(61) தானாக உருவான தலைவர் கலைஞர்!

பெரியாரைப் போல் நீண்ட காலம் வாழ்ந்தவர் கலைஞர், ஆகவே பெரியாரைப் போல் நீண்ட பொது வாழ்க்கையையும் பெற்றவர்.

பதினான்கு வயதில் தொடங்கிய பொது வாழ்க்கை. இந்தி எதிர்ப்பு, வடபுல எதிர்ப்பு, சூத்திர நிலை எதிர்ப்பு, மூட நம்பிக்கை எதிர்ப்பு எனத் தொடங்கியது.

சுமத்தப்பட்ட இழி தகைமைகளுக்கு எதிரான கொந்தளிப்பு கலைஞரைப் போராளியாக்கியதில் வியப்பில்லை.

Advertisment

நிறுவனங்களில் கல்வி பயிலல் என்பது கலைஞர் வாழ்வில் குறிக்கத்தக்கதாக இல்லை. உயர்நிலைப் பள்ளியோடு அவருடைய படிப்பு இடையிலேயே முறிந்து விட்டாலும், வாழ் நாள் முழுதும் இடை யறாது படிப்பவராகவே இருந்தார். அதனால் கால வோட்டத்தோடு தொ டர்ந்து செல்கிறவராகவும், காலத் தெறிப்புகளுக்கு ஈடு கொடுக்கின்றவராகவும் இருந்தார்.

kk

Advertisment

கருணாநிதியாகப் பிறந்து, கலைஞர் கருணாநிதியாக வெளிப்பட்டு, கலைஞராகவே வரலாற்றில் நிலைபெற்று விட்டவர். திரைப்படங்களிலும், நாடகங்களிலும் வெளிப்பட்ட அவருடைய கலைத்திறன், அவருடைய ஆட்சிக் காலத்தில் குமரிக் கடலில் அமைக்கப்பட்ட வள்ளுவர் சிலை, பூம்புகாரில் அமைக்கப்பட்ட சிலப்பதிகாரக் கலைக்கூடம், சென்னை வள்ளுவர் கோட்டம் என இன்னும் எத்தனையோ வற்றிலும் வெளிப்பட்டது.

கால்டுவெல்லால் ஊன்றப்பட்டு, மனோன்மணீய சுந்தரம் பிள்ளை, மறைமலை அடிகள், தேவநேயப் பாவாணர் போன்ற அறிஞர்களால் வீறு கொள்ளுமாறு செய்யப்பட்ட தமிழ்மொழி உணர்வும், இன உணர்வும் அறிஞர் அண்ணாவால் மக்களியக்க மாக்கப்பட்டது.

தியாகராசச் செட்டியால் தென்னிந்திய நல உரிமைச் சங்கமாகத் தோற்றம் பெற்று, பார்ப்பனரல்லாதார் இயக்கமாக வளர்ச்சி பெற்ற ஓர் இயக்கம், பின்பு பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தையும் இணைத்துக் கொண்டு, கடவுள் மறுப்பு நிலைகளையும் மேற்கொண்டு, வளர்ச்சிப் படிக்கட்டுகளில் அந்த இயக்கம் ஏறத் தொடங்கி இருந்தாலும், பெரியாரும், அண்ணாவும் கால்டுவெல்லை உள்வாங்கிக் கொண்டு, அதைத் திராவிடர் கழகமாக மாற்றியபோதுதான் அந்த இயக்கம் முழுமையடைந்தது.

பார்ப்பனரல்லாதார் என்று எதிர்நிலைக் கூற்றை, "திராவிடர்' என வரலாற்று அடிப்படையில் அடையாளப் படுத்தியதில் உள்ள வீறு இணையற்றது.

பெரியார் தமிழ்மொழிப் பற்றை "தாய்ப்பால் பைத்தியம்' எனப் புறக்கணித்து விட்டார். அண்ணா அதில் வேறுபட்டு மொழிப்பற்றை வளர்ப்பதில் ஊக்கங்காட்டினார்.

பெரியார் திராவிடர் எனவும், தமிழர் எனவும் அடையாளப்படுத்திய கூட்டம், எந்த அடிப்படையில் அந்த அடையாளத்தைப் பெற்றது என்னும் கேள்விக்குப் பெரியாரின் விடை என்னவாக இருந்தது என்று தெரியவில்லை.

ஆனால் அண்ணா மொழி வழியாக அடையாளம் பெற்ற கூட்டமே இனமாக அறியப்படுகிறது என்பதை உடன்பட்ட காரணத்தால், மொழியை வளர்க்கவும் போற்றவுமான நிலையை மேற்கொண்டு, மக்களிடம் அந்த உணர்வை வளர்ப்பதில் அவர்தான் முதல் தலைவராகவும், தலையாய தலைவராகவும் திகழ்ந்தார்.

