மார்ச் 20-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 21-ல் முடிந்திருக்கும் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளில் 17 சட்ட மசோதாக்களை அதிரடியாக நிறைவேற்றி யிருக்கிறது தமிழ்நாடு அரசு. சில மசோதாக்கள் ஆளும் தி.மு.க. அரசுக்கு தலைவலியை கொடுத்து வருகிறது.
இந்த சட்ட மசோதாக்களில் குறிப்பாக, தனியார் நிறுவனங்களில் தொழிலாளர்களுக் கான வேலை நேரத்தை மாற்றியமைக்கும் (12 மணி நேரம் வேலை) சட்டத் திருத்த மசோதா, சட்ட ஆவணங்களுக்கான முத்திரைத்தாள் கட்டணம் உயர்வு மசோதா உள்ளிட்டவைகள் கடும் எதிர்ப்புகளை சந்தித்தன.
பிரதான எதிர்க்கட்சி மட்டுமல்லாமல் தி.மு.க.வின் தோழமைக் கட்சிகளும் சர்ச்சைக் குரிய சட்ட மசோதாக்களை பேரவையிலும் வெளியிலும் எதிர்க்கத் தொடங்கியிருக்கின்றன. குறிப்பாக, வேலை நேரத்தை மாற்றியமைக்கும் சட்ட மசோதாவை திரும்பப்பெற வேண்டும் என்கிற குரல்கள் வலுத்து வருகிறது. இந்த நிலையில், தி.மு.க. அரசுக்கு எதிரான போராட் டத்தை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளன தொழிற்சங்கங்கள்.
தனியார் நிறுவனங்களில் தொழிலாளர் களுக்கான வேலை நேரத்தை மாற்றியமைக்கும் சட்ட மசோதா முதல்வர் ஸ்டாலினுக்கு தலை வலியை கொடுத்துள்ள நிலையில், சட்டப் பேரவை செயலக வட்டாரங்களில் விசாரித்த போது, பேரவையின் இறுதிநாளில் தனது பதிலுரையை முதல்வர் வழங்கிய பிறகு குரல் வாக்கெடுப்பு மூலம் சட்ட மசோதாக்கள் நிறை வேற்றப்பட்டன. வேலை நேரத்தை மாற்றியமைக்கும் மசோதாவை நிறைவேற்றாதீர்கள் என தி.மு.க.வின் தோழமைக் கட்சிகளும், அ.தி.மு.க. (ஓ.பி.எஸ். அணி) மற்றும் பா.ம.க. கட்சிகளும் வலியுறுத்தின.
முதல்வரின் பதிலுரையை புறக்கணித்து எடப்பாடி வெளிநடப்பு செய்திருந்ததால் மசோதா நிறைவேற்றும்போது அ.தி.மு.க.வினர் சபையில் இல்லை. மசோதாவுக்கு எதிர்ப்புகள் எழுந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின், அவைமுன்னவர் துரைமுருகன், பேரவை செயலாளர் ஆகிய மூவரும் சபையிலிருந்து வெளியே வந்து விவாதித்தனர்.
அப்போது, ‘"நீங்கள் உங்கள் அறைக்கு செல் லுங்கள். மசோதா நிறைவேறும்போது நீங்கள் பேரவையில் இருக்க வேண்டாம்''’ என துரைமுருகன் சொல்ல, தனது அலுவலக அறைக்கு சென்றுள்ளார் முதல்வர். மசோதாவும் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது” என்கிறார்கள்.
தி.மு.க. மற்றும் அதன் தோழமைக் கட்சி களின் தொழிற்சங்கங்களிடம் நாம் பேசியபோது, "எதிர்ப்புகள் அதிகரிப்பதால் மத்திய மோடி அரசே இத்தகைய மசோதாவை நிறைவேற்றத் துணியாதபோது, தி.மு.க. அரசு நிறைவேற்றியிருப் பதுதான் அதிர்ச்சியைத் தருகிறது''” என்கிறார்கள் ஆவேசமாக. சர்ச்சைக்குரிய இந்த சட்டமசோதா வை திரும்பப்பெற வேண்டும் என்கிற குரல் வலுத்து வரும் சூழலில், அமைச்சரவையைக் கூட்டி விவாதிக்கவிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். கூட் டப்படும் அமைச்சரவைக் கூட்டத்தில் சில முக்கிய முடிவுகளையும் முதல்வர் ஸ்டாலின் எடுக்க வேண்டும் என்று உயரதிகாரிகள் மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் மத்தியில் கருத்து நிலவுகிறது.
இதுகுறித்து உளவுத்துறை அதிகாரிகள் தரப்பில் நாம் விசாரித்தபோது, "நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன் பேசியதாக வெளியான ஆடியோ, வேலைநேரத்தை மாற்றியமைக்கு சட் டத்திருத்த மசோதா ஆகிய இரண்டு விவகாரங் களும் தி.மு.க. அரசுக்கு சிக்கலைத் தரும். சர்ச்சைக் குரிய இந்த மசோதாவை திரும்பப் பெற்றுக்கொண் டால் பிரச்சனை ஓவர். ஆனால், அந்த ஆடியோ விவகாரம் நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் கடுமையான எதிர்வினைகளை ஏற்படுத்தும்.
