73 பானை பிடித்தவன் பாக்கியசாலி!

ண்மையில் ஒரு பொதுநல வழக்கு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட கட்சிக்காக ஒதுக்கப்பட்டுள்ள தேர்தல் சின்னத்தை இன்னொரு கட்சியைச் சேர்ந்தவருக்கு வழங்கக்கூடாது என்பது விதி. ஏனெனில் அது ஒதுக்கீடு செய்யப்பட்ட சின்னம் (reserved symbol) அவ்வாறு தேர்தல் அதிகாரி வழங்கினால் குற்றம். ஆகவே அதை எந்தத் தேர்தல் அதி காரியும் இதுவரை செய்ததில்லை.

ஒரு கட்சியின் தலைவரும் அவ்வாறு தன் கட்சியின் தேர்தல் சின்னத்தை வேறொரு கட்சிக்கார ருக்கு வழங்க முடி யாது என்ப தால், அவ ரைத் தன் கட்சிக்காரர் என்பது போலவே தான், அந்த சின்ன ஒதுக்கீட்டு இசைவு மடலை வழங்குகிறார்.

தேர்தல் அதிகாரியும் அவரை அந்தக் குறிப்பிட்ட கட்சி யின் உறுப்பினராகவே கொண்டுதான் சின்னத்தினை வழங்குகிறார்.

Advertisment

ஒருவர் சுயேச்சையா, சாதிக் கட்சியின் உறுப்பினரா, கூட்டணிக் கட்சிக்காரரா என்பது குறித்தெல்லாம் ஒரு தேர்தல் அதிகாரி விசாரிக்கத் தேவையில்லாதற்குக் காரணம், அந்தச் சின்னத்தைக் குறிப்பிட்ட ஒருவருக்கு ஒதுக்கு என்று சான்றிதழ் வழங்குகிற ஒரு குறிப்பிட்ட கட்சியின் தலைவர் அவரைத் தன் கட்சிக்காரர் என்பது போலவே ஒப்புதல் வழங்குகிறார்.

தன் கட்சிக்காரர், கூட்டணிக் கட்சிக்காரர் என்ற பாகுபாடுகள் அந்தத் தலைவரின் ஒப்புகை மடலில் இருப்பதில்லை.

அப்படி இல்லாதது அந்தப் பெரிய கட்சியின் தலைவருக்கு இலாபம். உதிரிக் கட்சிகளுக்கு நட்டம்.

Advertisment

நாமக்கல் கொங்குக் கட்சிக்காரர், விழுப்புரம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்காரர், பெரம்பலூர் சனநாயகக் கட்சிக்காரர், ஈரோடு ம.தி.மு.க. கட்சிக்காரர் ஆகிய நால்வரும் தங்களுக்கென பதிவு செய்த அரசியல் கட்சியினைப் பெற்றிருந்தும், தங்கள் கட்சிச் சின்னங்களில் நிற்காமல் ஒரு பெரிய கட்சியின் தேர்தல் சின்னத்தில் நின்றிருக்கின்றனர்.

போதிய அளவு வாக்குப் பெறாத கட்சிகள் தங்களின் சொந்த சின்னத்தை இழந்து விடும் என்பதால், இவர்கள் நால்வரும் சொந்த சின்னம் இல்லாதவர்களாக இருக்கக் கூடும்.

பெரிய கட்சி எப்போதும் என்ன சொல்லும் என்றால், "உங்களுக்கு சொந்தச் சின்னம் இல்லை, சுயேச்சை சின்னம் மக்களுக்கு அறிமுகமில்லாதது. ஆகவே எங்கள் கட்சி சின்னத்தில் நில்லுங்கள்' என்று சொல்லும். அது ஒரு சூழ்ச்சி பேச்சு.

காமவேட்கை மீதூறிய நிலையில், அப்போதைக்கு அமைந்த ஒரு பெண் முன்வைக்கிற எந்த நிபந்தனையையும் ஓர் ஆண் ஏற்றுக் கொண்டு விடுவது போல், இந்த சிறு கட்சிக்காரர்கள் எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்னும் வேட்கை மீதூறிய நிலையில், எந்த நிபந்தனைக்கும் உட்பட்டு விடுவர்.

