(24) அசிங்கமாக இல்லையா எடப்பாடி?
அண்மைக் காலமாகத் தேர்தல் பரப்புரைகளில் முதல்வர் எடப்பாடியும், பா.ம.க. தலைவர் இராமதாசும், "ஏன் மோடி மீண்டும் அரசமைக்க வேண்டும்' என்பதற்கு ஒரே மாதிரியான ஒரு காரணத்தை முன்வைக்கிறார்கள்.
"நிலைத்த அரசு (stable government) வேண்டும், ஆகவே மோடி வேண்டும்' என்பது அவர்களின் ஒருமனதான வாதம்.
எதிர்த்தரப்பினர் அமைக்கும் அரசு பல கட்சிகள் இணைந்து உருவாக்கும் கூட்டணி அரசாக இருக்கும். செயலலிதா தன்னுடைய ஆதரவை உருவி, வாஜ்பாய் அரசைக் கவிழ்த்தது போல கூட்டணி அரசுகள் கவிழ்க்கப்படுவதற்கான வாய்ப்புகள் ராகுல் தரப்பில் மிகுதி. ஆனால் மோடி பெரும்பகுதி தன்னைச் சார்ந்தே இருப்பதால், அவருடைய அரசு "நிலைத்த அரசாக' இருக்கும் என்பது அவர்களின் வாதம்.
மோடி எதிர்ப்பு வலுத்திருக்கும் இன்றைய சூழலில் அவர் மூன்றில் ஒரு பகுதி இடங்களிலேயே வெல்லமுடியும் என்னும் நிலையில், அவர் பிறருடைய தோள்களிலேயே சவாரி செய்யும் நிலைக்குத்தான் உள்ளாவார். அப்போது தூக்குகிறவர்கள் எந்த இடத்தில் வேண்டுமானாலும் பல்லக்கை வைத்துவிட்டு அகன்றுவிடக்கூடிய சூழ்நிலையில், பல்லக்கின் பயணம் பாதியிலேயே
(24) அசிங்கமாக இல்லையா எடப்பாடி?
அண்மைக் காலமாகத் தேர்தல் பரப்புரைகளில் முதல்வர் எடப்பாடியும், பா.ம.க. தலைவர் இராமதாசும், "ஏன் மோடி மீண்டும் அரசமைக்க வேண்டும்' என்பதற்கு ஒரே மாதிரியான ஒரு காரணத்தை முன்வைக்கிறார்கள்.
"நிலைத்த அரசு (stable government) வேண்டும், ஆகவே மோடி வேண்டும்' என்பது அவர்களின் ஒருமனதான வாதம்.
எதிர்த்தரப்பினர் அமைக்கும் அரசு பல கட்சிகள் இணைந்து உருவாக்கும் கூட்டணி அரசாக இருக்கும். செயலலிதா தன்னுடைய ஆதரவை உருவி, வாஜ்பாய் அரசைக் கவிழ்த்தது போல கூட்டணி அரசுகள் கவிழ்க்கப்படுவதற்கான வாய்ப்புகள் ராகுல் தரப்பில் மிகுதி. ஆனால் மோடி பெரும்பகுதி தன்னைச் சார்ந்தே இருப்பதால், அவருடைய அரசு "நிலைத்த அரசாக' இருக்கும் என்பது அவர்களின் வாதம்.
மோடி எதிர்ப்பு வலுத்திருக்கும் இன்றைய சூழலில் அவர் மூன்றில் ஒரு பகுதி இடங்களிலேயே வெல்லமுடியும் என்னும் நிலையில், அவர் பிறருடைய தோள்களிலேயே சவாரி செய்யும் நிலைக்குத்தான் உள்ளாவார். அப்போது தூக்குகிறவர்கள் எந்த இடத்தில் வேண்டுமானாலும் பல்லக்கை வைத்துவிட்டு அகன்றுவிடக்கூடிய சூழ்நிலையில், பல்லக்கின் பயணம் பாதியிலேயே நின்றுவிடாதா? அப்போது அது எப்படி நிலைத்த அரசாக இருக்க முடியும்?
