2014 நாடாளுமன்றத் தேர்தலில் மோடியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி, பிரதமர் மோடி என்கிற அந்தஸ்தைக் கொடுத்து, அவரைக் காவல்காரராக வேலை வாங்குகிறது ஆர்.எஸ்.எஸ். அமைப்பு.

இதன் தலைவரான மோகன் பகவத், கடந்த மே. 06 முதல் மே. 09-வரை ஈரோட்டில் முகாமிட்டிருந்தார். நாட்டின் ஜனாதிபதியைக் காட்டிலும் கூடுதல் பாதுகாப்பு அவருக்குக் கொடுக்கப்பட்டிருந்தது.

rss

ஈரோடு யு.ஆர்.சி. என்கிற தனியார் பள்ளியில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாமில் நான்கு நாட்களுமே கலந்துகொண்டார் மோகன் பகவத். இதுபற்றி முகாமில் கலந்துகொண்டவர்களிடம் பேசியபோது, “""மொத்தம் 23 நாட்கள் இந்த பயிற்சிமுகாம் நடக்கிறது. தமிழகம் முழுவதும் 22 நாட்கள் நடைபெற்ற முதலாமாண்டு பயிற்சியை முடித்து, அதில் தேர்வான 80 பேர் இரண்டாமாண்டு பயிற்சியில் கலந்துகொண்டோம். இதை முடித்தபிறகு நாக்பூரில் இருக்கும் ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்தில் மூன்றாமாண்டு பயிற்சியில் கலந்துகொள்ள வேண்டும். அதில் தேர்வாகிறவர்கள், ஆர்.எஸ்.எஸ்.-சின் 58 சங்பரிவார் அமைப்புகளில் ஏதாவது ஒன்றின் மாநிலப் பொறுப்பில் நியமிக்கப்படுவார்கள். அப்படி வந்தவர்கள்தான் மோடியும், அமித்ஷாவும்''’என்றனர்.

ஆர்.எஸ்.எஸ். தலைவரான மோகன் பகவத் கலந்துகொள்ளும் அளவுக்கு இந்தப் பயிற்சி முகாம் முக்கியத்துவம் வாய்ந்ததா? அவர் என்னென்ன பேசினார் என்று நாம் கேட்டோம்… “""தலைவர்ஜி இந்துமதப் பண்புகள் பற்றி பயிற்சி கொடுத்தார். மற்றபடி வெளிப்படையான அரசியல் எதுவும் பேசவில்லை. 2020-க்குள் தமிழ்நாடு முழுவதும், குக்கிராமங்களில்கூட ஆர்.எஸ்.எஸ்.-சின் பரிவார் அமைப்புகள் ஏதாவது ஒன்றில், குறிப்பாக இந்து முன்னணியில் 20 பேர் தீவிர தொண்டர்களாக இருக்கவேண்டும். பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் ஒரு வார்டுக்கு 20 உறுப்பினர்கள் வீதம் சேர்த்து, அந்த இருபதுபேரும் குறைந்தபட்சம் இருநூறு இந்துக் குடும்பங்களோடு பக்திவடிவில் நெருக்கத்தை ஏற்படுத்த வேண்டும். 2020-க்குப் பிறகு இந்தியா ஒரு இந்துநாடு என்கிற அரசியல் அமைப்புக்குள் வரவேண்டும் என்ற திட்டத்தை மையப்படுத்தி அமைப்பை வளர்க்கச் சொன்னார்''’என விவரித்தனர்.

மேலும், ""தேர்தல் முடிவில் பா.ஜ.க.வுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பில்லை. இருந்தாலும் மாநிலக் கட்சிகளின் பட்டியலை எடுத்து வைத்திருக்கிறோம். அரசியல் சூழலுக்கேற்ப அதைப் பயன்படுத்தி மீண்டும் பா.ஜ.க. ஆட்சியை அமைப்போம் என நம்பிக்கை கொடுத்தார் தலைவர்ஜி. மோடி ஆட்சியில் அரசுத்துறைகளின் உயர் பொறுப்புகள் பலவற்றிலும் ஆர்.எஸ்.எஸ்.-க்கு அனுகூலமான அதிகாரிகளே இருக்கின்றனர். அவர்கள் மீண்டும் பா.ஜ.க. ஆட்சியமைக்க மறைமுகமாக பாடுபடுகிறார்கள். மீண்டும் மோடியையே பிரதமராக்கிவிட்டு, அரசியல் குழப்பம் வரும்போது புதிய முகத்தை பிரதமராக்க ஆர்.எஸ்.எஸ். தலைமை முடிவு செய்திருப்பது தலைவர்ஜியின் பேச்சிலிருந்து தெரிகிறது''’எனக் கூறினர்.

-ஜீவாதங்கவேல்