(18) அடுத்த வேலையைப் பாருங்கள் மோடி!

ம்முடைய போர்வீரர்கள் நாற்பது பேர் ஒரு மூடு வண்டியில் பயணம் செய்து கொண்டிருந்த வேளையில் திடீரென்று வெடிகுண்டால் தாக்கப்பட்டு அவ்வளவு பேரும் அஞ்சு நொடியிலேயே மாய்ந்து விட்டனர்.

Advertisment

கொல்லுவது ஒரு பெருமையான காரியம் என்றெண்ணி பாக்கித்தானில் இருந்து செயல்படும் ஒரு பயங்கரவாதக் குழு அதற்கான பொறுப்பை பெருமகிழ்வுடன் ஏற்றுக் கொண்டது.

நேரடியாகப் போர் செய்து வெல்ல முடியாது என்கின்ற நிலையில் இத்தகைய பயங்கரவாதக் குழுக்களை உருவாக்கி, அவற்றிற்குத் தேவையான உடற்பயிற்சி, கருவிப் பயிற்சி ஆகியவற்றை அளித்து, ""அவர்கள் செய்வது பாவச் செயலல்ல, அது புனிதப் போர் ((Jihad)'' என்று மூளைச் சலவையும் செய்து அனுப்பி வைக்கிறது பாக்கித்தான் இராணுவம்.

palakarupaih

Advertisment

இவர்கள் பல சமயங்களில் மக்கள் புழங்கும் தொடர்வண்டி நிலையங்கள், நெரிசலான சந்தைப் பகுதிகளில் வெடிகுண்டை வைத்து எளிய மக்களை ஆயிரக்கணக்கில் கொன்று விடுவதும் உண்டு.

பயங்கரவாதிகளின் பாதிப்புக்கு எந்த வகையிலும் காரணமில்லாத, அவர்களுடைய சிக்கல் என்னவென்றும் கூட அறிந் திராத எளிய மக்களைக் கொல்வது கயமை. கருணையாளனான கடவுளும் கூட மன்னிக்க முடியாத குற்றம் அது.

அமெரிக்காவிடம் உதவி பெற்றுக் கொண்டே, அமெரிக்காவுக்கு எதிரான பயங்கரவாதி பின்லேட னைத் தன்னுடைய நாட்டில் மறைத்து வைத்திருந்த நாடு பாக்கித்தான். அப்படியானால், இந்தியாவைப் பகைப்பதையே பிறப்பின் நோக்கமாகக் கொண்டுள்ள பாக்கித்தான் நமக்கு எதிராக பயங்கரவாதச் செயல்களை ஏவாமல் விடுமா?

Advertisment

அப்படி ஏவப்பட்ட வெடிகுண்டுத் தாக்கு தலின் விளைவுதான் நாற்பது வீரர்களின் பலி.

"இந்தியா பலவீனமான கைகளில் இல்லை' என்று முழங்கினார் தலைமையமைச்சர் மோடி. இது தற்பெருமையான பேச்சு.

இந்திய இராணுவம் பலவீனமானதாக இல்லை என்று அவர் சொல்லியிருக்க வேண்டும். ஏனெனில், இராணுவம் பலவீனமானதாக இருந்து, தலைமையமைச்சர் எவ்வளவு உரமானவராக இருந்தாலும் எவ்விதப் பயனும் ஏற்படாது.

மோடியின் மயிர்க்கூச்செறியும் பேச்சுக்கும் பாக்கித்தானை நோக்கி அவர் விடுத்த அறைகூவல்களுக்கும் காரணம், இது தேர்தலுக்கு அவருக்கு உதவும் என்பதுதான்.

கடந்த ஐந்தாண்டு காலத்தில் மோடியின் பொருளாதாரக் குளறுபடிகள், பெரு முதலாளி களுக்கு இசைவான ஆட்சிப் போக்கு, ரபேல் விமானக் கொள்முதலில், திவாலாகக் காத்திருக்கும் அனில் அம்பானியின் கையில், அவற்றின் பராமரிப்பை ஒப்படைத்து அவரை முப்பத்தைந் தாயிரம் கோடி ரூபாய் பயனடையுமாறு ஏற்பாடு செய்தது, அந்த ஒப்பந்தத்தில் உச்சநீதிமன்றத்தையே தவறாக வழி நடத்தியது. இவற்றையெல்லாம் பாக்கித்தானின் மீது போர் விமானங்களைப் பறக்கச் செய்வதன் மூலம் மூழ்கடித்து விடலாம் என அவர் புளகாங்கிதம் அடைந்தார்..

