமான வீழ்ச்சி ஏற்பட்டதில்லை என்று அறிஞர்கள் கவலை கூர்கின்றனர். அடுத்து வரும் மூன்றாவது காலாண்டில் இன்னும் கேவலமாக 4 விழுக்காட்டைத் தொடும் என்று வேறு அச்சம் தெரிவித்திருக்கின்றனர்.
ஏப்ரல்- அக்டோபர் மாதங்களுக்கான வரி திரட்டல் 6.83 இலட்சம் கோடியாக இருக்கிறது. ஆனால் செலவு 16.55 இலட்சம் கோடி.
நம்முடைய நிதித்துறையை நடத்துகின்றவர்களுக்கு வீட்டு வரவு செலவாவது பார்த்துப் பழக்கம் உண்டா என்று கேட்போர் பலர்.
நம்முடைய விருப்ப இலக்கு 9 விழுக்காடு வளர்ச்சி! ஆனால் நடைமுறை உண்மை அதில் சரியாகப் பாதி; அஃதாவது 4.5 விழுக்காடுதான்.
மன்மோகன் சிங் அரசைத்தான் இந்தியாவின் மிக மோசமான ஊழல் அரசு என்கின்றனர். தான் சரியாக இருந்தும் தன்னைச் சுற்றிச் சரியானவர்களை வைத்துக் கொள்ள முடியாதவர் அவர்.
மன்மோகனின் அமைச்சரவை கூட்டணி அமைச்சரவை என்பது ஒன்று! அதனால் கூட்டணி அமைச்சர்கள் கடிவாளம் இல்லாத குதிரைகளாக அத்துமீறி ஓடிக் கொண்டிருந்தனர்.
ஆனால் மன்மோகன் பொருளாதார வல்லுநர் என்னும் முறையில் வளர்ச்சியை ஒழுங்காக வைத்திருந்தார்.
காங்கிரசின் ஊழலைப் பொது விவாதமாக்கி அதை முன் வைத்து ஆட்சிக்கு வந்த மோடி, யாரையும் சாரத் தேவை இல்லாத அரசைப் பெற்றிருந்தும், பொருளாதாரத்தை ஆட்சிக்கு வந்த காலத்திலிருந்து கொண்டு செலுத்த முடியாதவராக இருக்கிறார். அதற்கு தகுதியானவர்களை வைத்துக் கொள்ளும் பழக்கமும் மோடிக்கு இல்லை.
ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்த இரகுராம் ராசனை விரட்டியதே அவருடைய மனப்பான் மைக்குச் சான்று.
சரிவை நிறுத்த நம்முடைய நிதியமைச்சர் நிருமலா எடுத்த முயற்சி என்பது பெருமுதலாளிகளுக்கான கார்ப்பரேட் வரியில் சலுகை செய்ததுதான்.
பெரு முதலாளிகள் வாழ்ந் தால்தான் நாடு வாழும் என்னும் நம்பிக்கை உடையவர் அவர்!
வரிகளை குறிப்பாகப் பெரு முதலாளிகளுக்கு விலக்கிக் கொள்வதனாலேயே நிலைமை சீரடைய முடியாது. இது அளிப்பு நிலை நடவடிக்கையே (supply side measure)என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.
நோய்வாய்ப் பட்டிருக்கும் நம்முடைய பொருளாதாரத்தின் நோயையும் நோயின் போக்கையும் கண்டறிய நம்முடைய நிதித்துறை யால் முடியவில்லை.
நுகர்வோர் தேவையின் குறைபாட்டை (Short fall in consumer demand) அரசு கருத்தில் கொள்ளவில்லை.
அரசுச் செலவின் மூலம் தேவையைப் பெருக்க முடியும் என்று வல்லுநர்கள் கூறுகின்றார்கள்.
வளர்ச்சி இலக்கை 12 விழுக்காடாகக் கொண்டு பா.ச.க. அரசு திட்டமிடுகிறது. ஆனால் உண்மையான வளர்ச்சி முதல் அரையாண்டுக்கு வெறும் 7 விழுக்காடுதான். சரிந்து சாய்ந்து விட்டு பொருளாதார வளர்ச்சி, 12 விழுக்காட்டுக்கான கூடுதல் வருவாயைக் கொண்டு வர முடியுமா என்றெல்லாம் வல்லுநர்கள் வினவுகிறார்கள்.
கழுதை மேய்ப்பது வேறு; பந்தையக் குதிரைகளை ஓட்டுவது வேறு.
வீரியமான மருந்தே கிடை நிலையிலிருந்து நோயாளியை எழுந்து உட்கார வைத்து, நடை நிலைக்குக் கொண்டு செல்ல முடியும்.
அரசுச் சொத்தை விற்கலாம்; எவனோ பாடுபட்டுச் சேர்த்து வைத்தது!
மேலும் மேலும் கடன் வாங்கலாம்; எவனோ கட்டிவிட்டுப் போகிறான்! நமக்கென்ன வலிக்கிறது?
