(36) சொரணை இல்லாதவர்களுக்கு உறைக்காதே!

டுத்தடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புகள் நீர் பற்றாக்குறை, அதன் காரணங்கள், அரசின் மெத்தனம் இவை குறித்து விரிவாகப் பேசுகின்றன.

நீதியரசர்கள் வேணுகோபால் மற்றும் வைத்தியநாதன் ஆகியோரின் இருக்கை வழங்கியிருக்கும் தீர்ப்பு மிகவும் விரிவானது, சமூக அக்கறை உடையது.

மக்களின் பொறுப்பின்மை, தொழிலதிபர்களின் அடாவடித்தனம், அரசின் மெத்தனம் இவையே நீர்நிலைகள் கெடுவதற்கும், நீர்ப் போதாமைக்கும் காரணம் என்று தெளிவாகப் பேசுகிறது அந்தத் தீர்ப்பு.

Advertisment

தொழிலதிபர்கள் தங்கள் ஆலைகளின் கழிவை ஆற்றில் கலந்து விடுகின்றனர். உயிரினங்கள் சாகின்றன, வயல்கள் பாழாகின்றன, அந்த நீரைப் பயன்படுத்தும் மனிதர்கள் சொல்லொணாக் கொடிய நோய்களுக்கு உள்ளாகின்றனர்.

"மாசு கட்டுப்பாடு ஆணையம் ஏன் செயலற்றிருக்கிறது' என நீதி இருக்கை கேள்வி எழுப்புகிறது.

அந்தந்தப் பகுதித் தொழிலதிபர்கள் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன், அந்தந்தப் பகுதி மந்திரிகளுக்குத் தங்களின் சட்டைப் பைக்குள் தனிக்குடியிருப்புகளை உண்டாக்கிக் கொடுத்து விடுவது வழக்கம். இது எந்தக்கட்சி மாறி ஆட்சிக்கு வந்தாலும், இதே நிலைதான். அதனால் கடந்த ஐம்பதாண்டுகளாக இதேநிலை நீடிக்கிறது.

Advertisment

நம்முடைய மந்திரிகளின் வாதம், "என்ன செய்வது? தொழிலை அழித்துவிட முடியுமா?' என்பதுதான்.

தொழிலை ஏன் அழிக்க வேண்டும்? அந்தக் கழிவை மறுசுழற்சி செய்து, அந்த நீரைத் தூய்மைப்படுத்தி மீண்டும் பயன்படுத்து அல்லது ஆற்றில் விடு.

தனியொருவரின் இலாப வேட்டை, அரசுக்கும் சிறிது வரி வருவாய், மந்திரி களுக்கோ பெரும் வருவாய். இதற்காக யார் தாலியறுப்பது?

ஆணையத்தை நீதிமன்றம் நெறிப்படுத்த முயல்வதோடு, அதற்குப் பல அறிவுறுத்தல் களையும் வழங்கி இருக்கிறது.

கட்டுப்படாத தொழிற்சாலைகளுக்கு மின்சார இணைப்பைத் துண்டிக்க வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தி இருக்கிறது. இது நீதிமன்றக் கொதிப்பின் வெளிப்பாடு.

இதேபோல் நீர்நிலைகளை ஆக்கிரமித்து வீடு கட்டி ஏரி, குளங்களை அழித்து விடுவதோடு, சிற்றாறுகளின் ஓட்டத்தை முற்றாகத் தடுத்து, பெருவெள்ளம் ஏற்படக் காரணமான ஆக்கிரமிப்புகள் எந்தப் பரிவும் இல்லாமல் அகற்றப்பட வேண்டும் எனவும் தீர்ப்பில் கூறியுள்ளது.

a

அதற்கென ஒரு தனிச்சிறப்புப் பிரிவைத் தலைமைச் செயலாளர் தலைமையில் ஏற்படுத்தி, பலதுறை அதிகாரிகளை அதற் குள் உட்படுத்தி, கடுமையான நடவடிக் கைகள் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றுவ தோடு, தொழிற்சாலைக் கழிவுகளையும் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்றெல்லாம் சொன்னதோடு நிற்கவில்லை உயர்நீதிமன்றம்.

தவறு செய்கின்ற அதிகாரிகள் தற்காலிக வேலைநீக்கம் செய்யப்பட வேண்டும்; தேவையெனில் முழுமையாக அவர்களைத் தூக்கி எறிந்துவிடலாம்.

உடந்தையாக வேலை செய்யும் அதிகாரிகளை முழுமையாக நீக்கம் செய்வதோடு, அவர்களுக்கு ஓய்வுக்கால நிதிச்சலுகைகள் அனைத்தையும் நிறுத்தி வைக்கும்படியும் அறிவுறுத்தி இருக்கிறது உயர்நீதிமன்றம்.

மிகவும் கடுமையான அறிவுறுத்தல்கள்.

தலைமைச் செயலாளர் தலைமையில் அமைகின்ற சிறப்புக்குழு எதைப் புதிதாகச் சாதிக்கப் போகிறது?

அதே தலைமைச் செயலாளர், அதே அதிகாரிகள், அதே தொழிலதிபர்கள், அதே ஆக்கிரமிப்பாளர்கள்.

இவர்கள்தாம் ஏற்கனவே இதே அக்கிரமங்களைச் செய்தவர்கள்; தொடர்ந்து செய்கின்றவர்கள்.

