(68) அவரை நான் வணங்க விரும்புகிறேன்!

ம்முடைய நாடு அல்லோகலப் பட்டுக் கொண்டிருக்கிறது. பொருளாதாரச் சீரழிவு கடைசி இந்தியனையும் சுடத் தொடங்கி விட்டது.

உள்நாட்டு உற்பத்தி 8.2 விழுக்காட்டிலிருந்து 5 விழுக்காடாக விழுந்துவிட்டது. இந்த மந்த நிலையில் இருந்து நாடு வெளிவருவதற்கு வெகு காலம் பிடிக்கும் என்று வல்லுனர்கள் அஞ்சுகிறார்கள்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி வெறும் 3 விழுக்காடாகி விட்டது. கடந்த பதினைந்து ஆண்டுகளில் நாடு இவ்வளவு கீழ் நிலைக்குச் சரிந்ததில்லை.

Advertisment

கடந்த மோடியின் ஆட்சிக் காலத்தில் பணமதிப்பு நீக்கம் (Demonitisation) மற்றும் அலங்கோலமாகச் செயல்படுத்தப்படும் GST வரி குளறுபடிகள் என இவை இரண்டின் விளைவுகள் படிப்படியாக நாட்டை அரித்துக்கொண்டிருக்கின்றன. அந்தச் சிந்தனையற்ற, "எடுத்தேன்; கவிழ்த்தேன்' என்னும் போக்கால் நாடு சரிவை நோக்கி நடைபோடத் தொடங்கி விட்டது.

இப்போது ரிசர்வ் வங்கியி லிருந்து ஒரு லட்சத்தி எழுபத்தாறா யிரம் கோடி, அரசுக் கணக்குக்கு மாற்றப்பட்டிருக்கிறது. அரசின் பொருளாதாரக் குளறுபடிகளின் மொத்த அடையாளம் இது.

முன்பு ரிசர்வ் வங்கி ஆளுநராக ரகுராம் ராசன் இருந்தார். அரசின் தலையீட்டை விரும்பாதவர் அவர். அவரை வெளியேறும்படி செய்துவிட் டார்கள். அப்புறம் ஒன்றிரண்டு ஆளுநர்கள்; ரிசர்வ் வங்கிப் பணத்தை அரசு முடைப்படும் போதெல்லாம் கொடுக்க விரும் பாதவர்கள் அவர்கள். ஆகவே அவர்களும் வீட்டுக்கு அனுப்பப் பட்டார்கள். இப்போதிருக்கிற ஆளுநர், ‘வீட்டுக்குப் போய் என்ன செய்வது’ என்று கேட்ட தைக் கொடுத்துவிட்டார்.

Advertisment

போர் போன்ற எதிர் பாராத விளைவுகளை எதிர் கொள்ள வைக்கப்பட்டிருக்கும் நிதியைச் சாதாரணக் காலத்துச் சரிவுகளுக்குப் பயன்படுத்துவது நேர்சீரற்ற போக்காகும். ஆபத்தை எதிர்கொள்ளச் சேமிப்பில்லாமல் போகும்.

இதனுடைய விளைவு என்னவாக இருக்கும் என்பதை ஊகித்தறிய முடியவில்லை என்று அச்சம் தெரிவித்திருக்கிறார் இந்தியப் பொருளாதாரத்தை 1990-ல் தூக்கி நிறுத்திய மன்மோகன் சிங்!

பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் போது, இதனுடைய தீய விளைவு எத்தனை இலட்சம் கோடி அளவுக்குப் பொருளாதாரத்தில் சரிவினை ஏற்படுத்தும் என்று அவர் கண்டறிந்து சொன்னதை, நாடு பின் வருடங்களில் நேரடியாகப் பார்த்தது.

இப்போது முதலீடு குறையத் தொடங்கி விட்டது. உற்பத்தி 0.6 விழுக்காடாகச் சுருங்கி விட்டது.

நம்முடைய மைய அரசின் கடைசி நிதிநிலை அறிக்கை, பங்குச் சந்தையிலிருந்து எல்லா வெளிநாட்டு முதலீடுகளையும் ஏறத்தாழ 20,000 கோடி அளவுக்கு வெளியேற்றிவிட்டது. பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் கடந்த இரு மாதங்களில் மிகப் பெரிய முதலீடு இழப்புக்கு உள்ளாகி நொறுங்கிப்போயிருக்கிறார்கள்.

