நெல்லை எம்.பி. தொகுதி யைக் குறிவைத்து சீட்பெறுவதற்கான அரசியல் புள்ளிகளுக்கிடையேயான மியூஸிகல் சேர் ஆட்டம் பரபரக்கின்றது.
நெல்லை, பாளை, அம்பை, ஆலங்குளம், நாங்குநேரி, ராதாபுரம் என 6 சட்ட மன்றங்களைக் கொண்ட நெல்லை எம்.பி. தொகுதி, தற்போதைய கணக்கீட்டின்படி 16 லட்சத்து 42 ஆயிரத்து 285 மொத்த வாக் காளர்களைக் கொண்டது.
ராதாபுரம், நாங்குநேரி, பாளை, அம்பையின் 60 சதம் அளவு என நான்கு மேஜர் தொகுதிகளிலும் முதல் வரிசையில் நாடார் சமூகம் சார்ந்த மக்களே மெஜாரிட்டியாக இருப்பதால் நெல்லை எம்.பி. தொகுதி 1980-ல் ஆலடி அருணா தொடங்கி தற்போதைய சிட்டிங் எம்.பி.யான தி.மு.க.வின் ஞானதிரவியம் வரை நாடார் சமூகப் பிரிவு சார்ந்தவர்களையே அர சியல் கட்சிகள் வேட் பாளர்களாக்கியுள்ளனர். அவர்களே எம்.பி. பொறுப்பிலிருந்து வந்தி ருக்கிறார்கள்.
தற்போதைய க்ளைமேட்டில் தி.மு.க. விற்கான முக்கியத்துவத் தைக் கருத்தில் கொண்டு அக்கட்சியில் வேட்பாளர் சீட் பெற மோதுபவர்களின் எண்ணிக்கை சற்று தூக்கலாகவே இருக்கிறது.
தி.மு.க.வின் பூங்கோதை ஆலடி அருணா. அ.தி.மு.க.வின் ஆட்சிக்காலத்திலும் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.வானவர். ஆலங்குளம் தொகுதியின் நீண்ட நாள் தாகமான குடிதண்ணீர் தட்டுப் பாட்டை நிரந்தரமாகப் போக்கியவர். கடந்த சட்டமன்றத் தேர்தலில் உள்ளடி காரணமாக சொற்ப வாக்குகளில் வெற்றிவாய்ப்பை இழந்தாலும், இந்தமுறை தலைவர் கை கொடுப்பார் என்ற நம்பிக்கையுடனிருக்கிறார்.
ராதாபுரம் தொகுதியிலுள்ள வடக்கன் குளத்தின் கிரகாம்பெல், தி.மு.க.வின் நெல்லை கிழக்கு மாவட்ட அவைத் தலைவர், மற்றும் வள்ளியூர் ஒன்றியச் செயலாளரும் கூட. தேர்தல் பொறுப் பாளர் உள்ளிட்ட கட்சி கொடுத்த பொறுப்பான பணி களை சிறம்படச் செய்தவர். ஸ்டாலின் கைவிடமாட்டார் என்ற நம்பிக்கையில் கிரகாம்பெல் இருக்கிறார்.
நாங்குநேரி தி.மு.க.வின் கிழக்கு ஒன்றியச் செயலாளராக இருப்பவர் ஆரோக்ய எட்வின். இவரது மனைவியான சௌமியா, நாங்குநேரியின் யூனியன் சேர்மன் பொறுப்பிலிருப்பவர். தொகுதியிலுள்ள 259 கிராமங்களின் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகள் அனைத்திலும் முதன்முதலாக ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறைகள் அமைத்துச் சீர்திருத்தங்களைச் செய்ததுடன், அனைத்துப் பள்ளிகளுக்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிதண்ணீர் அமைத்துத் தந்தார். கனிமொழியை யும் கட்சித் தலைவரையும் மலைபோல் நம்பியிருக்கிறார்.
இவர்களோடு களக்காடு தெற்கு ஒன்றியச் செயலாளர் பி.சி.ராஜனும் ரேஸில் இருக்கிறார். தி.மு.க. அரசின் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், மக்கள்நலப் பணிகள் நிச்சயம் கரையேற்றும் என்பது சீட்களுக்காக மோதுபவர்களின் கணக்காக இருக்கிறது.
