திருப்பாப்புலியூர் பகுதியிலுள்ள பஸ் நிலையத்தை வேறிடத் திற்கு மாற்றவேண்டும் அல்லது அதே இடத்தில் விரிவாக்கம் செய்து போக்குவரத்தைச் சீர்செய்யவேண்டும் என்பது கடலூர் மக்களின் நீண்டகால கோரிக்கை. கடந்த 2021-ல் அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில், கடலூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான சம்பத், அப்போதைய ஆட்சியர் சந்திரசேகர சகாமூரி முன்னிலை யில், சுப்பராயலு ரெட்டியார் திருமண மண்டபத்தில், புதிய பஸ் நிலையம் எந்த இடத்தில் அமைத்தால் மக்களுக்கு வசதியாக இருக்கும் என்பதற்கான கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது.
அதில் கலந்துகொண்ட வியாபாரிகள், பொதுநல அமைப்பினர், அரசியல் கட்சிப் பிரமுகர்கள் உட்பட பல தரப்பினரும் கடலூர் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே புதிய பஸ் நிலையம் அமைக்கவேண்டுமென கருத்து தெரிவித்தனர். நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டதையடுத்து, புதிய மாவட்ட ஆட்சியர், திட்டத்தை மாற்றியமைக்கப் போவதாக அறி வித்தார். பழைய பஸ் நிலையத்தையே விரிவாக்கம் செய்வது அல்லது கரும்பு ஆராய்ச்சிப் பண்ணை, பாதிரிக்குப்பம் கொய்யாதோப்பு, குமாரப்பேட்டை, எம்.புதூர், (மத்திய சிறைச்சாலை உள்ள பகுதி) மேற்படி பகுதிகளில் ஏதாவது ஒரு இடத்தில் புதிய பஸ் நிலையம் அமைந்தால் பொதுமக்களுக்கு வசதி யாக இருக்கும் என்று ஆளும்கட்சி பிரதிநிதிகள் முடிவுசெய்தனர்.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு பொதுநல அமைப்பினர் போராட்டங்களை நடத்தினர். எதிர்ப்பின் காரணமாக அரசு பஸ் நிலையம் அமையவுள்ள இடங்களை தேர்வுசெய்ய இரண்டு நபர்கள் கொண்ட வல்லுனர் குழு ஒன்றை அமைத்தது. அந்தக் குழு, மத்திய சிறைச்சாலை அமைந்துள்ள எம்.புதூர் பகுதியில் புதிய பஸ் நிலையம் அமைக்கலாம் என்று அரசுக்கு பரிந்துரை செய்தது. இதற்கும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்த நிலையில் கடந்த 2022 டிசம்பர் மாதம், நகராட்சி நிர்வாகம் மற் றும் குடிநீர் வழங்கல்துறை அமைச்சர் கே.என்.நேரு தன் கடலூர் பயணத்தின் போது, புறவழிச்சாலையை ஒட்டிய பகுதியில் பஸ் நிலையம் அமைந்தால் அனைத்து மக்களுக்கும் வசதியாக இருக்கும் என்று கூறினார். இதற்கும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து அமைச்சர் நேரு அண்ணா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த வல்லு னர் குழு ஒன்று அமைக் கப்படும். அவர்கள் ஆய்வு செய்து எந்த இடத்தை தேர்வுசெய்கிறார்களோ அந்த இடத்தில் புதிய பஸ் நிலையம் அமையும் என்று கூறிவிட்டுச் சென்றார்.
இப்படி கடலூர் மாநகர் பஸ் நிலைய விரிவாக்கத் திட்டம் விவாதப் பொருளாகவும், போராட்டக் களமாக வும் மாறியுள்ளது.