ஆட்சி அமைக்க அப்படி ஒரு போதாமை ஏற்படும்போது, ஏற்கனவே ஆணவமான மோடி "பல கட்சி அரசைக்' கொண்டு செலுத்தக்கூடிய இணக்கமான குணம் கொண்டவரில்லை என்கிற காரணத்தால், அத்தகைய சூழலில் மோடி இறக்கப்பட்டு, மராத்தியத்தைச் சேர்ந்த கட்காரி அந்தப் பல்லக்கில் ஏற்றப்படுவார் என்கின்ற பேச்சு வெகுவாக பா.ச.க. வட்டத்தில் அடி படுகிறது.
ஆகவே எடப்பாடியும், இராமதாசும் நிலைத்த ஆட்சி வேண்டுமெனில் மோடி வேண்டும் என்பது ஒவ்வாத வாதம்.
சென்ற தேர்தலில் மாபெரும் தலைவரான அத்வானியை ஒன்றுமில்லாமல் செய்து ஒரு மூலையில் முடக்கிவிட்டு, அந்த இடத்திற்கு மோடியைக் கொண்டு வந்தது பா.ச.க.வின் அடித்தளக் கட்சியான R.S.S.
இப்போது மோடிக்குப் பதிலாகக் கட்காரியின் முகங் காட்டுவதும் R.S.S.தான்.
சோவியத் நாட்டில் அதிபர் ஸ்டாலின், அரசு அதிகாரத்தைக் கைப்பற்றியதும் பொதுவுடைமைக் கட்சி அவருடைய கைக்குள் ஒடுங்கிவிட்டது.
இந்திரா காந்தி 1971-ல் அளப்பரிய வெற்றியைப் பெற்றவுடன் இந்திரா தன்னுடைய முந்தானையில் காசு முடிவதுபோல், காங்கிரசை முடிந்து வைத்துக்கொண்டுவிட்டார்.
இவை எல்லா நாட்டிலும் எல்லாக் கட்சிகளிலும் நடைபெறும். ஆனால் R.S.S.ஸில் மட்டும் நடக்காது.
பாரதிய சனதா கட்சியின் "அரசியல் முகமாக' யார் இருக்கவேண்டும் என்பதை ஆர்.எஸ்.எஸ்.தான் தீர்மானிக்கிறது.
ஆயிரங்கால் பூச்சியின் வலிமையும் நகர்வின் வேகமும் அதன் ஆயிரங்காலில் அமைந்திருப்பது போல, பா.ச.க.வின் வலிமை மையங் கொண்டிருப்பது R.S.S.ஸில்தான்.
ஆகவே மோடியின் ஆட்சி நிலைத்த ஆட்சி என்பது போணியாகாத பேச்சு. மோடியே நிலையானவர் இல்லையே.
புல்வாமா பகுதியில் இராணுவ வீரர்கள் நாற்பதின்மர் சென்ற வண்டியை பாக்கித்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் வெடிவைத்துத் தகர்த்து விட்டதற்குப் பழிவாங்கும் முகத்தான் இந்திய இராணுவ விமானங்கள் பாக்கித்தான் எல்லையைத் தாண்டி நூற்றி ஐம்பது கல் உள்ளே போய்க் குண்டுகளை வீசிவிட்டு, எந்தச் சேதமும் இல்லாமல் திரும்பி வந்த வீரச்செயலை மோடியைத் தவிர யார் நிகழ்த்த முடியும் என்று எடப்பாடி பெருமிதத் தோடு வினவுகிறார்.
குறிவைக்கப்பட்ட தென்னவோ பயங்கரவாதிகளின் முகாம் மீது; குண்டு வீசப் பட்டதென்னவோ யாருமற்ற பொட்டல் காட்டில். வெளி நாட்டுத் தாளிகைகள் (ம்ஹஞ்ஹக்ஷ்ண்ய்ங்ள்) வேட்டியை உரிந்து விட்டன. வெட்கப்பட வேண்டிய மோடி வீரம் பேசுகிறார்.
