(103) கூச்சமில்லாமல் எப்படிப் பேசமுடிகிறது?
நேற்று எடப்பாடி அரசு ஐட்ரோ கார்பன் திட்டத்திற்கு இசைவு வழங்க முடியாது என்று உறுதிபட அறிவித்திருக்கிறது. அது மட்டுமன்று, காவிரி நடந்து வளப்படுத்துகின்ற டெல்டா மாவட்டங்களை "பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாகவும்' அறி வித்திருக்கிறது. தஞ்சை, திருச்சி, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக் கோட்டை, அரியலூர், கடலூர், கரூர் என இவை அனைத்தும் பாதுகாக்கப்பட்ட மண்டல அறிவிப்புக்கு உட்படுத்தப்பட்டிருக் கின்றன.
உழவர்களின் நலன்கள் பாதுகாக்கப்படும் என்னும் அறி விப்பு நம்முடைய உணவு உற்பத்தியைப் பாதுகாக்கும் அறிவிப்பே ஆகும்.
சட்ட வல்லுநர்களைக் கலந்து, மேற்குறிப்பிட்ட நோக் கங்கள் நிறைவேறும் வண்ணம் சிறப்புச் சட்டம் சட்டப் பேரவையில் நிறைவேற்றப் படும் என்றும் அறிவித்திருக் கிறார் முதல்வர் எடப்பாடி.
மைய அரசு எவ்வளவு முயன்றாலும், மாநில அரசின் தடையிலாச் சான்றிதழைப் பெறாமல், இது போன்ற திட்டங்களை நிறைவேற்ற முடியாது என்று எடப்பாடி ஆணித்தரமாகச் சொல்லியிருக்கிறார்.
மிச்சமிருக்கிற அதிகாரங் களின் பெருமை இப்போதுதான் அவருக்கும் தெரிந்திருக்கிறது. எல்லாவற்றையும் விடக் கொடுமை அண்மையில் மைய அமைச்சர் சவடேகர் இந்தத் திட்டம் கண்டிப்பாக நிறை வேற்றப்படும் என்று சொல்லியிருந்தது.
அந்தந்தப் பகுதி மக்களுக்கு இடையூறாக இருக்காதா என்று அந்தந்தப் பகுதி மக்களின் கருத்தை அறிந்துகொள்ளாமல் இயற்கையை நாசப்படுத்து வது, சூழலுக்குக் கேடு விளை விப்பது போன்ற திட்டங் களை நடைமுறைப்படுத்த முடியாது என்று மன்மோகன் சிங் கொண்டு வந்த சட்டத்தை திருத்தி, "என்னுடைய விருப் பம் முக்கியமா?, மக்களின் விருப்பம் முக்கியமா?' என்று மோடி முதல்வேலையாக அந்தப் பழைய சட்டத் தைக் கிழித்துக் குப்பைத் தொட்டியில் போட்டு விட்டார்.
கார்ப்பரேட்டுகளின் நலனா? உழவர்களின் நலனா? என்பதற்கு மோடியின் விடை கார்ப்பரேட்டுகளின் நலன் என்பதே. இந்த நிலையில் மஞ்சுவிரட்டு மாடுபோல், இப்படித் துள்ளிக்கொண்டு எடப்பாடி பாய்வார் என யாருமே எதிர்பார்க்க வில்லை.
வேளாண் அமைப்புகள் எடப்பாடியைப் பாராட்டி யிருக்கின்றன. பா.ம.க. தலைவர் பலபடப் பாராட்டியிருக் கிறார். இசுடாலின் என்ன நினைப்பாரோ என்று எதிர்தரப்புக் கூட்டணிக் கட்சி கள் நீள்அமைதி கொண்டு விட்டன. எதிர்க் கட்சியான தி.மு.க. மட்டும் இருப்புக் கொள்ளாமல் தவிக்கிறது.
"நீட் தேர்வை விட மாட்டோம் என்று தமிழக மக்களை ஏமாற்றியதுபோல, இன்றைக்கு விவசாயிகளை ஏமாற்றிக்கொண்டிருக் கிறார் எடப்பாடி' என்று தி.மு.க. தன் ஆற்றாமையை வெளியிட்டிருக்கிறது.
கல்வி, நலவாழ்வு, வேளாண்மை இவை மாநில அரசின் அதிகாரப் பட்டிய லில் உள்ளவை.
கல்விக்குள்ளும் நல வாழ்வுக்கும் தேவை இல்லாமல் மைய அரசு நுழைந்தது. இரண்டுக்கும் பொதுவான பட்டியலுக் குள் அவற்றை இழுத்துக் கொண்டதன் விளைவுதான் நீட் தேர்வு.
