(53) இந்தியா விடுதலை அடையவில்லையே!
தேசவிரோதச் சட்டத்தில் வைகோ ஓராண்டு தண்டிக்கப்பட்டிருக்கிறார். சிறப்பு நீதிமன்றம் ஓராண்டுத் தண்டனையோடு பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்திருக்கிறது.
பிரபாகரன் இறந்து இரண்டு திங்கள் கழித்து, நெடுமாறன் தலைமை வகித்து நடந்த "நான் குற்றம்சாட்டுகிறேன்' என்னும் வைகோ எழுதிய நூல் வெளியீட்டு விழாவில், வைகோ தீயை உமிழ்ந்திருக்கிறார்.
ஈழத் தமிழினமே தீக்கிரையாக்கப்பட்டதை அடுத்து நடந்த கூட்டத்தில், தீக்கனலான வைகோ தீயை உமிழாமல் பன்னீரையா உமிழ்வார்?
ஈழத்திற்கு ஆதரவாகக் கலைஞர், எம்.ஜி.ஆர். என பல தலைவர்கள் முன்னணியில் இருந்தாலும், ஈழ ஆதரவு நிலைக்காகப் பெருந்துன்பப் பட்டவர்கள் நெடுமாறனும் வைகோவும்தான்.
செயலலிதா இவர்களை ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக இவர்களின் ஈழ விடுதலை நிலைப்பாட்டுக்காக, இதுபோல் ஒரு சட்டமல்லாத சட்டத்தின் கீழ் (Lawless Law) கொடுஞ்சிறையில் அடைத்தார். சிறை உண்மையான உணர்வாளர்களை என்ன செய்யும்? இன்னும் வேகங்கொள்ளச் செய்யும். அதுதான் நடந்தது.
ஆனால் இதுபோன்ற ஒரு தேசவிரோத வழக்கை கலைஞர் தன்னுடைய ஆட்சிக் காலத்தில் போட்டிருக்கிறார் என்பது நினைவூட்டப்படும்போது வலிக்கிறது. அவர் அப்போது காங்கிரசோடு சேர்ந்து மைய அரசை ஆண்ட காலம்.
தேசியத்திற்கும் இன உணர்வுக்கும் உள்ள முரண்கள் சில காலகட்டங்களில் கூர்மைப்படும். அப்படி முரண் கூர்மைப்பட்ட காலத்தில், தேசியத்தோடு கைகோத்து நின்றதால் கலைஞருக்கு ஏற்பட்ட வழுக்கல் இது.
ஆனால் தமிழின உணர்வை வைகோவுக்கும் ஒரு காலத்தில் ஊட்டிய கலைஞர், ஒரு கட்டத்தில் தன்னுடைய பெருமை குலைவதை உணர்ந்து காங்கிரசுக் கூட்டை அறுத்துக்கொள்கிறார்.
'To error is human' என்பார்கள். பிழை செய்யாதவர்கள் யார்? அதை உணரும் அறிவுடையவனே தலைவன்.
கலைஞர் போட்ட வழக்கு என்று அழுத்த மாகக் குறிப்பிடப்பட்டதால், இவையெல்லாம் நம் நெஞ்சில் நிழலாடுகின்றன. அது இருக்கட்டும்.
"வெறுப்புச் செய்தி (Hate message) உமிழப்பட்டது வைகோவால்' என்று சிறப்பு நீதிமன்றம் தண்டனைச் செய்தியில் கூறியிருக்கிறது.
அப்போதிருந்த அலைபாயும் மனநிலையில், (Volatile mood of those days) இந்தப் பேச்சு மாநில அரசுக்கும் மைய அரசுக்கும் பேரபாயத்தை ஏற்படுத்தக்கூடியதாய் இருந்தது என்று சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பு கூறுகிறது.
வெள்ளைக்காரன் காலத்திலிருந்து அரசின் வேலை, வேண்டாதவன் மீது பொய் வழக்குப் போடுவது. அரசு வழக்குரைஞர்களின் வேலை "அரசுக்கு மாரடிப்பதுதான்'.
