தி.மு.க. தனது தேர்தல் வியூகங்களை மற்ற கட்சிகளைப்போல அல்லாமல் தெளிவாக வகுத்துவருகிறது. தொழில்முறை ரீதியான அணுகுமுறையுடன் கூடிய தேர்தல் வியூக அமைப்பு,  தி.மு.க.வைப் பார்த்து மற்ற கட்சிகளைப் பொறாமைப்பட வைத்துள்ளது. தி.மு.க. இன்றுவரை தனியாக கல்லூரி மாணவர்கள் துணையுடன் கருத்துக்கணிப்பு டீம்களை அமைத்து செயல்பட்டு வருகிறது. எந்தப் பகுதியில் தி.மு.க. பலமாக உள்ளது, யார் அந்தக் கட்சிக்கு பலம் சேர்க்கிறார்கள் என ஆராய்ந்து வைத்துள்ளது. 

Advertisment

அதே நேரத்தில், தி.மு.க. கூட்டணியின் பலவீனம் என்ன? என்பதையும் தெரிந்து வைத்துள்ளது. தொகுதி, ஒன்றியம், பகுதி, வட்டம், கிராமம் அடிப்படையில் இந்த பலம் மற்றும் பலவீனங்கள் ஆராயப்படுகிறது. தமிழகத்திலுள்ள பெரிய சாதிகள் மற்றுமுள்ள நாட்டுக்கவுண்டர் போன்ற புதிய சாதிகள் கூட எந்தப் பகுதிகளில் வலுவாக இருக்கிறது என ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்படுகின்றன. 

Advertisment

இடைநிலை சாதிகளுக்கு உரிய முக்கியத்துவம் கொடுத்தால் தி.மு.க.வின் பலம் அதிகரிக்குமா என ஆராய்ந்து வியூகங்கள் அமைக்கப்படுகின்றது. இந்த ஆபரேஷனின் ஒரு பகுதியாகத்தான் வேலு நாச்சியாருக்கு சிலை, ஜி.டி.நாயுடுவுக்கு பாலம், பெரும்பிடுகு முத்தரையர் தபால் தலை என தி.மு.க. முன்முயற்சி எடுத்தது. இந்த இடைநிலை சாதிகளின் வாக்குகள் ஒவ்வொரு பூத்திலும் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் என்ன விளைவை ஏற்படுத்தும் என நுணுக்கமாக ஆராய்ந்து, அந்த ஆராய்ச்சியின் விளைவாக அந்தந்த சாதி அமைப்புகளைச் சார்ந்த எட்டு அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்களை கூட்டணியில் சேர்த்து அவர்களை உதயசூரியன் சின்னத்தில் போட்டி யிட வைக்க தி.மு.க. முடிவு செய்துள்ளது. ஆக, தி.மு.க. கூட்டணியில் எட்டு சிறிய கட்சிகள் இணைகிறது என்கிறார்கள் தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள். 

