(89) மீண்டும் பழைய இருள்!
ஒரு கட்சி தோன்றும்போது காலப் பொருத்தமுடைய கொள்கை களை முன்வைக்கிறது. அப்படி வைக்கும்போது, அதற்கு வளர்ச்சி ஏற்படுகிறது. பாதிக்கப்பட்ட தங்கள் நலன்களை இக்கட்சி மீட்டெடுக்கும் என்னும் நம்பிக்கை வளரும்போது, அக்கட்சியைச் சுற்றி ஒரு கூட்டம் திரள்கிறது. அக்கட்சிக்கு வளர்ச்சி ஏற்படுகிறது. பெருவாரியான பேர்களை ஈர்க்கும் கொள்கைகளைச் சிந்திக்கத் தெரிந்தவன் தலைவ னாகிறான். பெரும்பாலும் கட்சியை அடிமட்டத்திலிருந்து கட்டுகின்ற தலைவன் ஒரு போராளியாகவே இருப்பான். போராளியாக, தன்னல மற்றவனாக, தொலைநோக்கு உள்ளவனாக உள்ள ஒரு தலைவனின் காலத்தில் ஒரு கட்சி கிளை விட்டு வளர்கிறது.
அடுத்தடுத்த தலைமைகளின்கீழ் ஆட்சியில் அமரும் போது, பாடுபட்டவர்கள் மெல்ல மெல்ல ஓரங்கட்டப்படு வார்கள்; பணம் வைத்திருப்பவர்கள் அந்த இடங்களை ஆக்கிரமிப்பார்கள். தலைவ னுக்கு முகமன் கூறுவதற்கென்றே தனித்து ஒரு கூட்டம் வளரும்.
கட்சி வெற்றி முகம் நோக்கிப் போகின்றவரை அந்தக் காக்கைகளின் கூட்டம் மொய்க்கும். பிறகு அந்தக் குளம் அற்றுப் போகும்போது அந்தக் கூட்டம் இடம் பெயர்ந்துவிடும். அந்தக் குளம் அற்றுப் போவதற்கே, இந்தக் காக்கை களால் மக்களிடம் ஏற்படும் அவநம் பிக்கைதான் காரணம். அது காக்கை களுக்கும் தெரிவதில்லை; அந்தக் காக்கை களின் சொரிதலில் சுகங்காணும் தலைவர்களுக்கும் தெரிவதில்லை.
அவப்பெயர் காக்கைகளால் வந்தது என்றாலும், தோல்வியின் பளு தலைவனின் தோளில்தான் விழும். இப்படித்தான் கட்சிகள் தோன்றி மறைகின்றன. தலைவர்களும் காணாமல் போகிறார்கள்.
ஒரு கட்சி பெரியாரின் திராவிடர் கழகம்போல் அதிகாரத்திற்கு வரவிரும்பாத கட்சி என்றால், எந்தச் சிக்கலும் இல்லை. ஆனால் ஒரு நாட்டை நடத்த அதி காரம் வேண்டும். அதிகாரம் வழியல்லாத வழியில் பணம் தேடலை எளிதாக்குகிறது. ஆகவே அதிகாரத்திற்கு வருகிறவர்கள் வந்த வேலையை விட்டுவிட்டுச் சொந்த வேலையைப் பார்க்கத் தொடங்கிவிடுகிறார்கள். ஐந்தாண்டுகளுக்குப் பிறகு அதிகாரத்தில் தொடரமுடியும் என்பதற்கு உறுதி இல்லாத காரணத்தால், இருக்கின்ற காலத்திலேயே "அகப்பட்டதைச் சுருட்டிக்கொள்ளும்' முனைப்பு ஓங்கி நிற்கிறது.
