அரியலூர் அனிதாவில் தொடங்கிய நீட் உயிர்ப்பலிகள், கடந்த வாரத்தில் மட்டும் அரியலூர் விக்னேஷ், மதுரை ஜோதி, தர்மபுரி ஆதித்யா, திருச்செங்கோடு மோதிலால் எனத் தொடர்ந்து, தேர்வுக்கு முந்தைய நாளில் 3 உயிர்களைக் குடித்தபோது ஒட்டுமொத்த தமிழகமும் அதிர்ந்தது.
பள்ளிக் கல்விக்கான பொதுமேடை அமைப்பின் செயலாளரும் கல்வியாளருமான பிரின்ஸ் கஜேந்திரபாபுவிடம் நாம் பேசியபோது, ""மருத்துவ படிப்புகளுக்கு ஆரம்பத்தில் நேர்காணல் மூலமாகவும், பிறகு நுழைவுத்தேர்வு மூலமாகவும் மாணவர்கள் சேர்க்கை நடந்தது. நுழைவு தேர்வு சமமற்ற தேர்வாக இருப்பதை உணர்ந்து ப்ளஸ்-2 மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடப்பதே சரியானது என முடிவு செய்து அதற்கான சட்டத்தை 2007-ல் இயற்றியது அப்போதைய தமிழக அரசு. மத்திய அரசின் முடிவையறிந்து, அந்த சட்டத்துக்கு ஒப்புதல் தந்தார் குடியரசு தலைவர்.
இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தை சிலர் அணுக, ஏழைகளை பாதிக்கும் நுழைவு தேர்வை ரத்து செய்த தமிழக அரசின் இந்த சட்டம் செல்லும் என தீர்ப்பளித்தது. மேல்முறையீடு செய்யப்பட்டபோது, மாநில அரசின் உரிமையில் தலையிட மறுத்து உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது உச்சநீதிமன்றம். இப்படிப்பட்ட சூழலில்தான், திடீரென நீட் தேர்வு அவசியம் என்பதை கொண்டு வந்தனர்.
2016 தேர்தல் காலக்கட்டம் என்பதால், பாளையங்கோட்டை தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய ஜெயலலிதா, மீண்டும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வுக்கு எதிரான சட்டத்தை நிறைவேற்றுவோம் என சூளுரைத்தார். ஆனால், அவரது மறைவுக்கு பிறகு, நீட் தேர்வுக்கு எதிராக 2 சட்ட மசோதாக்களை எதிர்க்கட்சிகளின் முழுமையான ஆதரவுடன் பேரவையில் நிறைவேற்றியது அ.தி.மு.க. அரசு. தமிழகத்தின் ஒட்டுமொத்த குரலாக நிறைவேற்றப்பட்ட அந்த சட்டத்தை ஆளுநர் மூலம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது தமிழக அரசு.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 7-ல் 3-வது வரிசையில் இருக்கும் பொதுப்பட்டியலின் 25-வது வரிசையில் வருகிறது கல்வி. பொதுப்பட்டி யலில் கல்வி இருந்தாலும் கூட , உயர் கல்வியின் தரத்தை தீர்மானிப்பதும் அதனை ஒருங்கிணைப் பதும் மட்டுமே மத்திய அரசின் அதிகார எல்லை என்பதாகவே 25-வது ஷரத்து சொல்கிறது. இதனை, மத்திய பிரதேசத்தின் மாடல் டெண்டல் கல்லூரி வழக்கில் உச்சநீதிமன்றம் உறுதி செய்திருப்பதுடன், நீட் போன்ற பிரச்சனைகளில் மத்திய-மாநில அரசுகளுக்கிடையே முரண்பாடுகள் வருமே யானால் அரசியலமைப்பு சட்டத்தின் 245-வது ஷரத்தின் கீழ் சுமுகமாக தீர்க்கப்பட வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டியது.
