"ஹலோ தலைவரே, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தை, டெல்லி அவசரமாக அழைத்து ரகசிய ஆலோசனை நடத்தியிருக்கு.''
"கவர்னர் மாற்றம்னு தகவல் வருதேப்பா?''
"ராஜ்யசபாவில் பா.ஜ.க.வுக்கு தேவையான ஆதரவைப் பெற, தி.மு.க.வின் ஆதரவை எதிர்பார்க்கிறார் மோடி. ஆனால் தி.மு.க.வோ நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கைன்னு தமிழக நலனுக்காக, டெல்லியோடு முரண்பட்டு நிற்குது. அதேபோல் மாநில உரிமைகளைக் காப்பாற்றிக் கொள்வதிலும் அது உறுதியாகவும் தெளிவாகவும் இருக்குது. பா.ஜ.க. வின் தூது-மிரட்டல்களுக்கு தி.மு.க. பணியலை. அதனால், தி.மு.க.வை மிரட்டியாவது பணிய வைக்கணும்ன்னு நினைக்கிற டெல்லி, கவர்னராக பன்வாரிலாலை வைத்துக் கொண்டு, தி.மு.க. அரசை எதுவும் செய்யமுடியாதுன்னு நினைக்குது. அதனால..’''’
"அதனால...?''
"தி.மு.க. அரசுக்கு நெருக்கடி கொடுக்கத் தோதாக, சட்ட நுணுக்கமும் சாணக்கிய அரசியலும் தெரிந்த ஒருவரை தமிழக கவர்னராக்கணும்னு பா.ஜ.க. மேலிடம் திட்டமிடுது. இதுபற்றி விவாதிக்கவே கவர்னர் பன்வாரிலாலை அது டெல்லிக்கு அழைத்ததுன்னு அங்கிருந்து வந்த தகவல் சொல்லுது. டெல்லியில் இந்த விவகாரத்தை எல்லாம் கவர்னர் பன்வாரிலாலிடம் விளக்கியதோடு, நீங்க வேறு மாநிலத்திற்கு கவர்னராகச் செல்கிறீர்களான்னும், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தும், பிரதமர் மோடியும் அவரிடம் கேட்டிருக்காங்க. பன்வாரிலாலோ, நான் இனி ஓய்வெடுக்கலாம்ன்னு நினைக்கின்றேன். மற்றபடி உங்கள் விருப்பம் எதுவாக இருப்பினும் ஏற்கிறேன்னு சொல்லியிருக்கார். 9-ந்தேதி ராஜ்நாத் சிங்கிற்கு பிறந்தநாள் என்பதால் அவரையும் அங்கே சந்தித்து வாழ்த்து சொல்லிவிட்டுத் திரும்பியிருக்கிறார் கவர்னர். இந்த நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர்களான ரவிசங்கர் பிரசாத், பிரகாஷ் ஜவடேகர், பிரேந்திரசிங் ஆகிய மூவரில் ஒருவரை தமிழக கவர்னராக நியமிக்கலாமான்னு டெல்லி தீவிர ஆலோசனையில் இருக்குதாம்.''
"தி.மு.கவுக்கு தலைவலி கொடுக்கலாம்னு கொங்குநாடுனு பா.ஜ.க. சைடிலிருந்து குரல்கள் கேட்குதே?''
"மத்திய அரசை ஒன்றிய அரசுன்னு தி.மு.க. சொல்வது உள்பட பலவற்றையும் பா.ஜ.க. விரும்பலை. ஒரே தமிழ்நாடாக இருந்தால், திராவிடக் கட்சிகள்தான் ஆட்சியைப் பிடிக்குதுங்கிறதால, அதை இரண்டாக்கணும்னு பல கட்சிகளுக்கும் ஆசை உண்டு. வடதமிழ்நாடு, தென்தமிழ்நாடுனு பிரிக்கணும்னு சில ஆண்டுகளுக்கு முன் குரல் கேட்டது. இப்ப, தி.மு.க. அரசியல்ரீதியா வீக்கா இருக்கும் மேற்கு மண்டலத்தை கொங்குநாடுங்கிற தனி மாநிலமாக்கணும்னு சவுண்டு விட ஆரம்பிச்சிருக்காங்க. கொங்கு வளர்ச்சி பற்றி தி.மு.க. கூட்டணிக் கட்சியான கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியின் தலைவர் ஈஸ்வரன் உள்பட பலரும் பேசியிருக்காங்க. 10 எம்.பி.க்கள் கொண்ட கொங்கு மண்டலப் பகுதிகளைத் தனியே பிரித்தால் எப்படி இருக்கும்னு பா.ஜ.க. கணக்குப் போடுது. மேற்கு மண்டலத்தில் அ.தி.மு.க.வை மிஞ்சி பா.ஜ.க. கால் ஊன்ற நினைக்குது. முதல்வர் ஸ்டாலினோ, மிகுந்த கவனத்தோடு இந்த விவகாரத்தைக் கவனித்துக்கொண்டு இருக்கிறார்.''