நாற்பது ஐம்பதாண்டுகளில் எத்தனை எத்தனை மந்திரிகள்? கக்கனைப்போல் எத்தனை பெயர்களைப் பெருமையோடு நினைவுகூர முடி யும்? சாகும் தறுவாயில் ஒன்றுமில்லாமல் இறந்து போன கக்கனுக்கும் ஐயாயிரம் கோடி, பத்தாயிரம் கோடி என்று கொள்ளையிட்டுக் குவித்து வைத்துவிட்டு, நுகர முடியாமல் செத்துவிட்ட நூற்றுக்கணக்கான பிற மந்திரிகளுக்கும் என்ன வேறுபாடு? உடையவனும், இல்லாதவனும் ஒரே மாதிரி வெறுங்கையோடுதானே செல்கிறார்கள்.
வெறுங்கையோடு செல்வதற்கு இவ்வளவு அட்டூழியம் ஏன்? எத்தனை பேர் வதையை வாங்கி இருப்பீர்கள்? எத்தனை பேரை இரத்தக்கண்ணீர் வடிக்க வைத்திருப்பீர்கள்?
செயலலிதாவின் பல ஆயிரம் கோடி சொத்தை யார் அடையவேண்டும் என அடை யாளப்படுத்தவும் நேரமில்லாமல் இறந்துவிட்டாரே.
வெளிப்படையாக வைத்துக்கொள்ள முடியாமல், ஒளித்தொளித்து வைத்திருந்த பணம், அதைக் கொள்வார் யார் யாரோ? நம் கண்முன்னே இவை எல்லாம் தெளிவாகத் தெரிந்தும், பொது வாழ்வில் எவனாவது திருந்துகிறானா?
நம்முடைய நாட்டில் வடக்கே மாபாரதக் காலத்திலும், தெற்கே சங்க இலக்கிய காலத்திலும், அதற்குப் பின்பும் மன்னனை மாட்சிமையுடையவ னாக ஆக்குவதே அறிவு வர்க்கத்தின் மிகப்பெரிய பொறுப்பாக இருந்தது.
அறவழிப்பட்ட மன்னனாகத் தன்னை நிலைநிறுத்திவிட்டுச் சாவதையே ஒவ்வொரு மன்னனும் பெரிதாகக் கருதினான். அதனால்தான் தென்னாடு ஆரியப்படை கடந்த பாண்டியன் நெடுஞ்செழியனையும், வடநாடு ஒப்பாரும் மிக்காரும் இல்லாத அசோகனையும் உருவாக்க முடிந்தது.
நம்மைப்போல் நாகரிகத்தின் தொட்டில் எனக் கருதப்பட்ட கிரேக்கம் அலெக்சாண்டருக்கு மேலாகச் செல்ல முடியவில்லையே. உலகத்தை வெல்லக் கொலை வாளுடன் புறப்பட்டவன், பிடித்த மண்ணை ஆள முடியாமல் அந்த மண்ணுக்கே இரையானானே.
கிரேக்கம் இரண்டாயிரத்தி ஐநூறு ஆண்டு களுக்கு முன்னர் குடியாட்சி முறையைக் கண்டறிந் திருந்தது. பெரும்பான்மையோர் ஆட்சிமன்றத்தில் (senate) வாக்களித்துதான் பேரறிஞன் சாக்ரடீசை மரண தண்டனைக்கு உட்படுத்தினார்கள். இதுதான் குடியாட்சியின் இலட்சணம். குடியாட்சி என்பது நீதியானது என்பதெல்லாம் கிடையாது. ஆட்சி யாளர்களில் பெரும்பான்மையோர் முட்டாள் களாக இருந்தால், அறிவுப் பகையாகும். ஆட்சி யினரில் பெரும்பான்மையோர் அயோக்கியர்களாக இருந்தால், நேர்மை பகையாகும்.
குடியாட்சி என்பது பெரும்பான்மையோர் வகுக்கும் நீதி; அவர்களின் தரத்திற்கு ஏற்ப அந்த நீதி இருக்கும். குடியாட்சி முறையைக் கண்டறிந்தவர்கள் கிரேக்கர்கள் என்பதால், அதைக் குறையற்றதாக (fool proof method) ஆக்கப் பல்வகையாகச் சிந்தித்திருக்கிறார்கள்.