ஆட்டோ தொழிற்சாலைகள் மோடி விதித்த 28 விழுக்காடு GST வரி மற்றும் மக்களிடையே பணப் புழக்கமின்மை, இவை காரணமாகத் தங்க ளுடைய உற்பத்தி வேலை நேரத்தைக் குறைத்து, ஏறத்தாழ பத்து லட்சம் தொழிலாளர்களை வேலையைவிட்டே அனுப்பவேண்டிய சூழ் நிலைக்கு உள்ளாகி உள்ளன.

விவசாயிகளின் விளைபொருளுக்குச் சரியான விலை கிடைக்கவில்லை. அதனால் கிராமியப் பொருளாதாரத்திற்கும் நெருக்கடி.

பிரிட்டானியா ரொட்டி (Biscut Company) கம்பெனி, வெறும் ஐந்து ரூபாய் ரொட்டிப் பாக்கெட்டை வாங்கும் சக்தி கூட மக்களிடையே இல்லை என்றும், தங்கள் பங்குகளின் விலை சொல்லவொணா அளவுக்கு வீழ்ந்து விட்டதற்கு அதுதான் காரணம் என்றும், வாங்குவதற்கு மக்களால் முடியாதென்றால் அதை உற்பத்தி செய்து என்ன பயன் என்றும் கேட்டிருக்கிறது.

"அரசுதான் நாட்டுப் பொருளாதாரத்தின் உந்து சக்தி. அதற்கு நாட்டுப் பொருளாதாரத்தை நிருவகிக்கின்ற திறன் இல்லை என்றால், எல்லாம் ஒன்றோடொன்று மோதி நொறுங்கும்.

இந்தப் பாதிப்பு நீண்ட காலத்திற்கு இருக்கப் போகிறது என்றும், இதை All round Mismanagement of the Modi Government என்கிறார் மன்மோகன் சிங்!

பல ஆண்டுகளாக வறட்சி; அதனால் பஞ்சம்; வெள்ள அழிவு; அதனால் உற்பத்திப் பாதிப்பு என்னும் நிலை இருந்தால், அவை நம்மை மீறியவை; இயற்கை மனித ஆற்றலுக்குக் கட்டுப்பட்ட ஒன்றன்று என்று நாம் அமைதி அடையலாம்!

ff

ஆனால் இது நிருவாக ஆற்றல் குறைவால், நிருவகிக்கும் திறன் இன்மையால் ஏற்பட்ட சரிவு (Man-made blunders)..

இவ்வளவுக்கும் பின்னால், பொதுத் துறையில் உள்ள வங்கிகளின் இணைப்பு என்னும் பெயரால், ஒரு பெரிய வங்கியோடு திறம்படச் செயல்பட முடியாத, கொடுத்த கடனை வசூலிக்க முடியாமல் தள்ளாடும் சிறிய வங்கிகள் இரண்டை இணைத்து, மொத்தப் பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக் கையை பன்னிரண்டாகக் குறைக்கப்போகிறார்கள்.

பரோடா வங்கி நல்ல வங்கி; விசயா வங்கி, தேனா வங்கி ஆகியவை வெகு சுமாரானவை. இவற் றை இரண்டு மாதத்திற்கு முன்னால் இணைத்தார் கள். பின் இரண்டு வங்கிகளால், முதலில் உள்ள நல்ல பரோடா வங்கியின் பலம் கூடவில்லை. இவற்றின் சுமை நல்ல வங்கியின் செயல்திறனைக் கீழிழுத்து, அதன் விளைவாகப் பரோடா வங்கியின் ஒரு பங்கின் விலை ரூ.150-ல் இருந்து 92 ரூபாயாகக் குறைந்துவிட்டது. மூன்றில் ஒரு பங்கு வீழ்ச்சி.

ஏர் இந்தியா (Air India) படுத்துவிட்டது. பல ஆயிரம் கோடி இழப்பு. விறுவிறுப்பாகப் பெருத்த லாபத்தில் செயல்படும் பொதுத்துறை நிறுவனங் களைத் தனியார் நிறுவனங்களுக்குத் தாரைவார்க் கப் போகிறார்கள். மன விருப்பு, வெறுப்புக்கேற்பச் செயல்படும் அரசாக இந்த அரசு இருக்கிறது.