மோடி ஆட்சிக்கு வந்து முரட்டுத்தனமாக எடுத்த Demonitisation நடவடிக்கையில் இருந்து ஒவ்வொன்றும் இந்தியப் பொருளாதாரத்தைக் கிடை நிலைக்குக் கொண்டு சென்று விட்டது.
நிதித்துறை, அயல் விவகாரத் துறை இரண்டையும் கையாளும் ஆற்றல் மோடி அரசுக்கு இல்லை. இவற்றின் விளைவு களால் மக்கள் அல்லோகலப் படுகின்றனர்.
ஆனால் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை வைத்துக் கொண்டு வெறுப்பு அடிப்படையிலான பல திட்டங்களைச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார் மோடி!
குடியுரிமைச் சட்டம் என ஒன்றைக் கொண்டு வந்தார். இசுலாமியர்கள் அசாமை விட்டுச் செல்லவும், இசுலாமிய நாடுகளில் உள்ள இந்துக்கள் இங்கே வரவும் புதிய சட்டம் இயற்றி இருக்கிறார்.
குடியுரிமை பறிக்கப்பட்ட இசுலாமியர்கள் மிகவும் உணர்வுப் பூர்வமான மிசோரம் போன்ற வடகிழக்கு மாகாணங்களுக்குள் ஊடுவருவக் கூடும் என எதிர்பார்க்கிறார்கள். இங்கில்லை என்றால் அங்கே; விண்ணுக்குச் செல்ல முடியாதே; மண்ணில்தானே அவர்கள் வாழ முடியும்.
இந்தச் சட்டத்தை இந்தியா முழுவதும் விரிவு செய்யப் போகிறார்களாம். அதற்குப் பிறகு இந்தியா 12 விழுக்காடு வளர்ச்சியைப் பெற்றுவிடும்! அப்படித்தானே இந்த அரசு நினைக்கிறது.
காசுமீரை இரண்டாக உடைத்தார்கள்; அதனுடைய சிறப்பு மதிப்பை நீக்கினார்கள். இந்தியத் தரைப்படையில் பாதியைக் காசுமீரில் கொண்டு போய் இறக்கி அமைதி காக்கிறார்கள். மக்கள் மூச்சு விடுகிற சத்தம் கூட கேட்க வில்லையே என்று அக மகிழ்கிறார்கள். உள்நாட்டை ஆள்வதற்கே இராணுவம் என்றால், அது எத்தகைய நாடாக இருக்கும்?
அயோத்தியில் பாபர் பள்ளிவாசல் இடம் மூன்று பங்காகப் பிரிக்கப்பட்டு, இராமருக்கு ஒரு பங்கு வழங்கப்பட்டது அலகாபாத் உயர்நீதிமன்றத் தால். உச்சநீதிமன்றம் முழுப் பங்கையும் இராமருக்கே வழங்கி விட்டது. மூன்று மாதத்தில் இராமர் கோயிலைக் கட்டத் தொடங்கி விடுங்கள் என்று அவசர உத்தரவு வேறு போட்டு விட்டது.
முசுலிம்களுக்கு இடம் வாங்கச் சக்தி இல்லாதது போல், அதற்கு மாற்றாக ஐந்து ஏக்கர் நிலத்தைத் தானமாக வழங்க மைய அரசுக்கு உத்தரவிட்டு விட்டது.
இதற்குப் பதிலாக பத்து ஏக்கர் நிலம் ராமர் கோயிலுக்கு வழங்கி இருந்தால், இரண்டரை ஏக்கரை விட நான்கு மடங்கு கூடுதல் என்று மகிழ்ந்திருப்பார்களா என்று தெரியவில்லை.
பாராளுமன்ற சனநாயகம் வேறு; நீதிமன்றங்கள் வேறு. நூற்றி இருபது கோடியும் ஒரு பக்கம் நின்று, ஒரே ஒரு ஆள் தனித்து நின்று, அவன் பக்கம் நீதி இருந்தால், நீதிமன்றம் அந்த ஆள் பக்கமே நிற்கும்; நிற்க வேண்டும்.
ஆனால் சனநாயகத்தின் தன்மை அப்படி அல்ல. பெரும்பான்மையும் அயோக்கியர்களாக இருந்தால், அயோக்கியத்தனமே நாட்டின் நீதியாகும்! சனநாயகத்திற்கு நீதி, அநீதி என்னும் வேறுபாடில்லை! பெரும்பான்மையோர் எந்தப் பக்கமோ அதுவே அதனுடைய சட்டம்; அதனுடைய நீதி.
அதனால்தான் நாம் உச்சநீதிமன்றத்தை பாராளுமன்றத்தின் பிடிக்குள் வைக்கவில்லை. அதனுடைய அடிப்படை நோக்கம், To counter majoritarianismதான்! அப்படி நடக்கிறதா என்று சட்ட மேதைகள்தாம் சொல்ல வேண்டும்.
பொருளாதாரம் சீரழிகிறது, மக்கள் தவிக்கிறார்கள்; வாங்கும் ஆற்றலில்லை.
கிழவியைத் தூக்கி மனையில் வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
(தொடரும்)