வந்த செய்தி: தி.மு.க. எம்.எல்.ஏ. மீதான வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்; டென்ஷனான எடப்பாடி.
விசாரித்த உண்மை: 2013-ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் ஜெ.வுக்கும் எ.வ.வேலுவுக்கும் வார்த்தை மோதல். இதையடுத்து, தி.மு.க. எம்.எல்.ஏ. வேலு வீட்டை லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை போட்டது. வருமானத்துக்கு அதிகமாக 59 லட்ச ரூபாய் சொத்து சேர்த்திருப்பதாக வழக்கும் போட்டது. திருவண்ணாமலை நீதிமன்றத்தில் வேலுவுக்காக சீனியர் வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி வாதாட, வழக்கு தள்ளுபடியானது. உயர்நீதிமன்றத்திலும் அதே தீர்ப்புதான். கடந்த ஜனவரி மாதம், எடப்பாடியில் நடந்த தி.மு.க. பொதுக்கூட்டத்தில் தன்னை ஆவேசமாக அட்டாக் பண்ணி வேலு பேசியதை, உளவுத்துறை டேப்மூலம் கேட்டு டென்ஷனான முதல்வர், வேலு மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யச் சொன்னார். கடந்த 20-ஆம் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றமும் கீழ்நீதிமன்றங்களின் தீர்ப்பை உறுதி செய்தது. டென்ஷனில் இருக்கிறார் எடப்பாடி.
-து.ராஜா
வந்த செய்தி: ""அணி மாறுவேன்'' இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ்.சை மிரட்டும் அ.தி.மு.க. எம்.பி.
விசாரித்த உண்மை: கன்னியாகுமரி அ.தி.மு.க. மா.செ.வாக இருப்பவர் ராஜ்யசபா எம்.பி.யான விஜயகுமார். புகார்கள் அதிகமாவதால், மாவட்டத்தை கிழக்கு, மேற்கு என இரண்டாகப் பிரித்து கிழக்கிற்கு ஓ.பி.எஸ். ஆதரவாளர் அசோகனையும் மேற்கிற்கு இ.பி.எஸ். ஆதரவாளரான ஜான் தங்கத்தையும் நியமிக்கும் ஏற்பாடுகள் நடந்தன. இதைக் கேள்விப்பட்ட விஜயகுமார், ""என்னை நீக்கினால், டி.டி.வி.அணிக்குப் போய்விடுவேன்'' என்ற எச்சரிக்கையை இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். இரட்டையர்களிடம் நேரடியாகவே சொல்லிவிட்டாராம்.
-மணிகண்டன்
வந்த செய்தி: திவாகரன் கட்சியில் மா.செ. பதவி கேட்டுப் போய், வேண்டாமென திரும்பி வந்தவரின் கதை.
விசாரித்த உண்மை: அண்ணா திராவிடர் கழகத்திற்கு மாவட்டம் தோறும் புதிய நிர்வாகிகளை நியமிப்பதில் திவாகரனுக்குத் துணையாக அவரது மகன் ஜெய் ஆனந்தும் தலைமை நிலையச் செயலாளர் சிவராஜும் பணியாற்றி வருகிறார்கள். தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மதுரை மா.செ.வாகவும் வடக்கு தொகுதியில் வேட்பாளராகவும் போட்டியிட்டு, அதன்பின் ஜெ. முன்னிலையில் அ.தி.மு.க.வில் சேர்ந்தவர் சிவகங்கை கருப்பையா. இவர் கடந்தவாரம் சென்னை மகாலிங்கபுரத்தில் இருக்கும் அ.தி.க.தலைமை அலுவலகம் வந்து, ஜெய் ஆனந்தை சந்தித்து மதுரை மா.செ. பதவி கேட்டிருக்கிறார். “மதுரைக்கு பூவந்தி பாலசுப்பிரமணியனை போட்டாச்சு. வேணும்னா சிவகங்கையை ரெண்டாப் பிரிச்சு, உங்களை ஒரு மா.செ.வா போட்ருவோம்' என சொன்ன ஜெய் ஆனந்த் சில வெயிட்டான கண்டிஷன்களைச் சொன்னதும் கிர்ரடித்துப் போய் திரும்பிவிட்டாராம் கருப்பையா.