இந்த தொழில்முறை ரீதியான வியூகத்தில் இதுவரை தமிழகம் முழுவதையும் அலசி ஆராய்ந்து  நான்கு கருத்துக்கணிப்புகள் எடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீதில் முக்கியமாக ஆராய்ச்சி செய்யப் பட்டது த.வெ.க.வின் பலம் என்ன என்பதுதான். த.வெ.க. 12% வாக்குகளைப் பெறும் என தி.மு.க. கணித்துள்ளது. தி.மு.க., அ.தி.மு.க. இரண்டையும் விரும்பாத வாக்காளர்கள் 10% பேர் தமிழகத்தில் இருப்பார்கள். பல்வேறு காலகட்டங்களில் பல கட்சிகளின் வாக்காளர்களாக ம.தி.மு.க., சீமான், சிறு சதவிகிதம் பா.ஜ.க. என அவர்கள் தங்கள் வாக்குகளை செலுத்துவார்கள். பா.ஜ.க. இந்த முறை அ.தி.மு.க. வசமிருப்பதால் இந்த வாக்குகளைப் பெறமுடியாது. இந்த வாக்குகள் முழுவதையும் இந்தமுறை த.வெ.க. அறுவடை செய்கிறது என்பதுதான் தி.மு.க.வின் கணிப்பு. "சி வோட்டர்', "இந்தியா டுடே' நடத்திய கருத்துக் கணிப்பில் தி.மு.க.வுக்கும், அ.தி.மு.க.வுக்கும் உள்ள வித்தியாசம் 12%. அது மிகச்சரி எனச் சொல்லும் தி.மு.க. வட்டாரங்கள் த.வெ.க. 40% என்ற த.வெ.க. பிரச்சாரத்தை பொய் எனச் சொல்கிறார்கள். அதே நேரத்தில் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கூட்டணிகளின் முக்கிய பலவீனமாக தற்போது இருக்கும் எம்.எல்.ஏ.க்களை குறிப்பிடுகிறார்கள். அவர்களில் 30% பேருக்கு சீட் இல்லையென தி.மு.க. மேலிடம் முடிவு செய்துள்ளது. அவர்களுக்குப் பதில் இளைஞர் அணியைச் சேர்ந்தவர்களை தேர்ந்தெடுக்கும் பொறுப்பு உதயநிதிக்கு தரப்பட்டுள்ளது என்கிறது தி.மு.க. வட்டாரங்கள். தே.மு.தி.க.வை கூட்டணிக்கு கொண்டுவரும் முயற்சியை கடந்த ஒரு வருடமாக தி.மு.க. அமைச்சர் தங்கம் தென்னரசு செய்து கொண்டிருக்கிறார். அதனால் தே.மு.தி.க., தி.மு.க. அணிக்கு வருமென நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள். 

Advertisment

அ.தி.மு.க. கூட்டணியில் டி.டி.வி. தினகரனுக்கும், எடப் பாடிக்கும் உள்ள முரண்பாடு, நயினார் நாகேந்திரனுக்கும், அ..மலைக்கும் உள்ள முரண்பாடு அ.தி.மு.க. கூட்டணியை 50 தொகுதிகளில் தோற்கடிக்க வியூகம் அமைத்து செயல்படும் சசிகலா, த.வெ.க. கூட்டணிக்கு வராததால் சோர்ந்து போயிருக்கும் அ.தி.மு.க.வினர் என அ.தி.மு.க.வின் ஒவ்வொரு பலவீனத்தையும் தெளிவாக கணக்குப் போடும் தி.மு.க.விற்கு உள்ள பெரிய பலவீனம் காங்கிரஸ் கட்சிதான். காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் மிக அதிக கவனத்தைச் செலுத்தி அவர்களை வெற்றிபெற வைக்க தி.மு.க. 

முடிவு செய்துள்ளது. காங்கிரஸ் மட்டுமல்ல, ஒவ்வொரு கூட்டணிக் கட்சி போட்டியிடும் தொகுதியிலும் அவர்கள் வெற்றிபெறும் வாய்ப்பை அதிகரிக்க என்னென்ன செய்யலாம் என தொகுதி வாரியாக தி.மு.க. வியூகம் அமைத்துள்ளது. இப்படி தி.மு.க.வின் வியூக அமைப்புக்கள் பற்றிய தகவல் கூட்டணிகளுக்கும் பகிர்ந்து அளிக்கப் படுகிறது. 

"வரும் தேர்தலில் எந்தெந்த தொகுதியில் தி.மு.க. சார்பிலும், கூட்டணிக் கட்சிகள் சார்பிலும் யார், யார் போட்டியிடுகிறார்கள் என உத்தேசமாக ஒரு பட்டியலைத் தயார் செய்து, அதற்கேற்ற வியூ கங்களை தி.மு.க. முன்னெடுத்து வருகிறது' என்கிறார்கள் தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள்.  

____________
இறுதிச் சுற்று!

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக வாதிட்ட வைகோ!

dmkbox

ந்தியாவில், தமிழீழ விடு தலைப் புலிகள் அமைப்பின் மீதான தடை 2012-ஆம் ஆண்டு முதல் நீடித்துவருகிறது. இந்த உத்தரவை சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்ட தீர்ப்பாயமும் உறுதி செய்தது. இதை எதிர்த்து 2013-ஆம் ஆண்டு ம.தி.மு.க. பொதுச்செயலா ளர் வைகோ சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந் தார். இந்த வழக்கு பிப்ரவரி 5-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில் வைகோ ஆஜராகி விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக் கோரி வாதிட்டார்.

-கீரன்