"என்னுடைய குடும்பத்தைப் பத்தி கவலையில்லை, மக்களுக்காக ஓடுகிறேன்... அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். எத்தனையோ அவமானங்களையும், இன்னல்களையும், துயரங்களையும் சந்தித்தே இத்தனை பாரம்பரிய நெல் வகைகளை விவசாயிகளின் புழக்கத்திற்கு கொண்டுவந்தேன். இனி புதிதாக தேடாவிட்டாலும் பரவாயில்லை. கிடைத்ததைத் தொலைத்துவிடுவார்களோ என்கிற கவலை இருக்கு''’-இது "நெல்' ஜெயராமன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உடல்நலம் குன்றிய நிலையிலும் அடிக்கடி கூறிய வார்த்தை. அவரது இறப்பு விவசாய உலகத்துக்கே பேரிழப்பு.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியிலிருந்து வேதாரண்யம் செல்லும் சாலையில் ஐந்தாவது கிலோமீட்டரில் இருக்கிறது கட்டிமேடு கிராமம். அங்கு சிறு விவசாயியான ராமசாமிக்கும், முத்துலெட்சுமிக்கும் மூன்றாவது மகனாகப் பிறந்தவர் ஜெயராமன். ஒன்பதாம் வகுப்போடு படிப்பிற்கு முழுக்குப் போட்டவர், சிறிதுகாலம் அச்சகத்தில் வேலை பார்த்துக்கொண்டே, நுகர்வோர் அமைப்போடு தொடர்பை ஏற்படுத்திக்கொண்டார். அப்போது அனைத்து நுகர்வோர் அமைப்புகளையும் ஒருங்கிணைத்து தமிழ்நாடு, பாண்டிச்சேரி நுகர்வோர் கூட்டமைப்பாக உருவாக்கப்பட்டது. அந்த அமைப்பில் "நெல்' ஜெயராமன் விவசாய இயக்குனராகச் செயல்பட்டார்.
அந்த காலகட்டத்தில் இளைஞர்களை அதிகம் நம்பினார் நம்மாழ்வார். அதற்காக கரூர் மாவட்டத்தில் "வானகம்' என்கிற பண்ணையை உருவாக்கி இளைஞர்களுக்கு இயற்கை விவசாயப் பயிற்சி கொடுத்தார். அப்போது நம்மாழ்வாரோடு தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு, அவரை அழைத்துவந்து சில விவசாய நிகழ்ச்சிகளை நடத்தினார் "நெல்' ஜெயராமன்.
"ஆயிரம் ஆண்டுகள் பழைமையும், பாரம்பரியமும், மருத்துவகுணமும் கொண்ட பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட நெல் வகைகள் நம் முன்னோரிடம் புழக்கத்தில் இருந்து க
"என்னுடைய குடும்பத்தைப் பத்தி கவலையில்லை, மக்களுக்காக ஓடுகிறேன்... அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். எத்தனையோ அவமானங்களையும், இன்னல்களையும், துயரங்களையும் சந்தித்தே இத்தனை பாரம்பரிய நெல் வகைகளை விவசாயிகளின் புழக்கத்திற்கு கொண்டுவந்தேன். இனி புதிதாக தேடாவிட்டாலும் பரவாயில்லை. கிடைத்ததைத் தொலைத்துவிடுவார்களோ என்கிற கவலை இருக்கு''’-இது "நெல்' ஜெயராமன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உடல்நலம் குன்றிய நிலையிலும் அடிக்கடி கூறிய வார்த்தை. அவரது இறப்பு விவசாய உலகத்துக்கே பேரிழப்பு.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியிலிருந்து வேதாரண்யம் செல்லும் சாலையில் ஐந்தாவது கிலோமீட்டரில் இருக்கிறது கட்டிமேடு கிராமம். அங்கு சிறு விவசாயியான ராமசாமிக்கும், முத்துலெட்சுமிக்கும் மூன்றாவது மகனாகப் பிறந்தவர் ஜெயராமன். ஒன்பதாம் வகுப்போடு படிப்பிற்கு முழுக்குப் போட்டவர், சிறிதுகாலம் அச்சகத்தில் வேலை பார்த்துக்கொண்டே, நுகர்வோர் அமைப்போடு தொடர்பை ஏற்படுத்திக்கொண்டார். அப்போது அனைத்து நுகர்வோர் அமைப்புகளையும் ஒருங்கிணைத்து தமிழ்நாடு, பாண்டிச்சேரி நுகர்வோர் கூட்டமைப்பாக உருவாக்கப்பட்டது. அந்த அமைப்பில் "நெல்' ஜெயராமன் விவசாய இயக்குனராகச் செயல்பட்டார்.