"கமலின் ம.நீ.ம. கட்சியில் இருந்து விலகிய மேற்கு மண்டலத்து பிரமுகர் மகேந்திரன் தி.மு.க.வில் சேர்ந்துட்டாரே?''
"ஆமாங்க தலைவரே, இவருக்கு கொங்கு மண்டல அரசியலில் முக்கியத்துவம் ஏற்படும் வகையில் கோவை மேயர் வேட்பாள ராகவோ, ராஜ்யசபாவுக்கோ மகேந்திரனை தி.மு.க தலைமை நிறுத்தலாம்னு பேச்சு அடிபடுது. கோவை தி.மு.க. நிர்வாகிகளோ, நாங்க வீக்கா இருக்கோம். அதற்காக மாற்றுக்கட்சியில் இருந்து வர்றவங் களை முன்னிலைப்படுத்தி பதவி கொடுத்தால், கட்சியின் உண்மை யான தொண்டர்கள் எப்படி ஒத்துழைப்பாங்கனு கேட்குறாங்க. தி.மு.க குடும்பத்தைச் சேர்ந்த கார்த்திகேய சிவசேனாபதியைக் கொண்டு வந்தாலும் வெற்றி கிடைக்கலை. நிர்வாகிகள் மாற்றத்தாலும் பயனில்லை. கொங்கு மண்டலத்துக்குன்னு தனி ஃபார்முலாதான் யோசிக்கணும்னு தி.மு.க தலைமை நினைக்குதாம். உதயநிதியும் கவனம் செலுத்துறாரு.''
"தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்தை முதல்வர் ஸ்டாலின் சந்திச்சி உடல்நலம் விசாரிச்சிருக்காரே?''
"ஆமாங்க தலைவரே, அதுக்கு ஒரு காரணம் இருக்கு. அ.தி.மு.க.வைப் பொறுத்தவரை, தங்களின் படுதோல்விக்கு தே.முதி.க.வுட னான கூட்டணியை முறித்துக்கொண்டதும் ஒரு காரணம்ங்கிற எண் ணம் இருக்குது. அதனால், வர இருக்கும் உள்ளாட்சித் தேர்தலில், அந்தக் கட்சியை நழுவ விட்டுவிடக் கூடாதுன்னு அ.தி.மு.க நினைக் குது. ஆகவே அது அந்தக் கட்சியின் இளைஞரணி செயலாளர் சுதீஷை மூவ் பண்ணிக்கிட்டு இருக்குது. இந்த விவகாரம் முதல்வர் ஸ்டாலின் கவனத்துக்குப் போக, விஜயகாந்த்தைச் சந்தித்து உடல்நலம் விசா ரித்த ஸ்டாலின், முதல்வர் நிவாரண நிதிக்காக விஜய காந்த் கொடுத்த காசோலையையும் வாங்கிட்டாரு.''
"அ.தி.மு.க. எக்ஸ் எம்.பி.யான டாக்டர் மைத்ரேயனும், தி.மு.க. பக்கம் பார்வையைத் திருப்புறாராமே?''
"பா.ஜ.கவிலிருந்து அ.தி.மு.க.வுக்கு வந்து ஜெ.வால் எம்.பியாக்கப்பட்ட மைத்ரேயன் இப்ப அங்கே பவர் இல்லாமல் இருக்காரு. பழைய படி பா.ஜ.க.வுக்கும் திரும்பலாம்னா அங்கேயிருந்து சிக்னல் இல்லை. அதனால், நீட் விஷயத்தில் தி.மு.க. நிலைப்பாட்டுக்கு ஆதரவா குரல் கொடுத்திருக்காரு. இது அறிவாலயத்திற்கான மைத்ரேயன் சிக்னலாம்.''
"நிர்வாகிகள் கட்சி மாறினாலும், அ.தி.மு.க. மா.செ.க்கள் கூட்டத்தில் தி.மு.க. அரசுக்கு எதிரான போராட்ட அறிவிப்பு வெளியாகியிருக்கே?''
"அ.தி.மு.க நிர்வாகிகளிடம் போனில் பேசி வரும் சசிகலா, அடுத்தகட்டமா மாவட்டவாரியா பயணம் செய்யவும் நேரம் பார்க்கிறார். அதனால்தான் 9-ந் தேதி நடந்த அ.தி.மு.க., மா.செ.க்கள் கூட்டத்தில் சசிகலாவைக் கண்டிச்சி தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அங்கே சசிக்கு எதிராக ஒரு வார்த்தைகூட வெளிப்படலை. பொதுவா சர்ச்சைக்குரிய விசயங்களைக் கிளப்பிவிடும் கே.பி.முனுசாமி கூட சசி பற்றி மூச்சு விடலையாம்.''
