ஸ்ரீசென் நிறுவனத்தின் இருமல் மருந்து குடித்து உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு மத்தியபிரதேச மாநிலம், சிந்த்வாரா மாவட்டத்திலுள்ள நாக்பூர் நகரில் கோல்ட்ரிஃப் சிரப் பயன்படுத்திய ஏராளமான குழந்தைகள் வாந்தி மற்றும் சிறுநீரகக் கோளாறுகள் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் 16 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சில குழந்தைகள் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இதைத்தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலத்திலும் 6 குழந்தைகள் பலியான சம்பவம் மருத்துவ வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. மொத்தம் 22 குழந்தைகள் பலியானது தொடர்பாக இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு துறை விசாரணை நடத்தியது. இதில் சென்னையை அடுத்த காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் இயங்கிவரும் ஸ்ரீசென் பார்மாசூட்டிக்கல்ஸ் நிறுவனம் தயாரித்த கோல்ட்ரிஃப் பயன்படுத்திய குழந்தைகளுக்கு இந்த பாதிப்புகள் ஏற்பட்டது தெரியவந்தது.
இது தொடர்பான விசாரணையில் மத்தியபிரதேச மாநிலத்தின் துணை போலீஸ் சூப்பிரண்ட் பாரசியா ஜித்தேந்தர், ஆய்வாளர் ஜகோட்டின் மேஸ்ராம் தலைமையிலான அதிகாரிகள் குழு, கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் சோதனை நடத்தியது.
கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி முதல் இந்த நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட மருந்துகளுக்குத் தடைவிதிக்கப்பட்டது. மேலும் அதிகாரிகள் குழு சோதனை நடத்தியதில், மத்தியபிரதேசத்திற்கு அனுப்பப்பட்ட சிரப்புகள் நத-13 என்ற பேட்ஜில் தயாரிக்கப்பட்டவை என்பது தெரியவந்தது.
கோல்ட்ரிஃப், ரெஸ்போலை, ஹெப்சான்டின் ஆய்வுக்காக எடுத்துக்கொண்டு மற்ற மருந்துகளை முடக்கினர். மேலும் இந்த நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட மருந்துகளை விநியோகிக்க, விற்பனை செய்ய தடைவிதிக்கப்பட்டது. இந்த மருந்துகள் மத்தியபிரதேசம், ராஜஸ்தான், ஒடிசா மற்றும் புதுச்சேரிக்கு அனுப்பப்பட்டது தெரியவந்ததால், அவற்றை அம்மாநிலங்களிலிருந்து திரும்பப் பெற்று அழிக்கவும் உத்தரவிடப்பட்டது. மருந்து நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனையில் உற்பத்தி விதிகள் மீறப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மருந்துக் கட்டுப்பாட்டு துறை 41 பக்கங்கள் கொண்ட அறிக்கையை சுகாதாரத் துறைக்கு அனுப்பியுள்ளது. சோதனையின்போது மருந்து உற்பத்தியில் 364 விதிகள் மீறப்பட்டுள்ளதாகவும், அதில் 39 விதிமீறல்கள் மிகத் தீவிரமானவை எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த இருமல் மருந்தை தயாரிப்பதற்காக அங்கு வைக்கப்பட்டிருந்த ப்ரோப்பலீன் க்ளைக்கால் மூலப்பொருள் தரமற்றது என்றும், மருந்துகள் தயாரிப்பதற்கான தண்ணீரும் சுத்தமாக இல்லை, மருந்துகள் தயாரிப்பதற்கான நடைமுறைகளை முறையாகப் பின்பற்றவில்லை, மருத்துவக் கழிவுகளை சுத்திகரிப்பு செய்து வெளியேற்றவில்லை என்று அறிக்கையில் பதிவுசெய்துள்ளனர். ப்ரோப்பலீன் க்ளைகால் மூலப்பொருளில் சிறுநீரகத்தைப் பாதிக்கக்கூடிய நச்சுப்பொருளான டை எத்திலீன் க்ளைக்கால் 48.6% இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த மருந்து நிறுவனத்தின் உரிமத்தை ரத்துசெய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மத்தியப்பிரதேச தனிப்படை போலீசார் தமிழக காவல்துறை உதவியுடன் ஸ்ரீசென் நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதனை கடந்த வியாழக்கிழமை காலை கோடம்பாக்கத்திலுள்ள அவர் வீட்டில் வைத்து கைதுசெய்தனர். மேலும் நிறுவனத்தில் பணிபுரியும் உதவியாளர் மகேஸ்வரி, மேலாளர் ஜெயராமன் ஆகியோரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து செய்தியாளரிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம், "சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு சீல் வைக்கப்பட்டு, விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட மருந்துகளைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் மருந்து உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் ஆய்வு செய்யவேண்டியது மத்திய அரசின் மருந்து ஆய்வுக் குழுவின் பணி. கடந்த 3 ஆண்டுகளாக அவர்கள் எந்த வித ஆய்வை யும் மேற் கொள்ளவில்லை. தற்போது காஞ்சி புரம் மண்டல மருந்துக் கட்டுப் பாட்டு ஆய்வாளர், தரக்கட்டுப்பாட்டு அதிகாரி தீபா ஜோசப் ஆகியோர் சஸ்பெண்ட் செய் யப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை யாக, தமிழ்நாட் டில் செயல்படும் 397 மருந்து நிறு வனங்களிலும் தீவிர ஆய்வுகள் மேற்கொள்ளப் படும்''’என்று தெரிவித்தார்.
தனது பெயரை வெளிப்படுத்த விரும்பாத மருந்தியல் துறை அதிகாரி ஒருவர், "உலக அளவில் ஒரு மருந்து தயாரித்து ஆய்வுநடத்தி அந்த மருந்தை பயன்பாட்டுக்குக் கொண்டுவர பல வருடங்கள் ஆகும். மருந்து தயாரிக்க பல வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. ஆனால் இவற்றை மீறுவதால் ஏற்படும் பெரிய விளைவுகள் மனிதனுக்கு பல தீங்குகளை ஏற்படுத்தும். டை எத்திலீன் க்ளைக்கால் பயன்பாட்டால் 1937-ல் அமெரிக்காவில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியாகின. தமிழ்நாட்டில் 1970-ல் எக்மோரில் இதேபோன்ற சம்பவம் ஏற்பட்டது. அப்பொழுது கோவையைச் சேர்ந்த பிரபல மருத்துவர் ரவிக்குமார் நடத்திய ஆய்வில், கிண்டி கிங் இன்ஸ்டிடியூட்டில் பரிசோதிக்கப்பட்டு, இந்த வேதிப்பொருளால் உயிரிழப்புகள், பக்க விளைவுகள் வருவதாகத் தெரியவந்தது. உணவு மற்றும் மருந்துத் துறையில் நெறிமுறைகள், வழிகாட்டுதல்கள் மிகத் தீவிரமாகப் பின்பற்றப் படவேண்டும். அதை அதிகாரிகள் கெடுபிடியான சோதனைகள் மூலம் உறுதி செய்யவேண் டும்''’என்றார்.