(56) இன்னும் பலரில் இவர்களும் இருப்பார்கள்!

மிழ்நாட்டின் பேரவைத் தலைவர் தனபால், எடப்பாடியை எதிர்த்து ஆளுநரிடம் மனு கொடுத்ததற்காகவே பதினெட்டுபேரை பதவி நீக்கம் செய்தார்.

கருநாடகத்தில் தாங்களாகவே (எடியூரப்பாவால் பசை தடவி ஈடுகட்டப்பட்ட பிறகு) முன்வந்து தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை இராசினாமா செய்திருக்கின்றனர்.

கருநாடகப் பேரவைத் தலைவர் இராசினாமாக்களை ஏற்க மறுக்கிறார். அவர்களுடைய இராசினாமா முறையான வடிவில் இல்லை என்று காரணம் சொல்லியிருக்கிறார். அந்தப் பதின்மூன்று பேரும் "நாங்களாகவே விருப்பப்படிதான் இராசினாமா செய்தோம்' என்று நேரில் போய் பேரவைத் தலைவரிடம் சொல்லியும் அவர் ஏற்கவில்லை.

Advertisment

தமிழ்நாட்டில் தங்களை "நீக்கியது தவறு' என்று பதினெட்டுபேர் உயர்நீதிமன்றத்தை நாடினார்கள்.

கருநாடகத்தில் தங்களை "நீக்காதது தவறு' என்று உச்சநீதிமன்றத்தை நாடியிருக்கிறார்கள்.

இரண்டு மாநிலங்களிலும் பேரவைத் தலைவர்கள் முறைகேடாக நடந்துகொண்டது தாங்கள் சார்ந்த ஆளுங்கட்சிகளைக் காப்பாற்றவே!

Advertisment

பேரவைத் தலைவர் நடுநிலையாக இருப்பார் என்று கருதித்தான் ஆளுங்கட்சித் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவரும் பேரவைத் தலைவர் கையைப் பிடித்து இருக்கைக்கு அழைத்துச் சென்று அமர வைக்கிறார்கள். இனிமேல் அவராகப் போய் உட்கார்ந்துகொள்ளட்டும் என்று விட்டுவிடுவதுதான் பேரவைத் தலைவர்களின் நடத்தைக்குப் பொருந்துவதாக இருக்கும்.

தேவை இருந்து, தேவைக்காக நெறிபுரண்டு நாட்டின் தலைமையமைச்சர் மோடி, சந்திரபாபு நாயுடுவின் நான்கு மாநிலங்களவை உறுப்பினர்களைச் சந்தைப் பொருளாக்கினார்.

எந்தத் தேவையும் இல்லாமலேயே எதிரி என்று ஏன் சிலர் இருக்கவேண்டும் என்னும் வக்கரித்த மனநிலையில் காங்கிரசு சட்டமன்ற உறுப்பினர்களைக் கூட்டமாக விலை பேசிவிட்டார் தெலுங்கானாவின் சந்திரசேகர ராவ்.

ஆளுகின்றவனுக்கும் எதிர்க்கின்றவனுக்கும் இடைவெளி கொஞ்சம்தான் என்னும் நிலையில்தான் பேரம் அதிகரிக்கிறது. ஒவ்வொருவனும் மந்திரிப் பதவியோ, இல்லாவிடில் பெருந்தொகையோ கேட்கிறான்.

இப்போது கருநாடகத்தில் பதின்மூன்று பேரின் இராசினாமாக்களை ஏற்க மறுப்பதன் காரணம் அவர்களோடு ஆளுங்கட்சி இன்னொரு பேரம் பேசுவதற்குத்தான்.

இன்று மந்திரி ஒருவரை, ஆளுங்கட்சியிலிருந்து எதிர்க்கட்சிக்குத் தாவி, புதிய மந்திரிசபையில் இடம்பெறும் கனவோடு சென்றவரை, இலஞ்ச வழக்கில் கைது செய்திருக்கிறார்கள்.

எடியூரப்பா ஊழல் வழக்கில் சிறை சென்றவர். இவரை விட்டால் பா.ச.க.வுக்கு வேறு ஆளில்லை. இவர் லிங்காயத்து வகுப்பைச் சேர்ந்தவர். அது பெரும்பான்மைச் சமூகம். அந்த சமூகத்திலும் மடத்திலும் உள்ளவர்களையெல்லாம் சரிக்கட்டி வைத்திருக்கிறார் எடியூரப்பா.

pala

லிங்காயத்து என்பது ஒரு மதம்; சாதியை ஒழிப்பதற்காகத் தோன்றிய மதம். கடைசியில் அது ஒரு சாதியாகிவிட்டது.

ஊழல்வாதி என்றாலும் அவர் லிங்காயத்து அல்லவா என்று நினைக்கிறார்கள் சாதிக்காரர்கள்.

முதல்வராக இருக்கும் குமாரசாமி லட்சணமும் இதுதான் என்பதால் சாதிச்சிந்தனை மாற மறுக்கிறது.

