(54) பட்நாயக்கைப் பார்த்துமா புத்தி வரவில்லை?
விடிந்தால் எழுந்தால் நாடெங்கிலும் சட்டமன்ற உறுப்பினர்களும் மக்களவை உறுப்பினர்களும் கட்சி மாறுவதும், ஆட்சிகள் கவிழுமா என்று செய்தித்தாள்கள் வினாக்குறி இடுவதும்தான் செய்தியாக இருக்கிறது.
பழைய காலங்களில் கிரேக்கத்திலும், அப்ரகாம் லிங்கன் காலம் வரை அமெரிக்காவிலும் கூவிக்கூவி நடந்த அடிமைகள் வர்த்தகத்தைவிட, நவீன காலத்தில் நடக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் வர்த்தகம் கேவலமானது; அருவருக்கத்தக்கது; குடியாட்சி முறையைக் குழிதோண்டிப் புதைப்பது. இது சட்டமன்ற உறுப்பினர்களின் குறை மட்டுமில்லை; தலைவர்களின் குறைபாடுகளும் கூட.
நேர்மை, ஒழுங்கு, அறிவு, பொதுநல மனப்பாங்கு என இவற்றில் எதுவும் பொதுவாழ்க்கைக்குத் தேவையில்லை என்று கருதுகின்ற தலைவர்கள் இன்று கட்சிகளை நடத்துகின்றனர்.
ஆட்டுச் சந்தை, மாட்டுச் சந்தை வரிசையில் சட்டமன்ற உறுப்பினர்களின் சந்தையும் சேர்ந்துவிட்டது.
எடப்பாடி தன்னுடைய ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ள பல குயுக்திகளைக் கையாண்டார். அதில் ஒன்று தனக்கு எதிராகத் திரண்ட பதினெட்டு சட்டமன்ற உறுப்பினர்களின் பதவிகளைப் பிடுங்கிக்கொண்டு, தன் ஆட்சியை நீட்டித்துக்கொண்டது.
தமிழ்நாட்டுக்கு நேர்மாறாக கருநாடகாவில் நடப்பில் உள்ள ஆட்சியைக் கவிழ்க்க எடியூரப்பா, அக்கட்சியினரை இராசினாமா செய்ய வைத்திருக்கிறார். எண்ணிக்கையில் குறைந்தவர்கள் இன்னொரு கட்சிக்குத் தாவினால் கட்சித் தாவல் தடைச்சட்டம் பாயும் என்பதால், மாற்றுக் கட்சியைச் சேர்ந்த எடியூரப்பா சொல்கிறார் என்பதற்காக, ஆளுந்தரப்பில் பதின்மூன்று சட்டமன்ற உறுப்பினர்களும் கருநாடகாவில் இராசினாமா செய்துவிடுவார்களா?
எஞ்சிய பதவிக்காலம் முழுவதற்கும் சம்பளம் வரும்; படிவரும்; தான் செய்து கொடுக்கும் காரியங்களுக்குப் "பின்புறமாக' பணம் வரும். பதவியைக் காப்பாற்றிக் கொள்ளத் தவிக்கும் முதல்வர் குமாரசாமி, இவர்களுக்குப் பலவகையிலும் "படி' அளந்துகொண்டே இருப்பார்.
மூட்டைகளில் கட்டுமளவுக்கு வருகின்ற வரும்படிகளை எல்லாம் இந்தப் பதின்மூன்று பேரும் பதவிகளை இராசினாமா செய்வதன் மூலம் இழப்பதை, எடியூரப்பா இன்னும் பல மடங்காகக் கூட்டித் தரத்தயாராக இல்லை என்றால், இவர்கள் எப்படி இராசினாமா செய்வார்கள்? எடியூரப்பாவுக்கு இவ்வளவு பணம் ஏது? ஆட்சிக்கு வந்த பிறகு கொள்ளையடித்துக் கொள்வார். ஊழலுக்காகச் சிறை சென்றவர்தானே!
கௌடா கட்சி குமாரசாமியிடமிருந்து மூன்றுபேரும், காங்கிரசிலிருந்து பத்துபேரும் சட்ட மன்ற உறுப்பினர் பதவிகளையே இராசினாமா செய்து வெளியேறுமாறு பா.ச.க. எடியூரப்பா செய்ததின் மூலம், ஏற்கனவே நூற்றிஆறு பேரை பெற்றிருக்கிற எடியூரப்பாவுக்கு ஆட்சி அமைக்கின்ற பெரும்பான்மை வந்துவிடுகிறது.
சுயேச்சைகளாக வெற்றிபெற்று, ஆதரவு தருவதற்கான விலையாக மந்திரி பதவிகளைக் குமாரசாமியிடம் பெற்றவர்கள், இப்போது அந்த ஆட்சி கவிழப் போகிறது என்பதால், மந்திரி பதவிகளை இராசினாமா செய்துவிட்டு இங்கே வந்துவிட்டார்கள். இனி எடியூரப்பாவிடம் மந்திரி ஆவார்கள்.
