(46) தமிழ் தேடுவாரற்றுப் போனதே!
"கிடப்பதெல்லாம் கிடக்கட்டும்; கிழவியைத் தூக்கி மனையில் வை' என்பது போல், ஆட்சிக்கு வந்தவுடன் அடுத்துக் கூடுகின்ற பாராளுமன்றக் கூட்டத் தொடரில் உடனடியாக நிறைவேற்றப்படப் போகின்ற சட்டங்கள் இரண்டு.
ஒன்று இசுலாமியர்களின் "முத்தலாக்' குறித்தது. இன்னொன்று மனித வள மேம்பாடு அமைச்சகத்தின் சார்பாக முன்மொழியப்படவிருக்கும் தன்னாட்சி (Autonomous) சமக்கிருதப் பல்கலைக் கழகங்களின் உருவாக்கம் குறித்தது.
தேசியக் கல்விக் கொள்கை என்னும் தலைப்பில் சென்ற திங்களில் மும்மொழித் திட்டம் தயாரித்தனர். இந்தி பேசாத மக்களை இந்தி படிக்க வைக்கும் முயற்சி இது.
வழக்கம் போல் தமிழ்நாடு மட்டுமில்லை; கருநாடகமும் "இந்திக்கு இங்கே என்ன வேலை?' என்று கேட்டது. பிறகு இந்தி தலையைச் சற்று உள்ளே இழுத்துக்கொண்டிருக்கிறது.
கல்வி என்பது மாநிலம் சார்ந்தது. அதற்கு டில்லியில் என்ன வேலை? பல மாநிலங்கள் அயர்ந்திருந்த வேளையில் அவர்களின் தொடையில் திரி திரித்துக் கல்வியையும், சுகாதாரத்தையும் மைய அரசின் பட்டியலிலும் (Concurrent list) இணைத்துக்கொண்டனர்.
அவர்கள் கல்வியில் காலூன்றிக் கொள்ள இடமளித்ததின் விளைவு, நீட் தேர்வு; மீண்டும் இந்தியைத் திணிக்கும் முயற்சி. அது தேசிய மொழி என்னும் நிலைப்பாட்டிலிருந்து இப்போது கல்வி என்னும் நிலைப்பாட்டில் காலூன்ற முயல்கிறது. அதுவும் போதாது என்று இப்போது புதிதாக சமக்கிருதப் பல்கலைக் கழகங்களை உருவாக்கப்போகிறார்கள்.
சமக்கிருதம் யாருக்கும் தாய்மொழி இல்லை. சங்கராச்சாரியாரின் மடத்தில் கூட அது பேச்சு வழக்கில் இல்லை. பொதுவாக அது பேச்சு வழக்கை இழந்து பல நூறு ஆண்டுகள் ஆகி விட்டன.
ஆனால் அந்த மொழி வளர்ச்சியடைந்த மொழி என்பதில் யாருக்கும் எந்த ஐயமும் இல்லை. திராவிடத்திற்கு நிகரானது ஆரியம்.
அதனுடைய வேதம் கூட ஒரு வகையில் தோத்திரத் திரட்டுத்தான்! ஆனால் அதிலுள்ள உபநிடதங்கள் மெய்யியல் வளர்ச்சியின் நிகரற்ற வெளிப்பாடுகள். காளிதாசனின் சாகுந்தலம். நாடகங்களின் கொடுமுடி.
சமக்கிருதம் பெற்றிருக்கும் இதிகாசங்களான இராமாயணமும், மகாபாரதமும் இணை சொல்ல முடியாதவை. உலகின் எந்த மொழியும் இவற்றிற்கிணையான, மாபெரும் அளவிலான மகாபாரதம், இராமாயணம் போன்ற பெருநூல்களைப் படைத்திருக்கவில்லை.
இலத்தீனும் கிரேக்கமும் இறந்துபட்ட மொழிகள் என்னும் நிலையிலும் அவற்றின் பழைமை போற்றப்படும்போது, சமக்கிருதப் பழைமையும் போற்றப்படுவது ஏற்கத்தக்கதே.
அறிவின் பிழிவு செத்த மொழியிலிருந்தாலும், வாழும் மொழியில் இருந்தாலும் அதைப் பெறத் தவறுவது பேதைமை!