அவருடைய எழுத்தில் பழக்கம் காரணமாக வட சொற்கள் கொஞ்சம் காணப்பட்டாலும், அவர் தனித்தமிழைப் போற்றுகின்றவராகவே இருந்தார்.

அண்ணாவைப் போல் கலைஞரும் மொழி வேட்கையுடையவர்தான்.

கலைஞர் தமிழுக்கு ஆற்றிய பணிகளிலேயே தலையாய பணி தமிழ்த்தாய் வாழ்த்தை அவருடைய ஆட்சிக் காலத்தில் நாட்டுப் பண்ணுக்கு நிகராக உயர்த்தி நிறுத்தியதுதான்.

kkk

ஆளுநர்கள், தலைமையமைச்சர்கள் வரை அனைவரும் எழுந்து நின்று மதிப்பளிக்க வேண்டிய கட்டாயத்தை அதிகாரப்பூர்வமாக தமிழ் வாழ்த்துக்கு ஏற்படுத்தினார்.

சங்கராச்சாரி ஒருவர்தான் அதை "நீச பாஷை' என்று உள்ளுக்குள் கருதி, அதற்கு எழுந்து நிற்க மறுத்தார். அதற்கு நாடே கொந்தளித்தது.

குற்றவாளியாக நீதிமன்றக் கூண்டில் நிற்கலாம். ஆனால் தமிழுக் காகச் சற்று நேரம் நிற்கக் கூடாதா என்னும் சீற்றம் தமிழ் மக்களிடையே வெளிப்பட்டது. அப்போது கலைஞர் இல்லையா அல்லது உடல்நலமில்லாத நேரமா என்று நினைவில்லை. இல்லா விட்டால் கலைஞர் கடுமையாகச் சீறி இருப்பார்.

அதுபோல் அனைத்துச் சாதி யினரும் அருச்சகராகலாம் எனச் சட்ட விதிகளைத் திருத்தி, அவர்கள் பயிற்சி பெறுவதற்கு ஆகமப் பள்ளிகளை ஏற்படுத்தியது அவருடைய இன் னொரு ஆட்சிச் சாதனை.

பெரியார் நெஞ்சில் தைத்திருந்த முள்ளை எடுத்து விட்டதாக அப் போது கலைஞர் அறிவித்தார்.

பெரியார் ஒருமுறை வேடிக்கை யாகச் சொன்னார்: ""ஒருவேளை நம்முடைய ஆட்கள் கையில் திருநீறு வாங்கும் நிலை பார்ப்பனர்களுக்கு ஏற்பட்டால், அதை விட நாத்திகராகி விடுவது மேல் என்னும் முடிவுக்கு வந்து விடுவார்கள்.

கலைஞர் ஒரு போராளி என்ப தால், அவரிடம் தலைமைக்குணம் இயல்பாகப் படிந்திருந்தது.

அண்ணா காலத்திலேயே கலைஞரும் எம்.ஜி.ஆரும் மிகப் பெருஞ் செல்வாக்குப் பெற்றவர்களாக இருந்தார்கள். இருவரிடமும் தலைமைக் குணம் கூர்மை பெற்றிருந்தது. நல்ல குடும்பப் பின்னணி, பெரியாரை மறுத்துவிட்டு அண்ணா பின்னால் வந்த நிலை, ஆழ்ந்த படிப்பு, எதையும் ஊடுருவிப் பார்க்கும் நுண்ணறிவு, இசைத்தன்மையுடைய குரல், மொழியை இலாவகமாகக் கையாளுந்திறன் இவையெல்லாம் ஈ.வெ.கி.சம்பத்தை இரண்டாம் நிலைக்குத் தூக்கி வைத்திருந்தது.

ஆனாலும் கலைஞரும் எம்.ஜி.ஆரும் சம்பத் திற்குப் பெரும் அச்சுறுத்தலாகவே இருந்தனர். வேலூரில் வெடித்த அந்த மோதல் சம்பத்தும், கண்ணதாசனும் கட்சியை விட்டு வெளியேறும் நிலையை ஏற்படுத்தியது. அண்ணாவே கெஞ்சினார் என்பதை ஒரு காரணமாக்கிக் கொண்டு சம்பத் இங்கேயே தங்கி இருக்க வேண்டும்.

நிறைவேறாத கொள்கையை அண்ணா பொய்யாக மக்களிடம் சொன்னார் என்பது சம்பத் மற்றும் கண்ணதாசனின் குற்றச்சாட்டு.

திராவிட நாடு கொள்கை மற்ற தென்மாநிலங்களில் எடுபடவில்லை என்பதாலேயே அந்தக் கொள்கை ஒரு "பீத்தல்' கொள்கை என்பது அவர்களின் வாதம். திராவிட நாடு விடுதலை என்பது "தொடுவானத்தை நோக்கிச் செல்லும் முடிவுறாத பயணம்' என்பது மக்களுக்கும் தெரிந்திருந்தது.

