பேனர் சரிந்து விழுந்ததில் சுபஸ்ரீயும், ஆழ் துளை கிணற்றில் சிக்கி சுஜித்தும் பரிதாபமாக பலியனார்கள். சட்டவிரோதமான செயல்களால் இப்படி அப்பாவிகள் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள்.

dd

"ஒவ்வொரு உயிரின் இழப்புக்குப் பின்னர்தான் அதுகுறித்து அதிகாரிகள் கவனிப்பார்களா?' என்று நம்மிடம் ஆத்திரத்துடன் கேட்டார் குன்றத்தூரை சேர்ந்த மோட்சா என்கிற கிரேஸி. அவரது ஆத்திரத்திற்கான காரணம், தொடர்ந்து அவர் பேசியபோதுதான் புரிந்தது. ""கடந்த வாரம் ஜனவரி 31-ஆம் தேதியன்று வேலை விஷயமாக சோழிங்க நல்லூர் வரை பைக்கில் சென்று திரும்பினேன். அப்போது மேடவாக்கம் நோக்கிகுளோபல் மருத்துவமனையை கடந்து பைக்கில் வந்தபோது, திடீர் என பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்டேன். நல்ல வேளையாக பின்னாடி எந்த வண்டியும் வரவில்லை... சுதாரித்து எழுந்தேன். மின் கம்பத்துல இருந்து அறுந்து தொங்கிய கேபிள் ஒயர்ல மாட்டி, என்னோட பைக் தூக்கி வீசப் பட்டிருக்கு என்பது தெரிந்தது. உடனே, அங்க இருந்த டிராஃபிக் போலீஸ்காரரிடம் சொன்னேன். அவரோ,’"அது மின்சாரத்துறை பிரச்சினை. எங்கிட்ட ஏம்மா புகார் சொல்லுற. அடிபட்ட காயத்துக்கு மருந்து போடும்மா'ன்னு, தட்டி கழிச்சாரு. நக்கீரன் உடனடியாக இதில் நடவடிக்கை எடுக்கும் என்று நம்பிக்கையோடு உங்களிடம் சொல்கிறேன்''’என்றார் அந்தப்பெண்.

Advertisment

dd

சம்பவம் நடந்த இடத்தை நாம் சென்று பார்த்தபோதுதான் தெரிந்தது, இன்டர்நெட் கேபிள், டெலிபோன் கேபிள், டி.வி கேபிள், டிஸ் கேபிள் என தனியாருக்கு சொந்தமான பத்துக்கும் மேற்பட்ட கேபிள் ஒயர்கள், மின்கம்பத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்டிருந்தன. அதில் பல கேபிள்கள் அறுந்து ரோட்டில் கிடந்தன.

அப்போது தன்னை அறிமுகம் செய்துகொண்ட சமூக ஆர்வலர் பொன்.சேகர், ""இந்த மாதிரி அத்துமீறி தொங்கும் ஒயரில் மாட்டித்தான் கடந்த மார்ச் மாசம் ஈஞ்சம்பாக்கம் அனுமன் நகரைச் சேர்ந்த முகமத்அலி ஜின்னா உயிரிழந்தார். மகளும் மனைவியும் அனாதையானார்கள். பாதிக்கப் பட்ட குடும்பத்திற்கோ எந்த இழப்பீடும் கிடைக்கவில்லை'' என்றார் வேதனையுடன்.

Advertisment

அங்கே வந்த முன்னாள் மின்வாரிய ஊழியரான எஸ்.எஸ்.சுப்பிரமணியன் நம்மிடம், ‘’""மேடவாக்கத்துல இருந்து பள்ளிக்கரணை, சோழிங்கநல்லூர், தாம்பரம் வரை இப்படித்தான் மின் கம்பத்தை ஆக்கிரமித்து கேபிள் வயர்கள் போட்டிருக்கிறார்கள். பள்ளி, கல்லூரி, ஐ.டி. வண்டிகள் எல்லாம் இந்த வழியில்தான் போகுது. பல விபத்து நடந்தும், நடவடிக்கைதான் இல்லை. இங்கேயும் உயிர்ப்பலி ஆனால் தான் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?'' என்று கேள்வி எழுப்பினார்.

-அரவிந்த்

படம் : குமரேஷ்