தமிழ்நாட்டில் ஒரு குறிப்பிட்ட பெரிய எதிர்க்கட்சி கடந்த பாராளுமன்றத் தேர்தலில் மொத்தமே இருபது இடங்களில்தான் போட்டி யிட்டது.

அது வெற்றி பெற்ற கணக்கைப் பாராளுமன்றத்திற்குக் கொடுக்கும் போது இருபத்தி நான்கு என்று கொடுத்தது.

இருபது இடங்களில் போட்டியிட்டு எப்படி இருபத்தி நான்கு இடங்களில் வெற்றி பெற முடியும் என்று யோசித்து யோசித்து நிறைய பேர் மண்டை காய்ந்து விட்டனர்.

இருபது பேர்தான் சொந்தக் கட்சிக்காரர்கள், நான்கு பேர் அந்தப் பெரிய கட்சியின் தேர்தல் சின்னத்தில் போட்டியிட்டு வென்றவர் கள்.

pppஅவர்கள் சொந்த அடையாளம் இல்லாதவர்கள். சொந்த சின்னம் இல்லாதவர்கள். சுயேச்சை சின்னத்திலும் போட்டியிடும் மன உரம் இல்லாதவர்கள். ஆகவே அவர்கள் கூட்டணி தலைமைக் கட்சியின் முகவரிக்குள் அடக்கப்பட்டு விட்டார்கள்.

வைகோவும் திருமாவளவனும் தேர்ந்த அரசியலாளர்கள். விடுதலை சிறுத்தைகள் ரவிக்குமார் நிறையப் படித்தவர். நிரம்பவும் யோசனை உள்ளவர். இவர்கள் எப்படி சுய அடையாள இழப்புக்கு உடன்பட்டார்கள் என்பது புரியவில்லை.

சுய அடையாளம் மட்டுமா போகும்? பாராளுமன்றத்தில் வாக்களிப்பதற்கான சுய உரிமையும் போய்விடுமே. சாதிக் கட்சிக்காரர் களான மற்ற இருவர் எப்படியோ போகட்டும். வெறும் பெயர்ப் பலகைதான் வைத்திருக்கிறார்கள். பெரிய கட்சியிலேயே சேர்ந்து விட்டதாக முன் தேதியிட்டு ஓர் ஆவணத்தை உருவாக்கிக் கொண்டு விட்டால், குடியா முழுகிப் போய்விடும் என்று கூட நினைக்கலாம்தானே.

ஆனால் உயர்நீதிமன்றம் கேட்டிருக்கிறது: "இந்த நால்வரும் பி படிவத்தில் தாங்கள் சார்ந்திருக்கும் அரசியல் கட்சிகளைக் குறிப்பிட வில்லையே' என்று.

பதிவு செய்யப்பட்ட வேறு அரசியல் கட்சி உறுப்பினர்களுக்கு தி.மு.க. சின்னம் வழங்கியதைக் குறிப்பிட வேண்டிய கடமை குறித்தும் நீதிமன்றத்தில் வினா எழுப்பப்பட்டிருக்கிறது.

இவை சட்டச் சிக்கல்கள், இவற்றைத் தி.மு.க.வும் நால்வரும் எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றனர் என்பது அவர்களின் பாடு.

நீதிமன்றத்தின் முடிவைப் பெற வேண்டிய நல்ல வழக்கு இது.

ஆனால் இது நீண்ட நாளாக இதேபோல் தான் நடைமுறையில் இருந்து வருகிறது. ஆகவே ஒரு முடிவு இதற்குத் தேவைப்படுகிறது.

ஆனால் இதில் அரசியல் ரீதியாக சிந்திக்கும் போது, சின்னம் மாறி நிற்பது சுயமரியாதைக் கேடாகும். நீங்கள் பெறுகின்ற வாக்கு, இன் னொரு பெரிய கட்சியின் கணக்கில் சேரும். நீங்கள் வெற்றி பெற்ற பிறகும் இன் னொரு கட்சியின் உடைமையாவீர் கள். நீங்கள் சுவரில் வேண்டு மானால், உங்கள் கட்சிப் பெயரை எழுதிக் கொள்ள லாம். சிறியதோ, பெரி யதோ, ஒரு தனிக் கட்சியாகக் கால் கொள்வதற்கு இந்த நிலைப்பாடு பெரிய தடையாகும்.