-நாகேந்திரன்
வந்த செய்தி: எம்.எல்.ஏ.க்கள் மூலமாக கட்சி நிர்வாகிகளை டூருக்கு அழைத்துச் செல்லும் எம்.பி. தம்பிதுரை.
விசாரித்த உண்மை: நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் பத்து மாதங்கள் இருந்தாலும் இப்போதே தயார் நிலையில் இருக்கிறார்கள் அ.தி.மு.க.எம்.பி.க்கள். கரூர் எம்.பி.யான தம்பிதுரை, தனது தொகுதிக்குட்பட்ட வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ. பரமசிவம் மூலமாக ஒ.செ.க்கள் சுப்பிரமணி, மலர்மன்னன், லட்சுமணன், ந.செ.க்கள் பாலசுப்பிரமணி, குமார், பெருமாள், அறவாழி ஆகியோரை டெல்லிக்கு ஃப்ளைட்டில் அழைத்துச் சென்று தாஜ்மகால் உள்ளிட்ட இடங்களை சுற்றிக் காட்ட ஏற்பாடு செய்துள்ளார். மற்ற ஐந்து தொகுதி எம்.எல்.ஏ.க்களையும் அழைத்து, இதேபோல் ஏற்பாடுகளைச் செய்யும்படி சொல்லியுள்ளாராம்.
-சக்தி
வந்த செய்தி: ஸ்ரீரெட்டி மீது விபச்சார வழக்கு கோரிக்கை, விளம்பர ஸ்டண்டா?
விசாரித்த உண்மை: ஆந்திர சினிமாப் புள்ளிகளை பலமாக தாக்கிய ஸ்ரீரெட்டி புயல் சென்னையிலும் மையம் கொண்டது. இந்த நிலையில் நடிகரும் இந்தியன் மக்கள் மன்றம் என்ற அமைப்பை நடத்திவருபவருமான வாராகி, கடந்த 23-ஆம் தேதி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஸ்ரீரெட்டி மீது விபச்சார வழக்கு தொடருமாறு புகார் கொடுத்தார். ‘வாராகி தயாரித்து, டைரக்ட் பண்ணியுள்ள "சிவா மனசுல புஷ்பா'’படம் சென்சாரில் சிக்கித் தவிப்பதால் இந்த பப்ளிசிட்டி ஸ்டண்ட் என பேச்சு அடிபட... அவரோ, ""அதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை. இங்கே இருக்கிற சென்சார் போர்டும், அதற்கு மேலேஇருக்கிற கமிட்டியும் ஏற்படுத்தும் தடங்கல்களால் நான் கோர்ட்டுக்குப் போகப்போறேன்'' என்கிறார்.
-பரமேஷ்
வந்த செய்தி: புதுக்கோட்டையில் 4 ஆயிரம் லிட்டர் டீசலை மண் குடித்த அதிசயம்.
விசாரித்த உண்மை: புதுக்கோட்டை அரசு போக்குவரத்துக் கழகத்தில் கடந்த மாதம், துறையின் உயரதிகாரிகள் ஆய்வு நடத்தியுள்ளனர். மானிய விலையில் வாங்கிய 4 ஆயிரம் லிட்டர் டீசல் குறித்த கணக்கு டேலியாகவில்லையாம். இது குறித்து டெப்போ நிர்வாகத்திடம் கேட்டபோது, ""“ஸ்டாக் வைத்திருக்கும் டீஸல் பேரலை பூமிக்குள் இறக்கி 25 வருஷமாச்சு. பேரல் துருப்பிடித்து டீசலை மண் குடித்திருக்கும் என செல்லூர்ராஜூப் பூர்வமான தகவலைச் சொல்லி ஃபைலை குளோஸ் பண்ணிவிட்டார்களாம். ஆனால் அதேபேரலில் இருந்துதான் இப்போதும் பஸ்களுக்கு டீசல் நிரப்புகிறார்கள்'' என்கிறார்கள் தோழர்கள்.
-செம்பருத்தி