இவர்களுடன் ராதாபுரம் தொகுதியின் எம்.எல்.ஏ.வும் சபாநாயகருமான அப்பாவுவின் புதல்வர் அலெக்ஸ் அப்பாவும் ரேஸில் இருக்கிறார். கம்ப்யூட்டர் சயின்ஸில் பி.இ. பட்டம் பெற்றவர். 2005 முதல் தி.மு.க. உறுப்பினர். டெல்லியில் ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கெதிராகப் போராட்டத்தை நடத்தி ஒன்றிய அரசின் கவனத்தை ஈர்த்தவர்.
பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என அறிவித்துவிட்டார் இ.பி.எஸ். இதை நம்பலாமா வேண்டாமா? தேர்தல் மேகம் தரை இறங்கும்போது இ.பி.எஸ்.சின் இந்த முடிவு நீடிக்குமா, அல்லது கலைந்துவிடுமா? கட்சி, கூட்டணியே இல்லாமல் தனியே களத்தைச் சந்தித்தால் கரையேற முடியுமா என்கிற தவிப்பிலும், சந்தேகத்திலுமிருக்கிறார்கள் அ.தி.மு.க.வின் ர.ர.க்கள். அதன் விளைவே எம்.பி தேர்தலில் அவ்வளவு நாட்டமில்லை. அதனாலேயே வேட்பாளர் சீட் கேட்டு மோதுபவர்களின் எண்ணிக்கையும் விரல் விட்டு எண்ணுகிற அளவுக்கிருக்கிறது. ஜெ. காலத்து மோகமில்லை. தேர்தல் செலவிற்கான கோடிகளுக்கு கட்சி உதவுமா? ஜெ. வேறு இல்லாத நிலை என பல்வேறு எண்ணத்திலும் இருக்கிறார்கள்.
அ.தி.மு.க.வின் சார்பில் நெல்லை எம்.பி. தொகுதிக்கு சீட் கேட்டிருப்பவர் அம்மா பேரவையின் செயலாளரான பாளையைச் சேர்ந்த ஜெரால்ட். ஏற்கனவே கடந்த சட்டமன்றத் தேர்தலில் பாளை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவர். இந்த முறை நெல்லை எம்.பி. சீட் கேட்டிருப்பதாகக் கட்சி வட்டாரத்தில் சொல்லப் படுகிறது.
அடுத்து அ.தி. மு.க.வின் சேரன்மகாதேவி தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ.வான ஆர்.பி. ஆதித்தன். பொதுக்குழு உறுப்பினர். கட்சி இக் கட்டான நிலையிலிருக்கும் போதெல்லாம் கைகொடுத் தவர். ஏரியாவில் அறியப்பட்டவர் என்பதால் சீட் கேட்டிருக்கிறார்.
பாளை நகரின் தேவா கேப்ரியேல் ஜெபர்சன். அ.தி.மு.க.வின் அம்மா பேரவையின் மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருப்பவர். பெரும் பான்மையான கிறிஸ்தவ மக்களிடையே பிரபலமானவர். கரன்சிக்குப் பஞ்சமில்லாதவர். தேர்தல் செலவுகளை சமாளிக்கிற திறன் கொண்டவர். அம்பை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வான இசக்கி சுப்பையாவின் சப்போர்ட்டில் சீட் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையிலிருக்கிறார் என்கிறார்கள்.
காங்கிரசும், நின்று வென்ற தொகுதி நெல்லை. அதனால் தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்று கட்சியின் மாநிலத் தலைமையும், பொறுப்பாளரான எம்.எல்.ஏ. ரூபி மனோகரன் உள்ளிட்டோர் தலைவர் ராகுல் காந்தி மூலமாக தி.மு.க. தலைமைக்கு அழுத்தம் தரும் முயற்சிகள் நடக்கின்றன. அப்படி தொகுதி கிடைக்கும் பட்சத்தில் காங்கிரசின் நெல்லை கிழக்கு மாவட்ட பொருளாளரான முனைவர் டாக்டர் பால்ராஜ் வேட்பாளர் வாய்ப்பிற்காக கடும் முயற்சியை மேற்கொண்டிருக்கிறார். காங்கிரஸ் மட்டத்தில் மிகவும் அறியப்பட்டவரான பால்ராஜ், கரன்சி வறட்சியற்றவர். செலவு பற்றி கவலைப்படாதவர். ராஜீவ்காந்தி பஞ்சாயத்துராஜ் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்கிற முக்கிய பொறுப்பைக் கொண்டவர். வாய்ப்பிற்காக காங்கிரசின் உயர்மட்டத் தொடர்பிலிருக்கிறாராம்.
