(37) தடிமரங்களை ஈன்றவரா தமிழ்த்தாய்!

றத்தாழக் கல்வியைத் தனியாரிடம் விற்றுவிட்ட பிறகு, கல்வித்துறைக்கு அமைச்சர்களே தேவையில்லை என்னும் நிலைதான்.

ஆயினும் ஏதோ சாதிக்கப்போவது போல் பாவனை செய்துகொண்டு, இல்லாத குளறுபடிகளை எல்லாம் செய்துகொண்டிருக்கிறார்கள் கல்வித்துறையில்.

மாணவர்கள் என்ன படிக்கவேண்டும் என்று முடிவு செய்கிற அதிகாரம் தங்களிடம் இருப்பதால், அப்போதைக்கப்போது தாங்கள் இருப்பதைக் காட்டிக்கொள்ள, ஏதாவது குளறுபடிகள் செய்வது மந்திரிகள் வழக்கம்.

Advertisment

இப்போது தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளிப் பாடத்திட்டத்தின்படி பதினொன்று மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் இதுவரை ஆறு பாடங்கள் படித்து வருகின்றனர். அதில் ஏதோ ஒரு பாடத்தைக் குறைத்தால், எந்தப் பாடங்களில் கருத்துச் செலுத்திப் போட்டித் தேர்வுகளுக்குப் படிக்க வேண்டுமோ, அந்தப் பாடங்களில் கருத்தைச் செலுத்திப் படிக்க வசதியாக இருக்கும் என்று ஒரு புதுயோசனை இவர்களுக்கு ஓடிக்கொண்டிருக்கிறது.

மருத்துவத்திற்கான "நீட்', இன்னும் 'Jee' போன்ற தேர்வுகளில் நமது மாணவர்கள் போதுமான எண்ணிக்கையில் தேர்ச்சி பெற்று நம் மண்ணில் உள்ள கல்லூரிகளை நிரப்ப முடியவில்லை. அயல்மாணவர்களே நம் மண்ணில் அதிகம் பயில்கின்றனர். இது "நீட்' போன்ற தேர்வுகளுக்குப் பின் ஏற்பட்டிருக்கும் நிலை.

கல்வி, மருத்துவம் போன்றவை முற்ற முழுக்க மாநில அரசின் பொறுப்பில் இருந்தவை. அவை இரண்டுக்குள்ளும் மைய அரசு தேவையில்லாமல் நுழைந்து, கடைசியில் மைய அரசே நீட் தேர்வு நடத்துவதில் போய் முடிந்திருக்கிறது.

Advertisment

நீட் போன்ற தேர்வுகளை மனத்தினில் எண்ணி மருண்டு, அதில் வெற்றிபெற சுமையைக் குறைத்தால் என்ன என்று கருதுகின்றனர்.

எது வெட்டிச் சுமையோ அதை நீக்கிவிடலாம் என்றும் முடிவெடுக்கின்றனர்.

மொத்தமுள்ள ஆறு பாடங்களில் "வேண்டாத வெட்டிச் சுமை தமிழ்தான்' என்று அவர்களின் அறிவில் படுகிறது.

தாயின் கருவறுப்பது போன்ற செயலல்லவா இது.

ஜப்பானிலோ, சீனாவிலோ தாய்மொழியில்தான் கல்வி கற்கிறார்கள். கீழ்நிலையிலிருந்து மேல்நிலை வரை, தாய்மொழி வழியாகத்தான் கல்வி கற்கிறார்கள். அறிவியல், கணிதம், பொறியியல் ஆகிய அனைத்தும் தாய்மொழி வழியாகத்தான் என்பதால், புரிந்தும் படிக்கிறார்கள். அவர்களுக்கு வேறு எந்த மொழியுமே தெரியாது.

வளர்ச்சி அடைந்த ஐரோப்பாவைப் பின்னுக்குத் தள்ளிவிட்டார்கள். இப்போது அமெரிக்காவின் குரல்வளையைப் போய் பிடித்து அழுத்திக்கொண்டிருக்கிறார்கள்.

மாவோவின் ஆட்சியில் மூன்றுகோடி பேரை பசியினால் சாகவிட்ட சீனா (Great famine) முப்பது ஆண்டுகளில் உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாக மாறிவிட்டது.