""பயங்கரவாதத்தை அப்படியே விட்டு வைக்க வேண்டும் என்று மாற்றார்கள் சொல்கிறார்களா? நாற்பது இந்திய வீரர்கள் செத்தது இவர்களுக்கு உறைக்கவில்லையா?'' என்று மோடி கேட்டார்.

மேலும் பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண் டும் என்பதிலும், பாக்கித்தான் ஒடுக்கி வைக்கப்பட வேண்டும் என்பதிலும் எந்த உணர்வுடையோ னுக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

இந்திய விமானங்கள் பாக்கித்தானுக்குள் ஊடுருவி, அதன் வான் பரப்பில் சீறிப் பாய்ந்தன.

பாக்கித்தானின் மீதல்ல போர், பாக்கித்தான் ஆதரவு தரும் பயங்கரவாதத்தின் மீது போர்.

பல போர் விமானங்கள் ஒன்றன் பின் ஒன்றாக சீறிப் பாய்கின்றன.

இந்திய உணர்வு ஒன்று திரள்கிறது. பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், "இதற் கொரு முடிவு வரப் போகிறது' நெஞ்சு விம்மக் காத்திருக்கிறார்கள்.

சீறிப் பாய்ந்த விமானங்கள் பயங்கரவாத முகாம்களை அழித்துவிட்டன. ஏறத்தாழ முன்னூற்றி ஐம்பது பயங்கர வாதிகள் அழிக்கப்பட்டுவிட்டனர். சென்ற வேலை முடிந்து எந்தச் சேதாரமும் இல்லாமல் விமா னங்கள் வெற்றியுடன் திரும்பி விட்டன என்று மோடி அரசு வெற்றி முழக்கம் செய்தது. அது வெற்று முழக்கமாக இருக்கும் என்று யாரும் ஐயுறவில்லை.

ஆகவே இந்திய மக்களும் இறும்பூதெய்தினர். ஆயினும் அது ஒன்றுதானா பயங்கரவாத முகாம். எல்லாவற்றைப் பற்றியும் இவ்வ ளவு பெரிய அரசிடம் கணக் கில்லாமலா இருக்கும்? எல்லா வற்றையும் ஒரே தடவையில் அழித்துவிட வேண்டியதுதானே. ஒரு தடவையில் இல்லா விட்டாலும் அடுத்தடுத்து முயல வேண்டியதுதானே என்றெல்லாம் கருதினர்.

ஆனால் அடுத்தடுத்து வந்த செய்திகள் எதுவும் அயல்நாட்டு செய்தித்தாள்கள், நியூயார்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட், கார்டியன் போன்றவை நாம் மகிழும் வண்ணம் செய்திகளைத் தரவில்லை.

Guardian:

"The attack was celebrated in India. But the Indian attack had missed its target".

Washington Post:

"No signs of mass casualities"

சீறிப் பாய்ந்த விமானங்கள் பாக்கித்தானில் பயங்கரவாதிகளின் முகாமான பாலகோட் (Balakot) வரை போனது உண்மை. குண்டுகளைப் போட்டதும் உண்மை. ஆனால் அவை பொட்டல் காட்டில் விழுந்து விட்டன.

ஆனால் வெற்றி முரசு கொட்டியே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருந்து, குறி தப்பிவிட்டது முக்கியமில்லை. தேர்தல் குறி தப்பிவிடக்கூடாது என்பதுதான் முக்கியம்.

modi

நம்முடைய விமானப்படை திறமை குறைந்ததன்று. எதிரிகளின் எல்லைக்குள் பிடிபட்டு விடக்கூடாது என்னும் பதட்டத்தில் குறி தவறியிருந்தால் ஒன்றும் குற்றமில்லை. மறுபடியும் முயன்று குறிக்கோளை நிறைவேற்றி இருக்கலாம். பயங்கரவாத ஒழிப்பு, நம் இன்றியமையாத தேவை அல்லவா? தேர்தலைவிட அது முக்கியம் அல்லவா?