நீட் தேர்வை தி.மு.க. எதிர்த்ததுபோல் அ.தி. மு.க.வும் எதிர்த்தது. தமிழ் நாட்டுக்கு மட்டுமாவது விதிவிலக்கு அளிக்குமாறு அ.தி.மு.க. அரசு மன்றாடிப் பார்த்தது. எதுவும் நடக்க வில்லை, எதுவும் நடக்காது.
தி.மு.க. ஆட்சிக் கட்டி லில் இருந்திருந்தால், நீட் தேர்வில் விதிவிலக்குக் கிடைத்திருக்குமா? அல்லது கல்வியை மாநிலப் பட்டிய லுக்கு மாற்றியிருப்பார் களா?
அண்ணா மாநிலத் தன்னாட்சி கோரி நெருக்கடி கொடுத்துக் கொண்டிருந் ததற்கு மாறாக, இரண்டு கட்சிகளும் கடந்த ஐம்பதாண்டு காலமாகத் தமிழ்நாட்டைச் சுரண்டியது மிச்சம் என்று ஆட்சி செய்த காரணத்தால், தமிழ் மக்கள் தங்கள் அதிகாரங்களைப் படிப்படியாக இழந்து விட்டார்கள்.
நம்முடைய மண் ணில் என்ன செய்ய வேண்டும் என்று நாம் தீர்மானிக்க முடியாது, தில்லிதான் தீர்மானிக் கும்.
மைய அரசுக்குச் சொந்தமாக ஒரு கைப்பிடி மண் கூடக் கிடையாது. அயல் விவகாரங்களையும், இராணுவத்தையும், செலாவணியையும் கவனித்துக் கொண்டு இந்தியாவைக் கட்டிக் காக்கின்ற பெரிய வேலையில் கருத்துச் செலுத்துவதை விட்டுவிட்டு அம்பானி அடுப்படிக்குள் நுழைந்து கடுகு, உளுந்தம் பருப்புக்குக் கணக்கு பார்ப்பது போல் நீட் தேர்வு நடத்துகிறார் மோடி.
மொகலாயர்கள் ஆட்சியில் போல, தில்லியில் அதிகாரங்களைக் குவித்துக் கொண்டு, எதையும் திறம்படச் செய்ய முடியாதபடி அதிகாரப் பளு மைய அரசை அழுத்திக் கொண்டிருக்கிறது.
"மக்கள் எதைத் தவற விட்டு விட்டார்கள், அதைத் தேடிக் கொடுப்போம்' என்று பெரியார், அண்ணா, இராசாசி, காமராசர், முத்துராமலிங்கத் தேவர், ம.பொ.சி. போன்றவர்கள் பொது வாழ்க்கைக்கு வந்தார்கள்.
"எப்போது தூங்குவான், எவன் தொடையில் கயிறு திரிக்கலாம்' என்பதற்காகவே வந்தவர்கள், இப்போது பொதுவாழ்வை அடைத்துக் கொண்டிருக் கிறார்கள்.
"டெல்டா விவசாயிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி செய்துள்ள பச்சைத் துரோகத்தைத் திசை திருப்பவே இந்த அறிவிப்பு' எனத் தி.மு.க. அறிக்கை கூறுகிறது.
தி.மு.க. கையிலுள்ள மிட்டாயை எடப்பாடி பிடுங்கிக் கொண்டு விட்டது போன்ற பதற்றம் தி.மு.க.வை ஆட்கொண்டு விட்டது.
எடப்பாடி திரும்ப விளாசுகிறார்.
""ஐட்ரோ கார்பன் திட்டமும், மீத்தேன் திட்டமும் தமிழ்நாட்டுக்கு வந்ததற்குக் காரணமே தி.மு.க.தானே. இசுடாலின் முன்னிலையில் 2011-ல் தானே ஐட்ரோ கார்பன் திட்டத்திற்கான விதை தூவப்பட்டது.
மைய அரசில் பெட்ரோலிய அமைச்சராக இருந்த தி.மு.க.வின் தூண் டி.ஆர். பாலுதானே மீத்தேனுக்கான அனுமதியையே வழங்கியவர்''.
புள்ளி விவரங்களை அள்ளி வீசுகிறார் எடப்பாடி.
சவடேகர் போன்ற வடநாட்டு அமைச்சர்கள் துரோகம் கிடக்கட்டும். தமிழ்நாட்டிலிருந்து டில்லியை ஆளச் சென்ற தி.மு.க.காரரே இந்தத் தீமைக்கு அடிக்கல் நாட்டியிருக்கிறார் என்பதைக் கேள்வியுறும்போது உமட்டவில்லையா?
தெற்குத் தேய்வதற்கு வடக்கே காரணம் என்னும் வரலாற்று உண்மை ஒருபுறம் இருக்கட்டும்.
தெற்குத் தேய தெற்கே (தி.மு.க.வே)
காரணமாகலாமா?
கூச்சமில்லாமல் எப்படிப் பேச முடிகிறது?
(தொடரும்)