இரண்டு வருடங்களுக்கு முன்பு நியுட்ரினோ திட்டத்துக்கு ரூ 100 கோடி ஒதுக்கி திட்டத்திற் கான கட்டுமானப் பணிகளைத் தொடங்கியது மத்திய அரசு. மக்களின் எதிர்ப்பு மற்றும் போராட்டத்தை யடுத்து தற்காலிகமாக பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது நியுட்ரினோ திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு மீண்டும் தீவிரம் காட்டி வருவதைத் தொடர்ந்து மக்கள் மீண் டும் போராட்டத்திற்கு தயாராகி வருகிறார்கள்.
கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு நியுட்ரினோ திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டுமென பிரதமர் மோடி தனது கேபினட் செய லாளருக்கு வலியுறுத்தி இருக்கிறார். இந்த விசயம் வைகோ காதிற்கு எட்டியதையடுத்து துணை முதல்வர் ஓ.பி.எஸ்.சைத் தொடர்புகொண்டு நியுட்ரினோ திட்டத்தை செயல்படுத்த வேண்டாமென பிரதமரிடம் வலியுறுத் தச் சொல்லியிருக்கிறார். ஆனால் ஓ.பி.எஸ். கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து வைகோ நியுட்ரினோ திட்டத்திற்கு எதிராக மதுரையிலிருந்து கம்பம் வரை பத்து நாட்கள் நடைபயணம் மேற் கொண்டு மக்கள் மத்தியில் நியுட்ரினோ திட்டம் மூலம் வரும் பாதிப்புகளை தெள் ளத்தெளிவாக வெளிப் படுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
கேரள மாநிலம் கொச்சினைச் சேர்ந்த பிரபல விஞ்ஞானி பத்மநாபனை அழைத்துவந்து நியுட்ரினோ திட்டம் மூலம் ஏற்படும் பாதிப்புகளையும் மக்கள் மத்தியில் வெளிப்படுத்தி னார். இந்த நியுட்ரினோ திட்டம் வறண்ட பகுதிகளில் அமைக்கவேண்டும். ஆனால் இத்திட்டம் அமையப்போகும் தேனி மாவட்டத்திலும் அதை ஒட்டியுள்ள இடுக்கி மாவட் டத்திலும் மக்கள் அதிகளவில் வசித்துவருகிறார்கள். அதோடு முல்லைப் பெரியாறு அணை, இடுக்கி அணை உட்பட 18 அணைகள் இப்பகுதியில் இருக்கின்றன. ஆய்வு மையத்திற்கு அம்பரப்பர் மலையில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான வெடிபொருட்களை வைத்து பாறைகளை தகர்க்கும்போது இங்குள்ள முல்லைப் பெரியாறு, இடுக்கி அணை உட்பட அனைத்து அணைகளும் உடைந்து ஆபத்து ஏற்படுவதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன. அதோடு நியுட்ரினோ ஆய்வால் சுற்றுவட்டார விவசாயம் பாதிக்கப்படும் ஆபத்துண்டு என பத்மநாபன் மக்களையும் அரசுகளையும் ஒருசேர எச்சரித்தார். அதைத்தொடர்ந்து வைகோ மதுரை உயர்நீதிமன்றத்தில் நியுட்ரினோ திட்டத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்து திட்டத்திற்கு இடைக்காலத் தடை வாங்கினார்.
இந்த நிலையில்தான் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாராளுமன்ற மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை இணையமைச்ச ரான ஜிதேந்திரசிங் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில் தேனி மாவட்டத்திலுள்ள பொட்டிபுரத்தில் நியுட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய அரசு ஒப்புதலளித்துள்ளது. அதன்மூலம் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் வராது என்று கூறியிருக்கிறார். இதனால் கடந்த சில வருடங்களாக கிடப்பில் இருந்த நியுட்ரினோ திட்டம் மீண்டும் புத்துயிர் பெறவிருக்கிறது.
