(90) இருப்பதை விட்டுப் பறப்பதைப் பிடிக்காதீர்கள்!
மராட்டிய அரசியல் குளறுபடிகள் மராட்டியத்தின் குளறுபடிகள் அல்ல, மையத்திலுள்ள பாரதிய சனதா அரசின் சூது விளையாட்டு.
சிவசேனாவைப் பயன்படுத்தி பா.ச.க.வின் ஆட்சியை நடத்துவது சென்ற முறை நடந்த ஒன்றுதான். நம்மீது சவாரி செய்கிறது பா.ச.க. என்பது புரிகின்றபோது, அதற்கு இடங்கொடுக் கக் கூடாது என்றும், இந்த முறை பா.ச.க. முதுகில் நாம் சவாரி செய்ய வேண்டும் என்றும் சிவசேனை கருதியது. இதில் என்ன பிழை?
ஒருமுறை பதவியைச் சுவைத்துவிட்ட முன்னாள் முதல்வர் பட்னாவிசால் அதை இழந்து விட்டு இருக்க முடியவில்லை. வேற்றுக் கட்சி ஆள்வதை பொறுத்துக் கொள்ளும் பெருந்தன்மையான மனநிலை, மையத்தில் ஆட்சி செய்யும் பா.ச.க.வுக்கு என்றுமே இல்லை.
இரவோடு இரவாகக் குடியரசுத் தலைவர் ஆட்சி விலக்கிக் கொள்ளப்படுகிறது. அடுத்து இரவோடு இரவாக ஆளுநர், பதவி ஏற்க வருமாறு அழைப்பு விடுக்கிறார். பொழுது விடியப் பதவிப் பிரமாணம் நடைபெற்று, பட்னாவிசு முதல்வராகி விடுகிறார்.
அவருக்குப் போதிய பெரும்பான்மை இல்லை. எதிர்க்கட்சி ஆட்சி அமைப்ப தற்குத்தான் பெரும்பான்மை வேண்டும்; இல்லாவிடில் ஆளுநர் அழைக்க மாட்டார்.
பாரதிய சனதா கட்சிக்காரர் என்பதால் முதல்வர் பதவியில் அமர்ந்து கொண்டு, சாவகாசமாகக் குதிரைகளை விலைக்கு வாங்கி ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ளலாம். முதற்கட்டமாக தேசியவாத காங்கிரசைச் சேர்ந்த சரத்பவாரின் உறவினரே விலை மாடானார். அவருக்குத் துணைமுதல்வர் பதவி உடனடியாக வழங்கப்பட்டது. இதில் பா.ச.க. முதல்வர் பட்னாவிசு எதிர்பார்க்காத ஒன்று, உச்சநீதிமன்றம் "ஒரே நாளில் சட்டமன்ற உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் செய்ய வேண்டும் என்றும் மறுநாள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும்' என்றும் கட்டளை இட்டதுதான். குதிரை பேரத்திற்கு இவ்வளவு மிகக் குறுகிய அவகாசம் போதாது. தன்னிடம் போதிய எண்ணிக்கை இல்லை என்று அந்த "ஒருநாள் முதல்வர்' பட்நாவிசு இராசினாமா செய்தார். இப்படி ஓர் அசிங்கம் ஒரேநாளில் ஏற்படும் என்று பட்னாவிசோ, ஆளுநரோ எதிர்பார்க்கவில்லை. சூழ்ச்சி அரசியலில் வல்லவர் என்று கருதப்படும் உள்துறை அமைச்சர் அமித்சாவே அதிர்ந்துபோனார். அவர்தான் இந்த அசிங்கங்களுக்கு திரைக்கதை எழுதியவர்.
சரத்பவாரின் உறவினரான அசித்பவார் ஒருவர்தான் சோரம் போனார் துணைமுதல்வர் பதவிக்காக. எல்லா அரசியல் தலைவர்களும் மருமக னையும், மகளையும் மற்ற உறவினர்களையுமே நம்பிக்கைக்குரியவர்களாக நினைக்கிறார்கள். ஆனால் என்.டி.ராமராவை, அவருடைய மகளைக் கட்டிக் கொண்ட சந்திரபாபு நாயுடுதான் முதுகில் குத்தினார்.