நீதிமன்றங்களின் வேலை "எது அறம்' என்று ஆராய்வதன்று; சட்டம் என்ன சொல்கிறதோ அதை நடைமுறைப்படுத்துவது. அறம் வேறு; சட்டம் வேறு.
ஆகவே சட்டப் புத்தகத்தில் இதுபோன்ற நியாயவிரோதச் சட்டங்கள் (Sedition Act) இருக்கும் வரை உணர்வுள்ளவனெல்லாம் "தேசவிரோதி' ஆவான். உணர்வற்றவன் எல்லாம் தேசபக்தன் ஆகிவிடுவான்.
"அப்போதிருந்த மனநிலையில் மாநில அரசுக்கும் மைய அரசுக்கும் பேரபாயத்தை விளைவிக்கக் கூடியதாய் வைகோ பேச்சு இருந்ததாக' சிறப்பு நீதிமன்றம் தீர்ப்புரைத் திருக்கிறதே, அந்தப் பேச்சு நிகழ்த்தப்பட்டு ஒன்பதாண்டுகள் ஆகிவிட்டனவே. அந்தப் பேச்சை அடுத்து, உடனடியான காலத்திலோ அல்லது தீர்ப்புக்கு முதல்நாள் வரையிலோ இரண்டு அரசுகளுக்கும் பேரபாயத்தை விளைவிக்கக்கூடிய கலகங்கள் எந்தெந்த நாட்களில் நடந்தன என்று சிறப்புநீதிமன்றம் தீர்ப்பில் சுட்டிக்காட்டி தன்னுடைய தீர்ப்புக்கு வலுச்சேர்த்திருக்கிறதா?
வழக்குப் போடப்பட்ட சிலநாட்களிலேயே தீர்ப்புரைக்கப்பட்டிருந்தால் அபாயம் ஏற்படக் கூடிய சூழல் இருக்கிறது என்று உய்த்துணர்ந்து தீர்ப்பளித்திருப்பதாகக் கூறியிருக்கலாம்.
அந்தப் பேச்சு நிகழ்ந்து பத்தாண்டு காலம் வரை அந்தப் பேச்சு எந்தச் சிறு அசைவையும் இரு அரசுகளுக்கும் ஏற்படுத்தவில்லை என்பது தெள்ளத்தெளிவாகத் தெரிந்திருக்கும்போது, இந்தத் தீர்ப்பு புரிந்துகொள்ளத்தக்கதாக இல்லை.
மேலும் அந்தத் தீர்ப்பு கூறுகிறது: ""விடுதலைப்புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளுக்கு மைய அரசு ஆதரவு தந்ததாக வைகோவின் பேச்சு அமைந்திருந்தது, மைய அரசுக்கு எதிராக வெறுப்பையும் அவமதிப்பையும் உண்டாக்கும் நோக்கமுடையது'' (Intention to cause hatred and contempt towards Government) என்று சிறப்பு நீதிமன்றம் குறிப்பிட்டிருக்கிறது.
விடுதலைப்புலிகளின் இயக்கம் ஈழத்தமிழரின் விடுதலைக்கான இயக்கம். ஈழத்தமிழரின் அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட்டன. ஈழமக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்; ஈழப்பெண்கள் கற்பழிக்கப்பட்டார்கள். ஈழமக்கள் நாடிலிகளாக (Stateless) உலகம் முழுவதிலும் -குறிப்பாகத் தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்தார்கள்.
"எங்களுடைய காலைக் கழுவிக்கொண்டு வாழ்; இல்லாவிட்டால் சா' என்னும் பேரினவாதம் (Majoritarian attitude) சிங்கள அரசின் போக்காகும்.
இந்தப் போக்குக்கு எதிராக ஈழ இளைஞர்கள் திரண்டபோது, இந்திராகாந்தி அரசு அவர்களுக்குப் படைப்பயிற்சியே அளித்தது. அது சிறுபான்மை மக்களைப் பாதுகாக்கும் செயலாகும்.