இதுகுறித்து நம்மிடம் கருத்து தெரிவித்த தி.மு.க. பிரமுகர் பரத், ""மாவட் டம் சார்ந்த பல்வேறு அரசு அலுவலகங்கள் அனைத்தும், பள்ளி -கல்லூரிகளும் நகரத்தின் மையப்பகுதியிலேயே அமைந்துள்ளன. இவற்றை கருத்தில்கொண்டு புதிய பஸ் நிலையம் அமைக்கும் பணிகள் துவக்கப்பட்டன. கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டம் என்பதற்காகவும், மக்கள் நலனைப் புறக்கணித்தும் தற்போதைய ஆட்சியிலுள்ளவர்கள் தங்கள் கௌரவத்திற்காக பஸ் நிலையத்தை எம்.புதூர் பகுதிக்கு மா.ற்றுகிறார்கள்.
இது மக்களுக்கு எந்தவகையிலும் பயன்படாது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் மக்கள் தங்கள் அன்றாடப் பணிகளை முடித்துவிட்டு தங்கள் ஊர்களுக்கு விரைவாகவும் சுலபமாகவும் சென்றுவர முடியாத எம்.புதூரிலிருந்து கடலூர் நகருக்கு ஆட்டோக்களில் வருவதென்றால் 100 ரூபாய் கேட்பார்கள். இதனால் பொதுமக்களுக்கு பொருளா தார இழப்பு. நானும் தி.மு.க. கட்சிக்காரன். சட்டமன்றத் தேர்தலின்போது, மக்கள் கருத்துக் கேட்பு கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்ட இடத்தில்தான் பஸ் நிலையம் கட்டப்படும் என்று கூறி மக்களிடம் ஓட்டுகேட்கச் சொன்னார்கள். அப்படி மக்களிடம் ஓட்டு கேட்டு அவர்களும் எங்களை வெற்றிபெற வைத்தார்கள். இப்போது எந்த முகத்தை வைத்துக்கொண்டு வரும் சட்டமன்றத் தேர்தலில் அந்த மக்களை சந்தித்து ஓட்டு கேட்கமுடியும்?''’என்றார்.
அ.தி.மு.க. பிரமுகர் செந்திலோ, ""எந்த அரசாக இருந்தாலும் மக்கள் நலன் சார்ந்து திட்டங்களை செயல்படுத்தவேண்டும். ஆனால் புதிய பஸ் நிலையத்தை சம்பந்தமேயில்லாத இடத்தில் அமைக்கப் பார்க்கிறார் கள். கடலூர் சட்டமன்றத் தொகுதியை விட்டுவிட்டு குறிஞ்சிப்பாடி தொகுதியிலுள்ள எம்.புதூர் பகுதிக்கு ஏன் பஸ் நிலையத்தை கொண்டு செல்லவேண்டும். பட்டப்பகலிலேயே பொதுமக்கள் நடமாட அஞ்சும் பகுதி அது. அந்த இடத்தில் பஸ் நிலையத்தை உரு வாக்கினால் பொதுமக்களுக்கு எப் படி பாதுகாப்பு கிடைக்கும்? எம்.புதூர் பகுதியிலுள்ள முந்திரிக் காடுகள் விவசாய நிலங்களை அழித்துவிட்டு புதிய பஸ் நிலையம் ஏன் அமைக்க வேண்டும்?’''’என்கிறார்.
எம்.புதூர் பகுதியில் பஸ் நிலையம் அமைக்கக்கூடாதென கடந்த 21-ஆம் தேதி கடலூர் தலைமை தபால் நிலையமருகே அனைத்து குடியிருப்போர் நல சங்கங்களின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் சம்பத், ""மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமையும்போது ஏற்கனவே முடிவுசெய்யப்பட்ட மஞ்சக்குப்பம் மைதான பகுதியில் புதிய பஸ் நிலையம் உருவாக்கப் படும்'' என்று பேச பலத்த கைதட்டல் எழுந்தது.
லாப -நட்டக் கணக்கு பார்க் காமல், மக்களின் நலன் சார்ந்து இவ்விவகாரத்தில் முடிவெடுக்க வேண்டும்.