Skip to main content

அடுத்த கட்டம்! ல-பழ.கருப்பையா (70)

(70) வரலாறு யாருக்குத்தான் இல்லை?

ரு பொருளின் தரம் இறங்கி விட்டாலோ, அது எதிர்பார்க்கும் அளவுக்கு இல்லா விட்டாலோ, அது சந்தையை விட்டு வெளியேறி விடுகிறது.

அந்தப் பொருளைத் தயாரிப்பவரின் மருமகள் கூட, அந்தப் பொருளை முகத்தில் பூசிக்கொள்ளவோ, உண்ணவோ விரும்புவதில்லை!

தகுதியற்ற மருத்துவரின் குடும்பத்தார் கூட, அவரிடம் மருத்துவம் பார்த்துக் கொள்வதைத் தவிர்த்து விடுகிறார்கள்.

காவிரியின் குறுக்கே கண்ணம்பாடி அணையைக் கட்ட சாலைப் பாலம் கட்டிப் பழக்கப்பட்ட பொறியாளரை அழைப்பதில்லை; விசுவேசுவரய்யாதான் அழைக்கப் படுகிறார்!

எந்த ஒரு வேலைக்கும், தொழிலுக்கும் தகுதி யுடையவர்களே அழைக்கப்படுகிறார்கள்! ஒருவேளை தகுதியற்றவர் கைகளில் அது போய்ச் சேர்ந்தால், அந்த வேலையோ தொழிலோ பாழாகி அவர் வெளியேற்றப் படுகிறார்; அல்லது அழிந்து போகிறார்! இது இயற்கை விதி!

சூழலோடு பொருந்தியவை மட்டுமே நிலை பெறுகின்றன! ‘(Survival of the fittest)’’ என்பான் சார்லசு டார்வின்!

அரசியலுக்கும் இது பொருந்தும்தான்.
palaa
"கூத்தாடிப் பசங்க இவுங்க கையிலே நாட்டைக் கொடுத்தா நாடு என்ன ஆகும்?' என்று தி.மு.க.வினரைப் பார்த்து காமராசர் அந்தக் காலத்தில் கேட்பார்!

MGR, SSR, KR..இராமசாமி என்று பெரும் நடிகர்கள் கூட்டமே தி.மு.க.வில் இருந்தது எனினும், காமராசரின் சொல்லாடல் அண்ணாவையும், கலைஞரையும் உள்ளடக்கியதாகத்தான் இருந்தது!

அதற்கு அண்ணா பொதுமேடைகளில், "ஐந்தாம் வகுப்பு வரையே படித்த காமராசரால் நாடாள முடியுமென்றால்’ எம்.ஏ. படித்த எங்களால் முடியாதா?' என்று எதிர்விடை பகர்வார்.

ஆனால் உண்மையிலேயே நாடாள்வதற்குப் பரந்த படிப்புத் தேவைதான்! காமராசர் பள்ளி வாயிலாகப் படித்தவரில்லையே தவிர, நிறையப் படிக்கும் பழக்கமுடையவர். பத்தாண்டுச் சிறை வாழ்க்கையை அறிவைத் தேடுவதில் கழித்தவர்!

ஒவ்வொரு முறையும் காமராசரை மதுரை விண்ணூர்தி நிலையத்தில் வழியனுப்பும் போதும், எல்லாப் பயணிகளும் சென்ற பிறகு, காமராசரிடம் கடைசிக் கதவருகே நெடுமாறன் ஒரு புத்தகத்தையும், விண்ணூர்திப் பயணச் சீட்டையும் (Boarding Pass) கொடுப்பார். எப்போதும் ஆசையோடு நான் உடன் போவேன். அப்படி ஒருமுறை காமராசர் சொல்லி நெடுமாறன் வாங்கி வந்து கொடுத்த புத்தகம், அமெரிக்கப் பொருளாதார மேதையும், பின்னாளில் அமெரிக் கத் தூதராகவும் விளங்கிய கால்பிரெய்த் (Galbraith) அன்றைய உலக அரசியல், பொரு ளாதாரம் குறித்து எழுதியது.

தலைவர் காமராசர் படிக்க விரும்பிய நூல் என்றவுடன், நானும் உடனடியாக அந்த நூலை வாங்கினேன். அப்போது மிகவும் இள வயது! அதைப் புரிந்து கொள்ள இன்னும் பல நூறு நூல்களைப் படித்த முதிர்ச்சி எனக்குத் தேவைப்பட்டது. ஆகவே அதை இன்னும் சில ஆண்டுகளுக்கு நான் அடை காக்க நேரிட்டது.

