"புதிய கல்விக் கொள்கை' என்ற பெயரில், பழைமைவாத சித்தாந்தத்தை மாணவர்களின் மீது திணிக்கும் மத்திய அரசின் எண்ணத்தைக் கண்டித்து, கல்வி உரிமை பாதுகாப்பு மாநாட்டை நடத்தியிருக்கிறது தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்.
தமிழகத்தின் இதயப் பகுதியான திருச்சியில் 23-ந் தேதி நடைபெற்ற மாநாட்டில், முற்போக்கு சிந்தனையாளர்கள், சமூக ஆர்வலர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். மாணவர்களின் பறையிசை முழக்கத்துடன் தொடங்கியது மாநாடு. கல்வி உரிமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, நீட் தேர்வு தோல்வியால் உயிரை மாய்த்துக்கொண்ட மாணவி களின் படங்களைச் சுமந்தபடி, பெரம்பலூர் பகுதியிலிருந்து சுடர் ஏந்தி பேரணியாக வந்த வர்களுக்கான சுடரேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள், கச்சேரி நிகழ்வுகள் என்று களைகட்டிய மாநாட் டின் இறுதிநிகழ்வாக பொதுக் கூட்டம் நடைபெற்றது. ஆரம்பத்தில் வெஸ்டரி பள்ளியில் பொதுக்கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும், காவல்துறை அனுமதி அளிக்காததால், கலைஞர் அறிவாலயத்தில் மாலை பொதுக்கூட்டமாக நடத்தி முடித்தார் கள். வரவேற்புக் குழு செயல்தலைவர் கவிஞர் நந்தலாலா மற்றும் குழுவினர் விழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.
பொதுக்கூட்டத்தில் பேசிய த.மு.எ.க.ச. தலைவரும், எம்.பி.யுமான சு.வெங்கடேசன், “""நாடாளுமன்றத்தில் திட்டமிட்டு ஆங்கிலம் அழிக்கப்படு கிறது. அமைச்சர்கள் எப்போதும் இந்தியில்தான் பேசுகிறார்கள். நூறு ஆண்டுக்கும் மேலாக நாம் அடைந்த கல்வியை, பலனை பறிக்கும் நடவடிக் கையில் அவர்கள் ஈடுபடு கிறார்கள். நமது கல்வி அவர்கள் தோட்டத்தில் மலர்ந்த மலரல்ல. அதைப் பறிக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். கல்வி எங்கள் பிறப்புரிமை. அதை ஒருபோதும் விட்டுத்தர மாட்டோம்'' என்றார் ஆவேசமாக.
த.மு.எ.க.ச. பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா பேசுகையில், “""தேசிய கல்விக் கொள்கை குறித்து மின்னஞ்சலில் 77 ஆயிரம் கருத்துகள் மட்டு மே வந்திருப்பதாகவும், அதில் பெரும்பாலும் ஆசிரி யர்களின் சம்பளப் பிரச் சனை என்றும் பொய்யான செய்தியை மத்திய அரசு பரப்புகிறது. பலகோடி பேர் கருத்து தெரிவித்துள்ளதை மறைக்கப் பார்க்கிறது. சமூகநீதிக் காலத்தில் 200 ஆண்டுகள் பின்னோக்கிச் செல்வதை அனுமதிக்க முடி யாது'' என்றார் உறுதியுடன்.
நாடாளுமன்றம் 90 சதவீதம் காவிமயமாகி இருப்ப தாக கொந்தளித்த புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, ""நாம் விழிப்புடன் இல்லையென்றால் தமிழ்மொழியை மட்டுமின்றி தமிழ்நாட்டையும் விழுங்கிவிடு வார்கள். புதிய கல்விக்கொள்கை தொடர்பாக கருத்துக் கேட்க அனைத்து மாநில முதல்வர்களை யும் அழைத்து ஆலோசனை நடத்தவேண்டும் என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருக் கிறேன்'' என பேசி அமர்ந்தார்.