"பா.ஜ.க., பா.ம.கவுக்கு எதிரா குரல்கள் கேட்டிருக்கே?''
"மாஜி மந்திரி அன்வர்ராஜா மட்டும், பா.ஜ.க.வை பற்றி தனது எதிர்க்குரலை எழுப்ப ஆரம்பித்தார். உடனே, ஓ.பி. எஸ்.சும், எடப் பாடியும், தோழ மைக் கட்சி யினரை விமர் சிக்காதீங்க. அவங்களைப் பற்றி, விமர் சனம் செய்வதையும் எல்லோரும் தவிருங் கள்னு, அதற்கு முற்றுப்புள்ளி வச்சதோட, 3 சதவீத வித்தியாசத்தில்தான் நாம் தோற்றிருக் கிறோம். உள்ளாட்சித் தேர்தலில் நாம் யாருன்னு நிரூபிப்போம்ன்னு கோரஸாச் சொல்லியிருக்காங்க. அதேபோல், ஓ.பி.எஸ்.சும், எடப்பாடியும் இணைந்து மாவட்டம் தோறும் சுற்றுப்பயணம் செய்யணும்ன்னு மா.செ.க்கள் பலரும் சொன்னபோது, கொரோனா நெருக்கடியால் அப்படி செய்ய முடியாதுன்னு ஓ.பி.எஸ். மறுப்பு தெரிவிச்சார். எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு குறித்த சினிமாவை நாம் எடுக்கணும்ன்னு எக்ஸ் எம்.பி. வேணுகோபால் சொல்ல, நிச்சயம் எடுப்போம்ன்னு எடப்பாடி வழிமொழிஞ் சார். தி.மு.க அரசுக்கு எதிரான போராட்டம் உள்பட 6 தீர்மானங்களை நிறைவேற்றிவிட்டுக் கூட்டத்தை முடிச்சிட்டாங்க.''
"பா.ம.க பற்றி என்ன பேசினாங்களாம்?''
"மா.செ.க்கள் கூட்டம் நடந்தபோது, கட்சியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. செஞ்சி ஏழுமலை அ.தி.மு.க. தலைமை யகத்துக்கு வந்திருக்கார். சட்டமன்றத் தேர்த லில் இவர் எதிர்பார்த்த செஞ்சி தொகுதி பா.ம.க.வுக்கு ஒதுக்கப்பட்டது. அப்ப அவர் செஞ்சியில் பா.ம.க. தோற்கும்னு பகிரங்கமாவே பேட்டி கொடுத்ததால், கட்சியில் இருந்து கட்டம் கட்டப்பட்டவர். கட்சி அலுவல கத்துக்கு அவர் வந்ததை சீனியர்கள் மூலம் தெரிந்துகொண்ட எடப்பாடி, ஒரு கடிதம் எழுதிக்கொடுத்துட்டு, கட்சியில் இணைஞ்சிக்கங்கன்னு சொல்லியிருக்கார்.''
"ஏழுமலை ரியாக்ஷன் என்ன?''
"தேர்தலுக்கு முன், செஞ்சி தொகுதியின் நிலையைக் கணக்குப் போட்டுப் பார்த்துட்டு தான், அங்கே பா.ம.க. தோற்கும்ன்னு சொன் னேன். இப்ப, பா.ஜ.க.வால்தான் அ.தி.மு.க. தோற்றதுன்னு சொன்னாரே சி.வி.சண்முகம், அவரை ஏன் என்னை மாதிரி கட்சியை விட்டு நீங்க நீக்கலைன்னு கேட்ட ஏழுமலை, வட மிழகத்தில் அ.தி.மு.க அழிய சண்முகம்தான் காரணமாக இருப்பார். அவர்ட்ட கொஞ்சம் எச்சரிக்கையா இருந்துக்கங்கனு சொல்லிவிட்டுக் கிளம்பிப் போய்விட்டாராம்.''
"மாஜி அ.தி.மு.க. மந்திரி வேலுமணிக்கு எதிரான புகார்கள் லஞ்ச ஒழிப்புத்துறையில் மீண்டும் குவிய ஆரம்பிச்சிருக்கே?''