குடியாட்சி என்பது மாறி, மாறி ஆட்சி செய்வது என்பதால், எந்த எளிய மனிதனுக்கும் ஆட்சிக் கட்டில் எட்டக்கூடியதுதான் என்பதால், அதில் ஒருவன் அதிகாரத்தைக் குவித்துக்கொண்டு நிலையாக ஆள்வதையோ, தன்னுடைய பலத்தைப் பயன்படுத்தி, தன் மகனை ஆட்சியின் வாரிசு ஆக்குவதையோ, பண்டைய சிந்தனையாளர்கள் ஏற்க மறுத்தார்கள். ஆனாலும் குடியாட்சியிலும் வாரிசு முறையை ஒழிக்க முடியவில்லை.
இந்த வாரிசு முறையை ஒழிக்க பிளேட்டோ (Plato) என்னும் பேரறிஞன் எந்த எல்லைக்கும் போய்ச் சிந்தித்தான். அவன் எழுதிய நூலுக்கே Republic என்றுதான் பெயர்.
எல்லாரும் ஆட்சிக்கு வருவதை அவன் உடன்படவில்லை. அதற்கான பயிற்சியும், கல்வியும் அவர்களுக்கு வேண்டுமென பிளேட்டோ எண்ணினான். அதற்கான இளைஞர்களை எப்படித் தேர்வு செய்வது?
ஆகவே தொடக்கத்தில் எல்லா இளசுகளுக் கும் ஆட்சிக்கான கல்வி பயில வாய்ப்பளிக்கப் பட்டது. படிப்பில் தேர்ச்சி மிக்கவர்கள் மேல் நிலைக்கு எடுத்துச் செல்லப்படுவார்கள். குறைவானவர்கள் வணிகம் மற்றும் கீழ்நிலை வேலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். மிகுந்த தேர்ச்சியுடையவர்களில் மணந்துகொண்டு பிள்ளை குட்டிகளைப் பெற்றுக்கொண்டு வாழ விழைபவர்கள், ஆட்சி அதிகாரத்திலிருந்து நீக்கி வைக்கப்படுவார்கள்.
ஆசாபாசம் மிக்கவர்களிடம் அதிகாரத்தைக் கொடுத்தால், இப்போது நம்முடைய நாடு போல் கொள்ளைதான் அரசியலின் மையமாகிவிடும்.
ஆகவே அறிவில் தேர்ச்சியுடையவர்கள் தங்களுக்குச் சொந்த மனைவி வேண்டும்; சொந்தப் பிள்ளை வேண்டும்; சொந்தச் சொத்தும் வேண்டும் என நினைப்பார்களேயானால், அவர்களும் அதிகாரத்திற்கு உரியவர்கள் அல்லர் எனப் பிளேட்டோ கருதுகிறான்.
அப்படியானால் யார்தான் உரியவர்கள்?
தேர்ந்த கல்வி, கூரிய அறிவு, மேலும் அதிகாரத்தில் கீழ்நிலையிலிருந்து படிப்படியான பயிற்சி, இவற்றிற்கிடையே அவன் இந்த நிலைக்குத் தேர்வு செய்யப்படுவதற்கு அடிப்படையான முதல் தேவை, அவன் மணவாழ்வில் நாட்டமற்றவனாக இருக்கவேண்டும்.
துறவு என்பது எல்லாருக்கும் இயலக்கூடியதா என்னும் கேள்விக்கு உடன்படுகிறான் பிளேட்டோ.
ஆட்சியாளர்களுக்குச் சொந்த வீடு கிடையாது; சொந்த சொத்து எதுவும் கிடையாது; அரசு மாளிகையி லேயே எல்லா வசதிகளோடும் வசிக்க லாம்; வேண்டியதை நுகரலாம். ஆயினும் தனிச்சொத்துடைமை இல்லாத காரணத் தால், இலஞ்சம் வாங்க முடியாது. ஆகவே பொது வாழ்க்கையில் மக்களைச் சுரண்டும் தேவை ஏற்படாது. அதேசமயத்தில் நரம்பின் தேவையை மறிக்க முடியுமா என்னும் கேள்விக்கு, மறிக்கத் தேவை இல்லை என்று விடை பகர்கிறான் பிளேட்டோ. அரசு மாளிகை அதற்கான வசதியைத் தருகிறது.
