தென்னிந்தியாவில் இருந்த ஒரே காங்கிரஸ் அரசான புதுச்சேரி யூனியன் பிரதேச காங்கிரஸ் அரசை கவிழ்த்து, ஆட்சிக் கனவில் உதட்டை நக்கிக்கொண்டிருக்கிறது ருசிகண்ட பூனையான பா.ஜ.க..
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 30 சட்டமன்ற தொகுதிகள். சில மாதங்களுக்கு முன்பு பாகூர் சட்டமன்ற உறுப்பினர் தனவேலு ஒழுங்கு நடவடிக்கை காரணமாக தகுதிநீக்கம் செய்யப்பட்டார். தொடர்ந்து அமைச்சர்களாக இருந்த நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், சட்டமன்ற உறுப்பினர்கள் லஷ்மிநாராயணன், ஜான்குமார், தி.மு.க. உறுப்பினர் வெங்கடேசன் என 5 பேர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். இதனால் காங்கிரஸ் ஆதரவு உறுப்பினர்களின் எண்ணிக்கை 10 ஆக குறைந்தது.
அதேசமயம் எதிரணியில் என்.ஆர். காங்கிரஸ் 7, அ.தி.மு.க. 4, பா.ஜ.க. நியமன எம்.எல்.ஏக்களின் ஆதரவையும் சேர்த்து தங்கள் தரப்பில் 14 பேர் உள்ளதாகவும், காங்கிரஸ் அரசு பெரும்பான்மை இழந்துவிட்டதாகவும் கூறி எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்ததையடுத்து துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், ‘22-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை நிரூபிக்கவேண்டும்’ என உத்தரவிட்டார்.
அதையடுத்து சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் 22-ஆம் தேதி காலை 10 மணிக்கு சபாநாயகர் சிவக்கொழுந்து தலைமையில் தொடங்கியது. நியமன எம்.எல்.ஏக்களுக்கு வாக்குரிமை அளிக்கக்கூடாது என கூறி ஆட்சியை காப்பாற்ற காங்கிரஸ் திட்டமிட்டது. ஆனால் எதிர்க்கட்சி வரிசையில் நியமன எம்.எல்.ஏ.க்கள் உட்கார்ந்திருந்ததைப் பார்த்ததும் காங்கிரஸ் தரப்பு கடுகடுப்பானது.
நாமாக ராஜினாமா செய்யக்கூடாது’, எதிர்க்கட்சிகள் கவிழ்த்ததாக இருக்கவேண்டுமென கணக்குப் போட்டிருந்த நாராயணசாமி, துணைநிலை ஆளுநரின் இடைஞ்சல், ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி பற்றி ஒரு நீண்ட உரையாற்றிவிட்டு, ""பெரும்பான்மை உறுப்பினர்கள் எங்களை ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கையில் வாக்கெடுப்பில் கலந்துகொள்கிறோம்'' என்றார்.
அப்போது பேசிய அரசு கொறடா அனந்தராமன், ""ஜனாதிபதி தேர்தலின்போது நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு வாக்குரிமை அளிக்கப்படவில்லை. எனவே இப்போதும் வாக்களிக்கும் உரிமை அளிக்கப்படக்கூடாது'' என வலியுறுத்தினார்.
அதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள், "உச்சநீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் அறிவுறுத்திய பின்பும் எம்.எல்.ஏ.க்களுக்கு வாக்குரிமை இல்லை என்பதை ஏற்கமுடியாது'' என வாக்குவாதம் செய்தனர். இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் அதிகரித்த சூழலில்... ""ஒத்துழைப்பு அளித்த அனைவருக்கும் நன்றி'' எனக் கூறி முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் தரப்பினர் திடீரென வெளிநடப்பு செய்தனர். வாக்கெடுப்பு தொடங்காம லேயே காங்கிரஸ் தரப்பு உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்த சூழ்நிலையில் காங்கிரஸ் அரசு பெரும்பான்மை இழந்ததாக சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார்.
சட்டசபையிலிருந்து வெளியேறிய முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர் கள் நேராக ராஜ்நிவாஸ் சென்று துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனிடம் அமைச்சரவை ராஜினாமா கடிதத்தை அளித்தனர். பின் நாராயணசாமி, ""மக்களால் தேர்ந்தெடுக் கப்படாத நியமன எம்.எல்.ஏ.க்களை வைத்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியைக் கவிழ்த்த பா.ஜ.க., என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க. வினருக்கு மக்கள் தகுந்த தண்டனை அளிப்பார்கள்'' என்றார்.
இதுகுறித்து காங்கிரஸ் பிரமுகர்களிடம் விசாரித்ததில், ""காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை ஒவ்வொருவராக பா.ஜ.க. வளைத்த சூழலில்... எதிர்க்கட்சித் தரப்பில் ஏற்கனவே குதிரை பேரம் பேசியதாக எம்.எல்.ஏ. விஜயவேணி, சபாநாயக ரிடம் கொடுத்த புகாரை விசாரணைக்கு எடுத்து அதில் தொடர்புடைய என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜெயபால், அ.தி.மு.க. வையாபுரி மணிகண்டன் இருவரையும் தகுதிநீக்கம் செய்ய சபாநாயகரிடம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர் உடன்படவில்லை. மேலும் நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு வாக்குரிமை அளிக்கக்கூடாது. அதில் சட்டச் சிக்கல் வந்தாலும் நீதிமன்றம் செல்லட்டும், தீர்ப்பு வருவதற்குள் தேர்தல் வந்துவிடும் எனவும் கூறப்பட்டது. ஆனால் அவர் எதற்கும் உடன்படவில்லை. ‘அவரையும் வளைத்து விட்டார்களோ…’என்ற ஐயம் வந்ததால்தான் அமைச்சரவை ராஜினாமா முடிவை நாராயண சாமி எடுத்தார்''’என்கிறார்கள்.
இதனிடையே ஆட்சியில் அமர ரங்கசாமி மற்றும் பா.ஜ.க மேலிடம் விரும்பவில்லை. தேர்தல் வரை கவர்னரின்கீழ் ஆட்சி, நிர்வாகம் இருக்கட் டும். மக்களைக் கவரும் சில திட்டங்களைச் செயல்படுத்தி மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே ஆட்சி இருந்தால்தான் நல்லது நடக்கும் என மக்கள் நம்பும்வகையில் தேர்தலை சந்திக்கலாம் என முடிவெடுத்தனர். உடனடியாக ஆட்சிப் பொறுப்பை ஏற்காததால் என்.ஆர்.காங்கிரஸில் சிலரும், அ.தி.மு.க, பா.ஜ.க முன்னணித் தலைவர் களும் கடும் அப்செட் ஆகிவிட்டார்களாம்.
இந்த சூழல் குறித்து நம்மிடம் பேசிய அரசியல் பார்வையாளர்கள், “""இது புதுச்சேரிக்கு வழக்கமானதுதான். அதற்கு காரணம், இங்கு கட்சியை விட தனி நபர்களின் ராஜ்ஜியம் நடப்பதும், குறைவான சட்டமன்ற உறுப்பினர்கள் இருப்பதும்தான்''’என்கின்றனர்.
நான்கே முக்கால் ஆண்டுகள் புதுச்சேரியில் நிழல் அரசாக நடந்த துணைநிலை ஆளுநர் ஆட்சி, தேர்தல் வரை நிஜ அரசாக புதிய ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தலைமையில் தொடர்கிறது.