ஆனால், மோடியின் நோக்கம் தேர்தலுக்கு இதை எப்படிப் பயன்படுத்துவது என்பது மட்டும்தான்.

வெளிநாடுகள் இதை எப்படி மதிக்கும்? பயங்கரவாதிகள் மேலும் ஊக்கம் பெற்றுவிட மாட்டார்களா?

விமானக் குண்டுவீச்சுகள் பொட்டல் காட்டில் நடந்ததாக நகையாடுகிறார் மம்தா. "நாட்டுக்காகப் போர் என்றால் நாங்கள் பின்னால் நிற்போம். மோடியின் போர் தேர்தலைக் குறியாகக் கொண்டது என்றால் எப்படிப் பின்னால் நிற்க முடியும்?' என்று மம்தா கேட்பது நியாயந்தானே?

இதற்கிடையில் நம்முடைய விமானம் ஒன்று சிதறி நம்முடைய விமானி ஒருவர் பாக்கித்தான் இராணுவத்திடம் சிக்கிக் கொண்டு விட்டார்.

அவரை விடுவிப்பது இந்தியாவுக்கு இரட்டைத் தலைவலி ஆகிவிட்டது.

ஆனால் பாக்கித்தான் அதைப் பெரிது படுத்தாமல் தானாகவே முன்வந்து அவரை விடுவித்து இந்தியாவிடம் ஒப்படைத்துவிட்டது.

அரச தந்திரிகள் அதற்குச் சொல்லும் காரணம், பாக்கித்தானுக்குச் சேதம் ஒன்றுமில்லை. இந்திய விமானியைத் தொடர்ந்து வைத்துக் கொள்வதன் மூலம் தேவையில்லாமல் உராய்வு பெருகும். ஆகவே பலூனில் இருந்த காற்றைப் பிடுங்கி விட்டு விட்டது பாக்கித்தான்.

அதனால் போர் மேகங்கள் கலைந்து விட்டன.

அமெரிக்கா பாக்கித்தானுக்குள் ஊடுருவி பின்லேடனைச் சுட்டு, நடந்ததை உலகுக்குப் படம் பிடித்துக் காட்டிவிட்டு, பின்லேடனைக் கடலில் கரைத்து விட்டதைப் போல, ஓர் வியப்பு இந்தியாவால் நிகழ்த்தப் பெற இருக்கிறது என்னும் மக்களின் எதிர்பார்ப்பும் பரபரப்பும் பொய்த்து விட்டன.

பிடிபட்டு, பாக்கித்தானால் விடுதலை செய்யப்பட்ட விமானிக்கு வானளாவப் புகழ்மாலை சூட்டுவதன் மூலம் எஞ்சி இருக்கிற ஓட்டைக் காப்பாற்றி வைத்துக் கொள்ள முடியாதா என்று தவிக்கிறார் மோடி.

எதனாலும் குற்றமில்லை. இந்தியா வலிய நாடு. ஓராண்டுக்கு நான்கு இலட்சம் கோடி இராணுவத்திற்குச் செலவழிக்கும் நாடு. ஏற்கனவே இந்திரா காந்தியால் இரண்டாகப் பிளக்கப்பட்ட நாடுதான் பாக்கித்தான். அதன் வாலை நறுக்குவது முடியாத ஒன்றன்று.

இப்போது பிசகிவிட்டது.

The operation did not achieve its purported objective

அந்த விமானி திரும்பி வந்தது ஆறுதலாக, பெருமிதமாக இருக்கிறது. அவ்வளவுதான். அதோடு முடித்துக்கொள்ளுங்கள்.

தேவைக்குமேல் நீட்டிக்கொண்டு போகாதீர்கள். சம்யுக்தையை எதிரி நாட்டுக்குள் நுழைந்து பிருதிவிராசன் தூக்கிக் கொண்டு வந்தானே, அதேபோல் அந்த விமானியை மீட்டதில் உங்கள் பங்கு ஏதாவதிருக்கிறதா மோடி என்று மக்கள் கேட்கமாட்டார்களா?

அடுத்த வேலையைப் பாருங்கள் மோடி.

(தொடரும்)