திருச்சி நகராட்சியாக இருந்த காலகட்டத்தில், சுதந்திரத்திற்கு முன்பு நகராட்சித் தலைவராக இருந்த ரத்தினவேல் தேவர், தொலைநோக்குப் பார்வையோடு நகர்ப் பகுதியிலிருந்து கொஞ்சம் வெளியே சத்திரம் பகுதியில் பேருந்து நிலையத்தைக் கட்டி பயன்பாட்டிற்குக் கொண்டுவந்தார். அதன் பின்னர் 50 ஆண்டுக்கு முன்பு லூர்துசாமி பிள்ளை திருச்சி மாநகராட்சித் தலைவராக இருந்த காலத்தில், 7 ஏக்கர் பரப்பளவு உள்ள மத்திய பேருந்து நிலையத்தை அமைத்தார். ஆனால் அதற்கடுத்ததாகப் பொறுப்புக்கு வந்தவர்களுக்கு, அந்த பேருந்து நிலையத்தை மேம்படுத்தும் எண்ணமே வரவில்லை. தற்போது காலம் கடந்த முயற்சியாக, திருச்சியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கும் முடிவுக்கு அரசு வந்துள்ளது.
1990-ம் ஆண்டிலேயே ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை திருச்சி மக்களிடம் இருந்தது. 1994-ம் ஆண்டு திருச்சி நகரம், மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில், கரூர் பைபாஸ் சாலைக்கு அருகில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க திட்ட மிடப்பட்டு அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. அடுத்ததாக, 2004-ம் ஆண்டு திருச்சி மாநகராட்சியின் மேயராக இருந்த சாருபாலா தொண்டைமான், சென்னை நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள தேவதானம் பகுதியில் 40 ஏக்கர் நிலத்தை விலைக்கு வாங்கி, அதில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கத் திட்டமிட்டார். ஆனால் அத்திட்டம் காவிரிக் கரைக்கு மிக அருகாமையில் அமைந்ததால், சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் காரணம் காட்டி நிராகரிக்கப்பட்டது.
பின்னர், 2006-ல் தி.மு.க. ஆட்சியின்போது ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் திட்டம் மீண்டும் கையில் எடுக்கப்பட்டது. மிகவும் சுறுசுறுப்பாக அதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. பஞ்சப்பூர், மன்னார்புரம் ராணுவ மைதானம், புதுக்கோட்டை சாலை உள்ள கொட்டப்பட்டு, தஞ்சை சாலையில் உள்ள அரியமங்கலம் உரக்கிடங்கு உள்ளிட்ட இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. ஆனால் அதற்குள்ளாக தி.மு.க. ஆட்சி முடிந்து 2011-ல் அ.தி.மு.க. ஆட்சியைப் பிடித்தது. அவர்களும் தங்கள் பங்குக்கு புதிய இடத்தைத் தேர்வுசெய்யப் புறப்பட்டனர். பிராட்டியூர், பொன்மலைப்பட்டி, ஜி கார்னர் மைதானத்திற்கு எதிரே உள்ள மாடு வதைக்கூடத்துக்கு அருகில் உள்ள இடம் என்று புதிய இடத் தேர்வுகளும் நடைபெற்றன. பின்பு அதுவும் கிடப்பில் போடப்பட்டதால் அது குறித்து யாரும் பேச முன்வரவில்லை. அதுகுறித்த கேள்விகளுக்கு பதிலளிக்க அ.தி.மு.க. அமைச்சர்களும் முன்வரவில்லை.
தற்போது ஒருங்கிணைந்த பேருந்து நிலை யம் அமைக்க பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள் ளது, திருச்சி மக்களை நிம்மதிப் பெருமூச்சுவிட வைத்துள்ளது. திருச்சியில் சாதாரண நாட்களை விட பண்டிகைக் காலங்களில் அளவுக்கு அதிக மான பயணிகள் பேருந்துகளைப் பயன்படுத்து கிறார்கள். தமிழ்நாட்டின் வடக்கு மாவட்டங் களை தென் மாவட்டங்களோடு இணைக்கக்கூடிய மையமாக விளங்கக்கூடிய ஒரே மாவட்டம் திருச்சி என்பதால், மக்களின் கூட்டம் அதிகரிக்கும். அதிலும், பொங்கல், தீபாவளி, பள்ளி விடுமுறை நாட்கள் என்று பார்த்தால் திருச்சியே திணறும் நிலை ஏற்படும். எனவே இதனைக் கையாள அதி காரிகளுக்கு வேறு வழி தெரியாததால், நகரத்திற் குள் நான்கு இடங்களில் மாவட்ட வாரியாகத் தற்காலிக பேருந்து நிலையங்களை அமைப்பார்கள்.
எனவேதான் இந்த இக்கட்டான சூழ்நிலைகளை மாற்ற திருச்சி மக்களின் வெகுநாள் கோரிக்கையாகவும், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவின் கனவாகவும் இருந்த ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், 1990-ல் பேசத் தொடங்கி, தற்போது 2021-ல் கனவு நிறைவேறப்போகிறது. தமிழகத்தில் 2021-ம் ஆண்டிற்கான சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க., தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டதுபோல "திருச்சியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்டித் தரப்படும்' என்று அறிவிக்கப்பட்டதையடுத்து, திருச்சி மக்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். தற்போது வெளியான மாநில பட்ஜெட் தாக்கலில், "தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தின் உதவியுடன் திருச்சியில் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்படும்' என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார். பல வருடங்களாக பேருந்து நிலையம் அமைக்க பல இடங்கள் பார்க்கப்பட்டு, தற்போது பஞ்சப்பூரில் 244.28 ஏக்கரில் நிலம் பார்த்து தேர்வு செய்துள்ளனர்.
ஏற்கனவே 2006 தி.மு.க. ஆட்சியில் பஞ்சப்பூர்தான் பேருந்து நிலையத்துக்காகத் தேர்வு செய்யப்பட்டது. ஆனால் 2011-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் அமர்ந்த பிறகு அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. பஞ்சப்பூரை கைவிட்டுவிட்டு வேறு பல இடங்களைத் தேர்வு செய்தனர். ஆனால் தற்போது மீண்டும் பஞ்சப்பூர் வந்திருப்பது அமைச்சர் கே.என்.நேருவின் விடாமுயற்சியைக் காட்டுகிறது. இந்த பேருந்து நிலையத்தினால் தற்போது நகரப்பகுதிக்கு வந்து செல்லும் லட்சக்கணக்கான மக்களுக்காகப் பயன்படுத்தப்படும் சுமார் 2,500 பேருந்துகள் அனைத்தும், நகர்ப் பகுதிக்குள் வராமல் புறநகர்ப் பகுதியிலேயே இயக்கப்படும் என்பதால், நகர்ப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் இருக்கும்.