கடந்த மே-02-ஆம் தேதி நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரான ஜெயக்குமார் மரணச் சம்பவம் நடந்த உடனேயே நெல்லை மாவட்ட எஸ்.பி.யால் அமைக்கப்பட்ட பத்து தனிப்படை அடங்கிய போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணையை மேற்கொண்டனர்.
ஜெயக்குமார் மனைவி ஜெயந்தி, எரிந்துகிடந்தது எனது கணவர் உடல்தானா? என்று கேள்வியெழுப்பியதால் தனிப்படையினர் அதனை உறுதிப்படுத்த ஜெயக்குமாரின் மகன்களின் உடலிலிலிருந்து டி.என்.ஏ. சாம்பிள் எடுத்து சோதனைக்காக புனே ஆய்வகத்திற்கு அனுப்பி அது ஜெயக்குமாரின் உடல்தான் என்ற ரிப்போர்ட்டும் வந்துவிட்டது. தொடர்ந்து நெல்லை மாவட்ட சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் உலகராணியின் டீம் சம்பவ இடத்தை சலித்திருக்கிறார்கள். ஏற்கனவே கிடைத்த தடயங்களைவிட, புதிதாக தடயங்கள் எதுவும் சிக்கவில்லையாம்.
இது ஒருபுறமிருக்க, ஆரம்பத்தில் விசாரணையை மேற்கொண்ட தனிப்படையின் முன்னணி அதிகாரியிடம் பேசியபோது கிடைத்த தகவல்கள் அதிர்ச்சியாகவும் புதிராகவுமிருந்தது.
""இதுவரை நாங்கள் விசாரித்த வகையிலும், கிடைத்த ஆதாரங்கள், சி.சி.டி.வி. காட்சிகளைக் கொண்டு விரிவாக ஆய்வுசெய்ததில் நடந்தது கொலையல்ல தற்கொலை என்ற முடிவுக்கு வர பல்வேறு காரணங்கள் உள்ளன.
சாவுக்கு முன்பு ஜெயக்குமார் மரண வாக்குமூலம் என்று எழுதிய கடிதத்தைத் தவிர வெளியான மற்ற கடிதங்கள் அவர் எழுதியதாகத் தெரியவில்லை.
ஜெயக்குமாரின் போஸ்ட்மார்ட்ட அறிக்கையை அலசியதில் அவரது வாயில், வீடுகளில் பாத்திரம் கழுவுவதற்குப் பயன்படுகிற கருப்பு நிறத்தாலான ஸ்டீல் வாஷ்பிரஷ்ஷின் துகள்கள் இருந்தன. தவிர அவரது உடல் கிடந்த இடத்தில் ஒரு பிராண்ட் கம்பெனியின் தீப்பெட்டி கிடந்தது. அதுபற்றி திசையன்விளை டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களில் விசாரித்ததில் சம்பவத்திற்கு சில நாட்கள் முன்புதான் ஜெயக்குமாரே ஸ்டீல் வாஷ்பிரஷ், தீப்பெட்டி போன்றவற்றை தனது பெயரில் பில் போட்டு வாங்கியுள்ளார். அதற்கான ஆதாரம், சி.சி.டி.வி. புட்டேஜ்களையும் கைப்பற்றியுள்ளோம்.
ஜெயக்குமாரின் உடல் எரிந்துகிடந்த நிலையை ஆராய்ந்தபோது சிறிய கல்லில் வயரால் உடலைக் கட்டிக்கொண்டு எரிந்த நிலை. இதுபோன்று தனியொருவரே தன்னைத்தானே கட்டிக்கொள்ளலாம். பாட்டிலில் கொண்டுவந்த பெட்ரோலை தன் உடலில் கொட்டித் தானே பற்றவைத்துக் கொள்ளலாம். ஆங்கிலத் திரைப்படங்களில்கூட இப்படியான காட்சிகள் வருவதுண்டு.
சில மாதங்களுக்கு முன்புதான், தன்னுடைய சொத்து ஒன்றை தன் மகன் கருத்தையா ஜெப்ரின் பெயரில் எழுதிக்கொடுத்திருக்கிறார். தவிர குடும்பத்தார்களும் தற்போதைய நிலையில் பண நெருக்கடியிலிருக்கிறார்கள். தற்போதைய சூழலில் அவர்களிருக்கும் விவசாய நிலத்துடன் கூடிய வீடு மட்டுமே. அவற்றின் மதிப்பையும்விட கடன்பளு தாண்டுகிறது. எந்த வகையிலும் சமாளிக்கவும் மீளவும்முடியாத நெருக்கடி என்பதால், திசைதிருப்பவே அவர் இந்த முடிவுக்கு வந்திருக்கலாம். எங்களின் சந்தேகங்களை உயரதிகாரிகளுக்குத் தெரியப்படுத்திவிட்டோம்''’’ என்றார் அந்த அதிகாரி.
மொத்தத்தில் இடியாப்பச் சிக்கலில் ஜெயக்குமார் வழக்கு தொடர்கிறது.