வந்த செய்தி: ப.சிதம்பரம் மீது வருத்தத்தில் இருக்கிறார் பீட்டர் அல்போன்ஸ்.

விசாரித்த உண்மை: தமிழக காங்கிரஸ் தலைமையை மாற்றி அமைக்க விரும்பி, சமீபத்தில் ப.சிதம்பரத்துடன் ஆலோசனை நடத்தினார் கட்சியின் அகில இந்தியத் தலைவர் ராகுல் காந்தி. அப்போது "நீங்கள் தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொள்ளுங்கள் அல்லது சரியான நபரை அடையாளம் காட்டுங்கள்' என ராகுல் கேட்ட போது, "நான் யாரையும் சிபாரி செய்ய மாட்டேன். newsஅப்படி சிபாரிசு செய்தால் பலர் சங்கடப்படுவார்கள்'’ எனச் சொல்லிவிட்டாராம். இது தான் சமீபகாலமாக ப.சி.யுடன் நெருக்கம் காட்டும் பீட்டர் அல்போன்சை வருத்தமடைய வைத்துள்ளதாம். ஏனெனில் சமீபத்தில் ப.சி.யைச் சந்தித்த போது, "தமிழக காங்கிரசுக்கு நீங்கள் தலைவராக வர வேண்டும், உங்களுக்கு விருப்பமில்லையென்றால் என் பெயரையாவது சிபாரிசு செய்யுங்கள்' என வேண்டுகோள் விடுத்திருந்தார் பீட்டர் என்கிறது சத்தியமூர்த்தி பவன் வட்டாரம்.

-இளையர்

வந்த செய்தி: வெற்றிவேலை எதிர்த்து ஜே.சி.டி. பிரபாகரனை நிறுத்த எடப்பாடியிடம் வலியுறுத்தல்.

Advertisment

விசாரித்த உண்மை: தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக இருக்கும் தொகுதிகளில் சென்னை-பெரம்பூர் தொகுதியும் ஒன்றாகும். இத்தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் தினகரனின் தீவிர விசுவாசியான வெற்றிவேல். இடைத் தேர்தல் சம்பந்தமாக, அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க. ஆலோசனைக் கூட்டத்தை அமைச்சர்கள் நடத்தி வருகிறார்கள். அந்த வகையில் வடசென்னை ஆலோசனைக் கூட்டம் நடந்த போது, வெற்றிவேலை எதிர்க்க சரியான ஆள் ஜே.சி.டி.பிரபாகரன்தான் என முடிவு செய்யப்பட்டு, அதை முதல்வர் எடப்பாடியிடமும் வலியுறுத்தியிருக்கிறார்களாம் வடசென்னை நிர்வாகிகள். "ஆளே இல்லை பெல்லு வேற' என்ற வடிவேல் ஜோக் மாதிரி, தேர்தலே நடக்குமான்னு தெரியல, இதுல போட்டா போட்டியாம்’’ என்கிறது அ.தி.மு.க. தலைமைக் கழக வட்டாரம்.

-சஞ்சய்

வந்த செய்தி: 1. ரிலீசுக்கு முதல் நாள் வரை நடந்த ரஜினியின் "2.0' பஞ்சாயத்து. 2. பிரசாத் லேப்புக்கு டிமிக்கி கொடுத்த லைக்கா.

Advertisment

விசாரித்த உண்மை: இந்திய சினிமாவில் முதல் முறையாக 3டி தொழில்நுட்பத்துடனும் 4டி சவுண்ட் டிராக் சிஸ்டத்துடனும் 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகி ரிலீசாகியுள்ளது ரஜினியின் "2.0'’ உலகம் முழுவதிலும் 10 ஆயிரம் தியேட்டர்களில் ரிலீசாகி பிரமிப்பை ஏற்படுத்தினாலும், வழக்கம்போல், மிகப் பெரிய ஸ்டார்களின் படங்களுக்கு முதல் நாள் வரும் சிக்கலும் பஞ்சாயத்தும் போல 2.0 வுக்கும் வந்தது. படத்தில் செல்போன் பயன்பாட்டைப் பற்றி தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே படத்தை மறு தணிக்கை செய்ய வேண்டும் எனவும் ஒரு பார்ட்டி கிளம்பினார். ஒரு ஆர்டரா, ஃப்ளோவா போய்க்கிட்டிருக்கும் போது எங்கிருந்துய்யா வர்றீங்க என திகைத்த லைக்கா சுபாஷ்கரன், ஒரு வழியாக பஞ்சாயத்தை முடித்து வைத்தார். 2. இதே லைக்கா, சூர்யா, மோகன்லால், சாயிஷா சைகல் காம்பினேஷனில் கே.வி.ஆனந்த் டைரக்ஷனில் மெகா பட்ஜெட்டில் ஒரு படம் தயாரிக்கிறது. சென்னை பிரசாத் லேப்பில் ஒரு ஃப்ளோரில் 15 நாட்கள் ஷூட்டிங் நடத்தினார் கே.வி.ஆனந்த். ஃப்ளோர் வாடகையைக் கேட்டு, பிரசாத் லேப் தரப்பினர் கடந்த ஒரு மாதமாக லைக்கா ஆபீசிற்கு நடையாய் நடக்கிறார்கள்.

