(69) புத்திசாலிகள் சொல்லட்டுமே!
ஒருமுறை செயலலிதா தன் ஆட்சிக் காலத்தில் தமிழாண்டுப் பிறப்பு என்பது சித்திரை மாதம்தான் என்பதைத் தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானமாகக் கொண்டு வந்தார்! தமிழாண்டுப் பிறப்பு தை எனக் கலைஞர் ஆட்சியில் வைத்திருந்ததை மாற்றுவதற்காக அவர் இந்தத் தீர்மானத்தைக் கொண்டுவந்தார்.
அந்தக் காலகட்டத்தில் நான் சட்டமன்ற உறுப்பினராக இருந் தேன். இந்தத் தீர்மானம் கொண்டு வரப்பட்டு சட்டமாக்கப்பட்டபோது, அதனை வரவேற்று வாக்களித்தவர் களில் நானும் ஒருவன்.
அந்தத் தீர்மானம் முழுமை இல்லாததுபோல் எனக்குப் பட்டது. ஆனாலும் அதற்கு மேல் விளக்க மான குறிப்புகள் எதுவும் அவையில் அளிக்கப்படவில்லை.
பாராட்டுக் கூட்டம் மிகப்பெரிய அளவில் நடந் தது. அந்தச் சமயத்தில் தி.மு.க. எதிர்கட்சி என் னும் நிலையைக்கூட எட்ட முடிய வில்லை. விசயகாந்த் எதிர்க்கட்சித் தலை வராய் இருந்தார்.
அப்போது செயலலிதாவுக்கு என்மீது மதிப்பிருந்த காலம். சட்டமன் றத்தில் காவல்துறை மானியம் என்றால் என்னைத்தான் பேசச் சொல்வார்.
ஒருமுறை நான் காவல்துறை மானியத் தில் இருபது மணித் துளிகள் பேசி, அதை இடைமறித்துச் செயலலிதா பதறிப் போய் முப்பது மணித்துளிகள் பேசி அதை நிரவவேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. இவ்வளவுக்கும் நான் தி.மு.க.வைத்தான், நிலஅபகரிப்பின் கீழ் ஏராளமான தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டதைக் குறிப் பிட்டுத்தான் பேசிக்கொண்டிருந்தேன். ஆனால் பொதுவாகச் சில திறனாய்வுகள் தி.மு.க.வை மட்டுமன்று; அ.தி.மு.க.வையும் ஒப்பிட்டுப் பார்க்க இடமேற்படுத்திவிடுமே என்று ஊகித்துப் பதறிப் பேச்சின் நடுவே குறுக்கிட்டு அதை நிரவ வேண்டிய நிலை ஏற்பட்டுச் செயலலிதா நிலைகுலைந்து போய்விட்டார். சட்டமன்ற ஆவணங்களைப் புரட்டினால் செயலலிதாவின் தடுமாற்றம் தெரியும். அந்தப் பேச்சு அரசியல் சாசன உரிமைகளின்மீது படர்ந்த பேச்சு.
இரண்டு கட்சிகளும் ஒரேமாதிரித் தவறு களைச் செய்கின்ற கட்சிகள் என்பதால், "எதிரி மட்டும்தான் அயோக்கியன்; நானில்லை'’என்று ஒருவகைச் சாதுரியத்தோடு, இரண்டு கட்சிக ளிலுமே பேசுவார்கள். அந்தச் சாதுரியம் எனக்குக் கைவரவில்லை. அதற்கான தேவையுமில்லை. அத னுடைய விளைவு அடுத்தடுத்து வந்த காவல்துறை மானியங்களில் பேச நான் அழைக்கப்படவில்லை. அதை ஒரு பொருட்டாக நான் கருதுவதில்லை.
இதற்குப்பிறகும் செயலலிதா என் மீதிருந்த மதிப்பைக் கைவிடவில்லை. "உன்னைப் போன்றவர் களெல்லாம் சட்டமன்றத்திற்கு வரவேண்டும்' என்று அழைத்துப் பெருமைப்படுத்தி எம்.எல்.ஏ. ஆக்கியவர் அவர். அந்த அளவுக்கு அறியத் தெரிவதே ஒரு சிறப்புத்தானே.
சித்திரை மாதமே ஆண்டுப் பிறப்பு என்பதைச் சட்டமாக்கியதைப் பாராட்டும் விழாவுக்கு என்னையே விழாத் தலைவராகத் தேர்வு செய் தார் செயலலிதா. புலமைப்பித்தன் பாட்டரங்கத்திற்குத் தலைவரானார்.