நேர்மையான அதிகாரிகள் உண்டு. சகாயத்தைச் செயலலிதா இரண்டு நாளில் நான்கு முறை பந்தாடினார். கல்வியை ஒழுங்குபடுத்த வந்த உதயசந்திரனைத் துரத்திய பிறகுதான் அமைச்சர் செங்கோட்டையன் மாத்திரை போடாமல் தூங்க முடிந்தது. பழைய அதிகாரி ஒருவர், ஒரு மந்திரி பதவி இழப்பதற்குக் காரணமானவர்; அவர் கிறித்துவப் பரப்புரை செய்கிறார் என்று பழித்துப் பழித்து ஒதுக்கினார்கள்.

ஓய்வு நேரத்தில் "ரிக்கார்டு டான்சு' பார்க்கப் போகாமல் ஏசுவைப் பற்றிப் பேசுவது பாராட்டுக்குரியதா? பழிப்புக்குரியதா?

எல்லாத் தீமைகளுக்கும் தலையாய காரணம் மிகமோசமான மந்திரிகள்தாம்.

இராசாசி, காமராசர், அண்ணா போன்றவர்களின் ஆட்சிக்காலம் பேசப் படுவதற்குக் காரணம் அவர்கள் தகுதியும் நேர்மையும் உடையவர்களைத் தேர்வு செய்தார்கள். பிழையானவர்கள் என்று தெரிந்தால் உடனே தூக்கி எறிந்துவிடுவார்கள். ஏனெனில் அவர்களுக்குச் சொந்த நோக்கம் என்று எதுவும் இல்லை.

பின்னால் ஆட்சிக்கு வந்த பலருக்குச் சொந்த நோக்கத்தைத் தவிர வேறெதுவும் இல்லை.

எந்த மந்திரியும் தானாகத் தப்புசெய்ய முடியாது. அதிகாரம் பின்னப்பட்டிருக்கிறது. அதிகாரிகளைக் கைக்குள் வைத்துக் கொண்டுதான் மந்திரிகள் சுரண்ட முடியும். ஆகவே அதிகாரிகளைக் கூட்டாளி களாக்கிக் கொண்டுதான் ஆட்சியினர் செயல்படுகிறார்கள்.

ஆகவே தலைமைச் செயலாளரின் கீழ் அமைகின்ற எந்தச் சிறப்புக் குழுவும் சிறப்பாகச் செயல்பட ஆட்சியாளர்கள் விடமாட்டார்கள். ஆட்சியாளர்கள் பொதுநன்மைக் காகத்தான் ஆட்சிக்கு வந்தவர்களா என்ன?

ஸ்டெர்லைட் நிறுவனம் இரண்டு, மூன்று மாநிலங்களில் துரத்தி அடிக்கப் பட்டுக் கடைசியில் இங்கு வந்து ஊன்றிக்கொண்டது. ஒரு தவறான நிறுவனம். மக்களுக்கும் சுற்றுச் சூழலுக்கும் தீங்கு விளையும் என்றுதானே எல்லாரும் துரத்தி அடித்தார்கள். இங்கே எப்படி ஊன்ற முடிந்தது.

அது செயல்படத் தொடங்கி, மக்கள் சுவாசக் கோளாறு தொடங்கிப் புற்றுநோய் வரை ஆளான பின்பு, "ஆலையை மூடு' என்று அரசுக்கு உணர்த்துவதற்காக அமைதியாக ஊர்வலம் போனால், அரசு மக்களின் உணர்வை உணர்ந்து செயல்பட வேண்டியதுதானே.

காவல்துறை, வருவாய்த்துறை, அமைச்சகம் என்று எல்லாத்துறை வயல்களிலும் ஸ்டெர்லைட் நீர் முடை இல்லாமல் பாய்கிறதே!

பல்லாயிரம் மக்களுக்கு ஏற்படும் பாதிப்பைவிட, ஒரு தொழில் நிறுவனத்திற்கு ஏற்படும் பாதிப்புதான் இவர்களை உறுத்தும்.

அதனால் மக்களுக்குப் பாடம் கற்பிக்கத் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. "தொழில் பெருக்கத்திற்காக' பதிமூன்று மனித உயிர்கள் "நேர்த்திக்கடனாக' காவு கொடுக்கப்பட்டன.

அதன் எதிர்விளைவாக நாடு முழுதும் வீசிய அனலைத் தாங்கமுடியாமல், அரசு அந்தத் தொழில் நிறுவனத்தை மூடும்படி கட்டளையிட்டது. பதிமூன்று பேரைச் சுட்டுத்தான் அரசு இந்த முடிவை எடுக்க வேண்டுமா? மனித உயிர்கள் அவ்வளவு அற்பமானவையா?

அரசனுக்கு ஏற்ற மந்திரிகள், மந்திரிகளுக்கு ஏற்ற சேவகர்கள்.

உயர்நீதிமன்றங்கள், "இத்தகைய அதிகாரிகளைத் தூக்கி எறியுங்கள். ஓய்வூதியப் பயன்களை நிறுத்தி வையுங்கள்' என்று சொல்லுமளவுக்குக் கொதிப்படைந் திருக்கின்றன.

சில சமயங்களில் நீதிமன்றங்கள் தங்களுக்குரிய வரம்புகளைக் கடந்து கால்களை எட்டி வைப்பதுமுண்டு (Over Stepping of the Judiciary).

பொதுநன்மை கருதி, இதைக்கூடச் செய்யவில்லை என்றால், தெருவில் இறங்கி நடக்க முடியாத நிலைக்கு நாடு வந்துவிடும்.

வெறும் அறிவுறுத்தல்கள்

சொரணை அற்றவர்களுக்கு உறைக்காதே!

(தொடரும்)