வந்த செய்தி: அமைச்சர் இல்ல விழாக்கள், கரூரில் மட்டும் ஐந்து நாட்கள் அரசு விடுமுறை.
விசாரித்த உண்மை: கரூர் அ.தி.மு.க. மா.செ.வும் போக்குவரத்து அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கரின் மகள் அக்ஷயநிவேதாவின் பூப்புனித நீராட்டு விழா, அமைச்சரின் தம்பி ரெயின்போ சங்கரின் மகள் தாரணியின் திருமண வரவேற்பு விழா, கடந்த 22-ஆம் தேதி கரூரில் நடந்தது. முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் பன்னீர் தலைமையில் நடைபெற்ற விழாவுக்கு நகரமெங்கும் பிரம்மாண்ட ஃப்ளக்ஸ் பேனர்கள், தோரண வாயில்கள் என மாநாடு ரேஞ்சுக்கு காசை வாரியிறைத்திருந்தார் அமைச்சர். முதல்வரின் வாகனம் வளைந்து நெளிந்து செல்லக்கூடாது என்பதற்காக தேசிய நெடுஞ்சாலையான என்.எச்.7-ல் சாலைகளை உடைத்து வழி ஏற்படுத்தியது மாவட்ட நிர்வாகம். மாநிலம் முழுவதும் இருக்கும் பெரும்பாலான கல்லூரி மற்றும் தனியார் பேருந்துகள் கரூருக்கு சண்டிங் அடித்தன. வியாழன் (அக்.18) முதல் ஞாயிறு (அக்.21) வரை ஆயுத பூஜைக்காக அரசு விடுமுறை. ஆனால் விஜயபாஸ்கர் வீட்டுக் கல்யாணத்திற்கு கூட்டம் சேர்க்கவேண்டும் என்பதற்காக கரூரில் இருக்கும் அனைத்து மெட்ரிக் பள்ளிகள், கலை-அறிவியல் கல்லூரிகளுக்கு திங்கள் கிழமையும் (அக்.21) விடுமுறை விடப்பட்டது. மொத்தத்தில் ஜெ. வளர்ப்பு மகன் திருமணத்திற்கு நிகராக தனது இல்ல விழாக்களை நடத்திய பூரிப்போடு இருக்கிறார் போக்குவரத்து.
-ஜெ.டி.ஆர்.
வந்த செய்தி: உதயநிதி ஸ்டாலின் பொதுக்கூட்ட பெயரில் தி.மு.க. ஒ.செ. நடத்திய வசூல் மேளா.
விசாரித்த உண்மை: எடப்பாடி அரசின் ஊழல்களை மக்களிடம் அம்பலப்படுத்த தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடத்த கட்சிப் பதவிகளில் உள்ளவர்களுக்கு உத்தரவிட்டது தி.மு.க. தலைமை. இதன்படி கோவை மாவட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொள்ளும் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார் கிணத்துக்கடவு கிழக்கு ஒ.செ. செட்டிக்காபாளையம் துரை. கூட்ட ஏற்பாடுகளையெல்லாம் தடபுடலாக செய்திருந்தார். ஆனால் கூட்டம் நடத்த அவர் தேர்வுசெய்த பனப்படி கிராமம்தான் உ.பி.க்களிடையே உறுத்தலை ஏற்படுத்தியது. ""கிணத்துகடவு, நெகமம் மாதிரியான டவுனைத் தேர்ந்தெடுக்காம பனப்பட்டியை தேர்ந்தெடுத்ததற்கு காரணமே, அங்க பெரிய அளவிலான தேங்காய் மண்டிகளும் தொழிற்சாலைகளும் இருக்குதுங்க. கூட்டப் பேரைச் சொல்லி 50 "எல்'வரைக்கும் லம்பா வசூலித்த துரை, செலவு பண்ணுனது என்னவோ 5 லட்சம்தானுங்க இருக்கும். கட்சி போஸ்டிங்குக்கும் வசூல் நடக்குது'' என குமுறிக் கொந்தளித்தனர் உ.பி.க்கள்.
-அருள்குமார்
வந்த செய்தி: கான்ஸ்டபிளுக்கு டிரான்ஸ்பர் போட்ட எஸ்.பி.யின் ஆக்ஷன் குறித்து மாவட்ட போலீசின் விவாதம்.