இராசாசியோடு மோதும் தகுதியைக் காமராசர் வளர்த்துக் கொண்டே ஆக வேண்டும் என்பது காலத்தின் நிபந்தனை. காமராசர் காந்தியோடும், நேரு வோடும் இணைந்து அரசியல் நடத்தியவர்; அவர்களைப் புரிந்து கொள்ளவும், தக்க விடை இறுக்கவும் அவர்களுக்கிணை யான முதிர்ச்சி ((Maturity)யைப் பெருக்கிக் கொள்ள வேண்டிய அரசியற் கட்டாயம் ((Political compulsion) காமராசருக்கு இருந்தது. அதற்கேற்பத் தன்னை வளர்த்துக் கொண்டு அரசியலில் நிலை பெற்றார் அந்தத் தன்னலமற்ற தலைவர்.

தேவையின்மை காரணமாக ஆங்கிலத்தில் சரளமாகப் பேசும் பயிற்சியை அவர் பெறவில்லை. ஆங்கிலப் புலமை என்பது வேறு; அறிவு முதிர்ச்சி என்பது வேறு! தேம்சு ஆற்றங்கரையில் குப்பை அள்ளுகிறவன் தேர்ந்த ஆங்கிலம் பேசுவான்; அவன் அறிவுடையவ னாக இருப்பதில்லை.
kkk
அந்தத் தலைமுறையில் காமராசர் மட்டுமில்லை! முத்து ராமலிங்கத் தேவர் தேசியம் (Nationalism) பேசினார்; மெய்யியல் (Philosophy) பேசினார்; தமிழனின் மூல வேர் லெமூரியாக் கண்டம் என்று இனத்தின் தொல் வரலாறும் பேசினார். எவ்வளவு விரிந்த அறிவு.

அண்ணா விரிந்த படிப்பாளி; படைப்பாளி! அவருடைய திராவிடத்திற்கு மாற்றுக் கொள்கை வைக்கக் கூடிய தகுதியைப் பெற்றிருக்கா விட்டால், ம.பொ.சி.யால் அரசியலில் நின்றிருக்க முடியாது. ம.பொ.சிவஞான கிராமணியார் தமிழைத் தேசியத்தோடு இணைத்து, சுயாட்சிக் கொள்கையை முன் வைத்துப் புதுமை படைத்தவர்.

1920-க்கும் 1970-க்கு மிடையே இந்தியாவும் தமிழ் நாடும் அறிவுப் பயிர் வளர்த்த காலம்! பெருக்கெடுத்த அறிவு, தன்னலமின்மை, தியாகம், கண்ணகியின் கற்புக்கு இணை சொல்லுமளவுக்கு நெருப்புப் பறக்கும் நேர்மை.

அந்த ஐம்பதாண்டு கள்தாம் இந்தியா மற்றும் தமிழ்நாட்டின் பொற்காலம்!

இப்போது முதல்வர் எடப்பாடி காலம்; அதற்கேற்ற எதிர்க்கட்சி; அதற்கேற்ற துணைக் கட்சிகள்!

எதிர்க்கட்சித் தலைவ ராக எடப்பாடிக்கு மாற்றாக இராசாசி இருக்க முடியுமா? இருந்தால் கோட்டை தீப்பற்றி எரிந்து விடாதா?

1970-க்குப் பிறகு படிப்படியாகச் சரிவுற்று, அறிவின் இடத்தை அறியாமையும் தன்னலமின்மையின் இடத்தைத் தன்னலமும், நேர்மையின் இடத்தை ஊழலும் பற்றிக் கொண்டு விட்ட காலம் இது.

எடப்பாடியின் அரசியலை எதிர்கொள்ளும் எதிர்க்கட்சிகள், எடப்பாடியின் அரசியல் மூலம் எதுவோ, அதைப் பற்றிக் கொண்டுதான் அரசியல் நடத்தியாக வேண்டும்.

எடப்பாடி வாக்காளனுக்கு இரண்டாயிரம் தருவதாகச் சொன்னால், நாம் மூன்று செண்டு இடம் தருவதாகச் சொல்ல வில்லையா!

