""ஹலோ தலைவரே, ‘தி.மு.க. கூட்டத்தில் அமித்ஷாவான்னு எழுந்த சர்ச்சைகளுக்கு பொதுக்குழுவில் மு.க.ஸ்டாலின் பேச்சு முற்றுப்புள்ளி வச்சது''.
""அமித்ஷா வராமல் நிதின் கட்காரி வந்ததாலதான் ஸ்டாலின் அப்படிப் பேசினாருன்னும் எதிர் தரப்பிலிருந்து விமர்சனம் கிளம்பியதே?''
""தலைவரே, கலைஞருக்கு மெரினாவில் இடம் ஒதுக்கணும்ன்னு தி.மு.க. இங்கே போராடியது போலவே, டெல்லியிடமும் உதவி கேட்டுச்சு. அப்ப நிதின்கட்காரி, எடப்பாடியைத் தொடர்புகொண்டு, நாட்டின் மூத்த தலைவரான கலைஞருக்கு மெரினாவில் ஆவன செய்யுங்கள்னு சொல்லியிருக்கார். அதே சமயம், ஆர்.எஸ்.எஸ்.சில் இருக்கும் ஒரு டீம், கலைஞருக்கு மெரினாவில் இடம் கொடுக்கக் கூடாதுன்னு எடப்பாடியிடம் கறாராச் சொல்லுச்சு. அத னால், எடப்பாடி, நிதின் பேச்சை அலட்சியப்படுத் திட்டார். இது தெரிஞ்சதால் நிதின் மீது தி.மு.க.வுக்கு மெல்லிய நட்புணர்வு வந்திருக்கு. இதை எல்லாம் தெரிஞ்சிக்கிட்ட பிரதமர் மோடி, தி.மு.க.வின் தயவு நாளை நமக்குத் தேவைப்படலாம். அதனால் அமித்ஷாவுக்கு பதில் நீங்க கலைஞர் நிகழ்ச்சிக்குப் போங்கன்னு நிதினிடம் சொல்லிட்டாராம். அழகிரி மூலம் தி.மு.க.வுக்கு நெருக்கடி தரும் முடிவும் பெயிலியரானதால் அழகிரியையும் பா.ஜ.க. கழற்றி விட்டுடிச்சி''.
""ஏற்கனவே நிதின்கட்காரிக்கும் எடப்பாடிக்கும் உரசல்ன்னும் ஒரு தகவல் வருதே?''’
""உண்மைதாங்க தலைவரே, மோடி அமைச்சரவையில் இருக்கும் திறமையான பர்ஃபெக்ட் அமைச்சர்கள் ஐவரில் நிதின்கட்காரிக்கு முதலிடம் உண்டு. அருண்ஜெட்லி, ராஜ்நாத்சிங், நிர்மலா சீதாராமன், பியூஷ்கோயல் ஆகியோர், இந்தப் பட்டியலில் இருக்கும் மிச்ச நால்வர் ஆவர். சர்ச்சைக் குரிய 8 வழிச்சாலைத் திட்டத்தை, எடப்பாடியோடு தனியா டிஸ்கஸ் பண்ணிவிட்டுதான் இங்கே அறிவிச்சார் நிதின். இந்த சாலைக்கான காண்ட்ராக்ட்டை கோவை, ஈரோடு பகுதிகளைச் சேர்ந்த தன் ஆட்களுக்குத் தருவதற்குத் துடியாய்த் துடிச்சார் எடப்பாடி. ஆனால் நிதின் கட்காரியோ, இது சர்வதேச லெவல்ல இருக்கும் நிறுவனங்கள் செய்ய வேண்டிய வேலைன்னு சொல்லி, ஒரு புகழ்பெற்ற சீன நிறுவனத்துக்கு அதைக் கொடுப்பதற்கான முயற்சியில் இறங்கிட்டார். இதனால் நொந்துபோன எடப்பாடி, நிதின் மீதான கோபத்தில் இருக்கா ருன்னு கோட்டை வட்டாரத்திலேயே டாக் இருக்கு.''’’
""நன்னடத்தை விதியைக் காட்டி சிறையிலிருந்து சசிகலாவை விடுவிக்க, அவர் தரப்பு போராடுதாமே?''’