""புதுக்கோட்டை பஞ்சாயத்திலுள்ள பொட்டிபுரம், புதூர், சின்ன பொட்டிபுரம் என 11 கிராமங்களில் வாழக்கூடிய மக்கள் எல்லோருமே விவசாயத் தோடு கால்நடைகளை வைத்து பிழைப்பு நடத்திவருகிறோம். நியுட்ரினோ ஆய்வகம் இப்பகுதியில் வந்தால் எங்களுடைய விவசாயம், குடிநீர் என ஒட்டுமொத்த வாழ்வாதாரமும் பாதிக்கும்.
இதற்காக மீண்டும் உண்ணாவிரதம் மட்டுமல்லாமல் தீக்குளிப்பு போராட்டத்தில் கூட இறங்கத் தயாராக இருக்கிறோம். இத்திட்டத்தை ஓ.பி.எஸ் தடுத்துநிறுத்துவார் என்ற நம்பிக்கையில்தான் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஓ.பி.எஸ். மகனை வெற்றிபெற வைத்தோம். ஆனால் இருவரும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் மத்திய அரசுக்கு துணைபோய்க்கொண்டு இருக்கிறார்களே தவிர வாக்களித்த மக்களை கண்டுகொள்ள வில்லை''’என்றனர் பொட்டிபுரத்தைச் சேர்ந்த பொதுமக்கள்.
தேவாரத்தைச் சேர்ந்த விவசாயியும், 18-ஆம் கால்வாய் துணைத்தலைவருமான காளிமுத்துவிடம் கேட்டபோது, ""இப்பகுதி யிலுள்ள பொதுமக்களும், என்னைப்போன்ற விவசாயிகளும் அந்த நியுட்ரினோ திட்டம் வரக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து வருகிறோமே தவிர துணைமுதல்வர் ஓ.பி.எஸ். உள்பட பல முக்கிய பிரமுகர்கள் அம்பரப்பர் மலைக்குக் கீழேயும், அய்யனார் கோயில் பகுதிகளிலும் நூற்றுக்கணக்கான ஏக்கர் களை பினாமிகள் மூலம் வாங்கிப்போட்டு நியுட்ரினோ திட்டம் மூலம் பயனடைய பார்க்கிறார்கள். இத்திட்டத்திற்கு மத்திய அரசு 1500கோடி ஒதுக்கியிருக்கிறது. எட்டுவழிச்சாலை திட்டத்தைப் போன்று இத்திட்டத்திலும் இ.பி.எஸ்.சும்-ஓ.பி.எஸ்.சும் ஒரு கணிசமான கமிசன் பார்க்கவேண்டுமென்ற நோக்கத்தில்தான் எந்த ஒரு எதிர்ப்பும் காட்டாமல் இருந்துவருகிறார்கள். அதனால் மக்களே இத்திட்டத்தை முறியடிக்க போராட்டத்தில் குதிக்கத் தயாராகி வருகிறார்கள். அதற்கு எங்களைப்போலுள்ள விவசாயிகளும், விவசாய சங்கங்களும் ஆதரவளிக்க தயாராகி வருகிறோம்''’என்றார்.
""வைகோ நடைபயணத்தின்போதே இத்திட்டத்தை தடுத்து நிறுத்தவேண்டும் என்றால் வீட்டிற்கு ஒரு இளைஞர் போராட்டத்திற்கு தயாராகுங்கள் என்று சொன்னார். அதுபோல் அந்தந்த பகுதியிலுள்ள இளைஞர்கள் இத்திட்டத்தை முறியடிக்க போராட்டத்தில் குதிக்க தயாராகி வருகிறார்கள்''’என்றார் சின்னமனூரைச் சேர்ந்த சமூக ஆர்வலரான வேலுச்சாமி.
எட்டுவழிச்சாலை, ஹைட்ரோகார்பன், நியுட்ரினோ என மக்கள் விரும்பாத திட்டங்களை தமிழக மக்கள் தலையில் கட்டத்தான் மத்திய- மாநில அரசுகள் தயாராக இருக் கின்றன. மக்களின் போராட்டக் குரலோ செவிடன் காதில் ஊதிய சங்கு என வீணாகிக் கொண்டிருக்கிறது.
-சக்தி