இவ்வளவு அசிங்கங்களும் மோடியுடைய ஆசிர்வாதத்துடன் அரங்கேறுகின்றன.
மாநிலங்களவைக்குப் பா.ச.க.விற்கு ஆள் போதவில்லை என்பதற்காக, ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவிடமிருந்த உறுப்பினர்களில் 4 பேரை விலைக்கு வாங்கியவர்தானே மோடி.
தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் போதிய பெரும்பான்மையுடன் வலுவாக ஆட்சியில் இருக்கிறார். அங்கே எதிர்க்கட்சி காங்கிரசு. காங்கிரசுதான் தெலுங்கானாவை பிரித்துக் கொடுக்கப் பெருந்தன்மையோடு இசைந்த கட்சி. அதில் பதினெட்டு சட்டமன்ற உறுப்பினர்கள்தாம் இருக்கிறார்கள். வேறு எந்தக் கட்சியும் சட்டமன்றத்தில் இல்லை. இந்த நிலையில் காங்கிரசிலிருந்து பன்னிரண்டு பேரை விலைக்கு வாங்கிவிட்டார் சந்திரசேகர ராவ். எதிர்ப்பே இல்லாமல் ஆள நினைக்கிறார். எதிர்ப்பே இல்லாத ஆட்சி வளர்ச்சியற்றுப் போகும்.
சீனாவை எதிர்ப்பே இல்லாமல் ஆண்டார் மாவோ. பஞ்சத்தில் மூன்றுகோடி பேர் செத்ததே அவருக்கு ஒரு பொருட்டாக இல்லை. எதிரிகளின் அச்சுறுத்தல் இல்லாத காரணத்தால், தன்னுடைய ஆட்சியில் நடந்த கொடூரமான நடவடிக்கையை ஒழுங்குபடுத்திக்கொண்டே ஆகவேண்டும் என்னும் கட்டாயம் மாவோவுக்கு ஏற்படவில்லை.
எதிர்ப்பினால் அழிவு வருவதில்லை; அது ஒழுங்குபடுத்திக்கொள்ளும் கட்டாயத்தை ஏற்படுத்தி, நம்மைத் தொடர்ந்து நிலைபெறச் செய்கிறது. எதிர்ப்பே இல்லாத நிலை அழிவில் கொண்டுபோய் செலுத்துகிறது. இன்றைய அசுர வளர்ச்சி சீனா, மாவோவின் ஆட்சி வளர்ச்சிக்குத் தடை என்றுதானே கருதுகிறது.
பாராளுமன்றத் தேர்தலில் தேவகௌடா நிற்கிறார்; அவருடைய இரண்டு பேரன்களும் நிற்கிறார்கள். ஒரு மகன் குமாரசாமி முதல்வர்; இன்னொரு மகன் ரேவண்ணா அமைச்சர். மொத்தக் குடும்பமும் பல்லக்கில் ஏறவேண்டும்; மற்றவர்களெல்லாம் பல்லக்குத் தூக்கவேண்டும். இத்தகையோர் சரியும்போது...
ஒரிசாவின் முதல்வர் பட்நாயக்கைப் பாருங்கள். அவருடைய தகப்பனார் பிஜு பட்நாயக்கும் முதல்வராய் இருந்தவர்தான்.
கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாகப் பட்நாயக் தொடர்ந்து ஆள்கிறார். காற்றுக்கூட ஊடுருவ முடியவில்லை; அப்புறமல்லவா எதிர்க்கட்சிகள் ஊடுருவ வேண்டும்.
காங்கிரசு பெயரள வில் ஓர் எதிர்க்கட்சி. இப்போது அதை வீழ்த்தி விட்டு, பா.ச.க. பெய ரளவில் எதிர்க்கட்சி ஆகியிருக்கிறது.
யாருமே நெருங்க முடியாமல் தொடர்ந்து பட்நாயக்கால் எப்படி ஆள முடிகிறது?
தேவையில்லாமல் தன்னைச் சுற்றி ஒரு சால்ரா கூட்டத்தைத் திரியவிடுவதில்லை. தலைவனுடைய படத்தை வைத்துக்கொண்டால்தான் தேர்தலில் நிற்க வாய்ப்புக் கிடைக்கும் என்னும் நிலை ஒரிசாவில் இல்லை.
எல்லா சட்டமன்ற உறுப்பினர்களையும் கொள்ளையடிக்க விட் டால்தான் நாம் முதல்வ ராய் இருக்க முடியும் என்னும் நிகழ்கால அரசியல் நிலை ஒரிசாவில் இல்லை.
தேர்தலில் நிற்க விருப் பம் தெரிவித்து அதற்கொரு மனு போட்டு, அந்த மனுவோடு பத்தாயிரம், இருபதாயிரம் என்று வசூல் செய்கிற பழக்கம் பட்நாயக் கிடம் இல்லை.
"எவ்வளவு பணம் தேர்தலில் செல வழிப்பாய்?' என்று பட்நாயக் யாரிடமும் கேட்டதே இல்லை.
சட்டமன்ற உறுப்பினர்கள் ஆடு, மாடுகளைப் போல் விலைபோவதற்குத் தலைவர்கள்தானே காரணம்.