அந்த 245-வது ஷரத்துதான் மாநில அரசின் சட்டத்துக்கு ஜனாதிபதியின் ஒப்புதலை பெற வேண்டும் என சொல்கிறது. ஜனாதிபதி ஏற்றாலும் மறுத்தாலும், 6 மாதத்திற்குள் மீண்டும் சட்டம் இயற்றி ஜனாதிபதிக்கு அனுப்பலாம். இது பேரவையின் உரிமை. அந்த வகையில், அ.தி.மு.க. அரசு நிறைவேற்றிய 2 சட்ட மசோதாக்களையும் நிறுத்தி வைத்துள்ள குடியரசு தலைவர், அதனையும் அதற்கான காரணத்தையும் சட்டரீதியிலான வழிகளில் ஆளுநர் வழியாக சட்டப்பேரவைக்கு தெரிவிக்கவில்லை. மாறாக, மத்திய உள்துறை அமைச்சகம் தமிழக அரசுக்கு கடிதம் மூலம் தெரிவிக்கிறது. நிறுத்தி வைத்திருப்பதற்கான காரணத்தை சொல்லவில்லை. இதனையடுத்து, முதல்வர் எடப்பாடி, தலைமைச்செயலாளர், சட்டத்துறை செயலாளர் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்புகின்றனர். அதற்கு மத்திய அரசு பதில் சொல்லவில்லை. அதிமுக அரசும் அமைதியாகி விட்டது.
மாநில சட்டப்பேரவையின் உரிமையை நிலைநாட்டும் வகையில் அரசியலமைப்பு சட்டப் பிரிவுகளைச் சுட்டிக்காட்டி, மத்திய அரசுக்கு எதிராக வெளிப்படையான நடவடிக் கையை தமிழக அரசு எடுத்திருக்க வேண்டும். சட்ட மசோதாவை எவ்வித காரணமின்றி குடியரசு தலைவர் நிறுத்தி வைத்திருப்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என நீதிமன்றத்தில் அ.தி.மு.க. அரசு வழக்கு போட்டிருக்க வேண்டும்.
குறைந்தபட்சம், குடியரசு தலைவரும் மத்திய அரசும் நீட் பிரச்சனையில் இப்படி விளையாடு கிறது என தற்போதைய சட்டமன்ற கூட்டத்திலா வது இதற்கான தீர்மானத்தை நிறைவேற்றுவதுடன் நீதிமன்றத்தை உடனடியாக அணுக வேண்டும் அ.தி.மு.க. அரசு. அதேசமயம், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்ய பரிசீலிப்போம் என தி.மு.க.வும் அதன் கூட்டணி கட்சியான காங்கிரசின் ராகுல்காந்தியும் 2019 நாடாளுமன்ற தேர்தலில் வாக்குறுதி தந்தனர்.
நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக இருக்கும் தி.மு.க., காங்கிரஸ் மற்றும் அ.தி.மு.க. எம்.பி.க்களையும் ஒன்றிணைத்து நாடாளுமன்றத்தில் வலிமையாக குரல் கொடுக்க வேண்டும். தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் நீதிமன்றத்தை அணுகி சட்டரீதியிலான மாநில உரிமையை நிலை நிறுத்த வேண்டும். அரசியல் காழ்ப்புணர்வுகளை புறம் தள்ளிவைத்து நீட்டுக்கு எதிரான ஒரே குரலாக தமிழகம் ஒலிக்க வேண்டும் . இல்லையேல் நீட் தேர்வு இன்னும் பல தற்கொலைகளுக்கு காரணமாகும். நிதி உதவிகள் நிரந்தரத் தீர்வாகாது'' என்கிறார் மிக அழுத்தமாக.
மருத்துவப் படிப்பு-சிகிச்சை ஆகியவற்றுக் கான கட்டமைப்பில் சிறந்து விளங்கும் தமிழகத்தில் நீட் தேர்வினால், கிராமப்புற- ஏழை- ஒடுக்கப்பட்ட மாணவர்களின் மருத்துவக் கனவு சிதைக்கப்பட்டு விட்டது. வேறுவழியின்றி தனியார் பயிற்சிக்கு பணம் கட்டி, தேர்வு அறைக்குள் நுழையும்போது தோடு, மூக்குத்தி, தாலி, மெட்டி வரை கழட்டிவைத்துவிட் டுப் போக வேண்டிய கொடூரமும் தொடர்கிறது. அதற்குப் பிறகும் மெடிக்கல் சீட்டுக்கு உத்தரவாதம் இல்லை என்பதால்தான், உயிர்ப்பலிகள் தொடர்கின்றன.
-இரா.இளையசெல்வன்