அது அரசுவிழா என்பதால், அந்த விழாவைச் செய்தித் துறைக்கோ, தமிழ்வளர்ச்சித் துறைக்கோ செயலாளராய் இருந்த IAS அதிகாரி இராசாராம்தான் முன்னின்று நடத்தினார். அதற்காக மலர் ஒன்றும் வெளியிடப்பட்டது. அந்த மலரில் பேசியவர்களின் பேச்சுக்கள் அத்தனையுமே பதிவுசெய்து அதில் வெளியிடுவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நான் பேசும்போது பல்வேறு நிலைப்பாடு களில் செயலலிதாவைப் பாராட்டித்தான் பேசினேன்.
கலைஞர் தமிழாண்டின் தொடக்கமாகத் தைத் திங்களைக் கொண்டார். தமிழாண்டு என்பது திருவள்ளுவராண்டு. ஐநூறு புலவர்கள் மறைமலை அடிகள் தலைமையில் ஒன்றுகூடி தமிழர்களுக்கு ஓர் ஆண்டு முறைவேண்டும் என்று முடிவு செய்து, "திருவள்ளுவராண்டு' என அதைக்கொண்டு, அது துவங்கும் மாதம் தை எனவும் முடிவு செய்தனர்.
அதற்குக் காரணம் ஏற்கனவே தமிழ்நாட்டில் இன்னொரு தமிழாண்டு முறை வழக்கத்திலிருக் கிறது. அது அறுபது ஆண்டுகளை மட்டுமே கொண்டது. ஆகவே ஒரு மனிதனின் நீண்ட வாழ்நாளில் இரண்டுமுறை அந்தப் பிறந்தஆண்டு வரக்கூடும். சித்திரபானுவில் பிறந்தவன் என்றால் எந்தச் சித்திரபானு என்று கேள்வி எழும் உலகத்திலேயே நீண்ட வரிசை எண்ணைப் பெறாத கேவலமான, அறிவுக்குப் புறம்பான வடமொழி ஆண்டுமுறை இது. ஆனால் தமிழின் பேரால் வழங்கப்படுகிறது.
"இதுதான் தமிழாண்டு முறை' என ‘விளக்கம் பெறாத’ தமிழ்ச் சமூகத்தால் நம்பப் பட்டு வருகிறது. இந்தக் குளறுபடி யான அறுபது ஆண்டு முறைக்குத் தொடக்கமாதம் சித்திரை.
சித்திரையை ஆண்டின் தொடக்கமாக அறிவித்தவனும், அதை ஒட்டிச் சித்திரைத் திரு விழாவை உண்டாக்கியவனும், மதுரையை ஆண்ட"திருமலை நாயக்கன்' என்னும் கருத்தொன்று வரலாற்றுலகில் உண்டு.
எது எப்படி ஆனாலும் சித்திரைதான் ஆண்டுப் பிறப்பு என்னும் நம்பிக்கை மக்கள் மனத்தினில் ஊன்றிவிட்டது. ஆண்டுப் பிறப்பன்று தமிழ் மண் முழுவதும், அது கோலாகலமாகக் கொண்டாடப் பட்டு வருகிறது. இந்தக் கொண்டாட்டங்களெல் லாம், வள்ளுவராண்டு தொடங்குவதாகப் புலவர் களின் கருத்தின் பேரில், கலைஞர் அறிவித்த தை ஆண்டுப் பிறப்பில் இல்லை. தமிழர்களுக்குச் சித்தி ரையே ஆண்டுப் பிறப்பு. அது குளறுபடியான வடமொழி அறுபதாண்டுப் பிறப்பு எனினும் சித்தி ரையை மக்கள் விடமுடியவில்லை. இவ்வளவையும் நீண்டநேரம் எடுத்துரைத்துவிட்டு, நான் தலைமையுரையில் தொடர்ந்து குறிப்பிட்டேன்:
மக்களுக்குப் பழக்கப்பட்டு விட்ட சித்திரை யை ஆண்டுப் பிறப்பாக அறிவித்துச் செயலலிதா சட்டம் செய்ததைப் பாராட்டுகிறேன்.
ஆனால் தமிழனுடைய ஆண்டுமுறை திருவள்ளுவராண்டு என்பதுதான் முதன்மை யானதே தவிர, எந்த மாதம் என்பது முதன்மையான தில்லை. அது ஆடியாக இருக்கட்டும்; புரட்டாசி யாக இருக்கட்டும்; ஆனால் திருவள்ளுவராண்டு என்பதே முதன்மையானது. ஆகவே திருவள்ளுவ ராண்டுப் பிறப்பாகச் சித்திரையை அறிவித்துச் சட்டத் திருத்தம் செய்யுங்கள். சித்திரையை வள்ளுவராண்டுப் பிறப்பாகச் செயலலிதா அறி விப்பதால், யாருடைய குடியும் முழுகிப் போகாது.