எல்லா முன்னேற்றங்களும் தாய்மொழி வழியானதுதான். சீனா, உலகில் இரண்டாவது இடத்திலும், சப்பான் மூன்றாவது இடத்திலும் இருக்கின்றன.

அவர்களுடைய நாட்டிலும் தொழிற்கல்வி, அறிவியல், பொறியியல், மருத்துவம் ஆகியவற்றை வேலை நோக்கோடுதான் படிக்கிறார்கள்.

paஅவர்களுடைய நாடுகளே அவர்களுக்குரிய வேலை வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்துவிடுவதால், அயல்மொழித் தேவையே அவர்களுக்கு ஏற்படவில்லை. அவை தற்சார்பு நாடுகள் (Self-sufficient countries).

நாம் படிக்கும்போதே அமெரிக்காவை, ஐரோப்பாவை குறி வைத்துக்கொண்டு படிப்பதால், அவர்களுக்கு என்ன தேவையோ, அதை அவர்களுக்கு எந்த மொழியில் வழங்கினால் ஏற்பார்களோ அந்த மொழியில் தேர்ச்சி பெற வேண்டியது நமக்குக் காலத்தேவையாகிவிட்டது.

ஆகவே இங்கே ஆங்கிலம்தான் படிப்பின் அடையாளமே! அதை யாரும் வற்புறுத்தத் தேவையில்லை. கட்டாயமில்லை என்றாலும் கட்டாயமாக படிப்பான். ஆனால் தமிழின் நிலை அவ்வாறில்லை.

தமிழில் மதிப்பெண் பெற்றால்தான் தேர்ச்சி பெற முடியுமென்றால்தான், அவன் வேறு வழியில்லாமல் தமிழ் படிப்பான். இது தாய் மல்லுக்கட்டிப் பிள்ளைக்குச் சோறூட்டுவது போன்றதுதான்.

இப்போதே பதிப்பாளர்கள் சொல்கிறார்கள்: "நவீனங்கள் (Novels) விற்பதில்லை. கவிதைப் புத்தகங்களை நாங்கள் அச்சுப் போடுவதே இல்லை' என்று.

காரணம் தமிழைப் படிக்கத் தெரிந்தால்தானே இவையெல்லாம் விற்பனையாகும். இவற்றை எல்லாம் படிக்காமல் போய்விட்டதால் தாழ்வு எதுவுமில்லை. ஆனால் மாந்தனை மாந்தனாக்கவல்ல திருக்குறளையும், சங்க இலக்கியத்தையும், இளங்கோவையும், கம்பனையும் அறிவதற்காகவாவது தமிழைப் படிக்க வேண்டாமா?

பதினொன்றாவது மற்றும் பன்னிரண்டாவது என்பது அறிவு முதிரத் தொடங்கும் பருவம். அந்த வகுப்புகள்தாம் ஒருவன் கடைசியாகத் தமிழைப் படிக்கும் வகுப்புகள். அந்த வகுப்புகளில் தமிழில் தேர்ச்சி பெறுவது கட்டாயமில்லை என்று சொல்வதும் ஒன்றுதான்; தமிழைத் தூக்கி எறிந்துவிடுவதும் ஒன்றுதான்.

நான் படித்த காலத்தில் இந்தி வகுப்பு இருந்தது. அதில் தேர்ச்சி பெறுவது கட்டாயமில்லை என்னும் நிலை இருந்ததால், இரண்டு, மூன்றுபேர் நீங்கலாக, (அவர்களெல்லாம் டில்லிக்கு வேலைக்குப் போக விரும்புபவர்கள்) மற்றவர்களெல்லாம் பந்தடிக்கப் போய்விடுவார்கள்.

"நாங்களும் திராவிட இயக்கம்தான்' என்று சொல்லிக்கொள்ளும் ஓர் ஆட்சியில் பழைய இந்தி வகுப்பின் நிலைக்குத் தமிழ் வகுப்பைக் கொண்டுவர நினைக்கிறார்கள். மற்றவர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஆந்திராவிலும், தெலுங்கானாவிலும் இரண்டு மொழிப் பாடம், மூன்று பிற பாடங்கள். தெலுங்கில் கட்டாயம் தேர்ச்சி பெறவேண்டும். அவர்களெல்லாம் போட்டித் தேர்வுக்குப் போகவில்லையா? அவர்கள் பெல்லிகொண்டாவில் மாடு மேய்த்துக்கொண்டா திரிகிறார்கள்? அவர்களுக்குத் தெலுங்கு சுமையாக இல்லை. நமக்குத் தமிழ் சுமையாகிவிட்டதா?