அதே காங்கிரசு அரசு இன்னொரு தலைமையின் கீழ் சிங்கள அரசுக்கு இசைவாக, ஈழ விடுதலைப் போராளிகளுக்கு எதிராக, இராணுவத் தளவாடங்கள், மதிநுட்பம், உளவு போன்ற அனைத்து உதவிகளையும் செய்து, ஈழவிடுதலை இயக்கத்தைச் சிதைக்கத் துணையாக இருந்தது; சிதைத்தும் முடித்தது.
இந்த வரலாற்று உண்மையை இரத்தக்கறை படிந்த கசாப்புக் கடைக்காரர் இலங்கை அதிபர் இராசபக்சேயே அன்றைய மைய அரசுக்கு நன்றியோடு வெளிப்படுத்தினார். இராசபக்சே நன்றி கூறிய செயல் தமிழர்களுக்கு உகந்த செயலாக இருக்க முடியுமா?
பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் உரிமை களுக்காகப் போராடும்போது, பாதித்த கொடியவனுக்கு உதவி செய்ய இந்திய அரசு முனைந்தால், அந்த அரசை குற்றம்சாட்டுவது நெறிமுறை சார்ந்த அரசியல்தானே! ஆகவே "குற்றம்சாட்டுகிறேன்' என்று வைகோ பேசினார்.
சீனா கொடூரமாகத் திபெத்தைக் கைப்பற்றி தலாய்லாமாவை விரட்டிவிட்டபோது, இந்தியா சீனாவின் கொடுமைக்குத் துணைபோகாமல், இன்றுவரை தலாய்லாமாவுக்கு தஞ்சம் அளிக்க வில்லையா? சீனாவின் அந்தச் செயலை விமர் சிக்கவில்லையா? இந்தியா காந்தியின் நாடில்லையா?
எகிப்தின் சூயசு கால்வாயை மேற்கு நாடுகளிடமிருந்து அதன் அதிபர் நாசர் கைவசப்படுத்திக்கொண்டபோது, நேரு நாசருக்குத் துணையாக இருக்கவில்லையா?
நியாயமான செயலைப் பாராட்டுகிறோம்; அநியாயமான செயலை எதிர்க்கிறோம். இது குடியாட்சி தந்த உரிமைதானே!
அரசின் தவறான நடவடிக்கைகளைக் கண்டித்துப் பேசுவது வெறுப்பையும் அவமதிப்பையும் ஏற்படுத்தும் செயல் என்றால், ஆட்சி மாற்றம் எப்படி ஏற்படும்? அரசுகளெல்லாம் "புனிதப் பசுக்களா?'
"அடி, குத்து, வெட்டு, வெடி வை' என்று பேசினால் அது வெறுப்பை வன்முறையாக மாற்றும் செயல். அது தண்டிக்கத்தக்கது.
எதிர்த்திறனுய்வால் வெறுப்பு ஏற்பட்டு ஆட்சி மாற்றம் ஏற்படும்தான். வெறுப்பு ஓர் அரசுக்கு எதிராக ஏற்படுகிறதென்றால், வெறுப்புக் கான செயலை ஓர் அரசு தவிர்ப்பதா? சொல்லியவன் மீது தேசத்துரோக வழக்குப் போடுவதா?
விக்டோரியா மகாராணியா ஆள்கிறார்? ஆட்சிக்கு எதிராகப் பேசுவதையெல்லாம் தேசத்துரோகம் என்று சொல்வதற்கு?
லெனின் மீது சார் ஆட்சியும், காந்தி மீது பிரிட்டிசு ஆட்சியும் தேசத்துரோக வழக்குகளைப் போட்டு சிறையிலடைத்தன. பிறகு இவர்கள் இருவரின் படங்களும் எல்லா நீதிபதிகளின் தலைக்கு மேலேயும் தொங்கவில்லையா?