கலைஞர் ஐநூறு புலவர்கள் சொன்னது என்று நான்கு நாட்களுக்குக் கட்டுரை எழுதுவார். ஏழு கோடி மக்களின் பழக்கம் அதைவிடப் பெரியது. புலவர்களின் "தை'’ஆண்டுப் பிறப்புக் கருத் தோட்டத்தில் "தை'’அடிபட்டது முதன்மையான தில்லை. திருவள்ளுவராண்டும் சேர்ந்து அடிபட்டு விட்டதில் நம்முடைய நோக்கம் கெட்டுவிட்டது.
ஆகவே மாண்புமிகு முதல்வர் அம்மா அவர் களே! மக்களுக்குப் பழக்கப்பட்ட சித்திரையை ஆண்டுப் பிறப்பாக மட்டும் அறிவித்திருக்கிறீர்கள்.
சித்திரையை ஆண்டுப் பிறப்பு அறிவிப்ப தோடு, திருவள்ளுவராண்டுதான் சித்திரையில் பிறக்கிறது என்றும் சட்டத்திருத்தம் செய்துவிடுங்கள்.
"நாட்காட்டிகளெல்லாம் திருவள்ளுவராண்டு என்றுதான் தமிழ் ஆண்டு முறையில் அச்சிட வேண்டும்' என அதிகாரத்தைப் பயன்படுத்துங்கள்.
அரசு சுற்றறிக்கைகளில் திருவள்ளுவராண் டைப் பெரிதாகப் போட்டு, ஆங்கில ஆண்டைப் ‘"புழுக்கையாகப்’ போடுங்கள்' மக்கள் புழக்கத்திற்கு வந்துவிடும். திருவள்ளுவராண்டு ஒவ்வொரு சித்திரையில் பிறக்கும்போதெல்லாம் "இதைச் செய்தது செயலலிதா' என்று உங்கள் பெயரும் சேர்ந்து நினைக்கப்படும். இல்லாவிடில் சித்திரையைத் திருத்தி அறிவித்ததின் பயன் இல்லாமல் போய்விடும். இவ்வாறு பேசினேன்.
நான் இவ்வாறு பேசியதை அவை அமைதியாகக் கேட்டது. செயலலிதா பன்னிரண்டு மணிக்குத்தான் வந்தார். ஆனால் இந்தப் பேச்சு ஏற்படுத்திய அதிர்வும், சட்டத்திருத்த யோசனை யும் அம்மாவுக்கு எரிச்சலை ஊட்டிவிட்டது.
""அவனை யார் இவ்வளவு பேசச்சொன்னது?'' என்று கேட்டார்கள் அம்மா.
""அவன் என்ன பேசுவான் என்று யாருக்கும் தெரியாதம்மா'' என்றார் IAS அதிகாரி இராசாராம்.
""அவனுடைய பேச்சை மலரில் போடவேண் டாம்'' என்றார்கள் அம்மா. திரும்பக் கூப்பிட்டு, ""அவனுடைய பேச்சு மட்டும் விடுபட்டிருந்தால் நன்றாக இருக்காது; ஆகவே அவனுடைய எழுத்து எதையாவது அந்த இடத்தில் போட்டுவிடுங்கள்; இது மட்டும் வேண்டாம்'' என்று சொல்லியிருக் கிறார்கள் அம்மா. இவ்வளவு நுட்பமாக யோசிக்கத் தெரிந்தால்தான் தலைவராக இருக்க முடியும்!
இராசாராம் இவற்றை என்னிடம் சொல்லி வேறு ஏதாவது கட்டுரை கேட்டார்; கொடுத்தேன். என்னுடைய பேச்சு மட்டும் வரவில்லை. மலரைப் பார்த்தால் தெரியும்.
அம்மாவின் நோக்கம் நந்தன ஆண்டுகளும், விகாரி ஆண்டுகளும் சித்திரையில் பிறப்பதுதான். திருவள்ளுவராண்டு பிறப்பது இல்லை. வடமொழி ஆண்டை விட்டொழிக்கும் எண்ணம் அவரிடம் இல்லை.
எனக்கும் செயலலிதாவுக்கும் இருந்த உறவின் அகற்சி அதிகப்பட்டுக்கொண்டே வந்தது.
கட்சி மாறக் கூடாது என்கிறார்கள். கட்சி என்பது தலைவர்களின் தனிச் சொத்துதானே. பழைய கால மன்னர்களின் போர்க் கொள்ளை களைப் (plundering) படையினரின் தகுதிக்கு ஏற்ப பங்கு வைப்பது போன்றதுதானே கட்சி முறை.
கருத்து மாறக்கூடாதா? கட்சி மாறக்கூடாதா?
புத்திசாலிகள் சொல்லட்டுமே!
(தொடரும்)