""1960-ஆம் ஆண்டு அமைக் கப்பட்ட "கோத்தாரி கமிஷன்' பரிந்துரையில் இடம் பெற்றிருந்த முக்கிய அம்சங்கள் புதிய கல்விக் கொள்கையில் இல்லை. இந்தக் கொள்கையில் பிற்படுத்தப்பட்ட, பழங்குடியின, சிறுபான்மையின சமூகநீதி குறித்து விளக்கப்பட வில்லை. கேள்வி கேட்கும் தைரியத்தைக் கொடுப்பதுதான் நல்ல கல்வி. அதைத்தராத வேறெந்த கல்வி முறையும் வெற்றிபெறாது'' என்றார் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி சுதர்சன ரெட்டி.
வி.சி.க. எம்.பி. ரவிக்குமார் தனது உரையில், ""புதிய தேசிய கல்விக் கொள்கை என்பது சனாதன கல்விக் கொள்கை. ஒருசிலர் மட்டுமே கல்வி பெறமுடியும் என்பதை உள்நோக்கமாகக் கொண்டது. இதனால், பத்தாம் வகுப்புவரை 50 சதவீத மாணவர்கள்கூட படிப்பைத் தொடர முடியாத சூழல் ஏற்பட்டு, இடைநிற்றல் அதிகரிக்கும்'' என்று வரப் போகும் விளைவை விளக்கிப் பேசினார்.
சி.பி.எம். முன்னாள் எம். எல்.ஏ. திண்டுக்கல் பாலபாரதி, ""புதிய கல்விக் கொள்கைக்கு எதிரான கையெழுத்து இயக்கத் தை சி.பி.எம். முன்னெடுத்து ஒருகோடி பேரிடம் கையெ ழுத்து பெற்றது. இதனை தி.மு.க. போன்ற கட்சிகள் செய்திருந் தால், ஏழரைக் கோடி தமிழர் களிடத்திலும் கையெழுத்துக் களை பெற்றிருக்கலாம்'' என்று பேசினார்.
"தேசிய கல்விக் கொள்கை 2019 பின்னணியின் மர்மங்கள்' என்ற நூலை புற்றுநோய் அறுவைச் சிகிச்சை நிபுணர் டாக்டர் கோவிந்தராஜ் வர்தனன், வெளியிட்டுப் பேசி னார்.
""புதிய கல்விக் கொள் கையால் தமிழகத்திற்கு ஒரு சதவீதம்கூட பயனில்லை. இந்தியாவிலேயே அதிகமான கல்லூரிகளைக் கொண்ட தமிழகம், அந்தப் பெயரை இந்தக் கொள்கையால் இழக் கப்போகிறது'' என்றார் ம.தி.மு.க.வைச் சேர்ந்த ஈஸ் வரன்.
தி.மு.க. எம்.பி. டி.கே. எஸ்.இளங்கோவன் பேசிய போது, “""உலகநாடுகள், குழந் தைகளின் மீது தேர்வுகளைத் திணிப்பதில்லை. ஆனால், தொடக்கப்பள்ளியிலேயே பொதுத்தேர்வு நடத்தப் போவதாக சொல்கிறது புதிய கல்விக்கொள்கை. உலகளவில் கல்வியில் தேர்ந்த சமூகமான தமிழ்ச் சமூகம், இதுபோன்ற சூழ்ச்சிகளை வீழ்த்தும்'' என்றார் அழுத்தமாக.
காலை 9:00 மணிக்கு தொடங்கிய இந்த மாநாட்டு நிகழ்வு, இரவு 9:30 மணிவரை அரங்கு நிறைந்து நடை பெற்றது. எதிர்கால வளர்ச்சிக் கான மருந்து கேட்டால், நோயைப் பரப்பும் புதிய கல்விக் கொள்கைக்கான வரைவை முற்றிலுமாக திரும்பப் பெற வலியுறுத்தி மாநாடு நிறை வுற்றது.
-ஜெ.டி.ஆர்.