இப்போது சரத்பவாரின் உறவினரின் முறை. பதவி, பணம் என்று வந்து விட்டால், மாமனாவது மருமகனாவது. தகப்பனைச் சிறை வைத்த மகன் களின் வரலாறு நாம் அறியாததா? பதவிக்கும் பணத்திற்கும் முன்னால் மாமனும் இல்லை; தகப்பனும் இல்லை. ஆனால் அந்த ஆட்சி ஒருநாள்தான் நீடித் தது. அந்த ஒருநாளில் அந்த ஆட்சி செய்த அற்புதக் காரியம், சரத்பவார் உறவினர் மீது ஏற்கனவே போடப் பட்டிருந்த ஊழல் வழக்குகள் அத்தனைக்கும் போதிய ஆதாரம் கிட்டவில்லை என்று -அதாவது ஏறத் தாழ 70,000 கோடி மதிப்புள்ள ஊழல் வழக்குகள் அனைத்தும் கைவிடப்பட்டன.
இவையெல்லாம் சரத்பவாரின் உறவினர் கடந்த ஆட்சியில் நீர்ப்பாசன மந்திரியாக இருந்தபோது செய்த ஊழல் திருவிளையாடல்கள்.
பட்னாவிசின் ஆட்சி எதிர்பாராதவிதமாக ஒருநாளில் கவிழ்ந்து விட்டது என்பது வேறு. அந்த ஒருநாளைக்குள் அரசு செய்த ஒரே ஒரு காரியம் சரத்பவாரின் உறவினரை ஊழல் வழக்கிலிருந்து விடுவித்ததுதான். இது அரும்பெரும் தேசப்பணி அல்லவா. காங்கிரசுக்காரரை கைது செய்யும் போதெல்லாம், "ஊழலை இந்த மோடி அரசு ஒரு போதும் ஏற்காது' என்று மோடி முழங்குவார்.
தன்னுடைய கட்சிக்காரர் பட்னாவிசு பம்பாயில் ஆட்சி அமைப்பதற்காக, ஒரு ஊழல்வாதியின் அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டு, அரசு அமைக்க மோடி பின்புலமாக இருக்கிறார். ஆகையால் ஊழலின் மீது மோடிக்குப் பகை இல்லை; தனக்கு வேண்டாதவர்களின் ஊழலின் மீது மட்டுமே மோடிக்குப் பகை. சரத்பவாரின் உறவினர் செய்த ஊழல் ஒரு கோடி, இரண்டு கோடி அல்ல, எழுபதாயிரம் கோடி.
ஊழல் எப்படி ஒழியும்?
தமிழ்நாட்டில் எடப்பாடி ஆட்சியில் ஊழல் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. விசயபாசுகர் போன்ற அமைச்சர்கள் கையும் மெய்யுமாகப் பிடிபட்டார்கள். அவை எல்லாம் தொலைக் காட்சிகளில் பல சிறப்புக் காட்சிகளாக ஓடின.
ஏன் மைய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்பது ஒரு கேள்வி. விசயபாசுகர் இவ்வளவுக்கும் பிறகு எப்படி அமைச்சராக நீடிக்க முடிகிறது என்பது இன்னொரு கேள்வி. வேண்டிய கட்சி, வேண்டாத கட்சி என்று கட்சிகள் தோறும் நீதிகள் வேறுபடுகின்றன.
இதற்கு மோடி கேட்கும் விலை, தன்னு டைய கட்சியைக் கூட்ட ணிக் கட்சியாக எடப் பாடி ஏற்க வேண்டும் என்பது. தேர்தலில் அவர் கள் கேட்கும் இடங் களைப் போட்டியிட ஒதுக்கித் தர வேண்டும்; அவர்களுக்காகச் செலவும் செய்யவேண்டும் என்பது. இவற்றை எல்லாம் செய்து கொடுப்பதற்கு மோடி செய்யும் கைம்மாறு, எடப்பாடியின் ஊழல் ஆட்சியைப் பாதுகாப்பது.
மோடி அதிகாரத்தில் இல்லை என்றால், ஒரு தெரு நாய் கூட, பா.ச.க.வை ஏறிட்டுப் பார்க்காது.