எனினும் தனி மனைவி, தனி வாரிசு, தனிச் சொத்துடைமை இவையே ஆட்சி அதிகாரத்தில் எல்லாத் தீமைகளுக்கும் காரணம் என்று பிளேட்டோ பேசுகிறான்.
'Administrators wives should be communalised' என்பது பிளேட்டோவின் கோட்பாடு. இவ்வளவு சோதனைகளில்தான் குடியாட்சி நேரிய முறையில் நிலைபெறும் என்கிறான் பிளேட்டோ.
அசோகனைப் போல ஒரு மன்னன் மீண்டும் மீண்டும் கிடைப்பதற்கு உறுதியிருந்தால், குடியாட்சி முறையையே கண்டுபிடிக்கத் தேவை இருந்திருக்காது.
நேரு சாகும்போது எந்த புதிய சொத்தும் இல்லை; லால்பகதூர் சாஸ்திரி தலைமையமைச்சர் பதவிக்கு வருகிறபோதும், வந்தபின்னும் சொந்த வீடு அற்றவராக இருந்தார்.
மொரார்சி தேசாய் தலைமையமைச்சர் பதவியிலிருந்து இறங்கிய பிறகு, பம்பாயில் அடுக்குமாடி வீட்டில் வாடகைக்கு குடிபோனார். வீட்டைக் காலி செய்து தருமாறு அவர்மீது ஒரு சாதாரணமானவன் வழக்குப் போட முடிந்தது. ""பெரிய பதவியில் இருப்பவர் மகனுமாயிற்றே; வசதியாக இருக்கலாம் என வாழ்க்கைப்பட்டேன்; இது ஒரு வாழ்க்கையா?'' என்று மொரார்சி மருமகள் மேல்மாடியிலிருந்து குதித்து தற் கொலை செய்துகொண்டார். மருமக ளின் அறியாமைக்காக மொரார்சி வருந் தினாரே தவிர, தன்னுடைய வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ளவில்லை.
எதிர்க்கட்சித் தலைவர்களாகிய ஜெயப்பிரகாசு நாராயணன், லோகியா கிருபளானி, நம்பூதிரிபாட் ஆகியோர் புடம்போட்ட தங்கங்கள்.
தீயில் வெந்து கசடு நீங்கப் பெறும் தங்கம்போல், சுதந்திர வேள்வி யில் வெந்து அழுக்கு நீங்கப் பெற்றவர்கள்.
காமராசர் மணவாத் துறவி; இராசாசி மணந்த துறவி!
ஒரு நீரோட்டத்தில் சில கட்டைகள் ஒன்றுசேர்ந்து, ஒன்றாகப் பயணம் செய்து உறவு கொள்கின்றன. அதற்கு உரிய காலத்தில், அவை ஒவ்வோரிடத்தில் பிரிந்து கரை ஒதுங்கி, உறவற்றுப் போகின்றன. "இவ்வளவுதான் குடும்பம்' என்கின்ற மெய்யறிவு உடையவர் இராசாசி. அவர்களின் வாழ்வே ஒரு தவம்.
காந்தி, விடுதலை இரண்டாவதுதான் என்றார். முதலில் சமூக மாற்றமே என முழங்கினார்.
வாய்மை, நேர்மை, தன்னலமின்மை இவற்றை முதன்முதலாக இந்தியப் பொதுவாழ்வில் (Public Life) மதிப்புக்குரியவையாக ஆக்கினார்.
நாடு என்பது வெறும் மண். அந்த மண்ணில் வாழ்ந்த காந்தி செதுக்கிய சமூகமே இந்தியாவின் மாபெரும் பெருமை.
காந்தியின் செல்வாக்குத் தேய்ந்துகொண்டி ருக்கிறது.
மீண்டும் பழைய இருள்!
(தொடரும்)