ஒருவேளை எதிர்க்கட்சிகளில், கூவத்தூர்க் கோட்பாடு; கொடுக்கல்- வாங்கல் அனுபவம்; மாட்டுத் தாவணியில் துண்டு போட்டு விலைபேசத் தெரிந்த வர்களின் போதாமை என்று இவற்றை எல்லாம் ஈடு கட்டி, இன்றைய எடப்பாடி அரசியலை எதிர்கொள்ள இங்கே உள்ளவர் களுக்குத் திறமை போதாது என்பதால், தம்மவர்களைச் ‘"சற்றே விலகி இரும் பிள்ளாய்' என்று ஒதுக்கி, எடப்பாடியிடம் பயிற்சி பெற்று, அங்கே இடமில்லாமல் போன சிலரை, இங்கு இழுத்து வந்து, அவர்களை முன்னணித் தலைவர் களாக்கித்தான், எடப்பாடி அரசியலை எதிர் கொண்டாக வேண்டும்! வேறு வழி?

காந்தியை எதிர்கொள்ள முகமது அலி சின்னா வேண்டும். நேருவை எதிர்கொள்ள செயப்பிரகாசு நாராயணன், லோகியா, மற்றும் கிருபளாணி வேண்டும்.

இராசாசியை எதிர்கொள்ளக் காமராசர் வேண்டும்.

அண்ணாவை எதிர்கொள்ள ம.பொ.சி. வேண்டும்.

அதுபோல எடப்பாடியை எதிர்கொள்ள இப்போதிருக்கிற எதிர்க்கட்சிகள் போதும் என்பது காலத்தின் சமன்பாடு!

எடப்பாடி ஊழி (Epoch) இது! அவரே இன்றைய அரசியலின் மூலம்!

அவரை ஆட்சிக் கட்டிலில் இருந்து இறக்குவதற்குத்தான் இத்தனை ஆட்களை, அந்தக் கட்சியிலிருந்தே இறக்குமதி செய்ய வேண்டிய திருக்கிறது. அது அவ்வளவு சாதாரணமாக இல்லையே!

எடப்பாடி வெளிநாடு சென்ற ‘மர்மம், சேலத்திற்குச் சென்ற மர்மம், சேத்தியார் தோப்புக்குச் சென்ற மர்மம் என இவற்றை எல்லாம் வரிசையாகக் கண்டுபிடித்து விட்டால், அவரை ஆட்சியை விட்டு இறக்கி விடலாம்! எத்தகைய அரசியல் தந்திரங்கள்? (Political strategies)

திராவிட அரசியலை முன்னிறுத்துவாரும் இல்லை; ஆகவே அதோடு முரண்படுவாரும் இல்லை.

ஆட்சி என்பது நகர்மன்ற உறுப்பினரிலிருந்து நாடாளுகின்றவர் வரை "அடித்தவரை மிச்சம்' என்பதே அடிப்படைக் கொள்கையாக இருப்ப தால், இதுவும் ஒரு கொள்கை தானே!

பழைய அரசியலில் தலைவன் என்பவன் ஒரு புதிய கொள்கையை முன்வைப்பான்; அதன் அடிப்படையில் தொண்டர் களைத் திரட்டுவான்; வலுவான கட்டமைப்பை அந்தக் கொள்கை நிறைவேற்றத்திற்காகக் கட்டுவான்! அதற்கு அவன் அடைகின்ற கூலி "புகழ்'.

அண்ணாவின் வீட்டைக் காஞ்சிபுரத்திற்குப் போய்ப் பாருங்கள்; காமராசரின் வீட்டை விருதுநகருக்குப் போய்ப் பாருங்கள்! இராசாசியின் வீட்டைப் பசுல்லா ரோட்டிற்குப் போய்ப் பாருங்கள்! முதலமைச்சரின் வீடுகளா இவை?

இவை கிடக்கட்டும்! எடப்பாடிக்கும் வரலாறு உண்டு; எடப்பாடியின் அதே அரசியலை அச்சுப் பிசகாமல் அதே நேர்கோட்டில் நடத்துகின்ற எதிர்க்கட்சிகளுக்கும் வரலாறு உண்டு!

சோமநாதபுரத்தைப் பதினெட்டு முறை கொள்ளை அடித்த கசினிமுகமதுவுக்கும் வரலாறு இருக்கிறதே!

வரலாறு யாருக்குத்தான் இல்லை?

(தொடரும்)


 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

இவ்விதழின் கட்டுரைகள்