அந்த காலகட்டத்தில் இளைஞர்களை அதிகம் நம்பினார் நம்மாழ்வார். அதற்காக கரூர் மாவட்டத்தில் "வானகம்' என்கிற பண்ணையை உருவாக்கி இளைஞர்களுக்கு இயற்கை விவசாயப் பயிற்சி கொடுத்தார். அப்போது நம்மாழ்வாரோடு தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு, அவரை அழைத்துவந்து சில விவசாய நிகழ்ச்சிகளை நடத்தினார் "நெல்' ஜெயராமன்.
"ஆயிரம் ஆண்டுகள் பழைமையும், பாரம்பரியமும், மருத்துவகுணமும் கொண்ட பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட நெல் வகைகள் நம் முன்னோரிடம் புழக்கத்தில் இருந்து காலனி ஆதிக்கத்தினால் படிப்படியாக மறைந்துவிட்டன. அதை எப்படியாவது மீட்கவேண்டும், அப்போதுதான் நம் மண் வளம் மீளும். உங்களைப்போன்ற இளைஞர்களால்தான் அது முடியும்' என பயிற்சிகொடுக்கும்போது அடிக்கடி நம்மாழ்வார் கூறி கலங்கியிருக்கிறார்.
அந்தவகையில் நஞ்சில்லா உணவை முன்னிறுத்தியும், இயற்கை விவசாயத்தை பரப்பும் நோக்கத்தோடும் 2003-ல் பூம்புகார் முதல் கல்லணைவரை ஒருமாத கால விழிப்புணர்வு நடைபயணத்தை மேற்கொண்டார் நம்மாழ்வார். அவரோடு அந்தப் பயணத்தில் ஜெயராமனும் பங்கேற்றார். 21-வது நாள் பிரச்சார பயணம் தலைஞாயிறு பகுதிக்குச் சென்றதும் அந்தப் பயணத்தை ஊக்குவிக்கும் நோக்கத்தோடு, வயதான பாரம்பரிய இயற்கை விவசாயியான ராமகிருஷ்ணன், தன்னிடம் இருந்த "காட்டுயானம்' என்கின்ற நெல்லை ஒரு படி அளவுக்கு கொடுத்தார். அதன்பிறகு தன் பயணத்தில் பாரம்பரிய நெல்வகைகளைச் சேகரிக்கத் துவங்கினார் நம்மாழ்வார். அதில் பூங்கார், குடவாலை, பால்குடவாலை, காட்டுயானம், கல்லுண்டை உள்ளிட்ட 7 பாரம்பரிய நெல் ரகங்களின் விதைகள் கிடைத்தன.
அவற்றை ஜெயராமனிடம் ஒப்படைத்த நம்மாழ்வார், "இன்றுமுதல் உங்களுக்கு "நெல்' ஜெயராமன் என பெயர்வைக்கிறேன். மீதமுள்ள பாரம்பரிய நெல்லை மீட்கும் பணி உங்களுடையது' எனக்கூறிய ஒற்றைச் சொல்லுக்காக பாரம்பரிய நெல் ரகங்களைத் தேடித் தேடி அலைந்தார். தனது மரணம் வரை 174 வகையான நெல் ரகங்களை மீட்டெடுத்துள்ளார் "நெல்' ஜெயராமன்.