குறிப்பாக அ.தி.மு.க.வும் பா.ஜ.க.வும் 30,000 கோடி விவகாரத்தை அவ்வளவு எளிதாக விட்டு விடத் தயாராக இல்லை. இப்போதே தேர்தலை மையப்படுத்தி பல திட்டங்களையும் வியூகங்களை யும் போடத்தொடங்கி விட்டனர். அதனை முறியடிக்கும் வகையில் தி.மு.க. அரசும் சில திட்டங்களைப் போடவேண்டும்.
குறிப்பாக, மாவட்ட எல்லைகள் பெரிதாக இருப்பதால் நிர்வாக ரீதியாக அதிகாரிகளும், தேர்தல் அரசியல் ரீதியாக தி.மு.க.வினரும் சிலபல சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில், தமிழகத்தில் பெரிதாக உள்ள மாவட்டங்களைப் பிரிக்க வேண்டும் என்கிற கோரிக்கை அவர்களிடம் இருக்கிறது. எம்.எல்.ஏ.க் களும் இதனை வலியுறுத்தி வருகின்றனர்.
சமீபத்தில் மாவட்ட பிரிவினை குறித்து சட்டமன்றத்தில் எம்.எல்.ஏ.க்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், "புதிய மாவட்டங்கள் குறித்த கோரிக்கைகளை முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் சென்று நிதிநிலைமைக்கேற்ப முடிவு எடுக்கப்படும்' என தெரிவித்தார்.
அந்த வகையில், தமிழகத்தில் பெரிதாக உள்ள மாவட்டங்களைப் பிரித்து புதிய மாவட் டங்களை உருவாக்குவது அரசியல் ரீதியாகவும் தேர்தல் ரீதியாகவும் தி.மு.க.வுக்கு உதவும். ஏனெனில், மக்களின் வசதிக்காக 10 மாவட் டங்களை நாங்கள் உருவாக்கியிருக்கிறோம். தி.மு.க. ஆட்சியில் ஒரு மாவட்டமாவது உருவாக் கினார்களா? என்ற கேள்வியை முன்வைத்து தேர்தல் களத்தில் பிரச்சாரம் செய்ய எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டிருக்கிறார். அதனால் மாவட்ட பிரிவினை குறித்து முதல்வர் ஆலோ சிக்க வேண்டும்''”என்கிறார்கள் உளவுத்துறை யினர்.
தமிழ்நாடு வருவாய்த்துறை அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது,‘"அரசின் மக்கள் நலத்திட்டங்கள் மக்களை எளிதாக சென்றடை யவும், அவை குறித்த ஆய்வுப் பணிகளை அதிகாரிகள் விரைந்து செய்யவும் மாவட்ட பிரிப்பு அவசியமாகிறது. மாவட்டங்களின் வளர்ச்சி என்பது அந்த மாவட்டத்தின் எல்லைகள் குறைவாக இருப்பதிலிருந்துதான் தொடங்குகிறது. ஒரு மாவட்டத்தின் நிர்வாகத் துக்கு கலெக்டரும், சட்டம் ஒழுங்குக்கு மாவட்ட எஸ்.பி.யும் பொறுப்பானவர்கள். கலெக்டரும் போலீஸ் எஸ்.பி.யும் மக்கள் பிரச்சனைகளை எளிதில் கையாள மாவட்டங்கள் சிறிதாக இருக்க வேண்டும். அந்த வகையில், தற்போதைய நிலவரப்படி நிலப்பரப்பில் திண்டுக்கல் மாவட்டம் பெரிதாக இருக்கிறது. இதனையடுத்து சென்னை, சேலம், கோவை, ஈரோடு, திருப்பூர், திருவண்ணாமலை மாவட்டங்கள் பெரிதாக உள்ளன. இவைகளெல்லாம் பிரிக்கப்பட வேண்டும்.
குறிப்பாக, பழனி, ஒட்டன்சத்திரம், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கி பழனியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்குவது நல்லது. அப்பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கை இது.
அதேபோல பொள்ளாட்சி- வால்பாறை- கிணத்துக்கடவு தொகுதிகளை உள்ளடக்கி பொள்ளாட்சி மாவட்டம், கோபி- பவானி- பவானிசாகர்-அந்தியூர் தொகுதிகளைக் கொண்டு கோபி மாவட்டம், திருச்செங்கோடு- சங்ககிரி-குமாரபாளையம்-எடப்பாடி ஆகிய தொகுதிகளை உள்ளடக்கி திருச்செங்கோடு மாவட்டம், கும்பகோணம்-திருவிடைமருதூர்- பாபநாசம் தொகுதிகளை உள்ளடக்கி கும்பகோணம் மாவட்டம், விருத் தாச்சலம்-திட்டக்குடி-நெய்வேலி-புவனகிரி தொகுதிகளை உள்ளடக்கி விருத்தாச்சலம் மாவட்டம் உருவாக்கப்பட வேண்டும். மேலும், சேலம் மாவட்டத்திலுள்ள ஆத்தூர்-கெங்கவல்லி ஆகிய தொகுதிகளை பிரித்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தோடு இணைக்க வேண்டும்.