சீனா உற்பத்தி சார்ந்த (Manufacture oriented)பொருளாதாரத்தை முன்னெடுத்த நாடு. உற்பத்தி செய்து பொருட்களை ஏற்றுமதி செய்வதே அவர்களின் ஒரே குறி!

நாம் வேலை செய்ய ஆட்களை (Service-oriented) ஏற்றுமதி செய்யும் நாடு. நம்முடைய அன்னியச் செலாவணியின் பலமே வெளிநாட்டி லிருக்கும் நம்முடைய சேவைத்துறை அனுப்பி வைக்கும் பணம்தான். இந்தப் பலத்தோடு உற்பத்தியில், 'Make in India' என மோடி முழக்க மிட்டபடி உற்பத்தி பெருக்கமடைந்திருந்தால், ரிசர்வ் வங்கிப் பணத்தில் கை வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காதே. முன்பு ஒருமுறை சந்திரசேகர் தலைமையமைச்சராக இருந்த போது, வெளிநாடுகளில் கடன் கேட்டோம்! "மூச்சுமுட்ட வாங்கி விட்டாய்; இனி நம்பித்தர முடியாது; ஏதாவது நகை நட்டிருந்தால், கொண்டுவா; அதன் பேரில் தருகிறோம்' என்று உலக வங்கி சொல்லிவிட்ட காரணத்தால், இந்தியத் தங்கத்தைக் கப்பலில் ஏற்றிக் கொண்டு போய் அடைமானமாக வைத்துக் கடன் பெற்றோம். அந்த நிலைக்கு இப்போதும் நம்மைக் கொண்டு போய் விடுவார்களோ என்பது அச்சமாக இருக்கிறது!

மோடி ஆட்சிக்கு வந்த காலத்திலிருந்து பொருளாதாரக் குளறுபடிகள்! அவற்றின் விளைவிலிருந்து இன்னும் தப்ப முடியவில்லை. ரிசர்வ் வங்கிப் பணம் இதற்கெல்லாம் போதுமா?

இருக்கிற வெளிநாட்டுப் பணமெல்லாம் சொந்த நாட்டுக்குத் திரும்பிக்கொண்டிருக்கும் ஒரு காலகட்டத்தில், நம்முடைய முதலமைச்சர் எடப்பாடி மூலதனங்களைத் தேடி அயல்நாட்டுக் குப் போய்க்கொண்டிருக்கிறார்.

சகுனம் சரியில்லை எடப்பாடியாரே!

தமிழ்நாடு கார் தொழிற்சாலைகள் (Auto Industries) நிறைந்த மாநிலம்! நீங்கள் அண்மையில் சொன்னது போல் வேலைக்குப் படித்த இளைஞர்கள் இருக்கிறார்கள்; ஏற்றுமதி செய்யத் துறைமுகங்கள் இருக்கின்றன; நிலம் கிடைக்கிறது; பொதுவாக அமைதியான மாநிலம்!

இவற்றை எல்லாம் நம்பித்தான் அவர்களும் ஏற்கனவே வந்தார்கள்; இப்போதோ பொருளாதார மந்தம்; ஒழுங்குபடுத்தும் திறனற்ற மைய அரசு; உற்பத்தியானவை விற்பனையாகவில்லை என்னும் நிலை. உற்பத்தியைச் சுருக்குகிறார்கள்; ஆட் குறைப்பு நடைபெறுகிறது. இந்தச் சமயத்திலா எடப்பாடி மூலதனம் தேடி வெளிநாடு போவது.

பொறுப்புமிக்க எதிர்க்கட்சியின் புதிய கொள்கைப்பரப்புச் செயலாளர், நியமனமான மகிழ்ச்சியில், ""எடப்பாடியின் அயல்நாட்டுப் பயணத்தில் ‘"மர்மம்'’ இருக்கிறது; அதை விவரமாக அடுத்த பேட்டியில் சொல்கிறேன்'' என்று சொல்லியிருக்கிறார்.

"இப்படிப் பேசினால் இது செல்லுபடியாகும்' என்று கருதத்தக்க அளவுக்கு முதல்வர்களின் நிலை இறங்கி விட்டதே என்பது மாபெரும் சோகம்.

அது கிடக்கட்டும். ‘"மர்மம் அற்ற அரசியல்வாதி தமிழ்நாட்டில் யார்?'’ என்று கொள்கை பரப்புச் செயலாளர் சொல்லவில்லையே!

அவரை நான் வணங்க விரும்புகிறேன்.

(தொடரும்)