வேற்றானின் சின்னத்தில் நின்று வெற்றி பெற்ற பிறகு, நீங்கள் பாராளுமன்றத்தில் யாருக்கு, எவ்விதமாக வாக்களிக்க வேண்டும் என்பதை நீங்கள் உங்கள் அறிவு கொண்டு தீர்மானிக்க முடியாது, உங்கள் கட்சித் தலைமையும் தீர்மானிக்க முடியாது. உங்களுக்கு சின்னம் வழங்கிய பெரிய கட்சிக்காரர் தீர்மானிப்பார். அவருடைய கொறடா தீர்மானிப்பார். அவர் கட்டளை இடுவார்.

கட்சித் தாவல் தடைச் சட்டத்தை எல்லாக் கட்சிகளின் தலைவர்களும் விரும்பியதற்குக் காரணம், அந்தத் தலைவன் தன் ஆட்சியைக் கொறடா மூலம் கட்டளையிட்டுத் தனக்கு வாக்களிக்குமாறு செய்து, தன் தலைமையையும் பதவியையும் காப்பாற்றிக் கொள்வதற்காகத்தான்.

இதனால் மக்களுக்குக் கடமைப்பட்டவர் ஒரு எம்.எல்.ஏ. அல்லது எம்.பி. என்பது பொய் (not answerable to the masses, but to their leaders) தலைவனுக்குக் கட்டுப்பட்டவர் என்னும் இழிநிலை தோன்ற இந்தச் சட்டமே காரணம்.

இருபது ஆண்டுச் சோதனையில் இந்தச் சட்டம் படுமோசமாகத் தோற்றுவிட்டது. தெலுங்கானாவில் கொஞ்சமாக இருந்த காங்கிரசு சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளுங்கட்சியான சந்திரசேகர ராவிடம் போய் விட்டார்கள்.

கருநாடகாவில் காங்கிரசு-கௌடா கூட்டணி ஆட்சியில் பதவி பெற முடியாதவர்களெல்லாம் பா.ச.க.வுக்குத் தாவிக் கவிழ்த்து பா.ச.க. ஆட்சியைக் கொண்டு வந்து விட்டார்கள். நேற்று, மாயாவதி இனித் தேறமாட்டார் என்று அவருடைய பல எம்.எல்.ஏ.க்கள் இராசத்தானில் ஆளுங்கட்சிக்குத் தாவி விட்டார்கள். ஆந்திர சந்திரபாபு நாயுடு மாநிலங்களவை உறுப்பினர்கள் மையத்தில் ஆளுங்கட்சியான பா.ச.க.வுக்குப் போதுமான உறுப்பினர்கள் மேலவையில் இல்லை என்பதற்காக, பெற வேண்டியதைப் பெற்றுக் கொண்டு, மாற வேண்டிய இடத்திற்கு மாறிவிட்டார்கள்.

ஆளுங்கட்சிக்குத் தாவுவதுதான் இப்போதைய அரசியலில் மிகப் பெரிய தேசத்தொண்டு.

சட்டம் இருந்தும் இந்தக் கேடு கெட்ட தாவல்களைத் தடுக்க முடிந்ததா?

தடுக்க முடியவில்லை என்று தெரிந்தபிறகும் அந்தச் சனநாயக மறுப்புச் சட்டத்தைத் தூக்கி எறிய வேண்டும் என்று, எந்தத் தலைவனுடைய குரலாவது ஒலிக்கிறதா?

ஊசிப் போய்விட்ட குழம்பைக் குப்பையில் கொட்டாமல் வேறென்ன செய்வது? அரசியலில் அவ்வளவு தெளிவுத் தலைமுறை.

மதிப்புடைக் குறியீடு (Brand Name) தேடிய நால்வரும் சூரியனில் பொசுங்குகிறார்கள்.

பானை பிடித்தவர் (திருமாவளவன்) பாக்கியசாலி.

(தொடரும்)