எடப்பாடியின் வெற்றிக்குக் காரணம் எதிர்க்கட்சிகளை விட அவரால் கூடுதலாக கொடுக்க முடிவதுதான். எப்படியோ கருநாடகத்து குமாரசாமியைவிட எடப்பாடியால் நன்றாக இழுத்துப் பிடிக்க முடிகிறது. முடிந்ததுவரை மிச்சம்தானே!
எல்லாரும் மோசமானவர்கள் என்று ஆகிவிட்டால், மோசமானவர்களுக்கிடையே வீக்கதூக்கம் பார்ப்பது உலக வழக்கமாகிவிட்டது.
எப்படியிருந்தாலும் இரண்டு, மூன்று ஆண்டுகள் ஆண்டுவிட்டு, முடிந்த அளவு சேகரித்துக்கொண்டு முடிந்து போகிற ஆட்சியாளர்கள் இவர்கள்.
ஆளுங்கட்சித் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவரும் ஒருவரை ஒருவர் பார்த்து, ஒருவர் செய்வதையே இன்னொருவர் செய்வாரே ஒழிய, இருவரும் பட்நாயக் போன்றவர்களைப் பார்ப்பதில்லை.
சட்டமன்ற உறுப்பினராக ஒருவனை நிறுத்துவதற்கு பட்நாயக் வைத்திருக்கும் அளவுகோல் அவனுடைய நேர்மை. ஏனென்றால் தலைவனே நேர்மை. பட்நாயக் கட்சிக்காரனை மோடி விலைக்கு வாங்கிப் பார்க்கட்டுமே!
ஒருவனுடைய நேர்மை, செயல்பாடு காரணமாக ஒரு சட்டமன்ற உறுப்பினர் மக்க ளிடம் பெருஞ்செல்வாக்குப் பெற்றிருந்தால் ஒழிய, பட் நாயக் அவனைத் திரும்பவும் தேர்தலில் நிறுத்துவதில்லை. ஆகவே தகுதி குறைவானவன் ஒரு தடவையோடு வீட்டுக்குப் போய்விடுகிறான்.
மந்திரிகளின் செயல்பாடுகள் மட்டுமே அவர்களை அந்தப் பதவியில் வைத்திருக்கும்.
அங்கேயும் பல சமூகங்களுக்கும் பழங் குடியினருக்கும் வாய்ப்பளிக்கும் பழக்கம் இருக்கிறது. எந்தச் சமூகத்தில் நேர்மையானவனும் அறிவுடையவனுமில்லை? நம்முடைய தலைவர்கள் எந்தச் சந்தைக்குப் போனாலும் "சூத்தைக் கத்திரிக்காய்களைத்தான்' பொறுக்கி வேறு எடுப்பார்கள். அதனால்தான் நம்மவர்கள் ஆட்சியில் அமர்ந்த நாளிலிருந்தே நாற்காலி ஆடத் தொடங்கிவிடுகிறது.
பட்நாயக்கைச் சுற்றி எவனும் இருப்ப தில்லை. காக்காய்கள் பாடிக்கொண்டே இருப்பதை அவர் விரும்புவதில்லை. வரலாறு பாடவேண்டும் என்று விரும்புகிறவர் அவர்.
கிரைண்டர், மிக்சி, பென்சில் குச்சி, சிலேட்டுக் குச்சியெல்லாம் பட்நாயக் இலவசமாகக் கொடுப்பதில்லை.
விவசாயத்திற்கு விதை, உரம், மண்ணை பக்குவப் படுத்த ஆகும் செலவு, விவ சாயத்திற்கான கூலி போன்ற இன்னபிற செலவுகளுக்காக ஒரு பருவத்திற்கு விவசாயிக்கு பத்தாயிரம் ரூபாய் திருப்பித் தரவேண்டாத பணமாகக் கொடுக்கிறார்; கடனாக அல்ல.
வெளிச்சந்தையில் விவசாயி போட்டிபோடும் வல்லமையை உருவாக்குகிறார் பட்நாயக். தெலுங்கானாவில் மட்டும்தான் இதே முறை பின்பற்றப்படுகிறது. மோடி ஆறாயிரம் ரூபாய் விவசாயிகளுக்கு அறிவித்தது இவர்களைப் பின்பற்றித்தான்.
ஆகவே பட்நாயக்கினுடைய வேட் பாளர்களுக்கு தமிழ்நாட்டைப் போல், தங்கள் தங்கள் தொகுதி வாக்காளர்களுக்கு "மூன்று செண்டு இடம் தருகிறேன்' என்று வாக்குக் கேட்க வேண்டிய தேவை ஏற்படுவதில்லை. இது யாருக்காவது உறைக்கிறதா?
ஏன் கருநாடகத்து குமாரசாமியும், தமிழ்நாட்டு எடப்பாடியும் தடுமாறுகிறார்கள்! நீடித்து ஆளலாமே!
பட்நாயக்கைப் பார்த்துமா புத்தி வரவில்லை!
(தொடரும்)