புதிய தி.மு.க. அமைச்சரவையில் இடம்பிடித்திருக்கிறார் சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்தவரான செஞ்சி மஸ்தான். செஞ்சி பஸ் நிலையத்தில் கே.எஸ்.எம். என்ற பெயரில் நீண்டகாலமாக தேநீர் கடை நடத்தி வருகிறார் மஸ்தான். 70-களில் தி.மு.க. முன்னோடிகளில் ஒருவரான செஞ்சி ராமச்சந்திரன், அவரது கடையில் அமர்ந்துதான் கட்சிக்காரர்களைச் சந்திப்பதை வழக்கமாக வைத்திருந்தார். அந்த ஈர்ப்பில் தி.மு.க.வில் ஐக்கியப்படுத்திக் கொண்டவர்தான் மஸ்தான்.
சிறுசிறு பதவிகள் பெற்று முன்னேறியவர் இவர், பேரூர் கழகச்செயலாளராக இருந்ததோடு, 86 முதல் 2016 வரை ஐந்துமுறை பேரூராட்சிமன்றத் தலைவராக வெற்றிபெற்று, மக்கள் மத்தியில் செல்வாக்கோடு வலம் வந்தார். மாவட்ட செயற்குழு, மாநில பொதுக்குழு, ஆவின் சேர்மன் என பல்வேறு பதவிகளை அலங்கரித்த மஸ்தான், கலைஞரின் அன்பையும் பெற்றவர் ஆவார்.
விழுப்புரம் மாவட்டம், தெற்கு, வடக்கு மத்தி என மூன்றாகப் பிரிக்கப்பட்டபோது, இவர் வடக்கு மா.செ.வாக பதவியில் அமர்ந்தார். பிறகு 2016-ல் செஞ்சி சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளராக தி.மு.க. சார்பில் களமிறங்கி வெற்றிபெற்ற மஸ்தான், தற்போது இரண்டாவது முறையாக அதே செஞ்சியில் வெற்றிவாகை சூடி, அமைச்சரவையிலும் இடம் பெற்றிருக்கிறார்.
சிறுபான்மையினர் நலன் மற்றும் புதிய துறையான வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கும் மஸ்தான், தொடக்கக் கல்வி அளவில் படித்தவர். அமைச்சர் பதவி ஏற்றபிறகு சொந்த ஊரான செஞ்சிக்கு வந்த மஸ்தான், ”நான் அமைச்சர் என்பதால் எவரும் என்னிடமிருந்து விலகி நிற்காதீர்கள். நான் எப்போதும் போல உங்களில் ஒருவன்தான்” என்றபடி, தனது கடையில் டீ போட்டுக் கொடுத்து ஆச்சயரிப் படுத்தியிருக்கிறார். பல்வேறு இடங்களில் ஆய்வுக்குச் சென்று, கொரானாவைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டிருக்கிறார் மஸ்தான்.
66 வயதிலும் சுறுசுறுப்பாக இயங்கிவரும் இவருக்கு சைத்தானிபி என்ற மனைவியும் மைமுன்னிசா, ஜெய்முன்னிசா, தைமுன்னிசா என மூன்று மகள்களும் மொகத்தியார் மஸ்தான் என்ற மகனும் உள்ளனர். அனைவரும் திருமணமாகி, அவரவர் குடும்பத்தினரோடு வசித்து வருகின்றனர்.
தனது உழைப்பால் தனித்த அடையாளத்துடன் மேலெழுந்து வந்திருக்கும் மஸ்தான், மக்கள் மனதிலும் உயர்ந்திருக்கிறார். அவருக்கு அமைச்சர் பதவி கொடுத்த முதல்வர் ஸ்டாலினை, விழுப்புரம், செஞ்சி பகுதி மக்கள் நெஞ்சார வாழ்த்துகிறார்கள்.
பொன்முடி கோட்டையில் இன்னொரு அமைச்சர் என்று அரசியல் களத்தில் புருவங்கள் உயர்ந்தாலும், மக்களுக்கு இரட்டிப்பு பயன்தரும் வகையில் பதவியை அலங்கரிக்க வேண்டும்.