கூட்ட ணிக் கட்சி கள் பற்றிய இணைப்பு, தொகுதி முடிவு பற்றி பா.ஜ.க. அறிவிக்காத நிலையில் நெல்லையில் பா.ஜ.க.வின் தேர்தல் அலுவலகத்தை 2 நாட்களுக்கு முன்பு திறந்துவைத்த கட்சியின் நெல்லை எம்.எல்.ஏ.வும், சட்டமன்ற பா.ஜ.க. எம்.எல்.ஏ. குழுவின் தலைவரு மான நயினார் நாகேந்திரன், கட்சியையும், தலைவர் களையும் முந்திக்கொண்டு பா.ஜ.க. தன் கட்டுப் பாட்டிற்குள் இருப்பதாகக் கருதிக்கொண்டவர், நெல்லை பாராளுமன்றத் தொகுதியின் வேட்பாளர் நான்தான் என எதேச்சதிகாரமாக அறிவித்தார்.
மறுநாள் பொழுது விடிவதற்குள்ளாக, நெல்லை எம்.பி. வேட்பாளராக நயினார் நாகேந்திரனுக்கு மீண்டும் சீட்டா, தொகுதியில் மெஜாரிட்டியாக இருக்கிற வெள்ளாளர் பிரதிநிதிக்கு வாய்ப் பளிக்காவிட்டால், பா.ஜ.க. தோல்வியைச் சந்திக்கும்.
"வெள்ளாளர்களைப் புறக்கணிக்காதே! வெள்ளாளனே விழித்துக்கொள்!' என தமிழ்நாடு வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தின் இளைஞரணிச் செயலாளரான பந்தல் ராஜா நெல்லை நகரம் முழுக்க கண்டனப் போஸ்டரை ஒட்டிப் பரபரப்பாக்க, அதிர்ச்சியில் நயினார் நாகேந்திரனின் சப்த நாடிகளும் ஒடுங்கி விட்டதாம்.
கடந்த எம்.பி. தேர்தலில் தூத்துக்குடி எம்.பி. தொகுதியில் மெகா கூட்டணியோடு போட்டியிட்ட பா.ஜ.க.வின் புதுச்சேரி, தெலங்கானாவின் ஆளுநருமான தமிழிசை சௌந்தர்ராஜன், கனிமொழியிடம் வாய்ப்பை இழந்தவர். தற்போது மீண்டும் அங்கே போட்டியிட்டால் எடுபடாது என்பதால் நெல்லையைக் குறிவைத்திருக்கிறார். தென் மாவட்டத்தில் அறியப்பட்ட நாடார் சமூகம் சார்ந்தவர் என்ற கோதாவில், அந்த மெரிட்டில் பா.ஜ.க.வின் மேல்மட்டத் தலைவர்களிடம் பேசி வருகிறாராம்.
இதனிடையே கடந்த நவம்பரில் நெல்லையில் பொதுக்கூட்டம் நடத்திய ச.ம.க.வின் சரத்குமார், பா.ஜ.க.வுடன் கூட்டு என்றும், ஒரே தொகுதியான நெல்லை ஒதுக்கப்பட்டுவிட்டதாகவும், தான் போட்டியிடுவது நிச்சயம் என்று விதையை ஊன்றி பரபரப்பைக் கிளப்பினார். தன் கட்சியினரிடம் நெல்லை பாராளுமன்றத் தொகுதியில் தேர்தல் பணிகளைத் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என்று உஷார்படுத்திவிட்டுப் போயிருக்கிறார்.
இப்படி கட்சிவாரியாக வேட் பாளராகத் தேர்வு பெறுவதற்கு அடிதடி நடப்பதால், நெல்லையில் தேர்தல் ஃபீவரின் டெம்ப்ரேச்சர் ஏறத் தொடங்கியிருக்கிறது.
-பி.சிவன்
படங்கள்: ப.இராம்குமார்