இவரும் ஊழல், அவரும் ஊழல் என்பதால் இருவரும் மாறி மாறி ஆட்சிக்கு வர முடிகிறது. இருவரிடமும் பெரிய கட்சி அமைப்பு இருக்கிறது. அதுதான் அதிகார அரசியலுக்கான அடிப்படை.

பெரிய கட்சியால் ஒரு செய்தியை அடிமட்டம் வரை கொண்டு செல்ல முடிகிறது. பெரிய கட்சியை விட்டு ஒருவன் வெளியேறத் தயங்குவான்; வெளி ஆள் எவனும் எளிதாக உள்ளே வர விரும்புவான். ஊழல் காரணமாக மட்டுமே இக்கட்சிகளை ஒழித்துவிட முடியாது. ஊழலுக்கு மாற்றும் மற்றொரு ஊழல்தானே. ஆகவே ஊழல் எப்படி ஒழியும்?

ஒரு பெரிய கட்சியில் மந்திரிகளாக இருந்து ஊழல் செய்து பெருங்கொள்ளை அடித்தவர்கள் மீண்டும் மந்திரிகளாக வந்து மீண்டும் கொள்ளை அடிப்பார்கள்; மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருப்பார்கள்; மீண்டும் அவர்களுக்கே வாக்களிப்பார்கள்.

ஆகவே மாநிலங்களில் இந்தக் கட்சிக்கு ஐந்தாண்டு; அந்தக் கட்சிக்கு ஐந்தாண்டு என்று முறை வைத்தாற்போல மாற்றி மாற்றிப் பட்டா போட்டுக் கொடுக்கப்பட்டுவிடுகிறது.

இவர்களை அகற்றுவதற்கு மூன்றாவது அணிகள் தோற்றுவிக்கப்பட்டு அவை அனைத்தும் தற்கொலையில்தான் முடிந்திருக்கின்றன.

மூன்றாவது அணி என்பது ஒற்றைப் படமாக இல்லை. ஒட்டுப் படமாக இருக்கிறது. யாருடைய கட்சியும் மாநிலம் தழுவிய கட்சியாக இல்லை. இங்கொன்றும் அங்கொன்றுமாக இருப்பவர்கள் எத்தனை நூறு பேர் சேர்ந்தாலும் அது எதற்கும் உதவாது.

தனியொரு ஆளாகக் கிளம்பி, அடுத்து வந்த தேர்தலில் ஆட்சியைப் பிடித்துவிட்டார் எம்.ஜி.ஆர். அதுபோல் என்.டி.ஆரும் காங்கிரசுக்கு மாற்றாக ஆட்சி அமைத்துவிட்டார்.

கிளம்பும்போதே கிளை பரப்பிக் கிளம்ப வேண்டும். அதனுடைய எடுப்பே மக்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும். அப்படி ஒரு பூதாகரத் தோற்றத்தைத் தொடக்கத்திலேயே ஏற்படுத்திக்கொண்டு தொடங்கினால், வலிய கட்சிகளின் இரண்டாவது வரிசை தானாக இடம் பெயர்ந்து வந்துவிடும்.

எந்தக் கட்சியிலும் முதல் வரிசையில் உள்ளவர்கள் இரண்டாவது வரிசையில் உள்ளவர்களை எழும்பவிடாமல் அழுத்திக்கொண்டிருப்பார்கள்.

ஒரு புதிய கவர்ச்சியான தலைமை தனக்கென்று ஒரு அடித்தளத்தோடு கிளம்பும்போது, ஆளுங்கட்சி, எதிர்க்கட்சியில் உள்ள இரண்டாவது வரிசைகள் அப்படியே இடம் பெயர்ந்து, புதிய கட்சியில் முதல் வரிசைக்கு வரும்.

இதனால் ஏற்கனவே இருந்த இரண்டு கட்சிகளில் ஒன்று வலி இழந்துவிடும். எம்.ஜி.ஆரின் எழுச்சி தி.மு.க.வுக்கு மாற்றாக இருந்த காங்கிரசை ஒன்றுமில்லாமல் செய்துவிட்டது. பட்டமாக இருந்த காங்கிரசு பட்டத்திற்கு வாலாக இருப்பதோடு நிறைவடைந்துவிட்டது.

"துண்டுப் பீடி குடித்தவனுக்கு இரண்டு மாடி வீடு எப்படி வந்தது?' என்று எம்.ஜி.ஆர். கேட்ட கேள்வி ஆளுங்கட்சியின் அடித்தளத்தையே தகர்த்துவிட்டது. பத்தாண்டு தொடர்ந்து நாடாள எம்.ஜி.ஆருக்கு அந்தக் கேள்வி வழி வகுத்தது.

ஊழலை எதிர்த்துத் தோன்றிய அ.தி.மு.க., ஊழலில் ஊறித் திளைத்தபோதும், அதை அகற்ற முடியவில்லை.