பூங்கார் நெல்லை அவருக்கு கொடுத்த தலைஞாயிறு சோமு இளங்கோவன், ‘’""ஜெயராமனின் சாதனை, ஒரு அரசாங்கமேகூட செய்துவிடமுடியாதது. என்னிடம் இருந்த பூங்கார் நெல்லில் 2 படி கொடுத்தேன். என்னிடம் 10 கிலோவாக திருப்பிக்கொடுத்தார். சிலரிடம் ஒரு படி நெல்லை வாங்குவதற்கு வாரக்கணக்கில் அலைந்ததையும் நாங்கள் பார்த்திருக்கிறோம். திண்டுக்கல் அருகில் ஒரு விவசாயியிடம் பழமையான நெல்ரகம் ஒன்று இருப்பதாகத் தேடிப்போனார். அந்த விவசாயியோ இன்றைய நெல் ரகத்தைக் காட்டினார். மனமுடைந்து வீட்டைவிட்டு வெளியில் வரும்போது தெரு அருகாலில் திருஷ்டிக்காக துணியால் கட்டியிருந்த நெல்லைப் பார்த்து பூரித்துப்போனவராக, "இதைத்தான் தேடிவந்தேன்' என ஒரு கைப்பிடி அளவுக்கும் குறைவான அந்த நெல்லை எடுத்துவந்து பரவலாக்கியுள்ளார்''’-நெல் ஜெயராமனின் உடலை எரியூட்டிய இடத்தில் நின்று கலங்கியபடியே சொன்னார்.
நெல் ரகங்களைத் தேடி அலைந்ததைவிட, தான் கண்டுபிடித்த விதைகளை பெருக்கவும், பரவலாக்கவும் போதிய இடமில்லாமல் சிரமப்பட்டார். "நெல்' ஜெயராமனின் ஆர்வத்தைக் கண்டு அமெரிக்கவாழ் நரசிம்மன், ஆதிரெங்கத்தில் உள்ள தனக்குச் சொந்தமான 5 ஏக்கர் நிலத்தை புழங்கிக்கொள்ள அனுமதித்தார். அதன்பிறகு கடின உழைப்பால் உருவாக்கப்பட்டுள்ள ஆதிரெங்கம் பாரம்பரிய நெல் மையம், இயற்கை வேளாண் ஆர்வலர்களுக்கு வழிகாட்டும் மிகச்சிறந்த ஆய்வுமையமாக மாறியது. 2006-ஆம் ஆண்டிலிருந்து பாரம்பரிய நெல் திருவிழாவை நடத்தினார். அதில் தமிழகம் மட்டுமின்றி, நாட்டின் பிற மாநிலங்களிலிருந்தும் ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.
விதியோ ஜெயராமனை நீண்டகாலம் விட்டுவைக்க விரும்பவில்லைபோல.…2017-ல் நடக்கவிருந்த நெல் திருவிழாவுக்கான ஆயத்தப் பணிகளில் இருந்தபோது உடல் சோர்வு ஏற்பட்டு, மருத்துவ சிகிச்சைக்கு சென்றவருக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் சேர்ந்தார். நடிகர் சிவகார்த்திகேயன், சத்யராஜ் உள்ளிட்ட நடிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி உதவிகளும் செய்தனர்.
அவருக்கு அரசின் உதவிக்கரம் நீளவேண்டுமென நமது நக்கீரன் இணையத்திலும், பிறகு நக்கீரன் இதழிலும் செய்தி வெளியிட்டிருந்தோம். அதன்பிறகே அமைச்சர்கள் காமராஜ், துரைக்கண்ணு, விஜயபாஸ்கர் உள்ளிட்ட அமைச்சர்கள் நேரடியாகச் சென்று ஆறுதல் கூறினர். தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மருத்துவமனைக்குச் சென்று பார்த்து, நிதியுதவி வழங்கினார்.
மறைவுக்குப் பின் அவரது உடல் சென்னையில் அரசியல் பிரமுகர்களும், மக்களும் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டது. பிறகு திருத்துறைப்பூண்டி அருகிலுள்ள கட்டிமேட்டிற்கு கொண்டுவரப்பட்டது. அங்கு அவர் தேடித்தேடி மீட்டெடுத்த ராஜமன்னர், திருப்பதுசாரம், தேங்காய்பூ சம்பா, கண்டசாலி, நீளம் சம்பா, சிங்கினிக்கார், கொத்தமல்லிசம்பா, சொர்ணம்சூரி, கைவரசம்பா, பொம்மி, கல்லுண்டை, செம்பினிபிரியன், சேலம் சன்னா உள்ளிட்ட நெல்மணிகளை அலங்காரத் தோரணமாக தொங்கவிட்டிருந்தனர். விவசாயிகளும், சமூக ஆர்வலர்களும், மாணவர்களும், அரசியல் பிரமுகர்களும் திரளாகவந்து அஞ்சலி செலுத்தினர்.