அரசுகளின் மீது வைகோவின் பேச்சால் ஏற்படுத்தப்பட்ட வெறுப்பு, அரசுகளுக்குப் பேரபாயத்தை உண்டாக்கியது என்னும் சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பு அரசியல் சாசனத்தின் அடிப்படை உரிமைகளை முடக்கும் செயலா? முனைப்படுத்தும் செயலா என்று உயர்நீதிமன்றம் ஆராய வேண்டும். ஏனென்றால், உயர் -உச்சநீதிமன்றங்களை (Water dogs of democracy) என்று சொல்கிறார்களே!
நாட்டைச் சுரண்டிக் கொழுத்து வாழ்கிற பணமுதலைகளுக்கு எதிராக தவப்புதல்வன் மார்க்சும், அவனுடைய தலைமைச் சீடன் லெனினும் வளர்த்த வெறுப்பு, பாட்டாளிகள் மீது கொண்ட பரிவால் அல்லவா? ஆகவே வெறுப்பே எப்படிக் குற்றமாகும்?
யாருக்கு எதிரான வெறுப்பு? எதற்கெதிரான வெறுப்பு என்றெல்லாம் ஆராய வேண்டாமா?
'Jayawardane is my friend' என்று இந்தியத் தலைமையமைச்சர் மொரார்சி தேசாய் சேலம் மாநாட்டில் பேசியவுடன், "சிறுபான்மை இனங்களின் உரிமையைப் பறிப்பவரை நண்பர் என அடையாளம் காண்பது, இன உணர்வுக்கு எதிரான தேசியத்தின் குற்றம்' என்று அன்றே அந்தக் கட்சியை விட்டு வெளியே வந்துவிட்டேன்.
ஒரு தொலைக்காட்சியின் நெறியாளர் என்னிடம் கேட்டார்: "நீ கட்சி மாறினாயே?'
"நம்முடைய தலைவர்களின் போக்குகள் இப்படித்தான் என்பதால், இன்னும் நூறு முறை மாற வேண்டிய நிலை ஏற்படும்' என்றேன். நெறியாளர் களுக்கு என்ன புரியும்? பின்பும் அதையே பேசிக் கொண்டிருந்தார். பாதியிலேயே எழுந்து வந்துவிட்டேன்.
நான்தான் என்றில்லை; சிங்கள அரசும், அந்த அரசை ஆதரித்த காங்கிரசுக் கூட்டணி அரசும் வெறுக்கப்பட வேண்டியவை என வைகோ மட்டும் நினைக்கவில்லை. ஏழுகோடி தமிழர்களும் நினைத்தார்கள்; கொதித்தார்கள்.
ஆகவே இழுத்து வழக்குப்போடும் தன்னுடைய சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, நீதிமன்றம் தமிழ்நாட்டையே சிறைக்கூடமாக மாற்றிவிட்டால், தேசத்துரோகச் சட்டத்திற்கு அது அரண் செய்ததாகும். வைகோ மட்டும்தான் செய்தாரா? எந்தத் தமிழன் அதைச் செய்யவில்லை?
காந்தியின் மீது போடப்பட்ட தேசத்துரோகச் சட்டம் இன்னும் நம்முடைய சட்டப் புத்தகத்தில் இருக்கிறதே.
எத்தனை எத்தனை நூறுபேர்கள் பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுச் சென்றிருக்கிறார்கள். யார் இதற்காகப் பேசுகிறார்கள்? ஆளும் வாய்ப்புள்ள எல்லா கட்சிகளும் இந்தப் பழிவாங்கும் சட்டத்தை விரும்புகின்றனவே.
வெள்ளைக்காரன் உருவாக்கிய இத்தகைய காட்டுமிராண்டித்தனமான சட்டம், சட்டப் புத்தகத்திலிருந்து அகற்றப்பட வேண்டும் என்று போராடியவர்கள் எத்தனை பேர்? முன்நிற்பது எந்தக் கட்சி?
வெள்ளைக்காரன் போய்விட்டான்!
ஆனால் இந்தியா விடுதலை அடைய வில்லையே!
(தொடரும்)