செயலலிதா சுவீகார மகனுக்கு நூறு கோடி செலவழித்து செய்த திருமணம் அவரை அந்த முறை மட்டும் ஆட்சியை விட்டு இறக்கியதே தவிர, அவரையோ, அ.தி.மு.க.வையோ அரசியலை விட்டே அகற்ற முடியவில்லை. ஏனென்றால் அது தி.மு.க.வுக்கு மாற்றாக நிலைபெற்று விட்ட ஓர் வலிய அமைப்பு. இவற்றை அகற்றவே முடியாதா?

இவை இரண்டுக்கும் நிகரான ஓர் மாற்று கிளம்பும்போதே வீறுகொண்டு கிளம்பி, வேற்றுக் கட்சிகளின் இரண்டாவது வரிசையினர்க்கு குறிவைத்து, புதிய இளைஞர்களை ஈர்த்து ஒரு புதிய முழக்கத்தை முன்வைத்து, புதிய கருத்துகளை எடுத்தியம்பி, அது நிலைபெறப் போகிறது என்னும் நம்பிக்கையை ஏற்படுத்த முடிந்தால்தான், அது எடுத்த எடுப்பிலேயே வெல்ல முடியும்.

கடந்த தேர்தலில் காங்கிரசு ஏன் வீழ்ந்துபட்டது?

நாடு முழுவதும் காங்கிரசுக்கு அமைப்பு இல்லை என்பது ஒன்று; இந்தியக் கூட்டணித் தலைவர்கள் ஒட்டுமொத்தமாக ஏற்கும் தலைமையாக காங்கிரசின் தலைமை இல்லை. தான் பா.ச.க.வுக்கு மாற்று என்னும் நம்பிக்கையை காங்கிரசால் ஏற்படுத்த முடியவில்லை. எல்லா பாசிசப் போக்குகளோடும் மீண்டும் பா.ச.க. அரியணை ஏறிவிட்டது.

மேற்குவங்கத்தில் தொடர்ந்து இருபத்தைந்து ஆண்டுகளாக ஆண்ட பொதுவுடைமைக்கு மாற்றாக மம்தா எழுந்தார். அது புதிய எழுச்சிதானே!

டில்லியில் காங்கிரசுக்கும், பா.ச.க.வுக்கும் எதிராக கெசரிவால் எழுந்து ஆட்சியைப் பிடித்தார். அது புதிய எழுச்சிதானே!

உ.பி.யில் மாயாவதியும், முலாயம்சிங்கும் ஊழல் மன்னர்கள். இருப்பினும் ஒருவருக்கொருவர் மாற்றாக மாறி மாறி ஆட்சிக்கு வந்தனர். இப்போது இந்த இரண்டும் நொறுங்கிப்போய்விட்டன -பா.ச.க.வின் நுழைவால்.

உ.பி.யில் முப்பது, நாற்பது ஆண்டுகளாக இரண்டு ஊழலையும் மாற்றி மாற்றி ஆட்சியில் அமர்த்தியவர்கள் எப்படி இரண்டையும் ஒருசேர ஒழித்து சாதி அரசியலுக்கும் முற்றுப்புள்ளி வைத்தார்கள்? பிடித்துக்கொள்ள முறியாத ஒரு கொம்பு கிடைத்துவிட்டதே காரணம். அது நல்லதா கெட்டதா என்பது அடுத்த தேர்தலில்.

கருநாடகா பேரவைத் தலைவரும் தமிழ்நாடு பேரவைத் தலைவரும் ஒரே மாதிரி எந்த நியாயமும் இல்லாமல், சார்புணர்ச்சியுடனும் அற்பமாகவும் செயல்படுவதற்குக் காரணம், அவர்கள் தூக்கிப் பிடிக்கிற ஆட்சிகள் அத்தகையவை. பதவிதான் இவர்களின் ஒரே அடையாளம்.

காரில் பறக்கும் தேசியக்கொடி, இவர்களுக்கு முன்னும் பின்னுமாக ஓடுகின்ற இருபத்தெட்டுக் கார்கள், இவை எல்லாம் இவர்களுடைய மனைவிமார்களைத் திகைக்கச் செய்கிறது. இந்தத் திகைப்பு நீடிக்க வேண்டும் என்றால் ஆட்சியும் நீடிக்க வேண்டும். அதற்கு எல்லா தில்லுமுல்லுகளையும் செய்வார்கள்.

வரலாற்றில் சில ஆட்சிகளைத்தான் வரிந்து வரிந்து பக்கம் பக்கமாக எழுதுவார்கள். தன்னல மறுப்பு, ஆட்சித் திறன், தொலைநோக்கு, அடிமட்ட மக்களுக்குத் திட்டமிடும் பரிவு, அறிவுக்கூர்மை இவற்றையுடைய ஆட்சியாளர்களே அவர்களின் பேனாவுக்குத் தீனி.

கடைசியாக "இன்னும் பலர் ஆண்டார்கள்' என்று முடிப்பார்கள்.

அந்த "இன்னும் பலரில் இவர்களும்' இருப்பார்கள்.

இதற்குத்தான் இந்தப் பாடு!

(தொடரும்)