ஆரியம் வீழ்ந்து விடாமல் நிலைநிறுத்துவதற்கு, ஆதி சங்கராச்சாரியார் இந்தியாவின் நான்கு திக்குகளிலும், நான்கு மடங்களை நிறுவிச் சென்றிருக்கிறார். அவையெல்லாம் பெருஞ் சொத்துக்களை உடையவை. இவை போகத் தனித்துக் கிளைத்த காஞ்சி மடம், சங்கராச்சாரிகள் அணியும் உடை நீங்கலாக, மற்ற எல்லாவற்றிலும் ஒரு தொழில் நிறுவனம்தான்.
பல மருத்துவக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், நூறு மாடிக் கட்டிடங்கள் கட்ட வல்ல கட்டுமான நிறுவனங்கள் எனப் பல ஆயிரங் கோடி பணத்தால் கொழுத்த மடம்.
நாட்டில் பாதிச் சொத்தை வைத்துக்கொண்டு, இவர்கள் பிச்சைக்குச் செல்லும் சம்பிரதாயம் கேலிக்குரியது.
மருத்துவக் கல்லூரிகளில் படிப்பதற்கான இடங்களை விற்பதும், கட்டிடம் கட்டி விற்றுப் பெருநிறுவனங்கள் உருவாக்குவதும், மடங்களின் வேலை அல்ல. சமக்கிருதத்தை வளர்ப்பதே இவர்களின் வேலை.
செய்தார்களா? ஏன் செய்ய வேண்டும்? ஏவியதைச் செய்வதற்கு மோடியைப்போல ‘"சற்சூத்திரர்கள்'’ கிடைக்கும்போது, சமக்கிருத வளர்ச்சி ஏன் மடங்களின் வேலையாக வேண்டும்? அது மோடி அரசு முட்டி போட்டுச் செய்யவேண்டிய வேலை அல்லவா!
நூற்றிப்பத்து கோடி மக்கள் வங்கம், ஒரியம், கன்னடம், தெலுங்கு, தமிழ் என எண்ணற்ற மொழிகளைப் பேசுகின்றனர். எந்த மொழியாவது அரசின் கவனத்திலிருக்கிறதா? அவை நீச பாஷைகள்.
அரசியல் ஆதிக்கத்திற்கு இந்தி! பண்பாட்டு ஆதிக்கத்திற்குச் சமக்கிருதம்!
ஆரியர்களையும் இந்திக்காரர்களையும் தவிர, வேறு யார் இந்தியாவைத் தன்நாடு என நெகிழ்ச்சியோடு நினைக்கும் வகையில் காரியங்கள் நடைபெறுகின்றன?
இந்த மாற்றாந்தாய் மனப்பான்மை, பல மொழிகள் புத்தாக்கம்பெற துணைபுரிய முடியுமா?
தமிழில் உள்ள திருக்குறள் மெய்யியல், அரசியல், பொருளியல், வாழ்வியல், காமம் என அது பேசாத ஒரு பொருள் உலகில் உண்டா? அதற்கு நிகரான நூல் உலக மொழிகளில் எதிலாவது இருக்கிறதா?
அகத்துறையைத் தமிழ் வளர்த்திருக்கிற மாண்பு எங்கே? மாற்றான் மனைவியை வசீகரிப்பதுவரை பேசுகின்ற வடமொழி காமசூத்திரத்தின் மாண்பு எங்கே?
வாழும் தமிழ் தேடுவாரற்ற நிலையில்; செத்த மொழிக்கு அலங்கரிப்பு!
சமக்கிருதத்திற்கு மூன்று தன்னாட்சிப் பல்கலைக்கழகங்களை மையஅரசு உருவாக்கிக் கொடுக்கப் போகிறதாம்! சாதாரண வேத பாடசாலை மட்டங்களில் இயங்கிக்கொண்டிருக்கும் நிறுவனங்கள், தன்னாட்சிப் பல்கலைக் கழகங்களாக மாறப்போகின்றன.