விசாரித்த உண்மை: திருவண்ணாமலை எஸ்.பி. சிபிச்சக்கரவர்த்தி, சில நாட்களுக்கு முன்பு, நகரில் இருக்கும் பெரிய தெருவுக்கு தனது மனைவியுடன் இன்னோவா காரில் பர்சேஸிங்கிற்காக வந்துள்ளார். ஒரு மெடிக்கல் ஷாப் முன்பு காரை நிறுத்திவிட்டு செல்ல முயற்சித்தபோது, அங்கு டூட்டியில் இருந்த டிராபிக் கான்ஸ்டபிள் ஏழுமலை, எஸ்.பி. என தெரியாமல் காரை எடுக்குமாறு கூறியுள்ளார். "இதோ எடுத்துடுறேன்' எனச் சொல்லியவாறு, "நான்தான் எஸ்.பி.' என்றதும் "சாரி சார், யூனிஃபார்மில் இல்லாததால் எனக்குத் தெரியல' என்றவாறு அங்கிருந்து கிளம்பிவிட்டார் ஏழுமலை. எஸ்.பி., தனது அலுவலகம் சென்றபின், அந்த கான்ஸ்டபிள் டிரான்ஸ்பர் பண்ணப்பட்டார். இதுகுறித்து தனது கீழ்அதிகாரிகளிடம் பேசும்போது, ""அவரு டூட்டியைத்தான் செய்தார். ஆனா, நான் உயர்அதிகாரின்னு தெரிந்த பின்பும் மரியாதை தராம அந்த இடத்தைவிட்டுக் கிளம்பிட்டார். டிபார்ட்மெண்டில் டிஸிப்ளின் இல்லாவிட்டால் நிச்சயம் பனிஷ்மெண்ட்தான்'’என விளக்கியிருக்கிறார் எஸ்.பி.
-து.ராஜா
வந்த செய்தி: "மீ டூ'வில் அடுத்த அட்டாக்கை ஆரம்பிப்பாரா ஆண்ட்ரியா? கோலிவுட்டில் பரபரப்பு.
விசாரித்த உண்மை: "மீ டூ' விவகாரம் குறித்து நடிகை ஆண்ட்ரியா பேசும்போது, “""இதெல்லாம் பத்து வருஷங்களுக்கு முன்னால சாத்தியமில்லை. சினிமா உலகைப் பொறுத்தவரை படுக்கைக்கு அழைக்கும் விஷயத்தில் ஆண்கள் மீது மட்டும் தவறல்ல, பெண்கள் விருப்பப்படாமல் இதெல்லாம் நடக்குமா? சான்ஸுக்காக நான் படுக்கையை பகிர்ந்து கொண்டதில்லை. படுக்கைக்குச் செல்லாத நல்ல நடிகைகளைப் பற்றியும், சென்ற நடிகைகளைப் பற்றியும் எனக்குத் தெரியும்''’என்றார். "வடசென்னை'’படத்தில் அமீருடன் ஃபர்ஸ்ட் நைட் சீனில் பாதி நிர்வாணமாக நடித்திருக்கிறார் ஆண்ட்ரியா. அவரிடமிருந்தும் "மீ டூ' அட்டாக் பாயுமா என காத்திருக்கிறது திரையுலகம்.
-பரமேஷ்
வந்த செய்தி: தீபாவளிக்கு 1 "சி' கிடைக்கும். அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் குஷி.
விசாரித்த உண்மை: கடந்த வாரம் சேலத்தில் உள்ள தனது வீட்டில் ஒருநாள் பொழுதைக் கழித்து சென்னை திரும்பிய முதல்வர் எடப்பாடிக்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களிடமிருந்து ஏகப்பட்ட கோரிக்கைகள் சீறி வந்திருக்கின்றன. இது குறித்து கொங்குமண்டல எம்.எல்.ஏ. ஒருவர் வலிய வந்து நம்மிடம் வாய் திறந்தார். “""நாலஞ்சு எம்.எல்.ஏ.க்கள் சேர்ந்து சேலம் வீட்ல முதல்வரைப் போய் பார்த்தோம். "மாசம் 40 "எல்' தர்றேன்னு சொன்னீங்க, ஆனா 25-தான் வருது. கட்சி வேலை, கோவில் திருவிழா, நன்கொடை, கட்சிக்காரர்களுக்கு கவனிப்பு இதுக்கெல்லாம் பத்தமாட்டேங்குது. அதனால் இனிமே மாசம் 50 கொடுத்துருங்க. அதுபோக தீபாவளிக்கு 1 "சி' கொடுத்தாத்தான் கட்சிக்காரங்களை குளிப்பாட்ட முடியும்'னு சொன்னோம். அவரும் பல கணக்கு வழக்குகளை சொல்லிட்டு, "சரிய்யா... சென்னைக்கு போய் சீனியர்களிடம் கன்சல்ட் பண்ணிட்டு சொல்றேன்'னாரு. சீக்கிரமே நல்ல சேதி வரும்''’என்றார் அந்த எம்.எல்.ஏ.
-ஜீவாதங்கவேல்