ஆனால் திராவிட இயக்கத்தால் பெற வேண்டிய பயன்களை இழிவுநீக்கம், மொழி ஏற்றம், இன உணர்வு, தொன்மை வரலாற்றுப் புகழ்நிலை, ஆட்சிக் கட்டிலுக்கு அணித்தான நிலை எனப் பல உயர்வுகளைப் பெறக் காரணமாயிருந்த அண்ணாவின் தலைமையை, திராவிட நாடு விடுதலை ஒரு மாயை என்பதற்காக உதறி விட மக்கள் அணியமாய் இல்லை.

திராவிட நாடு கொள்கைக்கான தேவை பிற மாநிலங்களில் ஏற்படாததற்குக் காரணம் இரண்டு.

ஒன்று: பிற திராவிட மொழிகளில் முப்பது விழுக்காடாவது சமக்கிருதம் கலந்ததால்தான், அந்த மொழிகளின் பிறப்பே நேரிட்டது. ஆகவே அவர்கள் மாற்றாந்தாயைத் தாய் என மருவி நினைக்கும் போக்கிலிருந்து அவர்களை விடுவிப்பது எளிதாக இல்லை.

காந்தி உருவாக்கிய "மொழி வழித் தேசியம்' (ப்ண்ய்ஞ்ன்ண்ள்ற்ண்ஸ்ரீ ய்ஹற்ண்ர்ய்ஹப்ண்ள்ம்) என்னும் அரும் பெரும் சிந்தனை தனி நாடுகளின் விடுதலைச் சிந்தனையை மழுங்கடித்து விட்டது.

தனி ஆந்திர உருவாக்கம், தனிக் கருநாடக உருவாக்கம், தனிக் கேரள உருவாக்கம் ஏற்கனவே ஒட்டியிருந்த மதராசு ராசதானியிலிருந்து அவர்களை விலக்கி விட்டது.

காரணங்கள் எதுவாக இருந்தாலும் தி.மு.க. காங்கிரசுக்கு மாற்றுக் கட்சியாக (ஆப்ற்ங்ழ்ய்ஹற்ண்ஸ்ங் ல்ஹழ்ற்ஹ்) கருதப்படும் நிலை 1961-ல் உருவாகி விட்ட பின்பு, எட்டு மாதத்தில் அந்தக் கருவைக் கலைப்பது சம்பத்திற்கு எளிதாக இல்லை.

சம்பத் தமிழ்த் தேசியக் கட்சி வைத்தார். அண்ணாவே பேசியது திராவிடமாயினும் தமிழ்த் தேசியம்தானே அதன் கரு. ஆகவே சம்பத்தும் கண்ணதாசனும் எடுபடாமல் போய்விட்டனர்.

எஞ்சிய கட்சியில் ஆற்றல் வாய்ந்த கலைஞரின் தலைமை நிலைபெற முடிந்ததில் வியப்பில்லை.

நெடுஞ்செழியன் என்று ஒருவர் இருந்தார். நன்றாகப் பேசுவார். பேச்சு சுய சிந்தனையின் வெளிப்பாடாக இருக்க வேண்டும். முடிவெடுக்கும் ஆற்றலே தலைமையின் முதற்பெருந் தகுதி. நெடுஞ்செழியன் இப்போது இருந்தாலும் எடப்பாடிக்கும் இரண்டாவது இருப்பதை மகிழ்வுடன் ஏற்றிருப்பார்.

கலைஞர் ஊழலைக் கட்டுப் படுத்தத் தவறினார் என்னும் குற்றச்சாட்டுத் தவிர, அவர் பிற எல்லாவற்றிலும் செயல்திறன்மிக்க தலைவராகவும், ஆட்சியாளராகவும் விளங்கினார் என்பது ஐயத்திற்கிடமில்லாதது.

அதன் காரணமாகவே ஆட்சியைத் தவற விட்டு, பதினான்கு ஆண்டு வனவாசத்திற்குப் பின் னும், கட்சியைத் தன்னுடைய சொல்லாற்றலாலும், எழுத்தாற்றலாலும் உயிர்ப்புடன் வைத்திருந்து, அதன்பின் அரியணை ஏற்றினார்.

தினகரன், விசயகாந்த் போன்ற தலைவர்கள் எழுவது போல் தோன்றி, படுத்து விட்டதற்குக் காரணம் ஒரு தோல்வி, ஒரே ஒரு தோல்வி கூட அவர்களின் கட்சிக்கு மரண அடியாகி விடுகிறது.

இன்றைய தலைவர்கள் எல்லாருமே அப்படித்தான். ஆட்சி போய் விட்டால் எடப்பாடி என்ன ஆவார்?

தானாகவே உருவான திராவிட இயக்கத்தின் மூன்றாவது தனிப்பெருந்தலைவர் கலைஞர்.

(தொடரும்)