"நம்முடைய மாணவர்களின் மூளையின் மொத்தக் கொள்ளளவே இவ்வளவுதான்' என்று பாடத்திட்டக் குழு அளந்து வைத்திருப்பதுபோலச் சொல்வதும், அதில் தமிழைத் தள்ளுபடி செய்துவிட்டால் சுமை குறைந்து எல்லா மாணவர்களும் தேர்ச்சி அடைந்துவிடுவார்கள் என்று கதைப்பதும், தமிழுக்கு எதிரான மிகப்பெரிய சூழ்ச்சித் திட்டம்.

"இப்போது எந்த மாற்றமும் இல்லை' என்று கல்வி அமைச்சர் செங்கோட்டையன் சொல்வது நடப்பு ஆண்டுக்கு சரிதான். நடப்பு ஆண்டு ஏற்கனவே தொடங்கிவிட்டது. இனி அவகாசம் போதாது. அது 2020-ல் நடைமுறைக்கு வரப்போவதாகவே ஆங்கில இதழ்கள் பறையறைகின்றன. நெருப்பில்லாமல் புகையுமா?

"தமிழ் நீங்கிய பாடத்திட்டம் தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளிப் பாடத்திட்டத்தில் இன்றும் கிடையாது; என்றும் கிடையாது' என்று அமைச்சர் செங்கோட்டையன் அடித்துச் சொல்ல வேண்டும்.

உலகில் சில செம்மொழிகள் உண்டு; இறந்துபட்ட மொழிகளே அவற்றில் பல. தமிழ்தான் இன்னும் உயிர்ப்புடன் வாழும் மொழி.

தொன்மை நாகரிகங்கள் மிகச்சில. அதில் ஒன்று சிந்து சமவெளி நாகரிகம். அந்த நாகரிகத்தின் தொடர்ச்சியே தமிழ்க்குடிகள். அவர்களின் உயிர் நிலைகொண்டிருப்பது தமிழில்தான்.

தமிழை அடையாளமாகக் கொண்டே நாம் இனமாகத் திரண்டிருக்கிறோம்.

தமிழை இழந்துவிட்டால், அடையாளத்தை இழந்து, சிதறிச் சின்னாபின்னப்பட்டுப்போய் உருத்தெரியாமல் அழிந்துவிடுவோம். மொழியின் அழிவு என்பது வெறும் ஒலியின் அழிவில்லை; அது இனத்தின் அழிவு.

கேவலத்திலும் கேவலம் நீட் (Neet) தேர்வு. இதற்காகப் பள்ளி மேல்நிலையில், உரிய பருவத்தில் தமிழைக் கற்க முடியாமல் செய்வது, பாடக்குழுவின் அடிமுட்டாள்தனமாகும். தொலைப்பார்வை இல்லாத தன்மையாகும்.

அரசியல் மாறும்; ஆட்சிகள் மாறும்; நீட் தேர்வுகள் மண்ணாகும் காலம் வரும். இதற்காகத் தமிழை இழக்க முடியுமா? தெலுங்கர்களுக்குத் தெரிவது கூட தமிழனுக்குத் தெரியாதா?

பழங்காலத்திலேயே சமக்கிருதத்தை ஊடுருவ விட்டுத் தமிழை ஒழிக்க நினைத்தார்கள், சமக்கிருதம்தான் ஒழிந்துபோனது. அது பேசுவார் அற்றுப் போனதுதான் மிச்சம்.

இந்தியைத் திணித்து தமிழை ஒழிக்க நினைத்தார்கள்; நடக்கவில்லை. காங்கிரசு ஒழிந்ததுதான் மிச்சம்.

இப்போது மேல்நிலைப் பள்ளிப் பாடத் திட்டத்திலிருந்து தமிழையே அகற்றி, முதிரும் (Maturing) புதிய தலைமுறையிடமிருந்தே கடைசிக்கட்ட ஆழ்ந்த தமிழ்ப் படிப்பை அகற்றிவிடச் சூழ்ச்சி செய்கிறார்கள்.

இதையும் தமிழ்நாடு அரசே செய்கிறது.

தடிமரங்களை ஈன்றவரா தமிழ்த்தாய்!

(தொடரும்)