"பிரபல ஓட்டல் அதிபரான சங்கீதா முரளி, கடந்த ஆட்சிக் காலத்தில், அமைச்சர் வேலுமணியுடன் மிகவும் நெருக்கமாக இருந் தார். இதன் அடிப்படையில், கொரோனா நோயாளிகளுக்கும், அவர்களுக்கு சிகிச்சையளித்த டாக்டர்களுக்கும் அதிக அளவில் சங்கீதா ஓட்டல் மூலம், உணவு சப்ளை செய்த விவகாரத்தில், ஏகப் பட்ட முறைகேடுகள் நடந்திருக்குதாம். இந்த நிலையில் சமீபத்தில் வேலுமணிக்கும் முரளிக்கும் இடையில் கொடுக்கல்- வாங்கல் விவ காரத்தில் உரசல் ஏற்பட, முரளி இப்போது தி.மு.க. தரப்பை அணுகி, வேலுமணி பற்றிய நிறைய உண்மைகளை நான் சொல்கிறேன். அவர் மீது கடுமையாக நடவடிக்கை எடுங்கன்னு சொல்கிறாராம்.''
"ஏற்கனவே நிறைய புகார்கள் இருக்குதே?''
"சென்னையின் 10 மண்டலத்தை சுத்தம் செய்யும் காண்ட்ராக்ட்டை ஒப்படைத்ததற்காக ஒரு நிறுவனத்திடம் கடந்த ஆட்சிக்காலத்தில் பலகோடி கமிஷன், வெளிநாடு ஒன்றில் வைத்து வேலுமணி தரப்பிடம் கொடுக்கப்பட்டிருக்குதாம். அந்த நிறுவனத்தில் வேலுமணியின் சகோதரர் ஒருவர் பார்ட்னராகவும் இருக்கிறாராம். இது தொடர்பான விவகாரமும் இப்போது வேலுமணிக்கு எதிராக எழுந்திருக்கிறது. இவை எல்லாம் லஞ்ச ஒழிப்புத்துறையின் கைகளுக்கு இப்போது போயிருக்குது.''
"அ.தி.மு.க. மாஜி எம்.எல்.ஏ. ஒருவருக்கும் சிக்கலாமே?''
"அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.வான தி.நகர் சத்யாவுக்கு, வலது இடது கைகளாக இருந்த, பிரேம் என்பவரும், பார்த்திபன் என்பவரும், இப்போது எம்.எல்.ஏ.வுக்கு எதிராகக் கொடிபிடிக்கிறார் களாம். பதவியில் சத்யா இருந்தபோது, அவர் வீட்டுப் பணிகளை கவனித்து வந்த பிரேம், லட்சக்கணக்கில் ஒதுக்கிக் கொள்ள, சத்யாவுடன் கடந்த 10 வருடங்களாக நகமும் சதையுமாக இருந்த பார்த்திபனோ, கோடிக்கணக்கில் ’அடித்து’ தன் பெயரில் சொத்துக்களையும் வாங்கிப் போட்டிருக்கிறாராம். இதை கண்டுபிடித்த சத்யாவின் தம்பி கஜபதி, அவர்களைத் தட்டிக்கேட்க, எங்களை மிரட்டினால் நேராக லஞ்ச ஒழிப்புத்துறையில், உங்க அண்ணனைப் பற்றிப் போட்டுக் கொடுத்து, அவரை சிறைக்கு அனுப்பிவைப்போம் என்று, எதிர்மிரட்டல் விடுக்கிறார்களாம். மாஜி எம்.எல்.ஏ.வோ திருடனுக்கு தேள் கொட்டியது போன்ற நிலையில் இருக்கிறாராம்.''
"நானும் ஒரு தகவலைப் பகிர்ந்துக்கறேன். கடந்த அ.தி.மு.க. ஆட்சியில், அப்போதைய முதல்வர் எடப்பாடிக்கு மிகவும் நெருக்கமாக இருந்த காண்டராக்டர்களில் ஒருவர் ஆர்.எஸ்.முருகன். தற்போது தி.மு.க. ஆட்சி மலர்ந்திருக்கும் நிலையில், தான் காண்ட்ராக்ட்டுகளைக் கேட்டால் தி.மு.க.தரப்பினர் எதிர்ப்பார்கள் என்று, தன் தம்பி பெயரில் காண்ட்ராக்ட்டுகளை எடுத்துக்கொண்டிருக்கிறாராம். அவருக்கு தி.மு.க.வின் முக்கிய புள்ளிகள் தரப்பில் இருந்தே பரிந்துரைகள் வருகிறதாம். குறிப்பாக நெல்லை மாவட்டத்தில் ஒரு நீர் நிலையைத் தூர் வாரும் காண்ட்ராக்ட்டை எடுக்க, மாஜி சபாநாயகர் ஆவுடையப்பன் உள்ளிட்ட தி.மு.க.வினர் வரிந்துகட்டி நிற்க, அந்த வேலையை ஆர்.எஸ்.முருகன் தரப்புக்குக் கொடுக்கும்படி, அங்குள்ள அதிகாரிகளுக்கு அமைச்சர் துரைமுருகனிடம் இருந்து போன் சென்றதாம்.''