எடப்பாடி இன்னொரு பெருமையையும் மோடிக்குச் சேர்க்கிறார். பாக்கித்தான் இராணுவத்திடம் மாட்டிக் கொண்டு விட்ட போர் விமானி ஒருவரைத் தன்னுடைய சாதுர்யத்தால் பத்திரமாக வெளியே கொண்டு வந்து விட்டார் மோடி என்கிறார்.
மாட்டிக் கொண்டு விட்ட விமானியை எப்படி மீட்பது என்று மோடி திகைத்துப் போயிருக்கும் போது, பாக்கித் தானின் அதிபர் இம்ரான்கான், அந்த விமானியைத் தானாகவே முன் வந்து விடுவித்து, காற்றைப் பிடுங்கி விட்டு விட்டார்.
அத்தகைய பாக்.அதிபரின் சாதுரியமான செயலுக்குப் பின்னர் போர் முரசு கொட்டுவது நகைப்புக்கு இடமாகிவிடும் என்று மோடி ஓய்ந்து விட்டார்.
ஆக மொத்தம் வரவு செலவுக் கணக்கெழுதி ஐந்தொகை எடுத்துப் பார்த்தால், புல்வாமாவில் நம்முடைய நாற்பது இராணுவ வீரர்கள் வெடிகுண்டுக்குப் பலியானதுதான் மிச்சம்.
இந்தியாவுக்கு இடையூறாக இருப்பது பயங்கர வாதம்தான். பயங்கரவாதிகளை உருவாக்குவது, வளர்ப்பது, பயிற்சி அளிப்பது எல்லாமே பாக்கித்தான் இராணுவம்தான்.
நம்மோடு நேருக்கு நேர் மோத முடியாத நிலையில், பாக்கித்தான் பயங்கரவாதிகளை வளர்த்து இடையூறு செய்கிறது.
இந்தப் பயங்கரவாதிகளின் தலைவன் அசார் என்பவன். அவன் இந்தியச் சிறைகளில் இருந்தான். பயங்கரவாதிகள் ஒரு இந்தியப் பயணிகள் விமானத்தைக் கடத்தி வைத்துக் கொண்டு, அசாரை விடுவித்தால்தான் பயணிகளை உயிரோடு விடுவிக்க முடியும் என்று பேரம் பேசினர்.
அன்றைய தலைமையமைச்சர் வாஜ்பாய் அசாரை விடுவித்தார்.
அவன்தான் இன்றைய பாக்கித்தானின் போற்றுதலுக்குரிய நாயகன். அவனை "உலகப் பயங்கரவாதியாக' அறிவிக்கச் சொல்லி இந்தியா ஐ.நா.விடம் கோரிக்கை வைத்தது.
ஆனால் சீனா தன்னுடைய வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி, அவ்வாறு அறிவிக்க விடாமல் தடுத்து விட்டது.
ஆனால் இந்தியா பாதுகாப்பான கைகளில் இருக்கிறது என்று தொடை தட்டுகிறார் மோடி.
பயங்கரவாதிகள் பாக்கித்தான் பாதுகாப்பில், பாக்கித்தான் சீனாவின் அரவணைப்பில் தொடை தட்டி ஆர்ப்பரிக்கும் கைகள் இப்போது ஓய்ந்து விட்டன. ஆனால் எடப்பாடி மட்டும் மோடிக்காக முண்டா தட்டுகிறார்.
உண்மையைச் சொல்லி ஓட்டுக் கேட்கத் தெரியாதா எடப்பாடி?
உண்மை கசக்கிறது என்றால் வாய்மூடி மௌனியாக இருக்க வேண்டியதுதானே!
இட்டுக் கட்டிப் பேசுவது அசிங்கமாக இல்லையா எடப்பாடி?
(தொடரும்)