திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சட்டமன்றத் தொகுதிக் குட்பட்ட பீரகுப்பம் பகுதியில் அடிப்படை வசதிகள்கூட இல்லாமல் மூன்று தலைமுறைகளாக பழங்குடியான இருளர் சமூகத்தைச் சேர்ந்த 16 குடும்பங்கள் ஒதுக்குப்புறமாக வாழ்ந்துவருகின்றனர்.
இதுகுறித்து முதல்வர் கவனத்துக்குப் போகவே, திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் சந்திரனுக்கு தகவல் தருகிறார். இதையடுத்து கடந்த ஜூலை 9-ஆம் தேதி புதன்கிழமை மாலை அப்பகுதி தி.மு.க. நிர்வாகிகள் 9 பேருடன் பீரகுப்பம் பகுதிக்கு திடீர் விசிட்டடித்தார் எம்.எல்.ஏ.
சுமார் 6:30 மணியளவில் வேலைக்குச் சென்றிருந்தவர்கள் தங்கள் குடிசைக்குத் திரும்பினர். அனைவரிடமும், “எம்.எல்.ஏ. சந்திரன், "உங்கள் பிரச்சனைக்குத் தீர்வு காணத்தான், தமிழக முதல்வர் ஸ்டாலின் என்னை அனுப்பி வச்சிருக்கார்''’என்றார்.
அங்கிருந்த 16 குடிசை வீடுகளில் ஒரேயொரு குடிசையில் மட்டும் லைட் எரிந்துகொண்டிருந்தது. எம்.எல்.ஏ. சென்று பார்த்தபோது, அங்கிருக்கும் பள்ளி மாணவர்கள் அனைவரும், சோலார் மூலம் எரியும் சின்ன எல்.இ.டி. பல்பை வைத்து படித்துக்கொண்டிருந்தனர். அருகே சென்றமர்ந்த சந்திரன், நாளைக்கு உங்களுக்கு கரண்ட் வரும். வீடு வரும். ரோடு வரும்… தண்ணி வரும். இது தமிழக முதல்வர் உத்தரவு'' என்றார்.
காலையிலே அதிகாரிகளுக்கு போன் செய்து ஸ்பாட்டுக்கு வரவைத்தார். மின்சார வாரியப் பொறியா ளர் முருகவேல் பூபதி, வட்டார வளர்ச்சி அலுவலர் சந்தானம், பொறியாளர் தர்மேஷ் ஆகியோர் ஸ்பாட் டுக்கு விரைந்தனர். உடனடியாக குடிநீர் இணைப்புக்கு பள்ளம் தோண்டி வேலை ஆரம்பிக்கப்பட்டது. இன்னொருபுறம் மின்சார இணைப்பு கொடுக்க தேவை யான வேலைகள் துவங்கின. இவைதவிர அவர்களின் இதர குறைகளை கேட்டுக் குறித்துக்கொண்டு, அதிகாரிகளை நடவடிக்கை எடுக்கச் சொல்லிவிட்டு அங்கிருந்து விடைபெற்றார் எம்.எல்.ஏ. சந்திரன்.
மீண்டும் திங்கட்கிழமை வந்த சந்திரன் அதிகாரி களுடன் சேர்ந்து , எம்.ஜி.என்.ஆர்.ஜி.எஸ். திட்டத்தின் கீழ் சாலைவசதி, இரண்டு தெருவுகளுக்கு லைட் வசதி, கான்கிரீட் ரோடு, எய்டு இந்தியா அமைப்பு மூலம் தற்போது குடிசையில் குடியிருக்கும் 16 பயனாளிகளுக்கு 4.5 லட்சத்தில் வீடுகள் கட்டிக்கொடுக்க பூமி பூஜை போட்டார். கிரி என்ற மாணவன் நெடுந்தூரம் பள்ளிக்கு நடந்தே சென்றுவருவதைக் கவனித்த சந்தி ரன், சைக்கிளை பரிசாக வழங்கினார். மோட்டாருடன் சின்டெக்ஸ் தண்ணீர் டேங்க் வைத்து குடிதண்ணீர் வசதியும் செய்யப்பட்டது, மூன்று தலைமுறைகளாக நாடோடிகளாக அங்கும் இங்குமாய் குடிசை போட்டு வாழ்ந்துகொண்டிருந்த மக்கள் முதல்முறையாய் சொந்த வீட்டில் குடியேறப்போகிறார்கள்.
முதல்வரின் உத்தரவு, பழங்குடியைச் சேர்ந்த 16 குடும்பங்களின் வாழ்வில் வெளிச்சமேற்றி வைத்துள்ளது.