""சசிகலா கணவர் எம்.நடராஜன் உயிரோடு இருந்தப்பவே, எடுக்கப்பட்ட முயற்சிதான். காங்கிரஸ் திருநாவுக்கரசர் மூலம், அப்ப கர்நாடக முதல்வரா இருந்த சித்தராமையாவை அணுகினார் எம்.என். தண்டனைக் காலத்துக்கு முன்பாக சசிகலா வை விடுவிக்க வழியில்லைன்னு சட்டக் காரணங் களைக் காட்டி கைவிரிச்சார் சித்தராமையா. இருந்தும் நிறைய சலுகைகள் அவரால் சிறையில் இருந்த சசிக்குக் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் அங்கிருந்த சிறைத்துறை அதிகாரி ரூபா, சசிக்கு முறைகேடாகத் தரப்பட்ட சலுகைகளையும் அதற்காக பணப்பரிமாற்றம் நடந்ததையும் கண்டுபிடிச்சார். இது தொடர்பாக விசாரணைக் கமிஷன் போடப்பட்டிருக்கு. இந்த நிலையில் கர்நாடகாவில் குமாரசாமி ஆட்சி வந்ததால், இளவரசி மகன் விவேக், மீண்டும் சசி விவகாரத்துக்காகப் படை யெடுத்தார். குமாரசாமி தரப்போ, ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களை எந்த வகையிலும் தண்டனைக் காலத்திற்கு முன்பாக வெளியேவிட வழியே இல்லைன்னு தீர்மானமாகச் சொல்லிவிட்டதாம்''’
""ஒரு காலத்தில், அரசாங்கம், காவல்துறை, சட்டம், எல்லாமும் தன் காலுக்குக் கீழேன்னு நினைச்சவருக்கே இப்படி ஒரு நிலைமையா?''’
""அவருக்கு மட்டும் இல்லைங்க தலைவரே, குட்கா விவகாரத்தில் மாதவராவ் என்கிற மார்வாடி சிக்கினார். இவர் வடசென்னை புழல்ல குடோனை வச்சிக்கிட்டு தமிழகம் முழுக்க குட்காவை சப்ளை செய்தவர். இவரிடம் வேலை பார்த்த கலா என்பவர் வீட்டில் சிக்கிய ஒரு டைரியில், தனக்கு ஆதரவா இருந்த அதிகாரிகள் உள்ளிட்ட பிரமுகர் களின் பெயர்கள் இருந்தது. குறிப்பா அப்ப சிட்டி கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந் திரன், அவருக்குப் பின் கமிஷனராக வந்த ஜார்ஜ், இப்ப வடக்கு மண்டல கூடுதல் கமிஷனரா இருக்கும் தினகரன், அமைச்சர் விஜயபாஸ்கர் போன்றவர்களின் பெயர்கள் இருந்தன. இப்ப வழக்கைக் கையில் எடுத்திருக்கும் சி.பி.ஐ. 29-ந் தேதி மாதவராவை 12 மணி நேரம் தங்கள் பாணியில் விசாரிச்சப்ப, அவர் இன்னும் பல அமைச்சர் கள், அதிகாரிகள் பெயரை எல்லாம் வாக்குமூலமாகக் கொடுத்திருக்காராம். குட்கா விவகாரம் அரசுக்கே பெரும் நெருக்கடியைக் கொடுக்கப் போகுது என்கிறார்கள்''’
""விவசாயிகள் கோபமும் எடப்பாடி அரசின் பக்கம் திரும்பியிருக்காமே?''
""முக்கொம்பு மதகு உடைகிற அளவுக்கு காவிரியில் தண்ணீர் வந்ததும் உடைஞ்சிடிச்சி. அப்படி இருந்தும், காவிரித் தண்ணீர் டெல்டா மாவட்ட கடைமடைப் பகுதி களுக்குப் போய்ச் சேரலை. முதல் வர் எடப்பாடியோ, விவசாயி கள் வழியில் துணை வாய்க்கால் கள் மூலம் தண்ணீரைக் கொண்டு போனதால்தான் கடைமடை பகுதிக்குத் தண்ணீர் போக லைன்னு சொன்னார். இதைக் கேட்டு கொதிச்சிப் போன விவசாயிகள், அதிகாரிகளின் துணையோடு ஆளுங்கட்சிப் புள்ளிகள் பல இடங்களிலும் மணலை அள்ளி ஆறுகளைப் பள்ளமாக்கிவிட்டார் கள். அந்தப் பள்ளங்களை மறைக்க அந்த பகுதிகளுக் கெல்லாம் தண்ணீரை அவர்கள் திருப்பி அனுப்பியதால் தான் எங்களுக்கு இந்த நிலை. இது தொடர்பாக முதல்வரை நேரில் சந்தித்து எங்கள் அதிருப்தியைச் சொல்லப் போறோம்ன்னு சொல்றாங்க''’
""நானும் இது தொடர்பா ஒரு தகவலைச் சொல்றேன். உடைந்து போன முக்கொம்பு பாலத்தை இப்பதான் வருவாய்த்துறையினர் பார்வையிட்டு அளக்க ஆரம்பிச்சிருக்காங்க. அதற்குள் முதல்வர் எடப்பாடி, முக்கொம்பு பாலம் 325 கோடியில் கட்டப்படும்ன்னு அறிவிச்சிருக்கார். இதைக்கேட்டு ஷாக்கான வருவாய்த்துறையினரும் நெடுஞ்சாலைத் துறையினரும், எஸ்டிமேட் போடறதுக்குள்ள எப்படி, எதை வச்சி இப்படியொரு அறிவிப்பை முதல்வர் வெளியிட்டார். இந்தப் பாலத்துக்கு அவ்வளவு தொகையா ஆகப்போகுது? ஏதோ லாபத்தை எதிர்பார்த்து பாலம் போடற மாதிரி இருக்கேன்னு விமர்சிக்கிறாங்க.''