நெல் ஜெயராமனுக்கு நெருக்கமான நண்பர்களில் ஒருவரான திருவாரூர் வரதராஜன், “""அவருக்குன்னு சொந்த நிலங்கள் பெருசா இல்லை. அவர் விதைகளைத் தேடினாலும், அதைப் பெருக்கி புழக்கத்துக்குக் கொண்டுவர மிகுந்த சிரமப்பட்டார். பாரம்பரிய நெல் விதைகளை உற்பத்தி செய்வதற்காகவும், பயிற்சிக்கூடமாக மாற்றவும் அரசாங்கத்திடம் இடம் கேட்டுக் கேட்டு நொந்துபோனார். இன்று அமைச்சர்களும், அதிகாரிகளும், பெரும்பண்ணையார்களும் வந்து ஆறுதல் கூறுவதில் என்ன இருக்கிறது?
அவருக்குக் கிடைத்த விதைகளை விவசாயிகளிடமே கொடுத்து, பெருக்கினார். அரசாங்கமே இயற்கை விவசாயத்தையும், பாரம்பரிய நெல்சாகுபடியையும் ஊக்குவிக்கணும், இடுபொருட்களுக்கு மானியம் கொடுக்கணும். வேளாண்மை பல்கலைக்கழகத்தில் தனிப் பிரிவையே கொண்டுவரணும். தமிழ்நாட்டில் நம்மாழ்வார், "நெல்' ஜெயராமன் அடுத்து யார் என்கிற நிலையை மாற்றி அரசே நெல்திருவிழாவை நடத்தி ஊக்குவிக்கவேண்டும் இதுவே இருவருக்கும் செய்யும் மரியாதை''’என்கிறார் ஆதங்கத்துடன்.
"நெல்' ஜெயராமனின் மனைவி கூறுகையில், ""அவரு எதைச் செய்தாலும் நான் தடையாக இருந்ததில்ல. மாதக்கணக்கில் வீட்டுக்கு வராமல் விதையைத் தேடிப் போவார், நான் முகம்சுளித்ததில்லை. அவர் விட்டுச்சென்ற பணி தொடரணும் அதற்காக எதையும் நாங்கள் செய்ய இருக்கிறோம்''’என்கிறார்.
"நெல்' ஜெயராமன் நமது ஊடகங்களின்மீது அளப்பரிய மரியாதை வைத்திருந்தார். டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் திட்டத்தை எதிர்த்து மிகப்பெரிய பிரச்சாரத்தை செய்துவந்தார் நம்மாழ்வார். கடைசியாக திருவாரூர் மாவட்டம் குடவாசலில் நாம் தமிழர் சார்பில் நடந்த கூட்டத்தில் உணர்ச்சி பொங்க பேசிய நம்மாழ்வார், "என்ன செல்வம் நான் சொன்ன கருத்து மக்களுக்குப் போய்ச்சேருமா?'’என்றார் அருகிலிருந்தவரிடம். அப்போது "நெல்' ஜெயராமனோ, நமது நக்கீரனைக் காட்டி, “""நீங்க ரயிலில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு துணைபோகும் கோவை பல்கலைக்கழகத்தை பற்றி கூறிய செய்தி வந்திருக்கு பாருங்க''’என்றார். அதைப் படித்துவிட்டு கலகலவென சிரித்தார். ""நம்ம நக்கீரன் நிருபர் திருமணமாச்சே...'' என 100 கிலோ பாரம்பரிய விதை நெல்லுடன் நேரில் வந்த "நெல்' ஜெயராமன், அந்தத் திருமண விழாவில் நமது ஆசிரியர் கையால், விழாவுக்கு வந்தவர்களுக்கு விதை நெல்லை வழங்கிடச் செய்தார். நெல்லும் மண்ணுமே அவரது மூச்சாக இருந்தது.
நெல் ஜெயராமன் மறைந்தாலும் அவர் விதைத்திருக்கும் விதைகளும் கனவுகளும் விருட்சமாகும். அதற்குத் துணைநிற்பது ஒன்றுதான் நாம் அவருக்குச் செய்யும் உண்மையான அஞ்சலி!
-க.செல்வகுமார்