-பரமேஷ்

வந்த செய்தி: கமிஷன் கேட்டு நெருக்கடி கொடுக்கும் ஆளும் கட்சிப் புள்ளிகள். மேலிடத்தை கைகாட்டும் காண்ட்ராக்டர்கள்.

விசாரித்த உண்மை: திருச்சி மாவட்டத்தில் 2018-19ஆம் ஆண்டிற்கான அனைத்து வகை பொதுப்பணித்துறை வேலைகளுக்கும் சேர்த்து 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மிகப் பெரிய இந்த காண்ட்ராக்டை திருக்குமரன், திருமூர்த்தி ஆகிய இருவரும் எடுத்துள்ளனர். காண்ட்ராக்ட் எடுத்த கையோடு, பிள்ளையார் சுழி போடுவது போல், 3% கட்டிங் தொகையில் 1% தொகையாக, அனைத்துக் கட்சி எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களுக்கு தலா 20 லட்ச ரூபாய் பட்டுவாடா செய்துவிட்டனர். 1 வந்துருச்சு, மிச்சமுள்ள 2 எங்க போச்சு என மண்டை காய்ந்த ஆளும் கட்சி மாவட்ட நிர்வாகிகள் சிலர், திருக்குமரன், திருமூர்த்தியிடம் போய், "அந்த 2%-ஐ எப்ப பிரிச்சு தருவீங்க' எனக் கேட்டதும், "அது எப்பவோ மேலிடத்துக்கு போய்ச் சேர்ந்துருச்சு. நாங்க வேலைய ஸ்டார்ட் பண்ணப் போறோம் ஆளைவிடுங்க' என கூலாக பதில் சொன்னார்களாம்.

-ஜெ.டி.ஆர்.

வந்த செய்தி: சாதி அரசியல் பண்ணும் மக்கள் மன்ற மா.செ. பற்றி ரஜினியிடம் புகார்.

விசாரித்த உண்மை: ரஜினி மக்கள் மன்றத்தின் தூத்துக்குடி மா.செ.வாக கடந்த ஆண்டு நியமிக்கப்பட்டார் ஏ.ஜே.ஸ்டாலின். மா.செ.ஆனவுடன், தூத்துக்குடி நகரில் உள்ள பெரியார், அண்ணா, காமராஜர், வ.உ.சி., முத்துராமலிங்கத் தேவர் ஆகியோரது சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் ஸ்டாலின். இந்த ஓராண்டில் அந்தத் தலைவர்களின் பிறந்த நாள், நினைவு நாள் வந்த போதும் சிலைகளுக்கு மாலை அணிவிக்கவில்லை. ஆனால் தனது மீனவ சமுதாயத் தலைவரான குரூஸ் பர்னாந்தின் பிறந்த நாள் அன்று தான் போகாமல், மக்கள் மன்றத்தின் மாவட்டப் பொறுப்பில் உள்ளவர்களை அனுப்பி, பர்னாந்தின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வைத்துள்ளார் ஸ்டாலின். இதுதான் ரஜினி மக்கள் மன்றத்தின் மற்ற சமுதாயத்தினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி, ரஜினிக்கு புகாராக போயுள்ளது. ""மாதத்தின் முக்கால்வாசி நாட்கள் சென்னையில் இருந்து கொண்டு தலைவர் சொல்லும் பணிகளைச் செய்கிறார். அதனால்தான் தூத்துக்குடி வந்து தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவிக்க முடியவில்லை. மற்றபடி சாதி பார்த்து அரசியல் பண்ணுகிறவரல்ல எங்கள் மா.செ.'' என்கிறார்கள் ஸ்டாலின் தரப்பினர்.

-பரமசிவன்