இதுமட்டுமல்லாமல், பெருநகர மாநகராட்சி என்ற பேரில் சென்னை மாநகராட்சியின் எல்லைகள் ஏகத்துக்கும் பரந்து விரிந்து கிடக்கிறது. அதனால் சென்னையை இரண்டாகப் பிரித்து தென்சென்னை, வடசென்னை மாவட்டங்கள் பிரிக்கப்படுவது அவசியம்.
மாவட்டங்களின் எல்லைகள் சிறியதாக இருப்பதுதான், அனைத்து வகையிலும் வளர்ச்சிப்பணிகள் நிறைவேறுவதும் நிறைவேற்றப் படுவதும் எளிதாக இருக்கும். சட்டம் ஒழுங்கினைப் பராமரிப்பதிலும், கட்டுக்குள் வைத்திருப்பதிலும் மாவட்ட எஸ்.பி.க்கள் சிரமங்களை சந்திக்க வேண்டியதிருக்காது. அதனால் மாவட்டங்களை பிரிப்பதில் தி.மு.க. அரசு கவனம் செலுத்த வேண்டும்” என்கிறார்கள்.
தி.மு.க. மா.செ.க்கள் சிலரிடம் பேசியபோது, ‘"கொங்கு மண்டலம் இப்போதும் எங்களின் கோட்டைதான். நாடாளுமன்றத் தேர்தலிலும் அதனை நிரூபிப்போம் என அ.தி.மு.க.வினர் இப்போதே கொக்கரிக்கிறார்கள். அதனால் கொங்கு மண்டலத்தில் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். அதனை தேர்தல் நேரத்தில் அறிவித்து கடைசி நேரத்தில் உருவாக்க முயற்சித்தால் தேர்தல் பலன் கிடைக்காது. விரைவாக அறிவித்து ஓரிரு மாதங்களில் மாவட்டத்தின் நிர்வாக எல்லைகளைப் பிரித்து பணிகளைத் துவக்கினால்தான் நாடாளுமன்ற தேர்தலின் போது அந்த புதிய மாவட்டங்கள் உயர்ந்து நிற்கும்.
கொங்கு மண்டலத்தில் தி.மு.க.வுக்கான ஆதரவு சரிவாகத்தான் இருக்கிறது. அதை சரிசெய்ய புதிய மாவட்டங்களை உருவாக்கி பொறுப் பாளர்களை நியமித்தால், நிர்வாக ரீதியாக வளர்ச்சிப் பணிகளை முன்னெடுக்க அதிகாரிகளுக்கும், தேர்தல் பணி களை முன்னெடுக்க தி.மு.க.வின ருக்கும் எளிதாக இருக்கும்.
புதிய மாவட்டங்களை உரு வாக்குவதோடு சத்துணவு- அங்கன் வாடிகளில் 69,000 பணியிடங்கள், கால்நடை உதவியாளர்கள் 2000 பணியிடங்கள் உள்பட பல்வேறு துறைகளிலுமாக 30 சதவீத பணியிடங்கள் காலியாக இருக்கிறது. அதனை தற்காலிகப் பணியிடமாக தொகுப்பூதியத்தில் பூர்த்தி செய்ய வேண்டும். மேலும், 1996-போல திறமையும் உடல்வலிமையும் கொண்ட சாலைப்பணியாளர்கள் 10,000 பேரை நியமிக்க வேண்டும். வேலைவாய்ப்பு இல்லாமல் கஷ்டப்படும் இளைஞர்களுக்கு இதெல்லாம் ஒரு வரப்பிரசாதம். தேர்தல் ரீதியாக இவர்களை யெல்லாம் தி.மு.க. பயன்படுத்திக் கொள்ள முடியும். நாலுபேருக்கு லோக்கல் தி.மு.க.வினர் வேலை வாங்கிக் கொடுத்தால் அது வாக்குகளாக மாறும்.
அதனால் தமிழகத்தை வளர்ச்சிப் பணிகளில் முதலிடத்தில் கொண்டுவர மாவட்ட பிரிப்பும், வாக்கு வங்கியை அதிகரிக்க வேலைவாய்ப்புகளை உருவாக்குவதும் நாடாளுமன்றத் தேர்தலின் வெற்றிக்கு வழிவகுக்கும். நிதிநிலைமை என சாக்குப்போக்கு காட்டாமல் தலைவர் ஸ்டாலின் இதில் கவனம் செலுத்தினால் நல்லது''’ என்கிறார்கள்.