தன்னுடைய கேடான அரசை பாதுகாப்ப தற்கு எடப்பாடி கொடுக்கும் விலை மிக அதிகம். தற்கொலையில்தான் முடியும் என்றால் எதைப் பெற்று என்ன பயன்?
சென்ற பாராளுமன்றத் தேர்த லில் பா.ச.க.வுடன் கூட்டு வைத்துக் கொண்டதால், முப்பத்தெட்டு இடங்களில் அ.இ.அ.தி.மு.க. தோற்றது. அது மட்டுமல்ல; பல தொகுதிகளில் அது நான்கு இலட்சம், மூன்று இலட்சம் வாக்கு வேறுபாட்டில் வேறு தோற்றது. அதனுடைய வாக்கு வங்கி வெறும் பதினெட்டு விழுக்காட்டிற்குச் சரிந்தது.
அதே சமயம் தி.மு.க. முப்பத்தெட்டு இடங் களில் வெல்ல முடிந்தது. நகராட்சித் தேர்தலில் கூட வெல்ல முடியாத சிறு சிறு கட்சிகளெல்லாம் பெரும் வாக்கு வேறுபாட்டில் வென்றன.
தி.மு.க.வை வெல்லச் செய்ததும், எடப் பாடியை மண்ணைக் கவ்வச் செய்ததும் மோடியின் எதிர்ப்பலைதான். ஒரு பெரிய கட்சியை ஒன்றுமில் லாமல் ஆக்க அந்தக் கூட்டணியில் மோடியின் இருப்பு ஒன்றே போதுமானதாக இருந்தது.
தி.மு.க.வோடு மோத அ.தி.மு.க. போது மானது. இப்போது அ.தி.மு.க.வுக்கு இடைஞ்சலே அதன் தோளில் உட்கார்ந்திருக்கும் மோடியின் கட்சிதான். தென்னாட்டில் -குறிப்பாகத் தமிழ்நாட்டில் பா.ச.க.வை ஐம்பது ஆண்டுகளாக நஞ்சென வெறுக்கிறார்கள்.
பாறையில் பயிர் முளைக்காது; தமிழ்நாட்டில் ஒருபோதும் பா.ச.க. வேர்விட முடியாது.
ரசினிகாந்த் கூட பா.ச.க.வோடு உறவு வைத்துக்கொள்வது, கல்லைக் கட்டிக்கொண்டு கிணற்றில் குதிப்பது போன்றது என அறிந்து வைத்திருக்கிறார்.
பா.ச.க. சிந்திப்பதை விட்டுவிட்டு, அதிகாரத் தில் இருப்பதால் ஒவ்வொரு தோளாகச் சவாரி செய்ய நினைப்பது வீணானது.
அதுவும் டில்லியில் அதிகாரத்திலிருக்கிறோம் என்னும் ஆணவத்தில், இதுவரை அடங்கிக் கிடந்த சில பா.ச.க.வினர் பேசும் பேச்சு, கொஞ்ச நஞ்ச பா.ச.க. தலைதூக்கலையும் அழிக்கப் போதுமானது.
அதிகாரத்தில் இருந்தால் யாரும் வருவார் கள். வாசுபாயின் அமைச்சரவையில் தி.மு.க. அங்கம் வகிக்கவில்லையா?
ஒவ்வொரு மாநிலத்திலும் அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை. உங்கள் கொள்கைகளும் மதவெறியும் ஊடுருவ முடியாத மாநிலங்களும் உண்டு.
டில்லியில் இருப்பது ஒன்றே போதுமானது.
மராட்டியத்தில் உங்கள் அதிகார அரசியல் கொஞ்ச நஞ்ச மதிப்பையும் சீர்குலைத்துக் கேவலப் படுத்திவிட்டது. நெறி சார்ந்த அரசியல் உங்களுக் குப் பழக்கமில்லை. மராட்டிய அரசியல் போன்ற கேவலங்கள், உங்கள் டில்லி அதிகாரத்தையே அரித்துவிடும்.
இருப்பதை விட்டுப் பறப்பதைப் பிடிக்காதீர்கள்.
(தொடரும்)