வந்த செய்தி: டெல்லி பத்திரிகையாளர் உபேந்திரராய், 2ஜி விவகாரத்தில் சிக்கிக்கொண்டார்.

விசாரித்த உண்மை: அவர் மீதான புகாரில் அமலாக்கத்துறை அவரது 26.65 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை முடக்கியது. இதைத் தொடந்து, "நான் 2ஜி விவகாரத்தில் சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு எதிராக எழுதினேன். அதனால் என்னைக் குறிவைத்து நடவடிக்கை எடுக்கிறார்கள்' என்று உச்ச நீதிமன்றத்துக்குப் போனார் உபேந்திரராய். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற அமர்வு, "உங்கள் எழுத்துக்கும் உங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கும் தொடர்பு இல்லை' என்று தீர்ப்பு கூறிவிட்டது.

-பிரகாஷ்

வந்தசெய்தி: மத்திய அரசு மீது பாப்புலர் ஃப்ரெண்ட் ஆஃப் இண்டியா வழக்கு.

Advertisment

விசாரித்த உண்மை: தேர்தல் ஜனநாயகத்தை முன்னிறுத்தி இயங்கும் இந்த அமைப்பைத் தடை செய்யத் திட்டமிட்ட மத்திய அரசு, இதற்கு சர்வதேச தீவிரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்போடு தொடர்பு உள்ளது என்று கூறி, முதற்கட்டமாக, தான் ஆளும் ஜார்கண்ட் மாநிலத்தில் மட்டும் தடைசெய்ய வைத்தது. பாப்புலர் ஃப்ரெண்ட் ஆஃப் இண்டியாவோ, இதை எதிர்த்து ஜார்கண்ட் உயர்நீதிமன்றத்தில் வழக்கு போட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், "இந்த வழக்கில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை' என்று கூறி, அதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கிவிட்டது. இதைத் தொடர்ந்து மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராக வழக்குத் தொடரலாமா என்ற ஆலோசனையில் இருக்கிறார்கள் பாப்புலர் ஃப்ரெண்ட் அமைப்பின் நிர்வாகிகள்.

-இளையசெல்வன்

vaikundarajan

Advertisment

வந்த செய்தி: கார்னெட் மணல் மன்னர் வைகுண்டராஜனுக்கு செக் வைத்த மோடி அரசு.

விசாரித்த உண்மை: இல்லுமினைட், கார்னெட், சிர்கான் உட்பட ஏழு வகையான மினரல்களை வெளிநாடுகளுக்கு வைகுண்டராஜனின் வி.வி.மினரல்ஸ் கம்பெனியே நேரடியாக ஏற்றுமதி செய்துவந்தது. இப்படி அனுப்பப்படும் மினரல்ஸ் வகையறாக்களில் அணுசக்திக்குப் பயன்படும் யுரேனியமும் அடக்கம். இந்த யுரேனியம் ஏற்றுமதியால் அரசுக்கு பல ஆயிரம் கோடிகள் இழப்பு ஏற்படுவதுடன் நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுவதையும் சுட்டிக்காட்டி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் வி.வி.மினரல்சின் மணல் ஏற்றுமதிக்கு தடை விதித்தது. கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக வைகுண்டராஜனின் தொழில் ஸ்தம்பித்துள்ள நிலையில், மத்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் வெளிநாட்டு வர்த்தகத்துறையின் டைரக்டர் ஜெனரல் அலோக்வதன் சதுர்வேதி, கடந்த 21-ஆம் தேதி அதிரடி அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதன்படி, பீச் சாண்ட் மினரல்சின் அனைத்துக் கனிமங்களும் அணுசக்தி சட்டப்படி மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படுகிறது. இந்தியன் ரேர் எர்த் லிமிடெட் மூலமே ஏற்றுமதி செய்யவேண்டும், தனியார் கம்பெனிகள் நேரடியாக ஏற்றுமதி செய்யக்கூடாது என்பதுதான் அந்த அரசாணையின் முக்கிய அறிவிப்பு.

-பரமசிவன்

வந்த செய்தி: திருச்சியில் தினகரன் டீமை டென்ஷனாக்கிய ஃப்ளக்ஸ் பேனர். ஆளும் கட்சி தடாலடி.

விசாரித்த உண்மை: தமிழகத்தில் நடந்துவரும் கூட்டுறவுத் தேர்தலில் தினகரனின் அ.ம.மு.க.வினர் தேர்தல் களத்தில் குதித்து ஆளும்கட்சியினருக்கு ட்ஃப் ஃபைட் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில்... ஆளும் கட்சியின் திருச்சி புள்ளிகள், "திகார்'கரன் என்ன தியாகியா? என்று தினகரனுக்கு எதிராக கொட்டை எழுத்துகளில் நகர் முழுவதும் ஃப்ளக்ஸ் பேனர்கள் வைத்துவிட்டனர். அந்த பேனர்களில் "தினகரன் ஒரு தீயசக்தி'’என்ற வாசகங்களையும் எழுதி, -இப்படிக்கு சித்திரகுப்தன், அ.தி.மு.க. மாநகர் மாவட்டம், திருச்சி என தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார்கள். இதைப் பார்த்து டென்ஷனான தினகரன் டீமைச் சேர்ந்த சீனிவாசன், மனோகரன், சாருபாலா தொண்டைமான், ராஜசேகரன் ஆகியோர், போக்குவரத்து டி.சி.மயில்வாகனனைச் சந்தித்து, அந்த ஃப்ளக்ஸ் பேனர்களை எடுக்குமாறு மனு கொடுத்தனர்.

-ஜெ.டி.ஆர்.

keerthisuresh

வந்த செய்தி: ‘அந்த’ மாதிரி சீனில் நடிக்க மறுப்பு. கீர்த்தி சுரேஷுக்கு நழுவிய வாய்ப்பு.

விசாரித்த உண்மை: விஜய்யுடன் "சர்கார்',’விக்ரமுடன் "சாமி-2', விஷாலுடன் ‘"சண்டக்கோழி-2'’என டாப் ஸ்டார்களின் படங்களில் செமபிஸியாக இருக்கிறார் கீர்த்திசுரேஷ். இப்படிப்பட்ட நேரத்தில் தமிழில் தனுஷுடனும் தெலுங்கில் அல்லு அரவிந்துடனும் நடிக்க கால்ஷீட் கேட்டு கீர்த்திசுரேஷிடம் கதை சொல்லும்போதே "இரண்டு சீன்களில் ஹீரோக்களுடன் லிப்-லாக் பண்ணும்படி இருக்கும்' எனச் சொன்னதும் "ஐயோ சாமி ஆளைவிடுங்க...'’எனச் சொல்லிவிட்டாராம். இதுகுறித்து வெளிப்படையாக அந்த ஹீரோக்கள் பேரைச் சொல்லாமல், ""ஓவரா பாடியை எக்ஸ்போஸ் பண்ணும் காஸ்ட்யூமை போடமாட்டேன்னு ஆரம்பத்துல இருந்து தெளிவாக இருக்கேன். இப்போது "நடிகையர் திலகம்'’ படத்துக்குப் பின் கூடுதல் பொறுப்பும் வந்திருக்கு. இந்த நேரத்துலதான் லிப்-லாக் சீனில் நடிக்கும்படி ரெண்டு படங்களில் சான்ஸ் வந்துச்சு. ஆனா நான் மறுத்துட்டேன்''’என்கிறார் கீர்த்திசுரேஷ்.

-பரமேஷ்