ஏற்கனவே சமக்கிருதம் வெளிப்படுத்தி இருக்கும் சிறந்த அறிவை அவற்றால் பாதுகாக்க முடியுமே தவிர, கடந்த இருநூறு ஆண்டுகளில் உலகு பெற்றிருக்கிற சிறந்த நவீன அறிவு (Modern Knowledge), சமக்கிருதத்திற்குள் நுழைய முடியாது! அதற்குரிய புதிய சொல்லோட்டம் சமக்கிருதத்தில் பிறக்கவில்லை. ஏனென்றால் அந்த மொழியைப் பேசுவார் யாரும் இன்மையின், புதிய சொற்களின் பிறப்புக்கான தேவை தோன்றவில்லை.
பொருளியலில் (Economics) உள்ள Diminishing Marginal Utility என்னும் பொருளாதார விதிகளில் ஒன்றை, "குறைந்து செல் பயன்பாட்டு விதி'’ என பிறமொழிக் கலப்பின்றிச் சொல்லத் தமிழுக்கு ஆற்றல் இருக்கிறது.
Habeas Corpus Writ என்னும் இலத்தீன்மொழி சட்டச் சொல்லை, "ஆட் கொணர்விப்பு நீதிப் பேராணை' என்று சொல்லும் ஆற்றலைத் தமிழ் பெற்றிருக்கிறது.
இவை போன்றவற்றை ஆக்கும் திறன் சமக்கிருதத்திற்கு இல்லை என்பது என் கருத்தன்று.
இவற்றைப் பயன்படுத்த ஆளில்லாமல், அவற்றை உருவாக்கி என்ன பயன் என்பதே என் கேள்வி.
சிக்கல் என்னவென்றால், வடஇந்தியப் பண்பாடு சமக்கிருத அடித்தளத்தில் அமைந்தது. ஆனால் திராவிடப் பண்பாடு அதற்கு எதிர்த்தளத்தில் உருவானது. வடஇந்தியப் பார்ப்பனரல்லாத மக்கள் சுயமாக எதையும் உருவாக்கிக் கொள்ள முடியவில்லை. ஆகவே விவேகானந்தரில் இருந்து, மோடிவரை வேதாந்தத்தை அடிப்படையாகக் கொண்டுவிட்டார்கள். அது அவர்களுக்குப் புரியாது என்றாலும் தேவமொழிகள் புரியத் தேவையில்லை.
எத்தனையோ ஆயிரங்கோடிகளைச் சமக்கிருதத்திற்கு மைய அரசிலிருந்து வாரி இறைக்கப் போகிறார்கள்.
பயன் பெறுவார் யாருமில்லை.
தமிழ்ப் பார்ப்பனர் உண்டு; வங்கப் பார்ப்பனர் உண்டு; கேரளப் பார்ப்பனர் உண்டு; தெலுங்குப் பார்ப்பனர் உண்டு. சமக்கிருதப் பார்ப்பனர் என்று யாராவது இருக்கிறார்களா? அது அவர்களுக்கு பூசைமொழியே தவிர, இரத்தமொழி இல்லாமல் போய்விட்டதே. உலகிலேயே தாய்மொழியைத் தொலைத்துவிட்டு, அந்தந்த மண்ணின் மொழிகளைச் சொந்த மொழிகளாகச் சுவீகரித்துக்கொண்ட ஒரே இனம் ஆரிய இனம்தான்.
அழகிய மனைவி; அவளை இலக்குமியைப் போல் அலங்கரிக்கிறார்கள்; கணவன் விழியிழந்துவிட்டால், அவளை அலங்கரித்தால் என்ன? அலங்கரிக்காமல் விட்டால்தான் என்ன?
‘"செந்திருவைப் போல் அணங்கைச் சிங்காரித்து என்ன பயன்?
அந்தகனே நாயகன் ஆனால்'’
பேச ஆளில்லாத மொழியை வளர்க்க மூன்று பல்கலைக்கழகங்களாம். முந்நூறைக் கட்டினாலும் அணங்கைச் சிங்காரித்த கதைதான்.
பழைமைக்குப் பழைமையாய்ப் புதுமைக்குப் புதுமையாய்த் திகழும் தமிழ் தேடுவாரற்றுப் போனதே!
(தொடரும்)